தினமணி கதிர்

மனக்கிணறு

1st Aug 2021 06:00 AM | சு. ராஜமாணிக்கம்

ADVERTISEMENT

 

வீட்டோடு சேர்த்து கிணற்றுக்கும் ஒரு விலையை வைத்தார் அப்பா. கிணற்றின் விலையைக் கேட்டதும் வீட்டை வாங்குவதற்காக வந்திருந்தவர் கிணற்றை ஓரெட்டு எட்டிப் பார்த்தார். அவருடன் சேர்ந்து நானும் பார்த்தேன். கிணறு தண்ணீரற்று தூர் தெரிந்தது. மேலிருந்து கீழாக இரண்டாள் மட்டத்திற்கு கருங்கற்களாலான கிணறு அது. தூர்ப்பகுதி கச்சிதமாகக் கத்தரித்து எடுத்ததைப் போன்ற வட்டக்குழி. கிணற்றுக்குள் ஒரு மண் தோண்டியும், உடைந்துசிதறிய சில்லுகளும் கிடந்தன.

கிணறு ஊரின் வறட்சியைக் காட்டுவதோடு, குடும்பத்தின் வறுமையைச் சொல்லிக் கொண்டிருந்தது. வீடும் கிணறும் விலை பேசிய காலம் கோடை என்பதால், அந்தக் கோடையிலும் கூட கிணற்றுக்குள் ஒரு குடமளவிற்குத் தண்ணீர் இருப்பதை வீடு வாங்க வந்திருந்தவர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. மழை அறவேயற்ற கோடையில் ஒரு குடம் தண்ணீரென்றால், கோடைமழை ஓருழவு அளவிற்குப் பெய்தால் ஓராள், ஒன்றரையாள் மட்டம் தண்ணீர் ஊறும் என்பதை அவருக்கு யாரேனும் சொன்னால்தான் தெரியும்.

வீடு வாங்க வந்திருந்தவருக்குக் கிணற்றின் மீது அவ்வளவாகக் கண்ணில்லை. அவர் வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தார். கடைசியில் எல்லாவற்றுக்கும் சேர்த்து இதுதான் கடைசி விலையென ஒரு விலையை வைத்து, அந்த விலையின் மீது ஒற்றைக் காலில் நின்றார். அந்த விலையில்தான் வீடும் கிணறும் கை மாறின.

ADVERTISEMENT

இப்பொழுது இந்த வீடும், மனையும், கிணறும்எங்கள் வசமில்லை. ஆனால் கை விட்டுப் போன வீட்டை விடவும், கைகழுவிக் கொண்ட கிணறு மீதான நினைவுகள் எங்களை வலை பின்னின.

பாட்டிக்கு கிணற்றுநீர் என்றால் இளநீர்தான். ஒரு குடம் தண்ணீரைக் கிணற்றிலிருந்து வாரிக் கொடுத்தால் அதை இரு கைகளாலும் அத்தனை லாகவமாக அள்ளுவாள். கிணற்று நீரால் தொண்டையை நனைக்கையில் அவளது முகம் பிரவாகமெடுக்கும். பிறந்த குழந்தையை வாரி அள்ளுவதைபோலத்தான் தண்ணீரை அவள் அள்ளுவாள்.

பாட்டிக்குக் கிணற்றின் வாய் வழியே நீர்மட்டத்தை எட்டிப் பார்க்கத் தெரியாது. பார்த்தாலும் அவளது கண்களுக்குக் கிணற்றின் தூரடி தெரிந்தும் விடாது. ஆனால் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா, இருந்தால் எத்தனை அடியாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள அவளொரு முறையைக் கையாள்வதாக இருந்தாள். கிணற்றுக்குள் தலையை நீட்டி ""ஏங்க, எங்க இருக்கீங்க...'' என்று சத்தம் கொடுப்பாள். கிணறு கொடுக்கும் எதிரொலியை வைத்து கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா, எத்தனையாள் மட்டம் இருக்கிறது என்பதைக் கனக்கச்சிதமாகக் கணித்துவிடுவாள்.

நான் சிறுவனாக இருக்கையில் தாத்தா குறித்து அம்மா ஒரு கதை சொல்லுவாள்:

""உன் தாத்தா வானத்திற்கு நட்சத்திரமாகப் போய்விட்டார்'' என்று. ஆனால் தாத்தா குறித்து பாட்டிச் சொல்லும் கதை வேறொருவிதமாக இருந்தது.

ஒரு நாள் கேட்டேன், "" பாட்டி, என் தாத்தா எங்கே?''

""உன் தாத்தா தண்ணீ மட்டம் பார்த்து வர பூமிக்குள்ளே போயிருக்கிறார்'' என்றாள்.

பாட்டியைப் பொருத்தவரைக்கும் தாத்தா இறந்துவிடவில்லை. நிலத்தடி நீர் மட்டம் பார்த்து வர பூமிக்குள் சென்றிருக்கிறார். அப்படியாகத்தான் தாத்தாவின் மரணத்தின் மீது பாட்டியின் இருத்தல் நிலை இருந்தது.

பாட்டி, கிணற்றுக்குள் தலையை நுழைத்து, "" ஏங்க, உங்களத்தான்...'' என அழைத்துவிட்டு காதைத் திருப்பி கண்களை மூடி எதிரொலியை உள்வாங்கும் அழகு பேரழகு என்றே சொல்வேன். அப்படியாகக் கேட்கையில் அவளது காது மடல்கள் கறிவாழை இலையாக விரியும். முகம் மலர்ச்சியுறும்.

தாத்தா குறித்த நினைவு எப்பொழுதெல்லாம் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் கிணறு வெட்டிய கதையைச் சொல்வாள் பாட்டி. அவர் கூலியாட்களுடன் வீர தீர சூரனாக நின்று இக்கிணற்றை வெட்டியதாகப் பூரிப்பாள். குழி தோண்டி, அகழ்ந்து, தண்டு செலுத்தி வெட்டிய கிணறு என்பாள். அவள் மேல் நின்றவாறு பூட்டக்கட்டையில் கயிற்றைக் கிடத்தி மண் இழுத்த கதையைச் சொல்லுகையில் அவளுக்கு அப்பொழுதுதான் மண் கூடையை இழுத்ததைப் போல மேல் மூச்சு, கீழ் மூச்சும் வாங்கும். கிணற்றுக்குளிருந்தபடி தாத்தாவும், மேலே நின்றவாறு பாட்டியும் பேசிய கதைகளைக் கிணறு ஊற்றெடுக்கையில் அவளால் சொல்லாமல் இருக்க முடிந்ததில்லை. அவள் சொல்லும் கதைகளில் அவளுக்குப் பிடித்தமானவை கிணறு பற்றிய கதைகள்தாம். அக்கதைகளைச் சொல்லவே காலத்தின் சூன்யம் தன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதாக பெருமிதம் பொங்குவாள்.

எங்கள் வீட்டுக்கும் கிணற்றுக்கும் ஒரே வயது. கிணறு வெட்டிய மண்தான் வீட்டின் அடித்தளம். கிணறு, வீட்டின் பின்வாசல் பக்கமாக இருந்தது. ஊர்ப்பெண்கள் கிணற்றடிக்கு வந்து கால் கடுக்க நின்று தண்ணீர் எடுத்துச் சென்ற ஒற்றையடி பாதை புல் முளைக்காமல் இருந்தது. நான் பிறந்ததற்குப் பிறகு என் கால், கண்களுக்குப் பயந்து கிணற்றைச் சுற்றிலும் சுவரெடுத்து இரு தூண்கள் எழுப்பி, அதன் குறுக்கே ஒரு நீண்ட மரத்தைக் கிடத்தி, அதிலொரு கப்பியைக் கோர்த்திருக்கிறார்கள். அதன் பிறகு எந்நேரமும் "கிரீச், கிரீச்' என தண்ணீர் இழுக்கும் சத்தம்தான்.

இக்கிணறு வெட்டப்பட்ட காலத்தில் இத்தெருவிற்கே இந்த ஒரு கிணறுதான். ஊர் வாய், இக்கிணற்றை "நல்ல தண்ணிக் கிணறு' எனச் சொல்லியிருந்தது. அப்பெயர் மெல்லத் திரிந்து, எங்கள் வீடு "நல்ல தண்ணீ வீடு' என்பதாக மருவியது.

ஊர்ப்பெண்கள் குடிதண்ணீர் எடுக்க கிணற்றடிக்கு வருகையில், பின் வாசல் ஈரத்தால் நசநசக்கையில் அம்மா அவர்களிடம் சண்டை போடுபவளாக இருந்திருக்கிறாள். ஆனால் பாட்டி, கிணற்று நீர் இறைக்க இறைக்கத்தான் ஊற்றெடுக்குமென ஊர் பெண்களிடம் சமாதானம் பேசியிருக்கிறாள். பாட்டிக்கும் அம்மாவிற்குமான மாமியார் மருமகள் சண்டை இக்கிணற்றால் வருவதாக இருந்தது.

பாறையும், செம்மண் கிராவலுமான தரை அது. ஒரு பக்கம் வீடு கட்டுவதற்கான அடித்தளம் தோண்டும் வேலை நடந்துகொண்டிருக்க; மறுபுறம் கிணறு வெட்டும் ஆட்களை வைத்து கிணற்றை வெட்டியிருக்கிறார் தாத்தா. இரண்டு மாடுகளைப் பூட்டி தண்ணீர் இறைக்கும் சால் கச்சிதமாகக் கிணற்றுக்குள் நுழையுமளவிற்கேயான ஒடுகலான கிணறு அது. இக்கிணற்றை வெட்டுகையில் ஐந்தடியில் தண்ணீர் ஊற்றெடுத்திருக்கிறது. தண்ணீரை இறைத்துக் கொண்டே இக்கிணற்றை வெட்டி முடித்திருக்கிறார்கள். கிணற்றின் ஆழம் ஆறாள் மட்டமென்று பாட்டி அவ்வப்போது சொல்வாள். அவள் சொல்லும் ஓராள்மட்டம் என்பது தாத்தாவின் உயரமாக இருந்தது.

அம்மா பிறந்த வீட்டுடன் ஒப்பிடுகையில், அவள் கல்யாணம் செய்துகொண்டு வந்த அப்பாவின் வீடு அவ்வளவாக வசதியோ, கல்வியறிவோ இல்லாத வீடாக இருந்திருக்கிறது. அம்மாவை இந்த வீட்டிற்கு சம்மதம் பேசி முடிக்க காரணம் இக்கிணறுதான். அம்மா பிறந்தகத்தில் தண்ணீரெடுக்க ஆற்றுக்கும், ஊருணிக்கும் நடையாய் நடந்து கால் தேய்ந்துப் போயிருக்கையில் வீட்டுப் பின்வாசலிலிருந்த கிணறும், நீட்டி தண்ணீரை எடுக்குமளவிற்கான நீர் மட்டமும் அம்மாவை இந்த ஊரில் கல்யாணம் முடிக்க காரணமானது.

தாத்தா - பாட்டிக்கு ஐந்து பிள்ளைகள்.

அப்பாதான் கடைக்குட்டி. நான்கு அத்தைகள்.

அத்தனை பேரும் நல்ல குடும்பத்தில் கல்யாணம் முடித்து குழந்தை குட்டிகளென வசதி வாய்ப்பாக இருக்கிறார்கள். முதல் இரண்டு அத்தைகளைக் கல்யாணம் முடித்ததோடு தாத்தா இறந்து போய்விட்டார். கடைசி இரண்டு அத்தைகளை நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து கரைசேர்த்தது அப்பாதான். நான்கு அத்தைகளும் நல்ல நாள், பெருநாளுக்குப் பிறந்தகம் வருகையில் வட்டமாக சம்மணங்கூட்டி உட்கார்ந்து என்னை ஆள்மாற்றி ஆள் மடியில் வைத்துக் கொண்டு கிணற்றின் கதையை நவிற்சியுடன் சொல்லி மகிழ்வார்கள். அவர்களைப் பொருத்த வரைக்கும் கிணறு என்பது வெறும் பள்ளமோ, குழியோ அல்ல. ஒரு குட்டிப் பிரபஞ்சம். அப்படியாகத்தான் கிணற்றுடனான அவர்களின் உறவு இருந்தது.

ஒரு நாள் கிணற்றின் கதை இப்படியாகச் சென்றது. கடைசி அத்தை சரியான முன்கோபக்காரியாம். பாட்டியின் சொற்பேச்சுக்கு படியாதவளாம். ஒரு நாள் பாட்டி, அவளைத் திட்டித் தீர்த்திருக்கிறாள்.

அத்தைக்கு வந்த கோபத்தில் உன்னிடம் இருக்க முடியாது; நான் சாகிறேனென கிணற்றுக்குள் குதித்திருக்கிறாள். அவள் குதித்த காலம் உச்சிவெயில் கோடைக்காலமாம். கிணற்றில் இடுப்பு அளவிற்கே தண்ணீர் இருந்திருக்கிறது. அவள் குதித்த குதியில் முட்டி, முழங்கால் உடைந்து "வீல்'லென அலறியிருக்கிறாள். ஊரே வட்டம் கட்டி நின்று அவளை இரத்தமும் சகதியுமாக மேலே தூக்கியிருக்கிறார்கள்.

இக்கதையை இரண்டாவது அத்தை சொல்ல முடியாமல் சொல்லி, சிரிக்க முடியாமல் சிரித்து முடித்திருந்தாள். மூன்றாவது அத்தை, கிணற்றுடன் வித்தியாசமான உறவு கொண்டவள். அவள் எப்பொழுது பிறந்தகம் வந்தாலும் திரும்பிச் செல்கையில் பிறந்த வீட்டுச் சீதனமாக ஒரு குடம் தண்ணீரைச் சுமந்து செல்பவளாக இருந்தாள். அவள் வீட்டிற்கு வருகையில் தண்ணீர் எடுத்துச் செல்ல ஒரு குடமில்லாமல் வந்ததில்லை. இப்படி சடைசடையாக ஆயிரம் கதைகள் கொண்ட கிணற்றைத்தான் அப்பா வீட்டுடன் சேர்த்து விற்றிருந்தார்.

வீட்டை விற்காமல் கடன் அடைக்க அப்பா பகீரதப் பிரயத்தனம் எடுத்துப் பார்த்தார். குடும்பத்துக் கடன் வட்டி மேல் வட்டியாக வளர்ந்து, அத்துடன் அத்தைகளைக் கல்யாணம் செய்து கொடுக்க வாங்கிய கடனும் சேர்ந்துகொண்டு, விரல் வீக்கம் யானைக்கால் வீக்கமானது. வீட்டை விற்றுக் கடன் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிற புள்ளிக்கு அப்பா வந்திருந்தார்.

"வீடு விற்கப் போகிறேன்' என்கிற முடிவை அப்பா முதலில் அத்தைகளிடம்தான் சொன்னார். அத்தைகள் நால்வரும் சேர்ந்து தம்பியின் கடன்சுமையை ஏற்கலாம் என்கிற முடிவிற்கு வந்தார்கள். அம்மா, அப்படியான உதவியை ஏற்க முன்வரவில்லை. நாத்தனாரிடம் பெறும் உதவி குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்துமென அறவே மறுத்துவிட்டிருந்தார்.

வீட்டை விற்றுவிட வேண்டும், என்கிற முடிவில் அப்பா உறுதியாக இறங்கினார். காது மந்தமாகக் கேட்கும் திறன்கொண்ட பாட்டியிடம் அதைச் சொல்கையில், அவள் மனமுடைந்து அழுது கொட்டித் தீர்த்துவிட்டாள். வீட்டின் சுவரைத் தடவிப் பார்க்கவும், சுவரில் கன்னம் வைத்து பார்க்கவுமாக இருந்தாள்.

"" ஏ வீட்டுக்காரரு உசிரோட இருந்திருந்தா இந்த வீட்டை விற்கச் சம்மதிப்பாரா?'' என அவள் அலறியபோது வார்த்தைகள் தெளிவாகக் கேட்காமல் ஆங்காரமும் கோபமும் கிறீச்சிட்டு அழுகையில் குழம்பியது. அரைத் தூக்கத்திலும் தனிமையிலும் கிணறு மீது கவலை கொண்டு புலம்புவதாக இருந்தாள். வாரத்திற்கு நான்கைந்து பேரென கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து செல்வதைப் பார்க்கையில் பாட்டிக்கு மனம் மாறுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

ஒரு நாள் அப்பாவை அழைத்து கண்களில் பீளையும் கண்ணீரும் கோர்க்க,""உன் விருப்பப்படியே செய்யப்பா'' என்றாள். அப்படியான சம்மதத்தை அப்பா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"வீடு விற்பனைக்கு' என்கிற ஒரு வரி விளம்பரத்தை ஒரு சிலேட்டில் தன் கைப்படவே எழுதி வீட்டின் முன் வாசலில் தொங்கவிட்டார். பழைய காலத்து செட்டிநாடு வடிவிலான மச்சு வீடு அது. எழுதி தொங்கவிட்டதோடு இல்லாமல் அவருக்குத் தெரிந்த தரகரின் காதில் செய்தியைப் போட்டு வைத்தார். நலுங்கல் இல்லாத சட்டை அணிந்த ஒரு தரகரின் வாயிலாக வீடு கைமாறியது.

சோற்றுப் பஞ்சம் வந்த காலத்தில் கூட தண்ணீர்ப் பஞ்சம் காட்டாத கிணறு அது. இக்கிணறு வெட்டப்பட்டக் காலத்தில் ஆயிரம் ரூபாய் செலவானதாக பாட்டி தரகரிடம் பெருமிதமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதே ஆயிரம் ரூபாயைத்தான் வீடு வாங்கியவர் கிணற்றுக்கு விலையாக கொடுக்க முன் வந்தார். பாட்டி கிணறு வெட்டிய கதையைச் சொல்லுகையில் அவளுக்குப் பெருமிதமாக இருந்தது. ஆனால், வீட்டை வாங்கியவருக்கு வாஸ்து படி இடையூறாக இருந்தது.

வீட்டின் விலை எவ்வளவு என்று அவ்வளவாகக் கணிக்கத் தெரியாத பாட்டிக்கு கிணற்றுக்கு வைக்கப்பட்ட விலை போதாதென கோபப்பட்டுக் கொண்டாள். அதற்காக அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும், கிணறு வெட்டியக் கதையைச் சொல்லி முணுமுணுப்பதுமாக இருந்தாள். கிணற்றுக்கு விலை அவ்வளவுதான். கிணற்றுக்குள் இரண்டு குடம் அளவிற்குத் தண்ணீர் இருக்கிறது. அந்தத் தண்ணீருக்காக போனால் போகிறதென்று, கூட ஐநூறு ரூபாய் வாங்கித் தருவதாக தரகர் சொன்னார். அந்த விலை மீது பாட்டிக்கு சற்றும் மட்டில்லை. மூக்கை விடைத்துக்கொண்டு, செருமி உறுமிக்கொண்டு, அந்த ரூபாயை வாங்க மறுத்து வீடு , மனை, கிணறு விற்கப்பட்ட பத்திரத்தில் ரேகை வைத்து, சொல்லாமல் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகரலானார்.

ஒரு வீட்டை ஒத்திக்கு வாங்கி தற்காலிகமாக குடியேறினாலும் சொந்த வீடு பற்றிய கவலை எல்லாருக்கும் இருக்கவே செய்தது. ஒத்தி வீட்டில் குடியேறிய பிறகு அப்பா, சொந்த வீடு இருந்த திசையைப் பார்த்தபடியே உட்காரவும், படுக்கவுமாக இருந்தார். அம்மா, அவ்வளவாக விற்ற வீட்டைப்பற்றி கவலைப்படாமல், வீட்டுக்காரர் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறுகையில் கிடைக்கும் தொகையிலிருந்து எப்படியேனும் போர்வெல் கிணற்றுடன் கூடிய வீடாகப் பார்த்து விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். ஒரு கட்டத்தில் அப்பா எப்படியோ விற்ற வீட்டை மனதிலிருந்து முற்றிலுமாகத் துறந்திருந்தார். ஆனால், பாட்டிக்கு இரவானால் கிணறு குறித்த புலம்பல்தான்.

ஒரு நாள் பாட்டி , என்னையும் அப்பாவையும் ஒன்றாக உட்கார வைத்து அவளது கடைசி ஆசையைச் சொல்லி நிறைவேற்றக் கேட்டுக்கொண்டாள். "" நான் சாகிற அன்னைக்கு, ஏ வீட்டுக்காரர் வெட்டியக் கிணத்தில ஒரு குடம் தண்ணீ எடுத்துவந்து, என்னைக் குளிப்பாட்டி தூக்கிக்கிட்டு போங்கய்யா'' என்றவள் இருவரின் கைகளையும் பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டாள். பாட்டியின் கடைசி ஆசைக்கு சம்மதம் தெரிவிக்க, அப்பாவிற்கு ஓரிரு நிமிடங்கள் பிடித்தன. நான், அந்த ஆசையை நிறைவேற்றுவதாக பாட்டியின் தலையை வருடிக் கொடுத்தேன்.

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கிய ஒரு நாளில் பாட்டி கிணறு குறித்து நினைப்பதை அடியோடு நிறுத்திக் கொண்டாள். பெரிய அத்தை முதலாளாக வந்திருந்து துக்கத்திற்கு வந்திருந்தவர்களைக் கட்டிப்பிடித்து, வீடு, கிணறு விற்ற கதையைச் சொல்லி பிலாக்கணம் பாடினாள். உறவினர்கள் அப்பாவையும், பாட்டியையும் கட்டிப்பிடித்து அழுது தீர்த்தார்கள். பாட்டியை எடுத்து அடக்கம் செய்தாக வேண்டிய வேலைகள் மும்முரமாகத் தொடங்கின. பாட்டியைக் குளிப்பாட்டும் வேலைகள் தொடங்கின. தண்ணீர் எடுத்துவர உறவினர்கள் குடங்களுடன் குழாயடிகளைத் தேடினார்கள்.

எனக்குப் பாட்டி கேட்டுக் கொண்ட கடைசி ஆசை நினைவிற்கு வந்தது. இரண்டு குடத்தை எடுத்து மோட்டார் பைக்கில் வைத்துக்கொண்டு, விற்ற வீட்டை நோக்கி விரைந்தேன். விற்கப்பட்ட வீடு அதிதுரிதமாக பெருஞ்செலவில் புதுப்பிக்கப்பட்டிருந்தது. நான் பிறந்து வளர்ந்த வீடுதானா இது, என நம்ப முடியாத அளவிற்கு வீடு நகரமயமாகியிருந்தது. எங்களிடம் இருந்ததை விடவும் கை மாறியவர்களிடம் வீடு அத்தனை அழகாகவும், சுத்தமாகவும் இருந்ததைப் பார்க்க கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. நான் வீட்டிலிருந்து பார்வையை எடுத்து பின் வாசல் வழியே கிணற்றடிக்குச் சென்றேன். கிணறு இருந்த இடத்தில் கிணறு இருந்திருக்கவில்லை. கிணற்றைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த சுவர்கள் தரையோடு தரையாக மட்டம் தட்டப்பட்டு, அதன் மீது பெரிய படுக்கைக் கற்களைக் கிடத்தி, மேலே ஒரு வாயுக்குழாயை நிறுத்தி ஒரு மூடியால் மூடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு நெஞ்சுடைந்து கண்களில் நீர்க்கோர்த்தது. கிணற்றடிக்கும் அருகில் கட்டப்பட்டிருந்த கழிவறைக் கதவைத் திறந்து கொண்டு வெளிவந்த வீட்டுக்காரர், ""வீட்டதான் வித்திட்டீங்களே, பிறகென்ன?'' என்றவாறு என்னை வெறிக்கப் பார்த்தார்.

""பாட்டியைக் குளிப்பாட்டணும், கிணத்தில ஒரு குடம் தண்ணீ எடுத்துப்போக வந்தேன்'' என்றவாறு கைகளைப் பிசைந்தேன்.

அவர், ஈரக்கைகளைக் கைலியில் துடைத்துக்கொண்டு, ""கிணத்தை மண்கொண்டு மூடி செப்டிக் டேங்காக மாற்றிட்டோம்'' என்றார். அவர் சொல்கையில் எனக்கு என் பிரபஞ்சமே அழிந்ததாக இருந்தது. என்னால் அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்க முடியவில்லை. அந்த இடத்திலிருந்து விரைந்து நகர்ந்தேன்.

பாட்டியைக் குளிப்பாட்ட அவள் மீது கிடந்த மாலைகளை எடுத்து தூரத்தில் கிடத்திவிட்டு, பாட்டியைத் தூக்கத் தொடங்கினார்கள். அப்பா, பெரிதாகச் சத்தம் கொடுத்தார்.

""கொஞ்சம் பொறுங்க. ஏ மூணாவது அக்கா இன்னும் வரல. அவள் வந்துதான் தூக்கணும்''

""ஆமாம்ப்பா, அவ இன்னும் வரக் காணோம். பஸ் வசதி இல்லாத ஊர்ல வாக்கப்பட்டவ. செத்த நேரம் போட்டு வைங்க, அவ வந்திரட்டும்...'' என்றார் உறவுக்கார ஒருவர். அத்தனை பேரும் அந்நேரத்து வரைக்கும் வராமலிருந்த அத்தையை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

தூரத்தில் ஓலக்குரல் கேட்டது. 

" அவள் வந்திட்டாள்பா....'

மூன்றாவது அத்தையைப் பார்க்க, அவளைக் கட்டிப்பிடித்து அழ உறவுக்காரப் பெண்கள் முண்டியடித்தார்கள். நான் வாஞ்சையோடு எட்டிப் பார்த்தேன். அத்தை தூரத்தில் மாமா, பிள்ளைகளுடன் நடந்து வருவது தெரிந்தது. அவள் ஒரு குடத்தைத் தலையில் சுமந்தபடி நடக்க, குதிக்க ஓலமிட்டவளாய் வந்துகொண்டிருந்தாள். அவளது கண்களும் முகமும் நீரால் நனைந்திருந்தன. நான் ஓடிச் சென்று தலையிலிருந்த குடத்தை இறக்கினேன். அது, அத்தை கடைசியாகப் பிறந்தகம் வந்து திரும்புகையில், எடுத்துச் சென்ற கிணற்று நீராக இருந்தது.

Tags : kadhir மனக்கிணறு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT