தினமணி கதிர்

முடங்கிக் கிடந்தால்...  மூச்சுத்திணறல்!

1st Aug 2021 06:00 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT

 

கரோனா தொற்று ஏற்பட்டதால் நமது வேலைமுறையே மாறிவிட்டது. அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்வது குறைந்துவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கற்கின்றனர். வேலை எதுவும் இல்லாதவர்கள் டிவியிலோ, செல்லிடப் பேசியிலோ தங்களுடைய பொழுதைக் கழிக்கின்றனர்.

கரோனா பொது முடக்கத்தின்போது, "வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க' மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். கரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒரு புறம் இருக்க, இப்படி ஓர் இடத்திலேயே முடங்கிக் கிடப்பதால் வேறுவிதமான பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் செய்த ஆராய்ச்சி இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

10 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள 1 லட்சத்து 38 ஆயிரம் பேரை தங்களுடைய ஆராய்ச்சிக்காக அவர்கள் தேர்வு செய்தனர். அதில் 8 ஆயிரத்து 733 பேர் தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

"குறட்டை விட்டுத் தூங்கினால் நன்றாகத் தூங்குவதாக' நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் குறட்டைவிட்டுத் தூங்குபவர்கள் ஆழ்ந்த தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள். நாம் தூங்குகிற போது நுரையீரலுக்கு காற்று செல்லும் வழிகள் அடைபடுவதால், குறிப்பாக தொண்டையருகே உள்ள சதை மூச்சுக் குழாயின் வாயை அடைத்துக் கொள்வதால் குறட்டை ஏற்படுகிறது. வாய் வழியாக மூச்சுவிடுவதால் குறட்டை ஏற்படுகிறது. சரியாக மூச்சுவிட முடியாமல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

இப்படி மூச்சுத் திணறல் ஏற்படுவதை சரி செய்யாவிட்டால், மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம், டைப் 2 சர்க்கரை நோய் ஆகியவை ஏற்படுகிற அபாயம் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதிலும் பெண்களைவிட ஆண்களையே இந்த மூச்சுத்திணறல் நோய் அதிகம் பாதிக்கிறதாம். அதிக உடல் எடை உள்ளவர்கள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக தொண்டைப் பகுதியில் உள்ள மென்மையான திசுக்களில் கொழுப்பு அதிகம் படிந்திருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சராசரியை விட நீண்ட கழுத்து உள்ளவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதிகமான அளவு மது அருந்துபவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

தூக்கத்தின்போது ஏற்படும் இந்த மூச்சுத்திணறல் நோயால், இங்கிலாந்தில் மட்டும் நான்கிலிருந்து 10 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் 22 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

கரோனா தொற்றுக்கும் இந்த மூச்சுத்திணறல் பாதிப்புக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் செய்த ஆராய்ச்சி இந்தத் தொடர்பைத்தான் உறுதிப்படுத்தியிருக்கிறது.

வீட்டை விட்டு வெளியே செல்லாமல் ஓரிடத்தில் 7- 8 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களின் உடலின் இயக்கம் குறைவாகவே இருக்கிறது. இதனால், உடலின் எடை அதிகரிப்பதோடு, கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது. இதனால், மூச்சுக்குழல்களின் பாதையில் கொழுப்பு படிவது அதிகரித்து மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்று அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

கரோனா தொற்றால் வேலை எதுவும் செய்யாமல் தொலைக்காட்சியின் முன் 5 மணி நேரம் 6 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டே இருப்பது, அடிக்கடி ஏதாவது நொறுக்குத் தீனிகளைத் தின்பது, இனிப்பான பானங்களை அருந்துவது எல்லாம் மூச்சுத்திணறலுக்குக் காரணமாகிவிடுகின்றனவாம். இதனால் உடல் எடை அதிகரிப்பது, உடலில் கொழுப்பு அதிகரிப்பது ஆகியவை ஏற்பட்டு, கடைசியில் அது மூச்சுத்திணறலுக்குக் காரணமாகிவிடுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அப்படியானால் இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? உடற்பயிற்சி செய்வது உள்பட ஏதாவது உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். யாருமற்ற வெளிகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உடலுக்கு வேலை கொடுத்தவர்கள், முறையாக உடற்பயிற்சி செய்தவர்கள் பலருக்கு மூச்சுத்திணறல் பிரச்னை இல்லாதிருப்பதை அவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Tags : kadhir paralyzed ... suffocating
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT