தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரகங்களைப் பாதுகாக்க...!

22nd Nov 2020 06:00 AM | பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

இந்தியாவில் சிறுநீரகங்களின் பாதிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவை செயலிழந்துவிடாமல், நன்றாக இருப்பதற்கான ஆயுர்வேத அறிவுரைகள் எவை?

 ராமலிங்கம், கோவை. 

தாதுக்களுடைய போஷணைக்காக உள்ளிருக்கும் திரவப் பொருளிலிருந்து சத்து உபயோகிக்கப்பட்ட பின்பு தேவையில்லாத பகுதியை அலசிப் பிரித்து வெளியில் எடுத்து வருவது சிறுநீர்.  இந்த வேலையானது சீராய் ஒழுங்காய் நடப்பதுதான் உடலுக்கான ஆரோக்கிய இன்பம்.  இது தவறினால் உடலுக்குத் துன்பம். உண்ணும் உணவுப்  பொருளின்  குணங்கள், குடிக்கும் நீரின் அளவு, பருவகால சூழ்நிலை, உடற்பயிற்சி இவற்றுக்கு ஏற்றவாறு சிறுநீரின் அளவும் வெளியாகும் தடவைகளும் வித்தியாசப்படும். 

ADVERTISEMENT

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்டவுடன், கால தாமதமின்றிக் கழித்துவிட வேண்டும். அதைத் தடை செய்தால், கல்லடைப்பு, மூட்டுகளில் வீக்கம், வலி, அடிவயிறு, நீர்த்தாரை வலி, மலம் - குடல் காற்று தடைபடுதல், தலைவலி போன்ற உபாதைகள் தோன்றக்கூடும். 

சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கு, காரமான உணவுப் பண்டங்களை நன்றாகக் குறைத்து, பழ வகைகள், பூசணிக்காய், பரங்கிப் பிஞ்சு, சுரைக்காய், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, உளுந்து, பயிறு, பால், மோர், கஞ்சிகள், இளநீர், தேங்காய், சுத்தமான தண்ணீர் இவற்றை உட்கொண்டால், சிறுநீர் தாராளமாய் சேர்ந்து சுகமாய் இறங்கும்.

சிறுநீர் சீக்கிரத்தில் இறங்காமல் தங்கித் தங்கி மெதுவாய் இறங்கும் உபாதைக்கு, உருக்கிய  பசு நெய்யை உணவிற்கு முன்பு ஒரு தரம் குடித்து, உண்ட உணவு செரிமானவுடன் திரும்பவும் ஒரு தரம் நெய்யைக் குடிக்க வேண்டும்.  நெய்யின் அளவு பசித்தீயை அளவுக்குத் தக்கபடி, ஒருவார உபயோகத்தில் சிறுநீரின் வெளியேற்றம் சீராகிவிடும். 

சிறுநீரும் மலம் போல ஒரு கழிவுப் பொருளே. அசுத்தமானதே. அதனால் ஒவ்வொரு தடவையும் சிறுநீர் கழித்ததும் நீர் துவாரத்தை சுத்தமான தண்ணீரால் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியமாகும்.

ரத்தக் கொதிப்பு அதிகரித்த நிலையில் பலருக்கும் சிறுநீரகங்களில் ஏற்படும் அழுத்தமானது அதைப் பெரிதும் பாதிப்படையச் செய்கிறது. சிவப்பு அணுக்கள் குறைந்துவிட்டநிலை, உயர் ரத்த அழுத்தம், பசியின்மை,  சிறுநீர் சரிவர வெளியேறாமல் உடலில் ஏற்படும் வீக்கம், கிரியாட்டின் - யூரியா ஆகியவற்றின் அளவு அதிகரித்தல், எதைச் சாப்பிட்டாலும் குமட்டல், வீக்கத்தை அமுக்கினால் குழி விழுதல், நுரையுடன் கூடிய  சிறுநீர் வெளியேற்றம்  போன்ற உபாதைகள் இன்று பெரும் அளவு அதிகரித்துவிட்டன.  

புகைப்பிடித்தல், குடிப்பழக்கம், வேலைப் பளு, மன அழுத்தம், சர்க்கரை உபாதை, அதிக கோபம்,  காரம், புளி, உப்பு சேர்த்த புலால் வகை உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுதல் ஆகியவற்றால்  ஆண்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.   டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையும் இதனால் ஏற்பட்டுவிடுகிறது. 

(தொடரும்)

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT