தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மருந்து... தடுப்பு ஊசி!

DIN


கரோனா நோயைத் தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் தடுப்பு ஊசியைத் தயாரிப்பதற்கான தீவிர முயற்சிகளில் பலரும் முனைப்புடன் செயல்படுவது நன்மை அளிக்குமா? இந்தப் பிரச்னையை தடுப்பு ஊசி மூலம் சமாளிக்க முடியுமா?

ரவீந்திரன், மேற்குமாம்பலம்,
சென்னை.

கரோனா நோய் கொடூரமாகவும் வேகமாகவும் பரவும் தன்மை உடையதாக இருப்பதால், அந்த நோய்க்கு உட்படாமலிருக்கத் தடுப்பு ஊசிக்கான ஆராய்ச்சி என்பது வரவேற்கத்தக்கதே. மக்கள் பெருந்திரளாகக் கூடும் திருவிழா போன்றவற்றில் கலந்து கொள்ளச் செல்பவர்கள், கரோனா தடுப்பு ஊசி போட்டுச் செல்லும்படி வற்புறுத்தப்படலாம். நம்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், கரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதற்கான அத்தாட்சி பத்திரம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டமும் இயற்றப்படலாம். எப்படி காலரா தடுப்பு ஊசி பல ஆண்டுகளுக்கு நீடித்த தடுப்பு சக்தியைத் தராவிடினும் குறைந்த கால அளவிற்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறதோ, அதைப் போல இந்தத் தடுப்பு ஊசியும் பயன்படலாம்.

கரோனாவைப் பரப்பும் ஜீவாணுக்கள் ஊசி போட்டுக் கொண்டவர்களைப் பாதிப்படையச் செய்யாமல் போனாலும், அவர்களிடம் தன் சக்தியைக் காட்டாமல் அவர்களையே வாகனமாகப் பயன்படுத்திக் கொண்டு, அத்தகைய பாதுகாப்புப் பெறாதவர்களிடேயே பரவி நோயின் வலிமையைக் காட்டிவிடக் கூடும். எனவே சமூகப் பாதுகாப்பிற்கான கவனமும், உடனடி நடவடிக்கைகளும் தடுப்பு ஊசியை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், கரோனாவைக் கட்டுக்குள் அடக்கி ஆபத்துகளைத் தவிர்க்க நகர - சுகாதாரமும் தனிக் குடும்ப சுகாதாரமும் நல்ல முறையில் கூட்டுறவுடன் அமைக்கப் பெற வேண்டும். தும்மல் வழியாகவோ, இருமல் வழியாகவோ நோய்க்குக் காரணமான ஜீவாணுக்கள் பரவ முடியாதபடி, தூய்மை கடைப்பிடிக்கப் பெற வேண்டும். சூழ்நிலை சுகாதாரம் தினசரி கவனிக்கப் பெற வேண்டியதாகும்.

கரோனா நோய் ஏற்பட்ட பின், அவசரக் கோலத்தில் தடுப்பு முறைகளை ஏனோதானோ என்று கையாள்வதைவிட, நின்று நிலைத்திருக்கக் கூடிய சூழ்நிலைத் தூய்மைப் பாதுகாப்பே சிறந்தது. நோய் தடுப்பு ஊசியால் தனி மனிதனுக்கு ஓரளவு பாதுகாப்பைத் தர முடியும். அதனால் நோய் விளைவிக்கும் சூழ்நிலையை அகற்றியதாக ஆகாது. ஆகவே பொது சுகாதாரத் திட்டங்களில் இன்று கரோனா தடுப்பு ஊசி போடுவது, வெள்ளம் வந்த பின் அதைத் தடுக்கப் போடப்படும் மணல் மூட்டை அணை போன்றது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவுதல் போன்ற சூழ்நிலைப் பாதுகாப்புச் செயல்கள் வெள்ளத்தை எதிர்பார்த்துக் கரைகளைத் திடப்படுத்துவதற்கொப்பானது.

ஆயுஷ் க்வாத சூரணம், பூண்டு, வேப்பம்பட்டை, துளசி, நெல்லிக்காய், அஸ்வகந்தா, சீந்தில் கொடி போன்றவை சேர்க்கப்பட்ட இம்யூனிட் சிரப், அபராஜித தூபம் போன்ற தனிமனித பாதுகாப்பைத் தரக் கூடியதும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தக் கூடியதுமான ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்திக் கொண்டு, கண்டுபிடிப்பிற்காக காத்திருக்கக் கூடிய தடுப்பு ஊசியையும் பயன்படுத்திக் கொண்டு மக்களிடையே நோய்த் தொற்றைப் பரவவிடாமல், பாதுகாக்க வேண்டிய கடமை தனி மனித ஒழுக்கத்தைச் சார்ந்ததாக இருக்கிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT