தினமணி கதிர்

தரிசனங்கள்

DIN


சென்ற இதழ் தொடர்ச்சி...

புது மணப் பெண் முதன்முறையாய் பிறந்தகம் செல்லும் மனக் குதிப்புடன், அக் கணங்களுக்காகக் காத்திருந்தாள். முற்றிலும் குணமடைந்து தனிமைப்படுத்தப்படும் நாட்களின் கணக்கும் ஆமோதித்து அனுமதித்ததால் இம் முறை அவளைக் கூட்டிச் செல்ல வந்தது ஆம்புலன்ஸ் இல்லை. முகமூடியுடன் அவள் அம்மாவும் அண்ணனும். நேராக அவளிருந்த அறைக்கே அனுமதிக்கப்பட்டார்கள். அத்தனை நாட்கள் யாரையும் பார்க்காத ஆற்றாமை அழுகையாய் வெளிப்பட... அவர்களும் அழுதார்கள்... அம்மா இன்னும் அதிகமாய்...

""என்னம்மா இது... ஏன் இப்படி அழறே? நான் தான் சரியாயிட்டனே. கொஞ்ச நாளில் அவரும் வந்துடுவாராம். சரி... வீட்டுக்குப் போய் பேசலாம். கிளம்பலாமாண்ணா'' அவசரமாய் எழுந்தவளைத் தோள் பிடித்து அமர்த்தி, அம்மாவைப் பார்த்தார் அண்ணன். எதுவுமே சொல்லாமல் அழுதாள் அம்மா.

வீணா குழப்பமாய் அண்ணனைப் பார்க்க...

""இப்ப நாம் நம்ம வீட்டுக்கு... அதாவது எங்க வீட்டுக்குப் போறோம். கொஞ்ச நாள் நீ எங்களிடம் இருக்கலாம். உனக்கு உடம்பு தேறணுமில்லே. உங்க வீட்டில் எப்படித் தனியா இருப்பே?''

""எனக்கு ஒண்ணுமில்ல அண்ணா... என்னால் சமாளிக்க முடியும். ரெண்டு மூணு நாளில் அவர்வர்றப்ப நான் அங்க இருக்க வேணாமா... அண்ணனுக்கு நீ சொல்லும்மா''

அம்மா இப்போது பெருங்குரலில் அழ ஆரம்பித்தாள்.

""அம்....மா.... விழிகளெல்லாம் கலவரமாக... அண்ணா '' கன்றின் தீனக் குரல் கேட்டு மருளும் பசு போல் துடித்த அத் தாய் அவளைப் பார்க்கும் திராணியற்று சுவரை வெறித்தாள்.

ஏதோ விபரீதமாய் நடந்திருக்கிறது. பேரச்சத்துடன் வீணா இருவரையும் மாறி மாறி நோக்க...

அவள் பக்கத்தில் வந்தமர்ந்த அண்ணன் ஆசுவாசமாய் கையைப் பற்றிக் கொண்டார்.
""வீட்டுக்கு இனி அவர் வரவே மாட்டார்மா'' அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பெரு முயற்சியுடன் அண்ணன்.
""நம்மை விட்டுப் போய்ட்டாரா அவர்... என்ன சொல்றேண்ணா?'' மொழி புரியாத மழலை போல் மலங்க மலங்க விழித்தவள் செவியில் கொதி நிலை ஈரக் குழம்பாய் கொட்டப்பட்ட தகவல்கள்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே அவள் கணவரின் உயிர் பிரிந்து விட்டதாம். வீட்டுக்கு அனுப்பவியலாத நிலைமை. மருத்துவமனைச் சம்பிரதாயங்களெல்லாம் முடிந்து அந்த நள்ளிரவே அவர் மைத்துனர் மகன் சசிதர் கையால் இறுதிக் காரியங்களும் முடிந்து விட்டனவாம். மறுநாள் அவளுக்கு விஷயத்தைப் பக்குவமாய் எடுத்துச் சொல்லலாமென நினைத்து... எதிர்பாராதவிதமாய் அடுத்த நாளே அவளும் பாதிக்கப்பட்டு மருத்துவமனை வாசமானதால் டாக்டர்களின் ஆலோசனைப்படி அப்போதைக்குச் சொல்ல வேண்டாமென முடிவுசெய்யப்பட்டது. வெளிநாட்டிலிருந்த பிள்ளைகள் எண்ணமும் அதுவாகத் தானிருந்தது. அம்மாவையாவது தக்க வைத்துக் கொள்ளும் ஆதங்கம் தான்!

எரிமலை வெடிக்கும் முன்னான நிலையிலிருந்தாள் வீணா. அந்த ஆழ் சமாதி நிலையில் அவளுள் ஒரே கேள்வி தான்... இத்தனை நாட்களாய் தனக்கு ஏன் அப்படியொரு சந்தேகமே வரவில்லை? ஒரு முறை ஒரே ஒரு முறை கூட அந்த எண்ணம் குழப்பமாய்க் கூட எழவில்லையே... குணமடைந்து வீடு திரும்புவார் என்று தானே நம்பிக் கொண்டிருந்தாள். நம்பினாள் என்பது கூடச் சரியில்லை. உத்தரவாதமில்லாத விஷயங்களில் தானே நிச்சயம் நடக்கும் எனும் நம்பிக்கை வரும்? அவள் மனதில் தான் சந்தேகத்தின் சாயல் கூட இல்லையே... அவ்வளவு நாட்கள் அவரிடமிருந்து சரி வரத் தகவலே இல்லாத போது அவருக்கு ஏதேனும் ஆகி விட்டிருக்குமோ என்று இம்மியளவு கூட நினைத்துப் பார்த்தவளில்லையே...

எரிமலை வெடித்தே விட்டது. கனன்று கனன்று சீறிச் சீறித் துயரக் கங்குகளைத் தெறித்தது. பொங்கிப் பொங்கி அழுதாள்.
""எல்லாருமாய்ச் சேர்ந்து என்னை இப்படி ஏமாற்றி விட்டீர்களே. எப்படி முடிந்தது உங்களால்... எதுவுமே நடக்காதது போல் எப்படி நடிக்க முடிந்தது உங்களால? இப்படி அநியாமாய் என்னை ஏமாற்றி விட்டீர்களே... என் பிள்ளைகள் கூடவா?''
அழுது ஓயட்டும் எனக் காத்திருந்தனர்
அவர்கள். மூடிய கதவாதலால் யாரும் வந்து எட்டிப் பார்க்கவில்லை.
""மனதைத் திடப்படுத்திக் கொண்டு கிளம்பும்மா''
""சரிண்ணா... உங்க வீட்டுக்கே போகலாம்'' உணர்வுகளற்ற ரோபோவாய் அவர்களுடன் கிளம்பினாள்.
அண்ணன், அண்ணி, பிள்ளைகள் எல்லோரும் அவளை நன்றாகவே பார்த்துக் கொண்டனர். இருந்தாலும் ஏதோ ஒரு விலகல் தெரிந்தது. அச்சம்...
பீதியினடிப்படையிலான விலகல்! அவளுடைய மற்ற நெருங்கிய உறவுகள் யாருமே அவளைப் பார்க்க வராதது வேறு முழுமையாய் குணமடையவில்லையா நான்? அவளுக்கே சந்தேகம் வந்தது. தவிர எத்தனை நாட்களென அங்கு தங்க முடியும்? பிள்ளைகள் இங்கு வர இன்னும் ஒரு மாதத்துக்கு மேலாகலாமாம். வைரஸ் பரவலைத் தடுப்பதில் ஆஸ்திரேலிய அரசு மிகத் தீவிரமான கட்டுத்திட்டங்கள் மேற்கொண்டிருக்கிறதாம். பெரியவனுடன் வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் இந்தியாவில் அவன் அம்மா, அண்ணன், தம்பி என ஒரே வீட்டில் மூன்று பேர் இந் நோய்க்குப் பலியாகியிருந்தும் அங்கிருந்து புறப்பட இருபத்தைந்து நாட்களுக்கு மேல் தான் அனுமதி கிடைத்ததாம். பத்து மாதங்களில் உலகம் எப்படியெல்லாம் நிலை குலைந்து போய் விட்டது? நிச்சயமற்ற தெளிவற்ற எதிர்காலம்... இதில் நானும் ஒரு புள்ளியாய்... வாழ்க்கை அடியோடு சிதைந்து சின்னாபின்னமாகி... வசதியற்றவர்கள்
இன்னும் எப்படியெல்லாம் அவதிப்பட்டுக்
கொண்டிருப்பார்கள்?
அண்ணன் இருந்த குடியிருப்பில் கீழ் தளத்தில் ஒரு வீடு காலியாக இருப்பது தெரிய வந்து அண்ணனுடன் போராடி அங்கு வந்து விட்டாள் வீணா... தனிமை அல்லல்படுத்தினாலும் மனதில் இப்போது ஒரு தெளிவு... தெளிவின் விளைவாய் ஒரு முடிவும்!
அன்று வழக்கம் போல் பெரியவன் பேசும் போது ""கொஞ்ச நாள்தாம்மா. நான் வந்தப்புறம் நம்ம வீட்டுக்குப் போய்டலாம். அங்கயே வேலை தேடிக்கலான்னு'' அவனை முடிக்க விடவில்லை அவள்.
""ஐயோ... அதெல்லாம் வேணாம்டா. இப்ப இங்க இருக்கறவங்களுக்கே வேலை போய்ட்டிருக்குப்பா. பணம் காசுங்கிறதோட அருமை, இந்தக் கொஞ்ச நாள்ல இன்னும் நல்லாப் புரிஞ்சுட்டுதுடா... அவசரபட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதே''
""அப்படின்னா... அப்பா கூட இல்லாம அங்க எப்படிம்மா நீ தனியா இருப்பே?''
""உங்கப்பா நம்மை விட்டு ஒரேயடியா போய்ட்டார்ங்கறதே முழுசா ரெண்டு வாரம் எனக்குத் தெரியாம இருந்தேங்கற கொடுமையை விடவாடா?'' சில மெளன நொடிகளுக்குப் பின் தொடர்ந்தாள்.
""அந்த வீட்டுக்கு நான் போறதாவே இல்லே. இங்கயே இருந்துக்கறேன். மேலயே அம்மா... அண்ணன் அண்ணில்லாம் இருக்காங்க. நம்ம வீட்டை வித்துடலாம். பெரிய வீடு... நல்ல சென்டர்.. நல்ல விலைக்குப் போகும். கிடைக்கிற தொகையில் எத்தனை முடியுமோ அத்தனை ஆம்புலன்ஸ் வாங்கி கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குக் கொடுத்துடலாம்பா. ஆம்புலன்ஸ் கிடைக்காம யாரும் செத்துப் போகக் கூடாதுடா. தம்பியிடமும் பேசிடு... இது தான் என் முடிவு'' உங்களால் மாற்ற முடியாதெனும் தொனியில் சொல்லி ரிஸீவரைக் கீழே வைத்தாள்.
விழிகள் செருகி... நாக்கு துருத்தி... சுவாசத்துக்குத் தவியாய் தவித்தபடி தாமதமாக வந்த ஆம்புலன்ஸில் பயணமான... அதற்குப் பின் பார்க்கவே மறுதலிக்கப்பட்ட புருஷன் முகம் மனதில் வர... அவரின் அசலான முகம் மறந்தே போய்விடுமோ? பயமேற்பட்டது அவளுக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி அசத்தல்: கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

SCROLL FOR NEXT