தினமணி கதிர்

காதலின் தீபம் ஒன்று

14th Jun 2020 06:46 PM | சோ.சுப்புராஜ்

ADVERTISEMENT

இந்தியாவில் வாய்க்காத காதல் அழகர்சாமிக்கு  மலேசியாவில் வாய்த்தது. 

அழகர்சாமி மலேசியாவிற்குப் போய் வேலையில் சேர்ந்து சுமார் மூன்று வாரங்கள் கடந்த பின்புதான் அம்மாவிடமிருந்து முதல் கடிதம் வந்திருந்தது. (அது அலைபேசிகள் புழக்கத்திற்கு வந்திராத காலகட்டம்.)

அம்மா சொல்லச் சொல்ல மகாலிங்கம் எழுதியிருந்தான். வழக்கமான அன்பையும் அறிவுரைகளையும் பொழிகிற கடிதம். அம்மாவின் கடிதத்தில் அவன் முதல் வருஷம் முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதே அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து விடுவதாய் எழுதி இருந்தாள். அதற்கு இப்போதிருந்தே பெண் பார்க்கத் தொடங்கட்டுமா என்று அழகர்சாமியின் அனுமதியையும் கேட்டிருந்தாள்.

ஆனால் காதலித்து மட்டுமே கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்பது அழகர்சாமியின் லட்சியமும் கனவுமாய் இருந்தது. 

ADVERTISEMENT

"காதலிப்பது சந்தோஷம்; காதலிக்கப் படுவது என்பது வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய சந்தோஷம்' என்பது தான் அழகர்சாமியின் தியரி. 

அழகர்சாமி காதலிக்க ஆசைப்பட்டதுண்டு. ஆனால் அவனுக்குக் காதலிக்க வாய்த்ததில்லை. 

அழகர்சாமிக்கு பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே காதலின் மீது அளவு கடந்த பிரேமை; பக்தி; வெறி... என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம்.

அவன் நிறையவே காதலித்திருக்கிறான். கண்ணில் படுகிற அழகான பெண்களையெல்லாம் கண்களால் விழுங்கி மனசுக்குள் பூட்டி வைத்து மூச்சு முட்ட முட்டக் காதலித்திருக்கிறான். ஆனால் அவன் ஒருமுறை கூட காதலிக்கப் பட்டதே இல்லை. 

ஒரே ஒரு பெண் கூட இதுவரை அவனைக் காதலாய்ப் பார்த்து, கனிவாய்ப் பேசி, சிநேகமாய்ச் சிரித்து கை கோர்த்துக் கொண்டதில்லை. அவன் தன்னுடைய ஜென்மமே வீணென்று விசனப்பட்டுக் கொண்டிருந்தான். 

ஆனால் காலம் அவனை அப்படியெல்லாம் நிர்கதியாய் விட்டு விடவில்லை. வேலை நிமித்தமாக அழகர்சாமி மலேசியாவின் கோலாலம்பூருக்கு வந்து சில நாட்களிலேயே அவனது கனவு கை கூடியது. 

ஆம். அவனைக் காதலிக்கவும் ஒரு ஜீவன் கிடைத்தாள். அதுவும் கோலாலம்பூர்ப் பெண்.  

அழகர்சாமியும் இன்னும் மூவரும் சிரிபெட்டாலிங் என்னும் பகுதியில் கம்பெனி ஏற்பாடு செய்திருந்த 18 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில் பதினெட்டாவது மாடியில் குடியிருந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் பார்த்திபன் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருக்கும் எல்லாரையும் கோலாலம்பூரில் உள்ள "லிட்டில் இந்தியா' என்னும் பகுதிக்கு அழைத்துப் போனார். அவருக்கு ஏற்கெனவே அங்கு போன அனுபவம் இருந்ததால் மிகச் சரளமாக எல்லோரையும் சந்து சந்தாக அழைத்துக் கொண்டு அலைந்தார்.

தமிழ்நாட்டின் ஏதோ ஒரு நகரத்தின் கடைவீதிக்குள் நுழைந்து விட்டது போலிருந்தது. தமிழக, இந்திய கலாசாரத்தின் எல்லா அடையாளங்களும் எதிர்ப்பட்டன. 

தமிழும் கொஞ்சம் இந்தியும் சரளமாக காதுகளில் விழுந்தன. பல கடைகளில் தமிழிலிருந்து வெளியாகும் அத்தனை வார,  மாத இதழ்களும் தொங்கின. தினப் பத்திரிகைகள் கூட ஒருநாள் தாமதமாகக் கிடைக்கும் என்றார்கள். 

ஒரு கடையில் தமிழ்ப் பத்திரிகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு இரண்டிலும் ஒவ்வொரு பிரதி வாங்கிக் கொண்டான் அழகர்சாமி. 

கடைக்காரரும் அழகர்சாமியை அதிசயப் பிறவியாகப் பார்த்து, ""ஒவ்வொரு மாசமும் வந்து வாங்கிப்பீங்களா தம்பி...'' என்றார்.  

அழகர்சாமி தலை அசைக்கவும், ""ஊர் நாட்டுலர்ந்து வந்துருக்கீங்களோ....?'' என்றார்.

ஆமோதித்த அழகர்சாமி மலேசிய தினசரி ஒன்றையும் வாங்கிக் கொண்டான். இந்த மலேசிய தினசரி தான் அவனுக்கு அவனுடைய காதல் தேவதையைக் கண்டுபிடித்துத் தரப் போகிறது என்பதை அப்போது அழகர்சாமி அறிந்திருக்கவில்லை.

கோலாலம்பூரில் விநாயகர் கோயில் ஒன்று இருப்பதாகச் சொல்லி பார்த்திபன் அங்கும் எல்லாரையும் அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்தார். 

கொஞ்சம் நடுத்தரமான கோயில்; தமிழ்நாட்டுக் கோயில்களின் எல்லா அடையாளங்களுடனும் இருந்தது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்! மிகச் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருந்தது. 

கோயிலுக்கு முன் சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு பொறுக்குவதற்கு ஆளில்லாமல் சிதறிக் கிடந்தன. கோயிலினுள் அவ்வப்போது அர்ச்சகர் பூஜை செய்து புதிதாய் வருபவர்களுக்கு சலிக்காமல் தீப ஆராதனை காட்டி பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். கோயிலில் அமைதி தவழ்ந்தது. கோயில் பிரகாரத்தில் நால்வரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது தான் விக்ரம்சிங், "" நாம் நம்முடைய அபார்ட்மெண்ட்டில் ஒரு போன் வைத்துக் கொள்ளலாமா?'' என்று ஒரு பேச்சுக்குக் கேட்டார். 

அடுத்தநாள் அலுவலகம் போன பார்த்திபன் அதை ஹெச்ஆர் டிபார்ட்மெண்ட்டின் தலைவி வெண்டிவாங்கிடம் சொல்ல, அன்றைக்கு சாயங்காலமே தொலைபேசி இணைப்பு வந்துவிட்டது.

கறுப்பு நிறத்திலிருந்த தொலைபேசியும் அழகர்சாமியின் வாழ்க்கையில் சில அதிர்வுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறியாமல் "தேமே' என்று உட்கார்ந்திருந்தது அதற்கான இடத்தில். 

மலேசியாவில் வீதிகளெங்கும் காசு போட்டும் அட்டை சொருகியும் பேசுவதற்கு ஏகப்பட்ட டெலிபோன்கள்! இருந்தும் டெலிபோன் இணைப்பு வந்ததும் எல்லாரும் அவரவர் வீட்டிற்கு அபார்ட்மெண்ட் டெலிபோனிலிருந்து ஆர்வமாகப் பேசினார்கள். 
 அழகர்சாமிக்கும் அம்மாவிடம் பேச ஆசைதான். ஆனால் எப்படிப் பேசுவது? ஊரில் ஒருவர் வீட்டிலும் டெலிபோன் இல்லை. பேசுபவர்களை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு சனிக்கிழமை சைட்டில் சுத்தமாய் வேலை எதுவும் இல்லாததால் மத்தியானம் சாப்பிட்டதுமே அபார்ட்மெண்ட்டிற்கு வந்து விட்டான் அழகர்சாமி. ரொம்பவும் போரடித்தது. 

தொலைக்காட்சியில் "அஸ்ட்ரோ' என்னும் தமிழ் சேனலும் இருந்தது. ஆனாலும் அதன் நிகழ்ச்சிகள் அழகர்சாமிக்கு ஆர்வமூட்டவில்லை. 

அப்போது தான் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் போயிருந்த போது தமிழ் தினசரி ஒன்றும் வாங்கி வந்திருந்தது ஞாபகம் வரவே, அதை விரித்து வாசிக்கத் தொடங்கினான். அதில் வந்திருந்த விளம்பரம் ஒன்று அழகர்சாமியை மிகவும் வசீகரித்தது.

சோதிடத்திலிருந்து, லேட்டஸ்ட் ரஜினி படத் தகவல்கள் வரை தொலைபேசியைச் சுழற்றித் தெரிந்து கொள்ளலாம் என்றும் அதை விடவும் சுவாரஸ்யமாக, தொலைபேசியின் மூலம் புதிய நண்பர்களுடன் - அதுவும் தமிழ்  பெண்நண்பர்களுடனேயே அரட்டை அடித்து மகிழலாம் என்றும் போட்டிருந்தது.

அழகர்சாமி ஆர்வமாக டெலிபோனை எடுத்து 600- இல் தொடங்கும் ஒரு விளம்பர எண்ணிற்கு டயல் செய்தான். ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல் ஆங்கிலத்தில் அவனை வரவேற்று, வணக்கம் சொல்லி, அவனுடைய விவரங்களையும் விருப்பங்களையும் குறித்துக் கொண்டு, வழி நடத்தியது.

நிறைய காத்திருத்தல்களுக்குப் பின் பொறுமை இழக்கச் செய்து கடைசியில்... ""வாருங்கள் தமிழ் நண்பரே! என் பெயர் அமிர்தவர்ஷினி. என்னுடன் உரையாடுவதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?'' என்னும் மிருதுவான இனிமையான பெண் குரல் ஒலித்தது.

அழகர்சாமிக்கு அவ்வளவாகப் பெண்களுடன் பேசிப் பழக்கமில்லை.  அதனால் டெலிபோனில் பிரியமும் சிநேகமுமாய் வழிகிற பெண் குரலைக் கேட்டதும் அவனுக்கு அப்படியே மிதப்பது போலிருந்தது. 

அவன் எதுவும் பேசாமல் இருக்கவும் மறுமுனையிலிருந்து, ""என்னாச்சு... என்னுடன் தொடர்ந்து பேசுவதில் உங்களுக்கு விருப்பமில்லையா?'' என்றாள் அமிர்தவர்ஷினி.

""அய்யய்யோ, அப்படியெல்லாம் இல்லை. போனை வைத்து விடாதீர்கள்'' என்றான் மிகவும் தடுமாற்றத்துடன். 

""இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்களோ?'' என்றாள் அமிர்த வர்ஷினி. 

""எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?'' என்றான் ஆச்சர்யமாக. 

""உங்கள் குரலை வைத்து உங்களின் சரித்திரத்தையே என்னால் சொல்லிவிட முடியும்!'' 

என்றாள். அவளுடைய குரலில் இருந்த உறுதி அவனைப் பரவசப் படுத்தியது   
""அப்புறம் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லுங்கள்; அது சம்பந்தமாக நாம் உரையாடலாம்'' என்றாள். 

""இப்போதைக்கு உங்களைப் பிடிக்கும்...'' 

என்றான் அழகர்சாமி கிறக்கத்துடன்.

""ஆனால் எனக்கு காக்கா பிடிக்காது. உங்களின் ஆர்வம் எதிலென்று கேட்டேன்''

கொஞ்சமும் யோசிக்காமல், ""தமிழ் இலக்கியம்'' என்றான் அழகர்சாமி.

""என்னுடைய பொழுது போக்கும் அதுதான்'' என்று அவனை ஆச்சர்யப்படுத்திய அமிர்தவர்ஷினி, ""உங்களின் ஆர்வம் தமிழ் இலக்கியம் படிப்பதிலா அல்லது படைப்பதிலா?'' என்று கேட்டாள்.

""இரண்டிலுமே...'' என்று சொன்ன அழகர்சாமி, ""அமிர்தவர்ஷினி என்றால் மழை என்று அர்த்தம். உங்களின் குரலும் குளிர் மழையாக என்னை சிலிர்க்க வைக்கிறது'' என்றான் ஒருவித பரவசத்துடன்.   

""முதலில் காக்கா பிடித்தீர்கள்; இப்பொழுது ஐஸ் மழை பொழிகிறீர்கள். தமிழ் இலக்கியம் என்றால் நா.பா, அகிலன், சிவசங்கரி, கல்கி வகையறாவா அல்லது சுந்தரராமசாமி, அம்பை, ஜெயமோகன் வகையறாவா'' என்று கேட்டாள் . குமுதம் பற்றியும் பேசினாள். காலச்சுவடு பற்றியும் சிலாகித்தாள். சுஜாதாவையும் அறிந்திருந்தாள். அருந்ததிராய் பற்றியும் மணிக்கணக்காக அலசினாள். 

அவளிடம் பேசப் பேச அழகர்சாமிக்கு பிரமிப்பாக இருந்தது. இலக்கியம் பேசுகிற பெண் சிநேகிதி. நினைக்கும் போதே சிலிர்ப்பாகவும் 

கர்வமாகவும் இருந்தது அழகர்சாமிக்கு.

(அடுத்த இதழில்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT