தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 31

பிரணாப்தாவுடனான தொலைபேசி உரையாடல் முடிந்ததும், சில நிமிடங்கள் சோ சார் அமைதியாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். அதுபற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை.

""அவர்கள் உள்ளே எனக்காகக் காத்திருப்பார்கள். நான் இரவில் இங்கேதான் தங்கப் போகிறேன். நீங்களும் இங்கேயே தங்கிவிடுங்கள். காலையில் பேசிக் கொள்ளலாம். முடிந்தால், சந்திரசேகரை நாம் தனியாக சந்தித்துப் பேசுவோம். இவர்கள் எல்லாரும் இருக்கும்போது எதுவும் விவாதிக்க முடியாது''என்றார் சோ சார். சொல்லிவிட்டு அவர்பக்கத்து காட்டேஜுக்குப் போய்விட்டார்.

போன்சி பண்ணையில் தங்குவது எனக்குப் புதிதல்ல. அங்கே இருப்பவர்கள் பலரும் எனக்கு நன்றாகவே அறிமுகமானவர்கள். உதவியாளர் கெளதம் எனது இரவு உணவுக்கும் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்து தந்தார்.

எட்டு மணிக்கெல்லாம் சந்திரசேகருடன் காலை உணவு அருந்த அழைக்கப்பட்டேன். சோ சாரும் அங்கே இருந்தார். அவர்தான்
பேச்சைத் தொடங்கினார்.

""வைத்தியநாதன் மூலம் பிரணாப் முகர்ஜி ஒரு செய்தி சொல்லி அனுப்பி இருந்தார். நான் பிரணாப் முகர்ஜியுடன் தொலைபேசியில் பேசினேன்.''

""வைத்தியநாதனை சந்திக்க நீங்கள் அடுத்த காட்டேஜுக்குப் போனீர்கள் என்றபோதே, இப்படி ஏதாவது நடந்திருக்கும் என்று நான் யூகித்தேன். என்ன சொல்கிறார் பிரணாப்?''

""நாங்கள் சொல்லியதைத்தான் அவரும் சொல்கிறார். நீங்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாதுஎன்று வற்புறுத்துகிறார்.''

""என்னை முந்திக் கொண்டு ராஜீவ் காந்தி முடிவெடுத்து, ஆதரவை விலக்கிக் கொண்டால் அது எனக்கு மிகப் பெரிய அவமானமாகப் போய்விடும். அதை ஏன் நீங்கள் எல்லாரும் உணர மறுக்கிறீர்கள்?''

""அப்படி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்வதாகப் பிரணாப் முகர்ஜி உறுதி அளிக்கிறார். இப்போதைய பொருளாதாரச் சூழலில் அது இந்தியாவுக்கு நல்லதல்ல என்று அவர் எச்சரிக்கிறார்''

""பிரணாபுக்குத் தெரிந்த அளவுக்குப் பொருளாதாரம் ராஜீவ் காந்திக்குத் தெரியாது, சோ. பிரணாப் முகர்ஜி சொல்வதைக் கேட்டு நடப்பவராக ராஜீவ் காந்தி இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அயோத்தி பிரச்னைக்கு நல்ல தீர்வு ஏற்படுவதைக் காங்கிரஸ்காரர்கள் பலரும் விரும்பவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?''

நானும் சோ சாரும் சந்திரசேகர்ஜியை ஆச்சரியத்துடன் பார்த்தோம். சந்திரசேகர்ஜி தொடர்ந்தார்.

""அயோத்தி மட்டும்தான் பிரச்னை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதுவும் ஒரு பிரச்னை, அவ்வளவுதான். இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. போதாததற்கு வருவாய்ப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை என்று பல பிரச்னைகள். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது இந்தியாவில் நுழைந்துவிட வேண்டும் என்று பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அந்த அந்நியசக்திகளுக்கு நான் ஒரு தடையாக இருக்கிறேன்.''

""அதனால்தான் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி எச்சரிக்கிறார் போலிருக்கிறது...''

""சோ, "இந்தியா டுடே' இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது, படித்துப் பாருங்கள். அதில் அஜித் நைனான் பிரமாதமாக ஒரு கார்ட்டூன் வரைந்திருக்கிறார். அதுதான் உண்மையான நிலைமை. நான் மந்திரவாதியல்ல சோ. ஆனாலும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்தியாவைப் பாதுகாத்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறோம். ஐந்து வருட ராஜீவ் காந்தி அரசும், 11 மாத வி.பி. சிங்அரசும் இந்தியாவை திவால் நிலைக்குத் தள்ளி இருக்கின்றன. உலக வங்கியிலும், சர்வதேச நிதியத்திடமும் இந்தியாவை அடகு வைத்துவிடாமல் காப்பாற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம். ராஜீவ் காந்தி இதையெல்லாம் புரிந்து கொள்ளவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அவருக்கு நெருக்கமானவர்கள் சர்வதேச சக்திகளின் கைப்பாவையாக இருக்கிறார்கள்.''

சந்திரசேகர்ஜி உணர்ச்சிவயப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார். அவர் அப்படிப் பேசும்போது வார்த்தைகள் அருவிபோல வந்து விழும். அதில் இருக்கும் தெளிவும், அழுத்தமும், ஆழமும் அசாத்தியமானவை. கொள்கைப் பிடிப்பிலும், தேசபக்தியிலும் சந்திரசேகர்ஜியை மிஞ்சிடும் அரசியல் தலைவரை நான் சந்தித்ததில்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

""இந்தியா அந்நிய சக்திகளின் பிடியிலும், பன்னாட்டு நிறுவனங்களின் கையிலும் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக நான் பொறுமை காக்கிறேன். பிரணாப் முகர்ஜியிடம் அவரது அக்கறைக்கு நான் நன்றி கூறியதாகச் சொல்லுங்கள். ஆனால் சோ, பிரணாபின் ஆலோசனைகளை ராஜீவ் காந்தி கேட்பார் என்று எனக்குத் தோன்றவில்லை'' என்றார் பிரதமர் சந்திரசேகர்.

அதற்குள் அவருக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள். பிரதமர் என்பதால் பல சந்திப்புகள் தில்லியில் இருந்தன. அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவருடன் சோ சாரும் தில்லிக்குப் புறப்பட்டார். நான் எனது "யெஸ்டி' மோட்டார் சைக்கிளில் தில்லி திரும்பினேன்.

இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜி மிகப் பெரிய ஆளுமையாகவும், தலைவராகவும் ஒருவரை மதித்தார் என்றால் அது சந்திரசேகரை மட்டுமே. அதைப் பலதடவை என்னிடம் அவர் தெரிவித்திருக்கிறார். சந்திரசேகர் பிரதமராகத் தொடர்ந்திருந்தால் ஈழத் தமிழர் பிரச்னைக்கும்,

காஷ்மீர் பிரச்னைக்கும் தீர்வு கண்டிருப்பார்
என்பது பிரணாப்தாவின் கருத்து.
இக்கட்டான சூழலில் இந்தியாவையும்
இந்தியப் பொருளாதாரத்தையும் மீட்டவர் என்று

அரசியல் நோக்கர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவை வர்ணிக்கிறார்கள். ஆனால், சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான கட்டத்தில் பேரழிவிலிருந்தும், குழப்பத்திலிருந்தும் இந்தியாவைக் காப்பாற்றிய பெருமைக்குரியவர் பிரதமர் சந்திரசேகர்ஜிதான் என்பது அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கும், பிரணாப் முகர்ஜி போன்ற சமகால அரசியல் தலைவர்களுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.

நவம்பர் 11, 1990-இல் சந்திரசேகர் பிரதமராகப் பதவி ஏற்றபோது அயோத்தி போராட்டம் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. ஏறக்குறைய பிரிவினையின்போது இருந்ததுபோல, வட இந்தியா முழுவதும் ஹிந்து - முஸ்லிம் மோதல்போக்கு வலுத்திருந்தது. பஞ்சாபில் பிரிவினைவாதம்; காஷ்மீரில் பயங்கரவாதம்; அஸ்ஸாமில் கலகம்; முந்தைய வி.பி. சிங் அரசு இலங்கையிலிருந்து இந்திய அமைதிப் படையைத் திருப்பி அழைத்துக் கொண்ட நிலையில், ஈழப் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருந்தது. இதெல்லாம் போதாதென்று பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருந்தது.

""அத்தகைய சூழலில், இந்தப் பிரச்னைகளைத் துணிந்து எதிர்கொள்ள சந்திரசேகர்ஜி முடிவெடுத்ததற்குக் காரணம், அவரது தன்னம்பிக்கை மட்டுமல்ல, ராஜீவ் காந்தி அவருக்கு அளித்த வாக்குறுதி. நிபந்னையற்ற ஆதரவு தருவதாக ராஜீவ் காந்தி சொன்னபோது, எவ்வளவு நாட்களுக்கு என்று கேட்காமல்விட்டது சந்திரசேகர்ஜி செய்த மிகப் பெரிய தவறு'' என்று சந்திரசேகர் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த சத்யபிரகாஷ் மாளவியா என்னிடம் பின்னாளில் தெரிவித்து வருத்தப்பட்டார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அப்போது ராஜீவ் காந்தியின் வீட்டிற்கு அருகில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு
அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்து விசாரித்தனர்.

ஹரியாணாவில் அப்போது தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் செளதாலா முதல்வராக இருந்தார். தேவிலால், சந்திரசேகர் அமைச்சரவையில் துணைப் பிரதமர். இந்தப் பின்னணியையும், பிரேம் சிங், ராஜ் சிங் என்கிற ஹரியாணா காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் இருவரின் நடமாட்டத்தையும் இணைத்துப் பார்த்த ராஜீவ் காந்தியின் பாதுகாப்புப் படையினர், அவர்கள் ராஜீவ் காந்தியை வேவு பார்க்க வந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தை எழுப்பினர்.

வேடிக்கை என்னவென்றால், ராஜீவ் காந்தியின் 10, ஜன்பத் இல்லத்தின் அருகே இருந்த டீக்கடையில் அவர்கள் இருவரும் சாயா குடித்துக் கொண்டிருந்தனர். வற்புறுத்திக் கேட்டபோது அவர்கள் நாங்கள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலாவின் கட்டளைப்படி தில்லி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதற்குப் பின்னால், இன்னொரு அரசியலும் இருந்தது. அது வெளியில் வரவே இல்லை.

துணைப் பிரதமர் தேவிலாலின் குடும்பத்தில் ஓம் பிரகாஷ் செளதாலா முதல்வராக்கப்பட்டதில் அண்ணன் தம்பிக்குள் வருத்தம் இருந்தது. செளதாலாவைப் பதவியில் இருந்து அகற்ற அவரது சகோதரர் ரஞ்சித் சிங் தீட்டிய சதித்திட்டம்தான் அந்தக் காவலர்களின் வேவு பார்த்தல் என்று கூறப்படுகிறது.

முதல்வர் செளதாலாவின் உத்தரவுப்படி, ஹரியாணா உள்துறை அமைச்சர் சம்பத் சிங்கால் இரண்டு காவலர்கள் வேவு பார்க்க அனுப்பப்பட்டதாக, ராஜீவ் காந்தியிடம் ரகசியமாகத் தெரிவித்தார் ரஞ்சித் சிங் என்றும், தன்னை முதல்வராக்கினால் ராஜீவ் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் விசுவாசமாக இருப்பதாக அவர் தெரிவித்தார் என்றும், சந்திரசேகர் ஆட்சி கவிழ்ந்த பிறகு தகவல்கள் வெளியாகின. அவை பத்திரிகை செய்தியாகவில்லை.

ராஜீவ் காந்தியின் முதலாவது அழுத்தம் தன்னை வேவு பார்க்க அனுப்பிய ஓம் பிரகாஷ் செளதாலாவை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். பிரதமர் சந்திரசேகரால் துணைப் பிரதமர் தேவிலாலைப் பகைத்துக் கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல, ஒரு சின்ன விஷயத்துக்காக காங்கிரஸ் தனக்கு அழுத்தம் கொடுப்பதை அவர் விரும்பவும் இல்லை.

மார்ச் 2-ஆம் தேதி ஹரியாணா காவலர்கள் இருவரும் வேவு பார்த்ததாகக் கூறப்பட்ட சம்பவம் நடந்தது. அடுத்த நாளே பிரதமர் சந்திரசேகரின் உதவியாளர் யாதவை அழைத்துப் பிரதமரை சந்திக்க முடியுமா என்று நான் கேட்டபோது, அதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டார்.

""வேண்டுமானால் காலையில் வாருங்கள். அவரது கண்ணில் படும்படி ஓரிடத்தில் உங்களை நிற்க வைக்கிறேன். அதற்குப் பிறகு உங்கள் அதிர்ஷ்டம்'' என்றார் யாதவ்.

அதிகாலையில் ஆஜராகி விட்டேன். அவர் வெளியில் கிளம்பும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். நாடாளுமன்றம் வேறு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் 8 மணிக்கே கிளம்பிவிட்டார் பிரதமர். என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல, அரசுச் செயலர்கள் சிலருடன் பேசியபடி நடந்து சென்றார். அதுவும் நான் எதிர்பார்த்ததுதான்.

வெளியில் காரில் கிளம்பும் சத்தம் கேட்டது. கெளதம் ஓடிவந்து என்னைக் பிரதமர் கூப்பிடுவதாகச் சொன்னார். விரைந்தேன். அம்பாஸிடர் காரின்
கண்ணாடியைத் திறந்தபடி அருகில் அழைத்தார் பிரதமர் சந்திரசேகர்.

""என்ன, எதற்காக வந்திருக்கிறாய்?''

""பிரச்னை என்னவென்று உங்களுக்குத் தெரியும். என்னிடம் எதுவும் சொல்ல வேண்டாம். பத்திரிகையாளர்களிடம் நீங்கள் விளக்கம் தெரிவிக்காமல் இருந்தால் எப்படி? நிருபர் கூட்டம் நடத்தித் தன்னிலை விளக்கம் கொடுங்கள் என்று சொல்லத்தான் வந்தேன்.''

""நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நான் வெளியில் பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசக் கூடாது. எந்த விளக்கம் கொடுப்பதாக இருந்தாலும், அதை அவையில்தான் கூற வேண்டும். பிரணாப் முகர்ஜி என்ன சொல்கிறார் என்று கேள். இரவில் போன்சி பண்ணைக்கு வந்துவிடு.'' கார் நகர்ந்து விட்டது.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT