தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தைகளுக்கு வயிறு உபாதைகள் வராமலிருக்க!

தினமணி

என் மகனுக்கு வயது 4. பசி வந்துவிட்டால் சமையலறைக்கு ஓடிச் சென்று அவனுக்குப் பிடித்த கடலை மிட்டாய், எள்ளுருண்டை,ரிப்பன் பக்கோடா, அச்சு வெல்லம் என்று எல்லாவற்றையும் எனக்குத் தெரியாமல் எடுத்துச் சாப்பிட்டுவிடுகிறான். டிராயரில் ஒளித்து வைத்துக் கொள்கிறான். இதனால் அடிக்கடி வயிற்று உப்புசம், வயிற்றில் மந்தம், வயிற்றுப்போக்கு வந்து கஷ்டப்படுகிறான். இதற்கு கை வைத்தியம் உண்டா?

ராதிகா, சேலம்.

மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் பலவற்றையும் உண்பதற்காக சற்றும் அம்மாவை எதிர்பார்ப்பதில்லை.

நீங்கள் குறிப்பிடும் உபாதைகளுக்கு:

கற்பூரவள்ளி, ஓம வள்ளி என்னும் செடிகளின் இலையில் இரண்டைப் பிழிந்து சிறிது சாறு எடுத்துக் கொள்ளவும். காரத்தையும் நெடியையும் குறைக்கச் சிறிது தேனும் இவற்றுடன் கூட்டிக் குழைத்து, எல்லாமுமாக இரண்டு ஸ்பூன் (10 மி.லி.) வரையில் எடுத்து, பையனுக்குக் குடிக்கக் கொடுக்கவும். தினம் இரண்டு அல்லது மூன்று வேளை கொடுக்கலாம். நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தீரும். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறையோ இம்மருந்தை ஒவ்வொரு வேளை கொடுத்து வருவதால் செரிமானம் சம்பந்தமான உபாதைகளை வராமலேயே தடுத்துவிடலாம்.

சில பிள்ளைகளுக்கு வயிற்றுக் கடுப்பு உண்டாகி அடிக்கடி சளி போன்ற சீதம் போகும். சிறிது ரத்தமும் இந்த சீதத்துடன் கலந்து மலத்துடன் போகும். வயிற்று வலியோடு முக்கி முனகி பிள்ளை தவிப்பதைப் பார்க்கச் சகிக்காது. அதற்கு அஸ்கா சர்க்கரையில் சிறிது நெய்விட்டுக் குழைத்துத் தினம் இரண்டு அல்லது மூன்று வேளை கொடுக்கலாம். சர்க்கரையில் ஜீராவை மட்டும் வேளைக்கு 5 மி.லி. அளவாகத் தினமும் 2 அல்லது 3 வேளை கொடுப்பதும் நலம்.

கொஞ்சம் பாலில் சம அளவாக விளக்கெண்ணெய்யைச் சிறிது சிறிதாகக் கூட்டிக் குழைத்து வரவும். இரண்டும் ஒன்றாய்க் கலந்து ஒருவகை ஏடு போல் வரும். இதில் வேளைக்கு 5 மி.லி. அளவாகத் தினமும் 3-4 வேளை கொடுப்பதும் நலம்.

வடித்தவுடன் ஆவியோடு சுடச்சுட இருக்கும் அன்னத்தில் புளித்த தயிரையும் கூட்டிக் கலந்து, அரை வயிறு சாப்பிடுவதும் வயிற்றுக் கடுப்பை நிறுத்தும் மருந்து ஆகும்.

மாங்காய் வற்றலைத் தயிரில் கலக்கியோ, மாங்கொட்டையின் உட்பருப்பை அரைத்துத் தயிரில் கலக்கியோ, தயிர்ப்பச்சடி போல் செய்தோ கொடுப்பதும் நல்லது. மாங்கொட்டையை வற்றல் குழம்பாக வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

தயாரித்து விற்பனை செய்யப்படும் மருந்துகளில் வில்வாதி லேகியம் நல்லது. 5 கிராம் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கலாம். முஸ்தாரிஷ்டம், ஜீரகாரிஷ்டம் ஆகியவற்றை வகைக்கு ஏழரை மி.லி. கலந்து, மொத்தம் 15 மி.லி. காலை, இரவு உணவுக்குப் பிறகு கொடுக்கலாம். இவற்றால் பசி எடுப்பது குறையாது; கூடும். ஆனாலும் வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு இது நல்லது. வயிற்றிலுள்ள கசடுகளை அகற்றும்.

நாற்காலி போட்டாலும் எட்டாத இடத்தில், பையன் விரும்பும் உணவுப் பண்டங்களை, கண்களுக்குத் தென்படாத வகையில் வைப்பதே நல்லது. அவன் வேண்டும் என்று அடம் பிடிக்கும்போது, ஒன்றிரண்டை மட்டும் கொடுத்து தாஜா செய்து அனுப்புவது நல்லது.
எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து சிறிது தேன் மற்றும் இஞ்சிச் சாறு கலந்து , இந்துப்பு, சிட்டிகை சேர்த்து, வாரமிருமுறை பையனுக்குக் கொடுத்து வந்தால், கல்லீரல் வரை சேரும் அழுக்குகளைச் சுரண்டிக் கலைத்து, வயிற்றைச் சுத்தமாக்கி வைக்கும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT