கண்டது
• (திருச்செந்தூர் - வேதாரண்யம் செல்லும் அரசுப் பேருந்தின் பெயர்)
டெல்டா விவசாயி
ஜி.கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.
• (திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
ஹோட்டல் சிங்கம்
ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
• (திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு மருந்துக் கடையின் பெயர்)
MIRACLE MEDICAL
எம்.சரவணன், வீரணம்.
கேட்டது
• (கிருஷ்ணகிரி மருத்துவமனை ஒன்றில் நோயாளியும் நர்ஸும்)
"சிஸ்டர் இந்த மூணு மாடி கட்டடத்திலே லிஃப்ட் இருக்கு. நீங்க லிஃப்ட்டை யூஸ் பண்ணாம படிக்கட்டுலே ஏறிப் போறீங்களே... ஏன்?''
" சீக்கிரம் "மேலே' போகாம இருக்கத்தான்''
இரா.வசந்தராசன், கல்லாவி.
• (சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நீண்டநாள்களாகச் சந்திக்காத நண்பர்களிருவர்)
"டேய் மச்சி... உன்னைப் பார்த்து எத்தனை வருஷமாகுது?''
"டேய்... டேய்.... உணர்ச்சி வசப்பட்டு கட்டிப் பிடிச்சிடாதே... கரோனா வைரஸ் பரவுதாம்''
ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
எஸ்எம்எஸ்
ஓர் ஏழை, பணக்காரன் ஆகிவிட்டால்
அவன் தன் உறவுகளை மறந்துவிடுகிறான்...
ஒரு பணக்காரன் ஏழை ஆகிவிட்டால்...
அவனுடைய உறவுகள் அவனை
மறந்துவிடுகின்றன.
க.நாகமுத்து, திண்டுக்கல்.
யோசிக்கிறாங்கப்பா!
அன்பு என்பது நெல் மாதிரி...
போட்டால்தான் முளைக்கும்.
வம்பு என்பது புல் மாதிரி....
எதுவும் போடாமலேயே தானாகவே முளைக்கும்.
எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி.
அப்படீங்களா!
அடுப்பில் எதையாவது வைத்துவிட்டு, அதை மறந்துவிட்டு டிவியில் மூழ்கியிருக்கும் இல்லத்தரசிகள் அதிகம். ஏதாவது கருகும் வாசனை வந்தால் ஓடிப்போய் அடுப்பை அணைப்பார்கள். பல நேரங்களில் அடுப்பை அணைக்க மறந்துவிடுவதே பெரும் தீ விபத்துகளுக்கு காரணமாகிவிடுகிறது.
இப்படி தீ விபத்துகள் நேராமல் இப்போது ஒரு புதிய கண்டுபிடிப்பு, பார்த்துக் கொள்கிறது.
கேஸ் அடுப்பை பற்ற வைக்கப் பயன்படும் KNOB- களுக்குப் பதிலாக, Inirv என்ற நிறுவனம் தயாரித்துள்ள நாப்களைப் பொருத்த வேண்டும். அப்புறம் சமையல் அறையில் ஒரு சென்சாரையும் பொருத்த வேண்டும்.
இந்த சென்சார் அடுப்பின் வெப்ப நிலை அதிகரித்தாலோ, ஏதாவது கருகும் வாசனை அடித்தாலோ உடனே சுறுசுறுப்பாகிவிடும். அந்த நாப்களை முடுக்கி அடுப்பை தானாகவே அணைத்துவிடும்.
இந்தக் கருவியின் செயல்களோடு இணைக்கப்பட்ட ஒரு செல்பேசி செயலியும் உள்ளது. அதை செல்பேசியில் இணைத்துக் கொண்டால், செல்பேசியின் மூலமாகவே தொலைதூரத்தில் இருந்து கொண்டு அடுப்பை அணைத்துவிடலாம்.
குழந்தைகள் உள்ள வீடுகளில் குழந்தைகள் விளையாட்டுத்தனமாய் அடுப்பை ஆன் செய்து விடுவார்களோ என்று இனி அச்சப்படத் தேவையில்லை. அடுப்பின் நிலையை செல்போனின் உதவியோடு அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளலாம்.
என்.ஜே., சென்னை-58.