தினமணி கதிர்

தருணம்

மீனா சுந்தர்

அடர் மழைச்சாரல் உச்சித் தென்னையில் பட்டுத் தெறித்துச் சிதறும் இரைச்சல் போலிருந்தது சாந்தி குரல். குளிரில் நடுங்கும் தொனி. எதிலும் தெளிவில்லை. தடுமாற்ற வார்த்தைகள் கிழிபட்டு ரணமாய்ப் பிசிறடித்தன. அவை தொடர்ச்சியின்றி இடையிடையே அறுந்து வீழ்கின்ற சப்தங்கள் கேட்டன. மனம் முகிழ்க்கும் வார்த்தைகளைக் கையேந்தி வெளித் தள்ளும் திறனின்றி நா திக்கித் துவண்டது. முதுவேனில் கால நீரற்றக் கால்வாயின் வெடிப்புகளென உதடுகளில் காங்கலடித்தன. வறட்சியின் பிசுக்கில் அவை ஒட்டிக் கொண்டு நூலிழுத்து விளையாடின. அலைபேசியைச் சரியாக வைத்துக் கேட்டும் எதுவும் தெளிவில்லை.

காலை பல் துலக்கும் போதே அலைபேசி ஒலித்தது. யாரெனக் கேட்க எதிர்முனையில் சொல் பிசிறல்கள். "சா..ந்....தி..' என்னும் குரல் அரைகுறையாகக் கேட்டது. எந்தச் சாந்தியெனக் கேட்டது தான் தாமதம்.

""மறந்திட்டீங்களாண்ணா?'' விசும்பும் குரல். சங்கரதீபன் மிகவும் குழம்பிப் போயிருந்தான். வெகு சிரமங்களுக்கிடையே பழக்கப்பட்ட குரலை நினைவில் கொண்டு வந்து விட்டான்.

""சாந்திம்மா... சாந்திம்மா'' பாசமாக அழைத்தான். அவள் அழுவதிலேயே குறியாய் இருந்தாள். அதற்குள் சங்கரதீபன் மனைவி திரவியநாயகி வந்து, ""யாருங்க?'' என்றாள். அமைதியாக இருக்கும்படிச் சைகைக் காட்டிவிட்டு திரும்பவும் "சாந்திம்மா' என்றான். இப்போது அழைப்பது யாரென்று திரவியத்தால் புரிந்து கொள்ள முடிந்தது.

திருப்பூரில் தங்களோடு பதினைந்து ஆண்டுகள் பக்கத்து வீட்டில் தங்கி வேலை பார்த்தார்கள் சாந்தியும் கந்தனும். சில ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அங்கேயே தங்கி விட்டார்கள். அவ்வப்போது அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவர்கள் இரண்டு ஆண்டுகளாய்ச் சுத்தமாய் தொடர்பற்றுப் போனார்கள். சங்கரதீபன் சிலமுறை தொடர்பு கொண்டு பார்த்தான். எண் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் பதில் வந்தது. அதன் பிறகு அவர்களும் தொடர்பு கொள்ளவில்லை. நட்பின் கண்ணி அத்துடன் சுத்தமாய் அறுந்து போய் விட்டது.

""சாந்திம்மா'' என்றான் சங்கரதீபன் மறுபடியும்.

அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ""அண்ணா'' என்றாள் சாந்தி.

""என்னம்மா? ரொம்ப நாளா தொடர்பிலயே இல்லை. அதான் யாருன்னு கேட்டேன்''

""நீங்க மறந்திட்டிங்கன்னு நெனச்சதும் எனக்கு அடக்க முடியலைண்ணா. அண்ணி எப்படி இருக்காங்க?''
""அவளுக்கென்ன? நல்லாருக்கா? கந்தன் எப்படி இருக்காரு?''
""இருக்காருண்ணா'' சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுக்குத் தொண்டை கட்டியது.
""ஏம்மா எதுவும் பிரச்னையா?''
""புள்ளக்கி ரொம்ப முடியலைண்ணா. ஆறு மாசமா சென்னையில ஆசுபத்திரியே வாழ்க்கையாப் போச்சி.''
""என்ன சாந்தி சொல்லுற? என்னாச்சி?''
சங்கரதீபன் குரலில் அதிர்ச்சியின் சவ்வூடு
பரவல்கள்.
சாந்தி விலாவாரியாகச் சொல்லத் தொடங்
கினாள்.
அவள் முடித்ததும் தலையிலடித்துக் கொண்டு, ""அடக்கொடுமையே.. அந்தப் பச்ச மண்ணுக்கா இப்படியொரு கெதி? ஆண்டவனுக்குக் கண்ணுருக்கா? பத்து வயசுப்புள்ளைக்கி ரத்தப்புத்துன்னா என்னான்னு தெரியுமா? அதைத் தாங்கறதுக்கு அதுக்குச் சக்தியிருக்கா?'' புலம்பினான் சங்கரதீபன்.
""ஊசியிலயே எம்புள்ளயக் கொன்னுடுவாங்க போலருக்கு. எல்லாமும் முதுகுத் தண்டுலயே போடுறாங்க. எத்தனை ஊசிய அந்தப் பிஞ்சு தாங்கும்? ஏன் தான் எங்களுக்கு இப்படியொரு சோதனையோ?'' தேம்பினாள் சாந்தி.
அலைபேசியைப் பிடித்திருந்த சங்கரதீபன் கை விரல்களும் அழுவதைப் போல வியர்வையில் பிசுத்தன. அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் மருகினான். ஆறுதல் மொழி கிடைக்காமல் தடுமாறினான். அவசரத்திற்குக் கிடைத்த இரண்டு வார்த்தைகளை எடுத்து அப்போதைக்கு அலைபேசியில் அனுப்பினான்.

""சரியாயிடும் சாந்தி. மனச உட்றாதே. எங்க கந்தங்கிட்ட கொடு'' கந்தனால் பேச முடியவில்லை. துக்கத்தை மென்று விழுங்குவது நன்றாகத் தெரிந்தது. தான் உடைந்து விட்டால் மனைவி, பிள்ளை ரொம்பவும் கலங்கி விடுவார்களென அவர்களுக்கு முன்பு தைரியமாகக் காட்டிக் கொண்டாலும் தனியே இருக்கும் நேரங்களில் கதறி விடுவான். சங்கரதீபனிடம் அவன் கலங்காதவன் போலக் காட்டிக் கொண்டான்.

அவனும் நிலைமை புரிந்து தைரியமாய் இருக்கும்படி வேண்டிக் கொண்டான். கந்தன் தனியாகப் பேசுவதாக முடித்துக் கொண்டான்.

சங்கரதீபன் இடிந்து போயிருந்தான். அவன் திரவியத்திடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் வாய் விட்டுக் கதறினாள்.

என்ன செய்வது? யாரை நோவது? ஒன்றுமில்லாதவர்கள், அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கே போராடுபவர்கள். ஒரே பிள்ளை. அவர்களுக்கா இப்படி நிலைமை வர வேண்டும்? யார் என்று கேட்டதற்காக மட்டுமா சாந்தி கதறினாள்? அடக்கி வைத்திருந்த மொத்தத் துக்கமும் பீறிட்ட தாய்மையின் பிரளயம் அதுவென்று இப்போது புரிந்து கொண்டார்.

மன்னார்குடிக்குத் தெற்கில் ஒரு குக்கிராமம் அவர்கள் சொந்த ஊர். கீழப்பாலத்திலிருந்து கண்ணகி அவிழ்கூந்தலென வலமாய் விரியும் முத்துப்பேட்டைச் சாலை. அருகில் நிதானமாய்ச் சுழித்தோடும் பாமணி நதி. தோளில் கை போட்டுக் கதை பேசி நடக்கும் தோழர்களென ஆறும் சாலையும் இணை பிரியா ஓட்டம். சித்தமல்லி ஏ.கே.எஸ் நகரிலிறங்கி கிழக்கில் தடிக்கம்பைப் போல ஒல்லியாய் நீண்டிருக்கும் கப்பிச் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் செல்ல வேண்டும். கிளார்வெளி வந்து விடும்.

கிளார்வெளி என்றால் யாருக்குத் தெரியும்? பத்து ஊர் தள்ளி இருப்பவருக்கே சந்தேகம் தான். பெண் தலையில் செருகும் கொண்டை ஊசியைப் போல வளைந்து உள்புதைந்த இடுக்குக் கிராமம். இன்றும் கிளார்வெளிக்கு நேரடிப் பேருந்தில்லை. நேரடிப் பேருந்து செல்லும் பிரதான சாலையிலும் அக்கிராமம் அமைந்திருக்கவில்லை. சாலையிலிருந்து மண்புழுவைப் போல நெளிந்து கிடக்கும் தெருக்கள். மண்பாதையில் நடந்தாக வேண்டும்.

கந்தனும் சாந்தியும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். இரண்டும் இரண்டு சுட்டிகள். படிப்பிலும் கலையிலும் இணையாய்ச் சுழலும் விசிறித் தகடுகளாய் விளங்கியவர்கள். படிப்பில் இணைந்தவர் காலச்சுழற்சியில் வாழ்க்கையிலும் இணைந்து விட்டார்கள். இருவரும் தூரத்து உறவுகள். ஆகவே பகையில்லை. எந்தப் பிரச்னையுமில்லை. இனித்த வாழ்க்கைக்குச் சாட்சியாகப் பிறந்தவன் தான் இந்த மகன் கோகுல்.

திருமணம் முடிந்ததும் திருப்பூர் வந்து விட்டார்கள். அங்கு இருக்கும் போதே கோகுல் பிறந்து விட்டான். ஒரு வயதுக் குழந்தையாக இருந்த போது கந்தனின் அப்பா இறந்துவிட ஊருக்கு வந்தவர்கள் அப்படியே தங்கிவிட்டார்கள். திருப்பூரில் பக்கத்து வீட்டிலிருந்தாலும் சங்கரதீபன் குடும்பத்துடன் உறவுக்காரர்களைப் போல அவ்வளவு அந்நியோன்யம். சங்கரதீபன் சாந்தியை தங்கை முறை சொல்லித்தான் அழைப்பான். கந்தனை மாப்பிள்ளை என்பான். சாந்தியும் அண்ணன், அண்ணி முறை சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டாடுவாள். அவர்களின் நெருக்கத்திற்குச் சாட்சி சொல்லும் வார்த்தைகள் இவை.

இப்போது கந்தனும் சாந்தியும் ஆறு மாதக் காலமாக படாதபாடு பட்டுவிட்டார்கள். மருத்துவர்கள் சொன்ன கணக்கின்படி இன்னும் ஆறுமாத காலம் பட வேண்டியிருக்கிறது. ரத்தப்புற்று கொடும் வியாதி.

ரத்தத்தை முழுவதுமாக வெளியேற்றி அதிலுள்ள புற்றுநோய் செல்களை அழிக்க வேண்டும். புதிதாக ரத்தம் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மருந்து செலுத்தப்பட வேண்டும். தோன்றும் புதிய செல்களில் பழைய செல்கள் இருக்கின்றனவாவெனக் கண்காணிக்க வேண்டும். இந்தச் சுழற்சி குறைந்த பட்சம் ஒரு வருட காலத்திற்கென்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆகவே சென்னை அவர்களின் தற்காலிக வாசமானது. நல்ல உணவில்லை. பசியில்லை. உடையில்லை. இருந்தாலும் அணிந்து பார்க்கும் நிதானமில்லை. இப்படி நிறைய இல்லைகளுக்குச் சொந்தக்காரர்களாய் ஆகியிருந்தனர்.

மனம் பிறழ்ந்தவர்கள் போலக் கந்தனும் சாந்தியும் நிலைகுலைந்து விட்டார்கள்.

சாந்தி எப்பவும் அலங்கரித்துக் கொண்டு சிரித்த முகமாய் வளைய வருவாள். ஆறு மாதக் காலமாய் அவளின் துடுக்குத்தனம் எங்கே போனதென்று தெரிய
வில்லை. கலகலவெனக் கொட்டும் அவளின் பேச்சு அவளை விட்டு ஓடி நெடுநாட்கள் ஆகியிருந்தன. முகத்தில் எப்பவும் அடர்ந்த சோகம். பரட்டைத் தலையில் எண்ணெய் வைத்துக் கொள்ளும் நிதானம் கூட அவளுக்கு எழவில்லை. கந்தனின் நிலைமை இன்னும் மோசம். ஆண்களுக்கு மழிக்காத தாடி ஒன்று போதும்.

இந்தப் பிள்ளையைக் ஆண்டவன் கொடுக்கவும் வேண்டியதில்லை. இப்படிச் சோதிக்கவும் வேண்டியதில்லை. அடிக்கடி சாந்தி அப்படித்தான் நொந்து கொண்டு அழுவாள். கேட்காதவர்களிடமெல்லாம் கேட்டாகி விட்டது. நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்கள் ஆன உதவிகளைச் செய்து விட்டார்கள்.

அரசு மருத்துவமனை என்றாலும் பிற செலவுக்குத் தடுமாறினார்கள். இருவரும் வேலைக்குச் செல்ல முடியாமல் முடங்கி விட்டனர். அவசரத்திற்குச் சில வேளைகளில் சில மருந்துகள் கையிலிருந்து வாங்க வேண்டியிருந்தது.

யார் யாரையோ நினைவுக்குக் கொண்டு வந்தவர்கள் சங்கரதீபன் குடும்பத்தினரை எப்படித் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவித்தனர். காசு பணத்திற்காக இல்லை. சங்கரதீபன் பேசும் வார்த்தைகளில் அத்தனை ஆறுதல் தடவப்பட்டிருக்கும். மனம் வலிமை அடையும். எதையும் சமாளிக்கலாம் என்று வீறு கொள்ளும். இடையில் தொடர்பறுந்து போயிருந்ததால் அவர்களின் தொடர்பு எண்ணும் கிடைத்த பாடில்லை. இந்நிலையில் தினசரி ஒன்றில் வெளியாகியிருந்த குறுக்கெழுத்துப் போட்டி முடிவுகளை எதேச்சையாகக் காண நேர்ந்தாள் சாந்தி. அதில் சங்கரதீபன் மகள் காவியா முதல் பரிசு பெற்றிருந்ததும் அவர்கள் முகவரி, அலைபேசி எண்ணுடன் வெளியாகியிருந்ததும் கண்ட சாந்தி உடனே அவர்களைத் தொடர்பு கொண்டு விட்டாள்.

இரவு கந்தன் தனியாகப் பேசினான். அவன் மொத்தத் துக்கமும் அப்போது தான் கொட்டித் தீர்ந்தது. அவனால் தொடர்ச்சியாகப் பேச முடியவில்லை. விட்டு விட்டு அழுதான். சங்கரதீபன் எவ்வளவோ ஆறுதலாகப் பேசியும் அவன் துக்கம் அடங்கியபாடில்லை. எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தேனோ அவ்வளவும் பாவத்தின் சம்பளமாகி விட்டதென்று கதறினான். யாருக்கு எப்போது என்ன நேரும் என்பதைச் சொல்ல முடியவில்லையென்றும் தன்மகன் குறித்துத் தான் எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தேன் என்றும் அவன் சொன்ன போது சங்கரதீபனுக்கும் கண்ணீர் பெருகியது. அதைக் குரலில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்தான்.

""ஏதோ இந்த அளவாவது ஆச்சேன்னு நெனச்சிக்க கந்தா. மனத் தைரியம் தான் இந்த நேரம் முக்கியம். நீ இருக்கற துணிச்சல்ல தான் அவங்க இருக்காங்க. ஒண்ணும் கலங்காதே. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும். உன் அக்கவுண்ட் நம்பரை அனுப்பு. சம்பளம் போட்டதும் கொஞ்சம் பணம் போட்டு விடுறேன். உனக்குத் தெரியாதா? இன்னும் வாய்க்கும் வயித்துக்கும் போராடத் தான் வேண்டியிருக்கு. இந்த வீட்டுக்காரம்மா வருசந் தவறாம வாடகைய ஏத்தி இப்ப நாலாயிரத்துல வந்து நிக்கிது. நாம அன்னாடங் காய்ச்சிங்க. கடைசி வரைக்கும் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். இந்தக் கரோனா முடியட்டும். நான் வந்து பாத்திட்டு வர்றேன்''

""காசு பணம் கிடந்திட்டுப் போவுது. உங்க வார்த்தைக்காகத் தான் நானும் சாந்தியும் ஏங்கினோம். இப்ப எங்களுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கு''

""திரவியம் ரொம்ப மனசொடிஞ்சிப் போய் கெடக்கறா. அவளைப் பேச விட்டா ஒரேயடியா கத்தி கலவரம் பண்ணிடுவா. நாளைக்கிப் பேசச் சொல்லுறன்''
"சரி'யென்று ஆமோதித்தான் கந்தன்.

அன்றிலிருந்து தினமும் அல்லது ஒரு நாள்விட்டு ஒரு நாள் சங்கரதீபன் பேசத் தவறுவதில்லை. இரண்டாம் நாள் பேச்சின் போது திரவியமும் சாந்தியும் அலைபேசியிலேயே கதறித் தீர்த்தார்கள். இருவரையும் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. பின் நாட்களில் சற்று இயல்பாய்ப் பேசத் தொடங்கினாள் சாந்தி.

ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கையில் பின்னொலியாக கோகுலின் அழுகுரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. சாந்தி இடையிடையே "தங்கம்ல்லடி. கொஞ்சம் மாமாகிட்ட பேசிட்டு வந்திடுறன்டி' என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். அவன் அடங்கினபாடில்லை. எதையோ கேட்டு அடம் பிடிப்பது போலிருந்தது. அவனை அந்தப்பக்கம் தூக்கிச் செல்ல கந்தனிடம் வேண்டினாள் சாந்தி. அவன் விடாமல் சிணுங்கிக் கொண்டிருந்தான்.

சாந்தி, ""சொல்லுங்கண்ணா'' என்றாள்.

""ஏம்மா... தம்பி ரொம்ப அழறான் போலருக்கே. நான் நாளைக்கிப் பேசட்டுமா?'' என்றான் சங்கரதீபன்.

""இல்லண்ணா... அவன் அப்படித்தான். இன்னிக்கு ஊசி வலி தாங்க முடியலை. அதுவுமில்லாம பக்கத்துல இவனை மாதிரி உள்ள பையன் ஒரு எலட்ரிக் கார் வச்சிருக்கான். அதைக் கேட்டு அழறான். அந்தப் பையன் கொடுக்க மாட்டேங்கறான். சரி ஒன்னு வாங்கித் தரலாம்ன்னு விசாரிச்சா ரெண்டாயிரமாம். ரெண்டாயிரம் இருந்தா ஒரு வாரம் பல்லைக் கடிச்சி ஓட்டிடுவனே. இவன் புரிஞ்சிக்கவே மாட்டேங்குறான். அப்படியும் நூறு ரூபாயில ஒன்னு வாங்கி வந்து கொடுத்தாங்க. அது தான் வேணும்ன்னு அடம் புடிச்சா என்ன பண்றது?''

சாந்தி நொந்து கொண்டாள்.

""சின்னப் புள்ளக்கி நம்ம கஷ்டம் தெரியுமா? இப்ப அவனுக்கு அந்தக் காரு தான் உலகத்துலயே உசத்தி. பெரிசு. அந்தக் காரைக் கொடுத்துப் பத்து நாளைக்கி பட்டினியா கெடன்னா கூட சந்தோசமா கெடப்பான்'' சாந்தி சிரித்தாள். சங்கரதீபனும் பதிலுக்குச் சிரித்தான்.

""நாளைக்குப் பேசறேம்மா'' சங்கரதீபன் அலைபேசியை வைத்துவிட்டான்.

மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனைக்குக் கந்தன் பெயருக்கு வந்திருந்தது ஒரு பார்சல். சங்கரதீபன் தான் அனுப்பியிருந்தான். அட்டைப் பெட்டிக்குள் இருந்த எலட்ரிக் காரைப் பார்த்ததும் கோகுல் துள்ளிக் குதித்தான். காலையிலிருந்து முனகிக் கொண்டு வலி தாங்க முடியவில்லை என்று அழுதவன் முகத்தில் அப்படியொரு மின்னல். காரைத் தூக்கிக் கொண்டு கத்தியபடி ஓடினான். அவன் தன் வலியை முற்றிலுமாக மறந்திருந்தான். அவனுக்குள் எதையோ வெற்றி கொண்ட குதூகலம். கந்தனும் சாந்தியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கலங்கி நின்றனர்.

மகளுக்குத் தீபாவளித் துணியெடுக்கையில் சங்கரதீபனின் கைகள் நடுங்கின. இந்த முறையும் எடுத்துத் தருவதாகச் சொல்லியிருந்த பட்டுப் பாவாடையை அவர் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்கள் இயலாமையில் கலங்கின. வீட்டிற்கு வந்ததும் அவர் எடுத்து வந்திருந்த சாதாரணத் துணியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த மகளை அவர் ஏக்கமாகப் பார்த்தார். அவள் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதன் அடையாளமாகச் சங்கரதீபனின் கன்னத்தில் பக்கத்திற்கொன்றாக இரண்டு முத்தங்களைப் பதித்தாள். பின் அவள் கண்களில் மின்னல் ததும்ப ஒரு தேவதையைப் போலச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

""அப்பா நாம அனுப்பின காரைப் பார்த்து கோகுல் எவ்வளவு சந்தோசமா இருக்கான்னு பாருங்களேன். அவன் விளையாடுறதை அவங்க அம்மா பதிவு செஞ்சி அனுப்பிருக்காங்கப்பா'' என்ற மகளை அவர் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT