தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தைப் பேறு... ஆயுர்வேத சிகிச்சை!

25th Apr 2021 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT


எங்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஐயுஐ, ஐவிஎஃப் டோனர் செமன், டோனர் எக் கொண்டு முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. லேப்ரோஸ்கோபிக் ஆபரேஷன் செய்தும் வெற்றியடையவில்லை. என் வயது 38, கணவர் வயது 36. அவருக்கு உயிரணு எண்ணிக்கை குறைவு. எனக்குக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா?

ஆர்.லோகாம்பாள்,
கும்பகோணம்.

கருப்பையைச் சார்ந்த உபாதைகளைப் பெருமளவு குறைக்கும் "உத்தரவஸ்தி' எனும் சிகிச்சை முறையை நீங்கள் செய்து கொள்வதன் மூலம்,உங்கள் கவலையானது நீங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. கருப்பையை நெய்ப்படையச் செய்யும் மூலிகைத் தைலங்கள், நெய் மருந்துகள் ஆகியவற்றை உட்செலுத்தும் இந்த வஸ்தி முறையினால், அவ்விடத்தில் சூழ்ந்துள்ள அபான வாயுவின் ஏற்றமோ, குறைவோ சீராக்கப்பட்டு, அப்பகுதியானது சினைமுட்டையைப் பதியச் செய்து கொள்வதற்கான வழியை மேம்படுத்திக் கொடுக்கிறது. இந்தச் சிகிச்சையை எடுத்த எடுப்பிலேயே செய்து கொள்ள இயலாது. உடலை அதற்காகத் தயார்ப்படுத்தும் விதமாக முதலில் உடலெங்கும் மூலிகைத் தைலத்தைத் தடவி, மூலிகை இலைகளைக் கொண்டு உருவாக்கப்படும் நீராவி சிகிச்சையைச் செய்தால், அதனால் உட்புறக் குழாய்களில் அடைந்துள்ள அழுக்குகளின் கடினமான தன்மையானது உருகி வெளியேறத் தயாராகிவிடும். அப்போது குடலைச் சுத்தப்படுத்தும் வாந்தி - பேதி சிகிச்சை முறைகளைச் செய்து கொள்ள வேண்டும். இதற்குப் பிறகே, உத்தரவஸ்தி எனும் சிகிச்சை முறையானது செய்யப்பட வேண்டும்.

ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கருப்பையில் ஊட்டத்தை ஏற்படுத்தும் சத்துகளை அந்த ரத்த ஓட்டத்தின் வழியாக பெறுவதற்கான மூலிகை நெய் மருந்தான தாடிமாதி கிருதத்தை, சிலநாள்கள் சாப்பிட வேண்டும். அடிவயிற்றுப் பகுதியில் வாயுவின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும், தான் வந்திரம் தைலத்தைச் சூடாக்கி, அடிவயிற்றில் தடவிக் குளிப்பதையும் நீங்கள் செய்து கொள்ள வேண்டும். இப்படி எந்நேரமும் நெய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிகிச்சை முறைகள்தாம் மிகவும் சிறந்தவை.

ADVERTISEMENT

கருத்தரிக்க விரும்பும் பெண்கள், இரண்டு எள்ளுருண்டைகளைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்வதும், கணவர் இரண்டு சிறிய உளுந்து வடையை நெய்யில் பொரித்து எடுத்துச் சாப்பிடுவதையும் பழக்கமாக்கிக் கொள்வது நல்ல பலனைத் தரக் கூடிய எளிய முறைகளாகும். ஆனால் மாதவிடாய் ஏற்பட்ட தினம் முதல் கணக்காக்கி வரும் பதினோராவது நாள், தாம்பத்தியம் தவிர்க்கப்பட வேண்டிய நாளாகும் எனும் ஆயுர்வேத அறிவுரையும் ஏற்கத்தக்கதே. அதற்கான காரணத்தை ஏனோ அது விவரிக்கவில்லை. இது ஆராய்ச்சிக்கான விஷயமாகும்.

ஒரு கைப்பிடி முழு உளுந்தை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீருடன் சிறிது பால் சூடாகக் கலந்து சாப்பிடுவது, ஆண்களுக்கான உயிரணு குறைபாடு நீங்குவதற்கான ஓர் ஏற்பாடாகும்.

காலை, இரவு என உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாகக் குடிக்கலாம். அவரும் தங்களுக்குக் குறிப்பிட்டதைப் போலவே, தைலத் தேய்ப்பு, வியர்வை சிகிச்சை, பேதி செய்து கொள்ளுதல் போன்றவை செய்து, அவருக்கென பிரத்யேக சிகிச்சை முறைகளையும் செய்து கொள்ள வேண்டும். தற்சமயம் விற்பனையிலுள்ள SPERMAKOT GRANULES, ASWAGANGA CHURNAM, SIDDHAMAKARADWAJAM போன்ற தரமான மருந்துகளையும் அவர் பயன்படுத்தலாம்.

மேற்குறிப்பிட்டவை அனைத்தும் நல்ல முயற்சிகளாகும். இவை அனைத்தையும் செய்து தோல்வியடைந்தால், அதை வினைப் பயன் எனக் கருத வேண்டுமே தவிர, வேறு வழியில்லை.

(தொடரும்)

Tags : குழந்தைப் பேறு... ஆயுர்வேத சிகிச்சை!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT