தினமணி கதிர்

சினி மினி

1st Aug 2021 06:00 AM | - கவிஞர் பொன். செல்லமுத்து

ADVERTISEMENT

 

முதல் வண்ணப்படத்தில் எம்.ஜி.ஆர்.!

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த முதல் வண்ணப் படம் "அலிபாபாவும் 40 திருடர்களும்', தேவர் ஃபிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் "நல்ல நேரம்'. ஜெமினி நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப் படம் "ஒளி விளக்கு'. விஜயா - வாகினி தயாரித்த முதல் வண்ணப் படம் "எங்க வீட்டுப் பிள்ளை'. ஏவி.எம். தயாரித்த முதல் வண்ணப்படம் "அன்பே வா'. ஜி.என்.வேலுமணி தயாரித்த முதல் வண்ணப்படம் "படகோட்டி'. சத்யா மூவிஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் "ரிக்ஷாக்காரன்'. டி.ஆர்.ராமண்ணா தயாரித்த முதல் வண்ணப்படம் "பறக்கும் பாவை'. இந்த 8 நிறுவனங்களின் முதல் வண்ணப்படத்திலும் நடித் தவர் எம்.ஜி.ஆர் என்பது இயல்பாக நடந்துள்ள ஆச்சர்யம்.

 

பத்து போட்டுக் கொண்ட சந்திரபாபு!

"நல்லதங்காள்' (1955) படத்தில்; சந்திரபாபு "பொதிகை' என்ற வேடத்திலும், இ.வி.சரோஜா "வைகை' என்ற வேடத்திலும் நடித்துள்ளார்கள். பொதிகை (சந்திரபாபு) தன்னுடைய தாய்மாமன் (வி.எம்.ஏழுமலை) மகள் வைகையை (இ.வி.சரோஜா வை) காதலிக்கிறான். ஒருமுறை வைகை வீட்டிற்கு வந்த பொதிகை, தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறான். அதற்கு வைகை பற்று போட்டால் உடம்பு சரியாகிவிடும் என்று சொல்லி பொதிகைக்கு பற்று போடுகிறாள். பொதிகையின் நெற்றியில் (மருந்தினால்) பற்று போடாமல், மையினால் பத்து (என்ற எண்ணை) போடுவது நல்ல நகைச்சுவை. வடிவேல் கூட "அரசு' படத்தில் இப்படித்தான் ஒரு மாமிக்கு பத்து போடுவார்.

ADVERTISEMENT

 

திரைக்கு வராத சிவகுமார் படங்கள்!

சிவகுமார் 194 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து திரைக்கு வந்த முதல் படம் "காக்கும் கரங்கள்' (1965) என்ற படம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் "சித்ராபெளர்ணமி' என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த "சித்ராபெளர்ணமி' திரைக்கு வரவில்லை. ஆனால், சிவாஜி நடித்த "சித்ராபெளர்ணமி' (1976) என்ற படம் பின்பு திரைக்கு வந்தது.

வலம்புரி சோமநாதன் தயாரித்து இயக்கிய சிவகுமார் நடித்த "சுதந்திரப் பறவை' என்ற படமும், தேவர் ஃபிலிம்ஸ் சார்பாக சி.தண்டாயுதபாணி தயாரிப்பில் ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் நடித்த "முருக பைத்தியம்' என்ற படமும், திரைக்கு வரவில்லை. மேலும் இவர் நடித்த, "கோபுர கிளிகள்', "ஊரெல்லாம் பூப்பந்தல்' ஆகிய படங்களும் திரைக்கு வரவில்லை.

Tags : kadhir Cine Mini
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT