தினமணி கதிர்

பேல்பூரி

26th Jul 2020 06:00 AM

ADVERTISEMENT


கண்டது


(அம்பாசமுத்திரம் சந்தைபஜாரில் உள்ளஓர் உணவகத்தின் பெயர்)

பைசா

பி.பால் ராமமூர்த்தி,
அம்பாசமுத்திரம்.

 

ADVERTISEMENT

(தேனி மாவட்டம் சிலமலையில்ஓர் இருசக்கர வாகனத்தில்)

விவசாயம் பழகு

க.மு.சுந்தரம்,
தேனி.

 

(திருநெல்வேலியில் ஆட்டோஒன்றின் பின்புறத்தில்)

நல்ல இதயம் தங்கத்திற்குச் சமம்
உறுதியான மனம் எஃகுக்குச் சமம்

ம.செ.மயில்,
திருநெல்வேலி.

 

கேட்டது

 

(நாகர்கோவிலில் வங்கி ஒன்றில் இளைஞரும் பெரியவரும்)


""பெரியவரே... அப்படியேநமக்கும் ஒரு "செலான்' எடுங்களேன்''
""இந்தாப்பா''
""ரொம்ப தேங்ஸ்... அப்படியே கொஞ்சம் பேனாவும் குடுத்திடுங்களேன்''
""சரி எவ்வளவு பணம் போடப் போறே?''
""ஏன்?''
""அந்த பணத்தையும் தரலாமேனுதான் கேட்கிறேன்''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.


(சிதம்பரம் வாகீசன் நகர் தேநீர்க் கடை ஒன்றில் இளைஞர்கள் இருவர்)


""என்ன அண்ணே.... உங்க வீட்டைச் சுத்தி தகரம் அடைச்சிருக்காங்க. யாருக்கண்ணே கரோனா?''
""டேய் சத்தம் போடாதே... மூணு மாசமா வேலைக்குப் போகலையா.... கடன்காரங்க தொல்லை தாங்க முடியலை... அதான் நாலு தகர சீட்டை வாங்கிக் கட்டி வச்சிருக்கேன். இப்ப ஒரு பய வர்றதில்லே''

அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.


யோசிக்கிறாங்கப்பா!


ஒன்றை யோசித்து செய்தால் பரிசு;
செய்து யோசித்தால் தண்டனை.

பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.


மைக்ரோ கதை

 

பக்கத்து வீட்டுப் பையன் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தான்.

""தம்பி உனக்குப் பரீட்சை எப்படி எழுதணும்ன்னு தெரியுமா?'' எனக் கேட்டார் கிருஷ்ணன்.

""சொல்லுங்க அங்கிள்'' என்றான் ஆர்வமாக பையன்.

""தம்பி பரீட்சைக்கு 3 மணி நேரம் கொடுப்பாங்க. முதல் ஒரு மணி நேரம் 10 மார்க் கேள்வி எழுதணும். இரண்டாவது ஒரு மணி நேரம் 5 மார்க் கேள்வி எழுதணும். ம்ம்ம்... அப்புறம் அரை மணி நேரம் 2 மார்க் கேள்வி எழுதணும். மீதம் இருக்கிற அரை மணி நேரம் 1 மார்க் கேள்வி எழுதணும். இதிலே சந்தேகம்
இருந்தா கேளு'' என்றார்.

பையன் யோசித்தான். கேட்டான்:

""ஒரே ஒரு சந்தேகம் இருக்கு அங்கிள்... மூணு மணி நேரமும் கேள்வியே எழுதிக்கிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது?''

அ.பூங்கோதை,
செங்கல்பட்டு.

 

எஸ்.எம்.எஸ்.


உறவினருக்கும் ஊசிக்கும்
இரு ஒற்றுமைகள் உள்ளன...
"குத்தி'க் காட்டுவது
"கோர்த்து' விடுவது.

எம்.சுகாரா,
திருவாடானை.

 

அப்படீங்களா!

 

கடைகளுக்கோ, அலுவலகங்களுக்கோ சென்றால், கைகளில் சானிடைசரை ஊற்றி தூய்மைப்படுத்தச் சொல்கிறார்கள். பெரிய நிறுவனங்கள், அலுவலகங்களில் திரவ சோப்பை கை கழுவும் இடத்தில் வைத்திருக்கிறார்கள். திரவ சோப்பைக் கைகளில் தடவி, தண்ணீர்க்குழாய்களைத் திறந்து கை கழுவிக் கொள்கிறோம். குழாய்களைத் திறக்கும்போது கையில் உள்ள வைரஸ் குழாயில் ஒட்டிக் கொண்டால், அடுத்து கை கழுவ குழாயைத் திறப்பவரின் கையில் அது ஒட்டி தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அலுவலகங்களில் பெரிய நிறுவனங்களில் உள்ள இந்த வசதியை, கட்டட வசதி இல்லாத பொது இடங்களில் ஏற்படுத்த முடியாது. இவற்றுக்குத் தீர்வு காணும்விதமாக ஆப்ரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் க்வார்டெங்க் ஏனிங் என்ற மாணவர் ஒரு கை கழுவும் கருவியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதில் இரண்டு குழாய்கள் உள்ளன. ஒன்றில் திரவ சோப்பும் மற்றொன்றில் தண்ணீரும் வெளிவரும். சென்சார் மூலம் இயங்கும் இந்த கருவியில் உள்ள குழாய்களின் அருகே கைகளைக் கொண்டு சென்ற உடனே கைகளில் சோப்பு திரவம் கொட்டும். அடுத்து தண்ணீர் குழாயில் இருந்து தண்ணீர் வெளிவரும். கைகளை 25 விநாடிகளுக்கும் மேல் கழுவினால் கருவி எச்சரிக்கை செய்யும்.

இந்த அமைப்பை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். சென்சார் இயங்குவதற்கான மின்சக்தியை இந்த அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளித் தகடுகள் தருகின்றன.

என்.ஜே.,
சென்னை-58.

ADVERTISEMENT
ADVERTISEMENT