தினமணி கதிர்

தரிசனங்கள்

18th Oct 2020 06:00 AM | சாந்தா தத்

ADVERTISEMENT


நீல உடைத் தேவதையின் கனிவான அந்த வார்த்தைகள் ஒரு நல்ல பாடல் கேட்பது போல் பரவசமாக இருந்தது வீணாவுக்கு. பெயர் பொருத்தமோ என்னவோ எதையுமே இசையுடன் பொருத்தி நினைப்பது அவளையுமறியாமல் சேர்ந்து கொண்ட பழக்கமாகிவிட்டது. அப்போது அவளிருந்த மனநிலையில் அவள் செவியில் விழுந்த அந்த ஒற்றை வரி "டாப் டென்' வரிசையில் முதலிடம் பெற்ற பாடலின் அதீத
இனிமையுடன்...
""இனிமேல் நீங்க கொஞ்ச தூரம் காலாற நடக்கலாம்''- செவிலித் தோழியின் அந்த அனுமதி தான் அத்தனைக்கும் காரணம் ! வெள்ளையுடைத் தேவதை என்பார்கள். அங்கு வெள்ளை வெளிர் நீலமாய் மாறியிருந்தது. சமீப மாதங்களாய் உலகெங்குமே குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் அந்த வெள்ளை நீலமாய் நிறம் மாற்றப்பட்ட நிர்ப்பந்தச் சூழல்...வேதனையுடன் நெட்டுயிர்த்தாள்... கண்கள் மட்டும் களைப்பை மீறி ஒளிர்ந்த முகம் தெரியா அப் பெண்ணை நோக்கி நன்றியாய்த் தலையாட்டி... அவசரமாய் எழுந்த வீணாவைத் தோள் மேல் கை வைத்து அமர்த்தினாள்.
""அடடா...அவ்வளவு போரடிக்குதா? இருங்க.. சூடா உப்புமா... சாண்ட்விட்ச் எல்லாம் வரும். அடுத்து மருந்து மாத்திரையெல்லாம் முடிந்து பிறகு ஒரு ரவுண்ட் வரலாம்''
இவர்களுக்கெல்லாம் இந்த ஜனங்கள் எவ்வளவு கடன்பட்டிருக்கிறார்கள்! பெருமூச்சுடன் படுக்கையில் சரிந்தாள் வீணா.
இப்படி படுக்கையே இருப்பிடமாகிப் போன இந்த எட்டு நாட்களாய் மனவெளியில் நினைவுகள் மூலம் உலா வந்தபடிதானிருக்கிறாள். அந்த முன்னிரவு வேளையில் இதே போன்ற இன்னோர் இடத்துக்கு ஆம்புலன்ஸில் கணவரை அனுப்பி வைத்து விட்டு தன்னந்தனியாக உறக்கத்தைத் தொலைத்த இரவை, நெம்புகோல் இல்லாக் குறையாய் நெட்டித் தள்ளி விட்டு சற்றே கண்ணயர்ந்த விடியலில் அவள் தம்பி வந்தான், இரு பிள்ளைகள்... முகமூடி சகிதமாய்.
உடன் அடுத்த ஃப்ளாட்டிலேயே இருக்கும் அவள் பெரிய மைத்துனர் மகனும், டீ பிளாஸ்க்குடன். முன்னிரவு அவன் தான் சித்தப்பாவுடன் ஆம்புலன்ஸில் சென்றான்.
""சித்தப்பா எப்படியிருக்கார்பா? ஏதேனும் தகவல் கிடைத்ததா..?
""நல்லா இருக்காராம் சித்தி. இப்ப சிரமமில்லாம மூச்சு விடறாராம்''
""அவரே பேசினாரா?''
""இல்ல சித்தி. கொஞ்ச நாளுக்கு அவரைப் பேச விட மாட்டாங்க... ஆஸ்பத்திரிக்காரங்க தான் பேசினாங்க... சரி டீ குடிங்க''
""இரு... கப் எடுத்திட்டு வரேன்'' தம்பி பக்கம் திரும்பிச் சொல்லி விட்டு உள்ளே போகு முன், "" நாங்க குடிச்சிட்டு தான் வந்தோம். நீ குடிக்கா...'' பதற்றத்துடன் தடுத்தான் தம்பி. அன்றைய தேதியில் எங்கெங்கும் இயல்பாகி விட்டிருந்த பதற்றம்... பயம்...
""குடிச்சிட்டு ரெடியாகிடுக்கா. ஆஸ்பத்திரிக்குக் கிளம்பலாம்''
""உங்க மாமாவைப் பார்க்கறதுக்காப்பா. அங்கெல்ளாம் விடமாட்டாங்கன்னு கேள்விப்பட்டனே'' ஒரே விழுங்கில் டீ முழுக்கக் குடித்தாள்.
""அங்க இல்லக்கா''... சற்றுத் தயங்கி அவள் முகம் பார்க்காமல் தம்பி...""வந்து... அதில்லக்கா. நீ படிச்சவ. உனக்குப் புரியும். இந்த நாலு நாளா மாமாவுடன் இருந்தே இல்லயா. இருமிட்டிருக்கே வேற... சளி கூட இருக்கில்லே... அதான் உனக்கு டெஸ்ட் செய்துட்டா நல்லதுன்னு தான்... அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. சும்மா ஒரு திருப்திக்காக... அப்படித் தானே சசி''
""ஆமாம் சித்தி. ரெண்டு மணி நேரத்தில் வந்துடலாம். அம்மா கூட அப்படித்தான் நினைக்கறாங்க...''
அவனுக்கு அப்பா இல்லையாதலால் அம்மாவின் முடிவையும் பக்க பலமாக்கிக் கொண்டானே தவிர, அந்த அம்மா மட்டும் அங்கு வரவே இல்லை, பக்கத்து வீட்டிலேயே இருந்தும்.

அவர்கள் சொன்னது போல் இரண்டு மணி நேரத்தில் அவள் வீடு திரும்ப முடியாமல் நாள் கணக்கில் மருத்துவமனை வாசமாய். பாசிடிவ் என வந்தது பரிசோதனையின் முடிவு! புருஷனும் அவளுமாய் இப்படி அடுத்தடுத்து மருத்துவமனை வாசம் என்பது எதிர்பாராத திருப்பமாய் ஏகத்துக்கு அதிர்ச்சியிலாழ்த்தி நிலை குலையச் செய்து விட்டது அவளை. அதுவும் இரு வேறு மருத்துவமனைகள்! வேண்டியவர்கள் யாரும் வந்து பார்க்க முடியாத நிலைமை! மூன்று வேளைகளிலும் தரமான சாப்பாடு... இடையிடை பழ வகைகள்... சூப் வகையறாக்கள்... மருந்து மாத்திரைகள்... மூலிகைக் கஷாயங்கள்... அத்தனைக்கும் மேலாய் டாக்டர் நர்ஸ்களின் பரிவான பராமரிப்புகள்... என ராஜ மரியாதை தான் அங்கு அவளுக்கு. தனியார் மருத்துவமனை என்பதால் இக் கவனிப்பா? அரசு ஆஸ்பத்திரிகளிலும் இதே கனிவும் உபசரிப்பும் இருக்குமா? தெரியவில்லை. ஆம் என்றும் அடியோடு இல்லையென்றும் இரு வகைத் தகவல்களும் அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். எது எப்படியோ... பிள்ளைகள் இருவரும் வெளி நாட்டில் வேலை பார்ப்பதால் இங்கு வந்து சிகிச்சை மேற்கொண்டிருப்பது பொருளாதாரரீதியாய் சிரமமாக இல்லை. ஆனால் அவர்கள் எங்கோ தொலை தூரத்திலிருப்பதால் தானே கணவனை ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த அந்த இரவு ஆற்றுவார் தேற்றுவார் எவருமின்றி தனியாய் அல்லல்பட்டுக் கொண்டிருக்க வேண்டி வந்தது? நோய் தாக்கம் அவ்வளவு கடுமையாக இல்லாததால்... இந்த ஒரு வார காலமாய் அவளால் அவர்களுடன் பேசவாவது முடிகிறது. அதற்கு அங்கு அனுமதித்தார்கள். அவர் தான் பாவம்... அதற்குக் கொடுத்து வைக்காமல் அவசரச் சிகிச்சைப் பிரிவில்...

இருமல் சளி..காய்ச்சல் எல்லாமே சரியாகி தன் உடல்நிலை சீராகிக் கொண்டிருக்கிறது. அங்கு அவர் எப்படி இருக்கிறாரோ... என்ன நினைவுகள் அவர் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ... ஏகத்துக்குத் தவிப்பாய் இருந்தாலும் அவர் உடல்நிலை சற்றே பரவாயில்லையெனப் பிள்ளைகள் மூலம் அவ்வப்போது அறிந்து சற்றே ஆசுவாசமடைந்தாலும் அலைக்கழிக்கும் நினைவுகள் இம்சித்துக் கொண்டுதானிருந்தன. அந் நேரங்களில் அனிச்சையாக அவள் மனதில் ஒலிக்கும் பாடலாகிப் போனது...

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா'

ADVERTISEMENT

கொஞ்ச தூரம் காலாற நடக்கப் போகும் மகிழ்ச்சியையும் மீறி... கடந்த சில நாட்களாய் உடல் நலிவு காரணமாய் நான்கடிகள் நடக்கும் போதே தள்ளாட்டமாய் இருந்தது. மெல்லச் சமாளித்து நடக்க நடக்க... இப்போது அவ்வளவு சிரமம் தெரியவில்லை. வரிசையாய் இருந்த படுக்கைகளின் ஆக்கிரமிப்பாளர்களைப் பார்த்தபடி நடந்தாள். அனைவருமே குணமடையும் நிலையிலிருப்பவர்கள்... அவர்களைப் பார்த்துச் சின்னதாய் சிரிக்க... அவர்களும் சிநேகமாய் கையசைத்தார்கள். அப்படியே நடந்து வராந்தாவின் கோடியிலிருந்த இன்னொரு பெரிய பிரிவை அடைந்த போது ஊழியர் ஒருவரால் அவசரமாய் தடுத்து நிறுத்தப்பட்டாள். அவசரச் சிகிச்சைப் பகுதியாம் அது. ஆழ் மனதில் எழுந்த அவர்களுக்கான பிரார்த்தனையுடன் எதிர் திசையில் நடந்து அங்கிருந்த அகண்ட ஜன்னலருகே வந்த போது முதலில் கண்ணில் பட்டது வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்கள்! தேவையின் பிரம்மாண்டத்துக்கேற்ப ஆம்புலன்ஸ்கள் இல்லை என்கிறார்களே... பின் எப்படி இத்தனை... பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு இங்கு வந்தவையாக இருக்க வேண்டும். இல்லை... குணமடைந்து வீடு திரும்புவோர் என ஓயாது கணக்கு காட்டுகிறார்களே டிவிக்காரர்கள்... அத்தகையவர்களை வீடு கொண்டு சேர்க்கவா? எதுவோ ஒன்று... எதுவானால் என்ன... அன்று இவற்றில் ஏதாவது ஒன்று... நேரத்தில் கிடைத்திருந்தால் அவ்வளவு இம்சைப்பட்டிருக்க மாட்டார் அவர். குணமடைந்து வருவது போல் தெரிந்தவர் திடீரென மூச்சு விடத் திணறிய போது மின்னல் தெறிக்கும் வேகத்தில் ஆக்ஸிஜனுக்கும் ஆம்புலன்ஸýக்கும் சசிதர் ஃபோன் செய்தான். ஆக்ஸிஜன் வந்ததே தவிர ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டும் சுவாசம் சமன்படவில்லை. அவள் கையைப் பிடித்துக் கொண்டு எப்படித் துடித்தார் பாவம்! அவள் முகத்தில் படிந்த அந்தத் தீனப் பார்வை... அக் கையின் அழுத்தம் அவர் படும் அவஸ்தையை உணர்த்த அழுதபடி அவர் மார்பை நீவி விட்டபடி... வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வழியாய் வந்தது ஆம்புலன்ஸ்... ஒன்றரை மணி கழித்து!

எவ்வளவு கட்டுப்படுத்தியும் கணம் விடாது சித்தரவதை செய்து கொண்டிருந்த அந் நினைவுகள் அப்போது விஸ்வரூபமெடுக்க... அதற்கு மேல் அங்கு நிமிடம் கூட நிற்காமல் வலுவெல்லாம் திரட்டி முடிந்தவரை வேகமாய் நடந்து தன் படுக்கையில் சரிந்தாள். இனி இந்த நினைவுச் சுனாமிக்கு ஈடு கொடுக்க சக்தியில்லை. மனதுள் அலையடிக்கும் எண்ண ஓட்டங்களுக்குத் தடை போடும் முயற்சியில் செவிகளையும் கண்களையும் இறுக மூடிக் கொண்டாள். சரியான பைத்தியக்காரத்தனமெனத் தெரிந்தும்!

அடுத்த விடியலும் பிள்ளைகளின் நல்ல செய்தியுடன் மனதை ஆசுவாசப்படுத்தியது. அப்பாவின் உடல்நிலை மெல்ல மெல்லத் தேறி வருகிறதாம். அதற்கடுத்த நாள் அவள் உடல் நிலை சார்ந்தும் நற்செய்தி... அவள் இனி மருத்துவமனையில் இருக்கும் தேவையில்லை. ஆனால் அவளைப் போல் குணமடைந்து வரும் நிலையில் வீடு செல்லாமல் மருத்துவக் கண்காணிப்பில் கண்டிப்பாக இருக்க வேண்டுமெனும் கட்டத்திலுள்ளவர்களுக்காகத் தற்காலிகமாய் ஏற்பாடு செய்யப்பட்ட தரமான ஹோட்டல் போன்ற இடங்கள் ஏதேனும் ஒன்றில் கண்டிப்பாக ஒரு வாரம் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட, பிள்ளைகளின் ஆலோசனைப்படி ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அவளைக் கொண்டு சேர்த்தது ஆம்புலன்ஸ்.

அந்தச் சூழல் வெகுவாய் பிரமிப்பூட்டியது வீணாவுக்கு. நோயாளிகள் தங்குமிடம் எனச் சத்தியம் செய்தாலும் நம்பக் கூடியதாக இல்லை. அவ்வளவு வசதிகள்... அத்தனை செழுமை... பணம் பத்தும் செய்யும் என நினைத்துக் கொண்டாலும் அந் நினைவே பெரும் பாரமாக இருந்தது. நோயின் தாக்கத்தினின்று விடுபட்டு சோர்வு மட்டுமே இருந்ததால் மருத்துவர் கண்காணிப்பிலிருக்கும் உணர்வே வரவில்லை... தன்னவர்களென எவரையும் சந்திக்காமல். தனிமைப்படுத்தப்பட்டிருப்பது தவிர... அப்பா தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருப்பதால் அங்கேயே இருந்து முற்றிலும் குணமானதும் அவளைப் போலன்றி நேராய் வீட்டுக்கே அனுப்பப்படுவார் என்றார்கள் பிள்ளைகள்.

அவளும் வீடு திரும்பும் நாள் வந்தது.

-அடுத்த இதழில்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT