தினமணி கதிர்

நினைத்துப் பார்க்க முடியாத சாதனை!

8th Mar 2020 04:49 PM | - பொ.ஜெயச்சந்திரன்

ADVERTISEMENT

அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் திமொதி பால் என்ற 12 வயதை நெருங்கும் சிறுவனுக்கு "அறிவியல் இளம் விஞ்ஞானி' பட்டம் வழங்கப்பட்டது. விருதை  வாங்கியவுடன்  அச்சிறுவனிடம்,   ""உனக்கு ஏன் இந்த விருது?'' என்று கேட்டபோது...

""நான் கடந்த 2008- ஆம் ஆண்டு இதே புதுக்கோட்டை மண்ணில் தான் பிறந்தேன். என்னுடைய அப்பா ஐசக் ஜெபஸ்டின் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார். அம்மா புதுக்கோட்டையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிகிறார். எனக்கு மூத்த அண்ணன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு ஆட்டிசம் நோய் பாதிப்பு இருக்கிறது.   எனக்கு ஆங்கிலத்திலும், அறிவியலும் ஆர்வம். அதனால் அப்பா, அம்மா வேலைக்கு போய்விட்டு வந்தவுடனே அவர்களுடைய கைபேசியை வாங்கி அனைத்து ஆராய்ச்சிகளையும் தெரிந்து கொள்வேன். யூ டியூபில் ஆங்கிலத்தில் உள்ள "அக்பர் அன் பீர்பால்' மற்றும் நன்னெறிக் கதைகளையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டினேன். அதில் வரும் ஆங்கில உரையாடல்களை எனக்குள் பதிந்து கொள்வேன். மேக் மி ஜீனியஸ் டாட் காம் என்ற வெப்சைட்டையும், அறிவியல் சார்ந்த மற்ற யூ டியூப் வீடியோக்களையும் பார்த்தேன்.  இது போன்றவை என்னுடைய அறிவியல் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருந்தன. 

"501அமேஸிங் பேக்ட்ஸ்', "நோ அபெளட் ப்ளான்ஸ் அன்ட் அனிமல்ஸ் அன்ட் பேட்ஸ்", "நோ அபெளட்  சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி', "த யுனிவர்ஸ்', "டாப் 10 
ஆன் எவ்ரிதிங் 2013', "151 வேல்ட்ஸ் கிரேடஸ்ட் இன்வென்சன்ஸ்' மேலும் "பேமஸ் ஸ்பீச்சஸ் ஆஃப் தி பேமஸ் அன்ட் இன்பேமஸ்' போன்ற புத்தகங்களை வாங்கியுள்ளேன். இது போன்ற புத்தகங்களை வாங்கிப் படித்த காரணமாக இதுவரை பள்ளிகளில் நடைபெற்ற பேச்சு போட்டி, படம் பார்த்துக் கதை சொல்லுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் 65- க்கும் மேற்பட்ட முதல் இடங்களைப் பிடித்து பரிசுகளைப் பெற்றுள்ளேன். 

"குட் மித்திகல் மார்னிங்' என்ற யூ டியூப் சேனலில் உள்ள வீடியோக்களையும் காண்பதில் ஆர்வம் கொண்டேன். இது போன்ற யூ டியூப் சேனல்களைப் பார்த்ததன் காரணமாக,  எனக்கு 8 வயதாகும் போது - 2017- ஆம் ஆண்டு ஜுன் மாதம் - ஊழ்ங்ய்ற்ழ்ஹய்  என்னும் யூ டியூப் சேனலை யாருடைய உதவியும் இல்லாமல் தொடங்கினேன். இந்தச் சேனல் பல்வேறு துறைகளில் குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் எனது ஆர்வத்தைத் தூண்டுவதற்கான தொடக்கமாக அமைந்தது. யூ டியூப் வீடியோக்களைப் பதிவு பண்ணுவது, எடிட் பண்ணுவது, பதிவேற்றம் செய்வது போன்ற அனைத்தையும் இணையதள டியூட்டோரியல்ஸ் மூலமாகக் கற்றுக் கொண்டேன்.

ADVERTISEMENT

இன்று வரை எனது Frentran யூ டியூப் சேனலில் 61 வீடியோக்களைப் பதிவு செய்துள்ளேன்.  413 சப்ஸ்கிரைபர்களும்  உள்ளனர். 2018 -ஆம் ஆண்டில் 5- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான சில்வர் ஜோன் சர்வதேச ஒலிம்பியாட்ஸ் என்ற தேர்வில் மாநில அளவில் அறிவியல் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவுகளில் 2-ஆவது இடத்தைப் பெற்றேன். 2019-ஆம் ஆண்டில் அறிவியலில் முதலிடத்தையும், ஆங்கிலத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளேன். 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் Tcs ion intelligem சார்பில் நடத்தப்பட்ட தொடர்புத் திறனுக்கான தேசிய அளவிலான ஆங்கிலப் போட்டியில் இந்தியாவில் 10- இல் ஒருவராகத் தேர்தெடுக்கப்பட்டேன். 

நான் பேசிய வீடியோக்களை என்னுடைய மாமா மருத்துவர் கிப்ஸன் ஆலோசனைப்படி ஒரு புத்தமாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன். முதற்கட்டமாக 2019- ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று A Preteen Speaks on Science and Technology என்ற தலைப்பில் நூலை எழுதத் தொடங்கினேன். அறிவியல் தொழில்நுட்பம் சம்பந்தபட்ட சுமார் 20 வீடியோக்களை ட்ரான்ஸ்கிரிப்ட் செய்து, பிறகு அவற்றை எடிட் செய்தேன். அதே ஆண்டில் கோடை விடுமுறை நேரத்தில் இரவு, பகல் பாராமல் எனது புத்தகத்தை எழுதுவதிலேயே முனைப்பாக இருந்தேன். அதனால் அநேக நாட்கள் அதிகாலை 3 மணி வரை கண் விழிக்க நேரிட்டது. பிறகு அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து வேறு 25 தலைப்புகளைச் சிந்தித்து, முடிவு செய்து அது சம்பந்தப்பட்ட வீடியோக்களைப் பார்த்து, புரிந்து அதன் கருத்துகளையெல்லாம் உள்ளடக்கி, அவற்றை எல்லாம் பிறர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எனது சொந்த நடையில் ஆங்கிலத்தில் எழுதியும், எடிட் செய்தும், பின்னர் அதை தட்டச்சு செய்தேன். எனது நூலை அறிவியல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட 45 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இந்த நூலை கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் பிம்மராய மெட்ரி  வெளியிட்டார்.  

எனது நூலின் கட்டுரைகள் வானியல், விண்வெளி, அணு அறிவியல், வெப்ப இயக்கவியல், நவீன இயற்பியல், சுற்றுச்சூழல் அறிவியல், உடல்நலவியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற தலைப்புகளில் கீழ் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய அற்புதமான ஒரு பார்வையைத் தருவதுடன் அதிலுள்ள 91 படங்களும், 68 ரெபரன்ஸ்களும் படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து படங்கள் மற்றும் ரெபரன்ஸ்களுக்கான இணைப்பும் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இப்புத்தகத்தில் மிகவும் முக்கிய தலைப்புகளாக நெகிழிப் பொருட்களுக்கு பதிலான 5 மாற்றுப் பொருட்கள், மின்னணு சாதனப் பயன்பாடு பற்றிய 9 தவறான கருத்துகள், அழிந்து போன மிருகங்களை மீட்டெடுப்பது எப்படி, நாசாவின் சாதனைகள் மற்றும் நிலாவுக்குச் சென்று அங்கு தங்கும் நாசாவின் திட்டம், மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வாழ்க்கைச் சரிதை, மைக்ரோ சாஃப்ட் மற்றும் செல்வாக்கு மிக்க தொழில் நுட்பக் கண்டு பிடிப்பாளர்களின் வரலாறு ஆகியவை உள்ளன. இந்நூலில் முக்கியத்துவம் வாய்ந்த உரைகளாக கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய உரைகள் அவற்றின் அடிப்படைகளைக் கற்பிக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த   A Preteen Speaks on Science and Technology என்ற புத்தகத்தை   மாணவர்கள், இளம் விஞ்ஞானி  மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான நடையில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்'' என்றார் கணினியையும் செல்பேசியையும் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழும்   திமொதி பால்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT