தினமணி கதிர்

கண்களின் வழியே நோய்களை அறியலாம்!

10th May 2020 03:58 PM | -வனராஜன்

ADVERTISEMENT

கண்களைப் பரிசோதனை செய்து உடலில் உள்ள பிரச்னைகளைச் சொல்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் லதா. எப்படி இது சாத்தியம் ? அவரிடம் நேரில் பேசினோம்:

உங்களைப்பற்றி ...?

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நான், நோய் தடுப்பு பற்றிய மருத்துவம் படித்தேன். முதலில் அக்குபஞ்சரில் டிப்ளமோ படித்தேன். தொடர்ந்து அதே துறையில் எம்.டி வரை முடித்துள்ளேன். தொடர்ந்து நமது பாரம்பரிய மருத்துவத்திலும் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளேன். அக்குபஞ்சர் , காந்த மற்றும் மூலிகை தெரபி சிகிச்சை முறையில் மருத்துவம் பார்த்து
வருகிறேன்.

கண்ணில் நீங்கள் செய்யும் சோதனை பற்றி?

ADVERTISEMENT

அதற்கு iriscope என்று பெயர். கணினி நம்முடைய இரண்டு கண்களையும் படம் பிடித்துக் கொள்ளும். அது கண்களை முழுமையாக ஆராய்ந்து நமது உடலில் உள்ள நோய்களைக் கண்டறியும்.

இந்த சோதனையின் மூலம் என்னென்னவிஷயங்களைக் கண்டறியலாம்?

இதன் மூலம் நமது உடலில் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் உறுப்புகள் எந்த அளவு வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது நம்முடைய உடலில் இருக்கும் பிரச்னைகளையும், இனி வர இருக்கும் பிரச்னைகளையும் இந்த சோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

சிறு சோதனையில் இத்தனை விஷயங்கள் தெரிவது எப்படி?

இது நம்முடைய முன்னோர்களின் கண்டுபிடிப்பு. நோயாளிகளிடம் பேசாமலேயே அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதை சொல்லிவிடுவார்கள். நம்முடைய கண்கள் உடலில் உள்ள பிரச்னைகளைப் பிரதிபலிக்கின்றன. இதற்கு Iridology என்று பெயர்.

பொதுவாக இருபாலருக்கும் ஏற்படும் பிரச்னைகள் எவை? அதற்கான தீர்வுகள் எவை?

நீரிழிவு நோய், இரத்த கொதிப்பு, மூட்டுவலி போன்றவற்றுக்கும் நமது மனம் தான் முதல் மருந்து. கேன்சர் போன்ற கொடிய நோய்களையும் மன தைரியத்தால் வென்றவர்களும் உண்டு. சாதாரண ஜலதோஷத்தை பெரிய நோயாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அதனால் முதலில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மனதால் தைரியமூட்டுவது அவசியம். அதற்கு பிறகு தான் அவர்களுக்கு மருந்து கொடுக்க வேண்டும். நமது வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்து கொண்டாலே பெரும்பாலான நோய்களுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

குழந்தைகளுக்கும் கண் பரிசோதனை மூலம் நோய்களுக்குத் தீர்வு காண முடியுமா?

கண்டிப்பாக முடியும்.

நோய்கள் அண்டாமல் இருப்பதற்கான பொதுவான வழிமுறைகள் எவை?

நம்முடைய உடல் கடிகாரம் போன்ற அமைப்புடையது. எடுத்துக்காட்டாக அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை நுரையீரலுக்கான நேரம். அந்த நேரத்தில் நம்முடைய உடலில் பிரச்னை ஏற்பட்டால் நுரையீரல் தொடர்பான நோய் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அதற்கு அதிகாலை எழுந்து முறையான மூச்சு பயிற்சிகள் செய்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும். இப்படி நம்முடைய உடலில் ஏற்படும் ஒவ்வொரு நோய்க்கும் தீர்வு உண்டு.

நமது கண்களையும், நாக்கையும் சுத்தமாக வைத்திருந்தாலே பெரும்பாலான நோய்கள் வராது. அதற்காக முன்பு நம்முடைய முன்னோர்கள் அதிகாலையில் ஆற்றில் நீராடுவார்கள். நீரில் கண்களையும், நாக்கையும் சிறிது நேரம் வைத்திருந்தாலே போதுமானது. அதுவும் வயிறு காலியாக இருக்க வேண்டும். காலை நேரத்தில் இந்த பயிற்சிகளை அனைவரும் மேற்கொள்ளலாம். நமது வீட்டில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் முகத்தை வைத்துக் கொண்டு கண்களைத் திறக்க வேண்டும். நாக்கையும் வெளியே கொண்டு வந்து நீரில் சிறிது நேரம் இருக்கும் படி செய்யலாம்.

உங்களைச் சந்திக்க வேண்டுமென்றால் கும்பகோணம் தான் வர வேண்டுமா?

நேரில் சந்திக்க வேண்டுமென்றால் கும்பகோணம் தான் வர வேண்டும். பரிசோதனைக் கருவிகள் மூலம் கண்களைப் பரிசோதித்து தேவையான ஆரோக்கிய குறிப்புகளை வழங்க முடியும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT