தினமணி கதிர்

நம்ம ஊர் ராஜா! - நல்லி குப்புசாமி செட்டியார்

7th Jun 2020 06:19 PM

ADVERTISEMENT


இந்தியாவின் கடைசி ராஜ குல வாரிசு அண்மையில் காலமானார். மூன்றரை வயதிலேயே அவர் ராஜாவாக முடிசூட்டப்பட்டார். தன் 90-ஆவது வயதை நெருங்கும் போது அவர் காலமானார். அவர்தான் சிங்கம்பட்டி ராஜா என்று அழைக்கப்பட்ட டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள்.
ஆயிரம் வருடகாலப் பாரம்பரியம் கொண்டது சிங்கம்பட்டி பாளையம். அதன் 31-ஆவது வாரிசு டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர் 29.09.1931-இல் பிறந்தவர். இவரது தந்தை சங்கர சிவசுப்பிரமணி தீர்த்தபதி-.
இவரது முன்னோர்கள் காலத்தில் சேர நாட்டின் தலைநகராக இருந்தது பத்மநாபபுரம். அப்போது அங்கே ராஜ குல வாரிசு மார்த்தாண்ட வர்மா பால பருவத்தில் இருந்ததால் அவரது தாயார் உமையம்மை தன் மகன் சார்பாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த சமயத்தில் அங்கே எட்டு வீட்டுப் பிள்ளைமார் என்ற குழு ஒரு கலவரத்தைத் தொடங்கியது. அதை அடக்கப் போதிய படை பலம் இல்லாத ராணி உமையம்மை அருகில் இருந்த சிங்கம்பட்டி பாளையத்தின் உதவியை நாடினார். சிங்கம்பட்டி சமஸ்தானம் உதவிக்கு வந்தது. அந்தப் போரில் சிங்கம்பட்டி இளவரசர் உயிரிழந்தார். தங்களுக்காகப் போரிட்டு இளம் வாரிசை இழந்த சிங்கம்பட்டி குடும்பத்திற்கு நன்றிக் கடனாகப் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த பத்மநாபபுரம் ராணி இவர்களுக்கு மணிமுத்தாறு அணையை ஒட்டிய எண்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பரிசாக அளித்தார்.
அப்போது அந்தப் பகுதி சிங்கம்பட்டி ஜமீனுக்கு வந்திராவிட்டால் தாமிரபரணி நதி கேரளாவிற்கு சொந்தமாகியிருக்கும். அப்படி ஒரு நதியையும், நீர்த்தேக்கத்தையும் தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்ததால் இவரது குடும்பம் "தீர்த்தபதி' என்ற பட்டத்திற்கு அருகதையானது. இவர்களுக்கு "தீர்த்தபதி' என்ற பட்டத்தை அருளியவர் சிருங்கேரி சங்கராச்சாரியார் சுவாமிகள்.
முருகதாஸ் தீர்த்தபதியின் தந்தை தன் மாணவப் பருவத்தில் ஒரு வழக்கில் சிக்கிக்கொண்டார். அதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒரு பெரும் தொகையை ராஜ குடும்பம் அபராதமாகக் கட்ட வேண்டியிருந்தது. நிறைய நில புலன்கள் வைத்திருந்தாலும் உடனடியாக அந்தப் பெருந்தொகையை ரொக்கமாகக் கட்ட முடியவில்லை. அப்போது உதவிக்கு வந்தது பிற்காலத்தில் பாகிஸ்தான் பிரதமரான முகமது அலி ஜின்னாவின் குடும்பம். 
ஜின்னா தன் ஒரே மகளான டீனாவை நெய்ல் வாடியாவுக்குத் திருமணம் செய்து வைத்தார். அந்த நெய்ல் வாடியாவின் மகனே பாம்பே டையிங் நிறுவ
னத்தின் உரிமையாளரான நுஸ்லி வாடியா. தான் பெற்ற பெரும் தொகைக்கு ஈடாக சிங்கம்பட்டி ஜமீன் ஒரு பரந்த நிலப்பரப்பை 99 வருடக் குத்தகைக்கு வாடியா குடும்பத்திற்கு அளித்தது. அங்கே பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (ஆஆபஇ) நிறுவனம் தன் தேயிலைத் தோட்டத்தை நடத்தி வந்தது. அதுதான் மாஞ்சோலை எஸ்டேட் என்பது. 
அந்த எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முருகதாஸ் தீர்த்தபதி இடம் பெற்றிருந்தார். அவரோ எல்லாவற்றிலும் இருந்து விலகியும் இருப்பார். ராஜ குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அவருக்கு அரசியல் ஈடுபாடுகள் கிடையாது.
சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான ஒரு நிலப்பகுதிக்கு சொந்தம் கொண்டாடியது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது. பிரஸ்தாபிக்கப்பட்ட நிலம் தங்களைச் சேர்ந்தது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வாதித்தது. அப்போது அரசாங்கத்தின் பிரதிநிதி மதுரை மாவட்ட கலெக்டர். முருகதாஸ் தீர்த்தபதிக்கு 18 வயதாகவில்லை என்பதால் அவரது கார்டியனாக இருந்த திருநெல்வேலி கலெக்டர் பிரதிவாதி ஆனார். அந்த வழக்கில் அரசாங்கத்தின் இரண்டு அதிகாரிகள் ஒரு சொத்துக்காக எதிர் எதிராக வாதித்தது அரசியல்கள நீதிமன்ற விநோதம். பிரிட்டிஷ் ஆட்சியின் நீதி பரிபாலனம்
சரியாக இருந்ததற்கு ஓர் அடையாளம், சிங்கம்பட்டி சார்பாக வாதாடிய திருநெல்வேலி கலெக்டரே வெற்றி பெற்றார் என்பது. பிரிட்டிஷ் அரசாங்கம் சட்டத்தைத் தன் தரப்பிற்கு சாதகமாக வளைக்கவில்லை. இது நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
முருகதாஸ் தன் மூன்றரை வயதிலேயே ராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டதால் அவருக்கு திருநெல்வேலி மாவட்ட கலெக்டரே கார்டியனாக இருந்தார். கலெக்டர் அவரை இலங்கைக்குப் படிக்க அனுப்பினார். அங்கே ராஜகுமாரர்களும், ஜமீன்தார்களின் வாரிசுகளும் மட்டுமே படிக்கக் கூடிய கல்லூரியில் சேர்ந்தார். இலங்கையில் படிப்பை முடித்ததும் அவரை இங்கிலாந்திற்கு உயர்கல்விக்கு அனுப்ப விரும்பினார் கலெக்டர். 
ஆனால் சமய, இலக்கியம், ஆன்மிகம் இவற்றில் பற்றுக் கொண்டிருந்த முருகதாஸ் தீர்த்தபதி இங்கிலாந்து செல்ல விரும்பவில்லை, இங்கேயே தங்கிவிட்டார். இளம் வயதில் இருந்து அண்மைக் காலம்வரை சில இடங்களில் சமய, ஆன்மிகச்சொற்பொழிவுகள் செய்து வந்தார். அதற்கு இவர் ஊதியம் பெற்றுக்கொண்டதில்லை.
இவரை சுமார் 30 வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு திருமண வரவேற்பு விழாவில் சந்தித்தேன். திருமண வீட்டுக்காரர்கள் சத்திய நாராயணா பிரதர்ஸ் என்ற கட்டுமான நிறுவனக் குடும்பத்தினர். அந்தக் குடும்பத்தின் மாப்பிள்ளையான புருஷோத்தம ரெட்டியார் என் நண்பர். அந்த விழாவில் கலந்து கொண்ட போது அவரது நண்பரான முருகதாஸ் தீர்த்தபதியைச் சந்தித்தேன். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. 
தான் எழுதிய ஙன்ள்ண்ய்ஞ்ள் ச்ழ்ர்ம் ஹ ழஹம்ண்ய் என்ற புத்தகத்தின் முதல் தொகுதியை முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் புருஷோத்தம ரெட்டியாருக்கு சமர்ப்பணம் செய்தார்.அதன் பிறகு ஓரிரு சந்தர்ப்பங்கள் வாய்த்த போது முருகதாஸ் தீர்த்தபதியிடம் அவர்களது ராஜகுலம் மற்றும் குடும்ப வரலாறு பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
சென்னை வரும்போதெல்லாம் இவர் தி.நகரின் பிரதான பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்குவார். ஒருமுறை நான் அங்கே சென்று இவரைச் சந்தித்த போது இவர் பீடி, சிகரெட், மது குடிப்பவர்கள் அடுத்தடுத்த அறைகளில் இருப்பது தனக்கு சங்கடமாக இருக்கிறது என்றார். இவர் லாகிரி வஸ்துகளைப் பயன்படுத்துவதில்லை. அப்போது நான் இவரிடம், ""ராஜா, எங்கள் கடைக்குப் பின்னால் என் தாயார் வாழ்ந்து வந்த இல்லத்தை விருந்தினர் இல்லமாகப் பராமரித்து வருகிறேன். தேவையான வசதிகள் இருக்கும். ஆடம்பரமாக இருக்காது. விரும்பினால் தாங்கள் அங்கே தங்கிக் கொள்ளலாம்'' என்றேன். இவர் வந்து பார்த்தார். "சரி நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன்' என்றார். 
தன் கடைசி சென்னைப் பயணம் வரை இவர் என் விருந்தினர் இல்லத்தில் தான் தங்கிவந்தார். இவரைப் பார்ப்பதற்குப் பலர் வருவார்கள். எல்லோருமே முக்கியஸ்தர்கள். இவரும் சில சமயம் வெளியே சென்று வருவார். அப்போதெல்லாம் இவரிடம், ""ராஜா, தாங்கள் சங்கோஜப்படாமல் நான் தரும் வாகனவசதியை ஏற்றுக் கொள்ளவேண்டும்'' என்று சொல்வேன். அதற்கும் இவர் ஒப்புக்கொண்டார்.
சென்னையில் முருகதாஸ் தீர்த்தபதிக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள். எல்லோருடனும் இனிமையாகவும், சரிசமமாகவும் பழகுவார். சென்னை நண்பர்கள் ஒருமுறை அவருக்கு விழா எடுக்க விரும்பினார்கள். தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அன்று நிரம்பி வழிந்தது. அவரை ராஜ உடையில் ரதத்தில் அமர்த்தி அழைத்து வந்தார்கள். மேடையில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அவருக்கு சாமரம் வீசப்பட்டது. விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜனநாயக காலத்திலும் பழைய ராஜாக்கள் தங்கள் மதிப்பை இழக்கவில்லை என்பதை அந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் உணர்த்தியது.
சிங்கம்பட்டியில் உள்ள தன் அரண்மனைக்கு என்னை ஒருமுறை அழைத்தார். அன்று அவர் எனக்கும் என் நண்பர்களுக்கும் விருந்து கொடுத்தார். அதன்பிறகு அரண்மனையைச் சுற்றிக் காண்பித்தார். அரண்
மனையை அந்தக்கால அமைப்பின்படியே பராமரித்து வந்தார். பழைய ராஜ குலத்தின் அடையாளமாக வாள், கேடயம் தவிர, வேறு பல பொருட்களையும் காட்சியாக வைத்திருந்தார். அவற்றைப் பார்த்தேன். அவையெல்லாம் ஒரு திரைப்படத்தில் காட்சிகளாக வந்தன.
பின்னர் ஓர் ஆடி அமாவாசை தினத்தன்று சொரிமுத்து ஐயனார் கோவில் விழாவிற்கு என்னை அழைத்தார். நான் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அன்று அவர் ராஜ உடையில் காட்சியளித்தார். அன்று இரவு பழங்கால ராஜ குல வழக்கப்படி வீர விளையாட்டுகள் நடைபெற்றன. அந்த காட்சிகள் இன்றும் என் மனதில் நிற்கின்றன.
இவர் ராஜ உடையில் இருப்பது ஆடி அமாவாசை 
தினத்தன்று, அதுவும் அந்த மாலை நேரம் மட்டும்தான். மற்றபடி அவரது உடை ஒரு எட்டுமுழ வேட்டி, ஒரு மெலிதான, சாதாரண அரைக் கை ஜிப்பா.
இவர் பழகுவதற்கு இனிமையானவர். இவருக்குள் ஒரு எழுத்தாளரும் இருந்தார். நன்றாகத் தமிழ் எழுதுவார், ஆங்கிலமும் எழுதுவார். இவரது ஆங்கிலக் கடிதங்கள் அருமையான நடையில் இருக்கும். இவர் ஒரு சிறந்த வாசகர். அநேகமாக எல்லா பத்திரிகைகளையும் படித்துவிடுவார். ஒவ்வொரு பத்திரிகையிலும் தனக்குப் பிடித்த பகுதிகளை எடுத்து டைப்செட் செய்து எந்தப் பத்திரிகை எந்தத் தேதி என்பதைக் குறிப்பிட்டு ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை சிறு புத்தகமாக வெளியிடுவார். அதன் பிரதிகளை நண்பர்களுக்கு இலவசமாகக் கொடுப்பார்.
இவரிடம் இருந்து நான் பெற்றுக் கொண்ட முக்கிய ஆவணத்தின் பிரதி கடந்த 250 வருடங்களாக சிங்கம்பட்டி ஜமீனை ஆண்டு வந்தவர்கள் யார் யார் என்ற வம்சா வழி. 
ஜமீன் என்று சொல்வதைவிட சமஸ்தானம் என்று சொல்வதே பொருத்தம். ஏனென்றால் இவர்கள் திருமண சம்பந்தம் செய்து கொண்டது சிவகங்கை ராஜ குடும்பத்துடனும், ராமநாதபுரம் ராஜ குடும்பத்துடனும். 
ராமநாதபுரத்தை ஆண்ட ராஜாக்கள் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்தைத் தாண்டி ராமசேது பாலம் வரை உள்ள கடற்பகுதியை ஆண்டதால் சேதுபதிகள் என்று அழைக்கப்பட்டார்கள். அதுபோல, பழைய திருநெல்வேலி மாவட்டத்தின் நீர்நிலைகளைக் காத்து வந்தவர்கள் என்பதால், சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் தீர்த்தபதிகள் என்று அழைக்கப்பட்டனர். சிங்கம்பட்டி அருகே அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் பெயர் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி. அந்தப் பள்ளிக்கூடத்துக்கான இடம் சிங்கம்பட்டி ஜமீனால் வழங்கப்பட்டது. 
தமிழ்நாட்டின் ராஜாக்களில் நீர்நிலைகளைக் காத்த "பதி'கள் சேதுபதிகளும், தீர்த்தபதிகளும். அந்தக் கால 
ராஜாக்கள் மக்களையும், இயற்கையையும் காத்துவந்தார்கள் என்பதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்தவரே டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர் 24.05.2020 அன்று காலமானார். 
நான் நல்ல நண்பரை இழந்தேன். நெல்லை மாவட்டம் நல்ல வள்ளலை இழந்தது. தமிழகம் நல்லதொரு மனிதரை இழந்தது!

படம்: யோகா
 

ADVERTISEMENT
ADVERTISEMENT