தினமணி கதிர்

திரைக்கதிர்

26th Jul 2020 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

 

ஆதியுடன் "மரகத நாணயம்' உள்ளிட்ட இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. சமீபத்தில் ஆதி வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. நடிகர் ஆதியின் தந்தை ரவிராஜா தெலுங்கில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியதோடு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் யாரையும் அழைக்காமல் வீட்டில் எளிமையாக நடந்த இந்த நிகழ்வில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை நடிகர் ஆதி தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


------------------------------

 

ADVERTISEMENT

வரலட்சுமி நடித்துள்ள "டேனி'  படம் இணையதளத்தில் வெளியாகிறது. இதனை ஒளிப்பதிவாளர் முத்தையா தயாரித்துள்ளார், புதுமுகம் சந்தானமூர்த்தி இயக்கி உள்ளார்.  இது ஒரு   கிரைம் த்ரில்லர் கதை.  போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரலெட்சுமி நடிக்கிறார்.  தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கொலை ஒன்றை பயிற்சி பெற்ற மோப்ப நாய் டேனியின் உதவியுடன் துப்பறியும் கதை. ""என்னைப் பொருத்தவரை எப்போதுமே கதைதான் ஹீரோ. அதனால்தான் நாயின் பெயரைக்  கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார் வர லட்சுமி.


​------------------------------

 

கோபி நயினார் இயக்கிய "அறம்' படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர், மலையாள நடிகை சுனு லட்சுமி. ஏற்கெனவே சில படங்களில் நடித்துள்ள அவர், இப்போது  "சங்கத்தலைவன்' என்ற படத்தில் கருணாஸ் மனைவி வேடத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி கேட்டதற்கு பதிலளித்த சுனு லட்சுமி, "நான் தமிழில் நடிக்க வந்து பத்து வருடங்களாகி விட்டன.  ஆனால், என்னை நம்பி பெரிய பட வாய்ப்புகள்  கொடுப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நடிக்க வந்த இத்தனை  ஆண்டுகளில் "அறம்' படத்தில் மட்டுமே நான் அதிகமாகக் கவனிக்கப்பட்டேன்'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார். 

​------------------------------

 

ரஜினியுடன் "பேட்ட' படத்தில் நடித்தவர் மேகா ஆகாஷ். தொடர்ந்து "பூமரங்', "வந்தா ராஜாவதான் வருவேன்', "என்னை நோக்கி பாயும் தோட்டா' உள்பட பல படங்களில் நடித்தார். இதற்கிடையே பாலிவுட்டில் வாய்ப்பு வந்து அங்கும் நடிக்க சென்றார். இளம் ஹீரோ சூரஜ் பஞ்ச்சோலி நடித்த "சாட்டிலைட் ஷங்கர்' என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்தார். இந்தப் படத்தைப் பார்த்த சல்மான் கான், மேகாவுக்கு தனது படத்தில் வாய்ப்பு தந்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படம் "ராதே'. இதில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மேகா ஆகாஷுக்கு சிபாரிசு செய்தாராம் சல்மான் கான். 

ADVERTISEMENT
ADVERTISEMENT