தினமணி கதிர்

"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 11

22nd Nov 2020 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

    

ராஜீவ் காந்தி அமைச்சரவையிலிருந்து பிரணாப்தா அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவை கட்சித் தலைவர் பதவியையும் துறந்துவிட்டார். சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் அவர் இருந்தார். அவரை ஒரேயடியாகத் தவிர்த்துவிடவும் கட்சித் தலைமையால் முடியவில்லை. 1985 மார்ச் மாதம் அவர் மேற்கு வங்காள காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதற்குப் பிறகு பிரணாப்தா தில்லிக்கு வருவதே குறைந்துவிட்டது. அவர் தில்லி வரும்போது நான் சென்னையிலும், நான் எப்போதாவது தில்லிக்குச் செல்லும்போது அவர் கல்கத்தாவிலும் இருந்ததால் தொடர்ந்து பல மாதங்கள் எனக்கு அவருடன் நேரடித் தொடர்பே இல்லாமல் இருந்தது. ரஃபி மார்க்கிலுள்ள ஐ.என்எஸ். கட்டடத்திலும், யு.என்.ஐ. கேன்டீனிலும் சந்திக்கும் ஜெயந்தோ கோசல் உள்ளிட்ட வங்காளப் பத்திரிகையாள நண்பர்கள் மூலம், பிரணாப்தா குறித்த செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

ஒருநாள், ஹெய்லி சாலையில் உள்ள "வங்க பவன்' அரசினர் விடுதிக்கு, எனது நண்பரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினருமான சைஃபுதீன் செüத்ரியை சந்திக்கச் சென்றிருந்தேன். மதிய உணவுக்கு என்னை வங்க பவனுக்கு அழைத்திருந்தார் சைஃபுதீன் செüத்ரி.

ADVERTISEMENT

இந்த இடத்தில், நண்பர் சைஃபுதீன் குறித்து நான் கூறியாக வேண்டும். நாங்கள் சம வயதினர் என்பதால் முதல் சந்திப்பிலேயே நண்பர்களாகிவிட்டோம் என்று நினைக்கிறேன். இந்தியாவில் இடதுசாரி இயக்கம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாத, பெரிய அளவில் வளர முடியாத தலைவர் சைஃபுதீன். கட்சியின் பொதுச் செயலாளராவதற்கான எல்லா தகுதிகளும் அவருக்கு இருந்தன. 

அதுவேகூட அவரது பலவீனமாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

தனது 28-ஆவது வயதில் மேற்கு வங்கத்திலுள்ள கட்வா மக்களவைத் தொகுதியிலிருந்து 1980-இல் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல்,  தொடர்ந்து நான்கு முறை 1996 வரை அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டவர்.

அவர் மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட மார்க்சிஸ்ட். ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றம் முத்தலாக் முறைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. 1986-இல் அந்தத் தீர்ப்பைத் தடம்புரளச் செய்ய, ராஜீவ் காந்தி அரசு முஸ்லிம் பெண்கள் மணமுறிவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது, அதைத் தங்களது கட்சியின் முடிவையும் மீறி எதிர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர். ஒருவர் காங்கிரஸ் கட்சியின் ஆரிஃப் முகம்மது கான் (இப்போதைய கேரள ஆளுநர்) என்றால், இன்னொருவர் சைஃபுதீன் செüத்ரி. 

உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் நியாயமான தீர்ப்பை ரத்து செய்ய முற்படுவது பிற்போக்குத்தனம் என்றும், முஸ்லிம் பெண்களின் நலனுக்கு எதிரானது என்றும் அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை.

கேட்பவர்களைக் கட்டிப்போடும் வகையில் அவர் பங்களா மொழியில் பேசுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மக்களவையில் அவர் பேச எழுந்தால் ஆளும் கட்சிக்கு வியர்க்கத் தொடங்கும். அத்தனை ஆதாரங்களுடன் அவர் வாதங்களை அடுக்குவதை நான் பலமுறை பார்வையாளர்கள் பகுதியிலிருந்து கேட்டு வியந்திருக்கிறேன்.

சித்தரஞ்சன் பார்க்கில் இருந்த அவரது வீட்டிற்குப் போனால், சைஃபுதீனும் அவரது மனைவி ருக்சானாவும் வழங்கும் விருந்தோம்பல் குறித்துப் புத்தகமே எழுதலாம். 1996 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. அவரது வளர்ச்சியும், பிடிவாதமான கொள்கைப் பிடிப்பும் மூத்த தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்குப் பிடிக்கவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நான் உள்பட நண்பர்கள் பலமுறை வற்புறுத்தியும் கேட்காமல் 2001-இல் அவர் தனிக்கட்சி தொடங்கியது பெரிய தவறு. 2014 தேர்தலில் தனது கூட்டணியில் அவரை இணைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி தள்ளப்பட்டது. ஆனால், அப்போதே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். 

"இப்படித் தொடர்ந்து புகை பிடிக்காதீர்கள்' என்று எல்லோரும் எச்சரித்தோம், கேட்கவில்லை. புற்றுநோய் பாதித்தபோதுதான் தனது தவறை உணர்ந்தார் சைஃபுதீன். அதற்குள் காலம் கடந்துவிட்டது. தனது 62-ஆவது வயதில் அவர் மறைந்தபோது ஒரேயொரு ஆறுதல்,  அவர் விரும்பியதுபோல செங்கொடி போர்த்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

இனி நமது தொடருக்கு வருவோம். வங்க பவனில் நண்பர் சைஃபுதீனைப் பார்க்கச் சென்றிருந்தபோது எதிரில் வந்து கொண்டிருந்தார் மம்தா பானர்ஜி. இப்போது அவர் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதுவும் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை, அவரது கோட்டையான ஜாதவ்பூர் தொகுதியில் வீழ்த்திய வீராங்கனையாக உயர்ந்திருந்தார்.

பிரணாப்தாவின் வீட்டில் பலமுறை பார்த்திருக்கிறேனே தவிர, நாங்கள் பேசிக் கொண்டதில்லை. என்னைப் பார்த்ததும் தெரிந்த பாவத்தோடு அவர் புன்னகைத்தார். நான் அவரது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். நான் எதிர்பாராத விதத்தில் அவரே பேச்சுக் கொடுத்தார்.

பிரணாப்தா மேற்கு வங்காள காங்கிரஸ் கமிட்டித் தலைவராகி இருப்பது குறித்தும், அவருக்கு இருக்கும் எதிர்ப்புகள் குறித்தும் அவர் வெளிப்படையாகவே என்னிடம் ரொம்பவும் சகஜமாக விவரித்தார். சோம்நாத் சாட்டர்ஜியை எதிர்த்துப் போட்டியிடத் தனக்கு பிரணாப் முகர்ஜியும், சோமன் மித்ராவும்தான் வாய்ப்பளித்தார்கள் என்று நன்றியுடன் தெரிவித்தார்.

""எனக்கு இன்னும் தங்குவதற்கு வீடு ஒதுக்கப்படவில்லை. அதனால் வங்க பவனில்தான் தங்கி இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் வாருங்கள். பிரணாப்தா தில்லியில் இல்லை என்பதால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவரது சார்பில் நான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் மம்தா பானர்ஜி.

என்னால் நம்பவே முடியவில்லை. பிரணாப் முகர்ஜியின் வீட்டு வரவேற்பறையில் அவர் வந்தால் ஏற்படும் சலசலப்பும், அவரது அதிகார தோரணையும், ஆர்ப்பாட்டமும் எல்லாம் பார்த்த என்னால் இப்படி அமைதியாகவும், சகஜமாகவும் அவர் பழகுவார் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அதற்குப் பிறகு அவரை அக்பர் சாலை காங்கிரஸ் தலைமையகத்தில் பலமுறை சந்தித்திருக்கிறேன். நெருக்கமாகப் பழகவில்லை, பரஸ்பரம் சிரித்தபடி வணக்கம் சொன்னதுடன் சரி.

பின்னாளில், நரசிம்ம ராவ் அமைச்சரவையில் இருந்தபோது அவர் மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு செய்வதற்கு முன்பு பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க வந்திருந்தார். 

ஜன்பத்திலுள்ள வெஸ்டர்ன் கோர்ட்டில் தங்கியிருந்தார் பிரணாப்தா. நாங்கள் வெளியில் வராந்தாவில் நின்று கொண்டிருந்தோம்.

பிரணாப் முகர்ஜிக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே பங்களா மொழியில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. மத்திய அமைச்சரவையில் இருந்து கொண்டு, மாநில அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது தவறு என்று பிரணாப்தா வலியுறுத்துகிறார் என்று அருகிலிருந்த வங்காளி ஒருவர் தெரிவித்தார். அதை ஏற்க மறுத்தார் மம்தா பானர்ஜி.

புயல் வேகத்தில் அறையில் இருந்து அவர் வெளியில் வந்ததும், இணை அமைச்சர் என்பதால் தயாராக நின்ற காரில் ஏறிச் சென்றதும் பசுமையாக நினைவிலிருக்கிறது. உள்ளே எட்டிப் பார்த்தேன். எதுவுமே நடக்காததுபோல, தனது பைப்பை புகைத்தபடி புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார் பிரணாப் முகர்ஜி. எனக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டேன்.

காங்கிரஸிலிருந்து மம்தா பானர்ஜி விலகியது, தனிக்கட்சி தொடங்கி மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய இடது முன்னணியைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது என்று அதற்குப் பிறகு அவரது அரசியல் பயணம் தொடர்கிறது. அதற்குப் பிறகு அவரை ஒன்றிரண்டு முறை பார்த்தேன், அவ்வளவுதான். நான் வணக்கம் சொன்னபோது, அடையாளம் கண்டு அவர் புன்னகைத்தார்.

""உங்களால் வளர்ந்த மம்தா பானர்ஜி'' என்று ஒருமுறை பிரணாப்தாவிடம் நான் குறிப்பிட்டபோது, அவர் இடைமறித்தார்.

""ஜாதவ்பூர் தொகுதியில் சோம்நாத் சாட்டர்ஜியை வீழ்த்த இந்தப் பெண்தான் சரியான வேட்பாளர் என்று அடையாளம் கண்டதுடன் எனது பங்கு முடிந்துவிட்டது. அவரது ஆரம்பகால வளர்ச்சிக்கு கனிகான் செüத்ரியும், அதற்குப் பிறகான வளர்ச்சிக்கு அவரது துணிவும், உழைப்பும்தான் காரணம். அவர் வளர்ந்தார், தன்னை வளர்த்துக் கொண்டார். அதில் எனது பங்கு எங்கே இருக்கிறது?'' என்று பெருந்தன்மையுடன் சொன்ன பிரணாப் முகர்ஜியின் பதில், அவர் மீதான எனது மரியாதையைப் பல மடங்கு உயர்த்தியது.

மேற்கு வங்காள காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் பிரணாப்தா அதிக நாள் நீடிக்கவில்லை. அவர் அகற்றப்பட்டு, பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்தாற்போல, அவர் காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்தும் (செயற்குழு) அகற்றப்பட்டார். அத்துடன் முடிந்துவிடவில்லை. காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அகற்றப்பட்ட செய்தியைக் கேட்டதும், பிரணாப் முகர்ஜி உடைந்தே போய்விட்டார் என்று சொல்லலாம். அவர் அதை எதிர்பார்க்கவே இல்லை என்று நினைக்கிறேன்.

அப்போது நான் சென்னையில் "சாவி' இதழில் உதவி ஆசிரியராக இருந்தேன். பிரணாப்தாவுக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவரை அழைத்து, "பிரணாப்தா காங்கிரஸின் அடிப்படை உறுப்பினரிலிருந்து  விலக்கப்பட்டிருப்பதை எப்படி எடுத்துக்கொண்டார்' என்று கேட்டேன்.

""பதவி போனதில் நான் சற்றும் வருத்தப்படவில்லை. பதவி கிடைக்கும் என்பதற்காக அரசியலுக்கு நான் வரவில்லை. காங்கிரஸ்காரனாக இருப்பதற்காக எந்தவித அவமானத்தையும் நான் தாங்கிக் கொள்ளவும் தயாராகவே இருந்தேன். ஆனால், என்னிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது என்று நான் பெருமைப்படும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்கிற கெüரவத்தையும் பறித்திருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதற்கு மேல் இழப்பதற்கு எனக்கு என்ன இருக்கிறது?'' என்று அவரிடம் பிரணாப்தா கூறியதாகச் சொன்னார்.

நான் சென்னையிலேயே இருந்துவிட்டதால், தொடர்பே இல்லாமல் இருந்தது. அப்போது செல்லிடப்பேசி வந்திருக்கவில்லை. தில்லிக்கு டிரங்க் கால் போட்டுத்தான் பேச வேண்டும்.

இரவு சுமார் ஒன்பது  மணி இருக்கும். வேலை முடியவில்லை. அண்ணாநகர் ஏ.ஐ. பிளாக்கிலிருந்த சாவி அலுவலகத்தில் அமர்ந்து, அடுத்தநாள் அச்சுக்குப் போக வேண்டிய ஏதோ ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலித்தது. எதிர்முனையில், நாங்கள் "ஷெனாய் சார்' என்று மரியாதையுடன் அழைக்கும் மூத்த பத்திரிகையாளர் டி.வி.ஆர். ஷெனாய் அழைத்தார்.

பிரணாப் முகர்ஜியை சந்தித்ததாகவும், அவர் நான் எங்கே இருக்கிறேன் என்று விசாரித்ததாகவும் சொன்னார். கல்கத்தாவில் உள்ள பிரணாப் முகர்ஜியை உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்தார். பிரணாப்தா எதற்காக என்னைத் தொடர்பு கொள்ள விரும்புகிறார் என்று புரியவில்லை. குழப்பமாக இருந்தது.

அடுத்த நாள் காலையில் கல்கத்தாவுக்கு டிரங்க் கால் போட்டேன். தில்லிக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். தில்லி கிரேட்டர் கைலாஷில் உள்ள அவரது வீட்டைத் தொடர்பு கொண்டேன். அவரே தொலைபேசியை எடுத்தார். "ஹலோ' என்ற அவரது குரலைக் கேட்டபோது, மின்சாரம் பாய்ந்தது போல் எனக்குள் புத்துணர்ச்சி.

""நாளை மறுநாள் நான் பெங்களூர் வருகிறேன். அங்கே வந்துவிடு. முக்கியமான சில விஷயங்கள் பேச வேண்டும். நீ வருவதற்கு நான் ஏற்பாடு 
செய்யட்டுமா?''

என்னிடம் வருவதற்கு வசதி இருக்குமோ இல்லையோ என்பது பற்றிக் கவலைப்பட்ட பிரணாப்தாவின் வாஞ்சையில் நான் கரைந்தேன். ""வந்து விடுகிறேன்'' என்று சொல்லி அவர் தந்த பெங்களூர் தொடர்பு எண்ணைக் குறித்துக் கொண்டேன்.

""உன்னை விமான நிலையத்தில் எதிர்பார்ப்பேன்'' என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.

அவர் எதற்காக பெங்களூர் வருகிறார், என்னை ஏன் அழைத்திருக்கிறார் என்றெல்லாம் தெரியாமல் குழம்பியபடி அடுத்த நாள் பெங்களூருக்குச் செல்லும் ரயிலில் ஏறினேன்.

(தொடரும்)

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT