தினமணி கதிர்

பெண்களுக்கு ஒரு புத்துணர்வு மையம்!

25th Feb 2020 12:01 PM

ADVERTISEMENT

பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் அன்று அவர்கள் படும்பாடு அதிகம். தேவையான அளவு தண்ணீர் குடிக்கமாட்டார்கள். செல்லுமிடங்களில் கழிவறை வசதி இல்லை என்றால் என்ன செய்வது? என்ற அச்சமே காரணம். இதனால் 4- 5 மணி நேரம் கூட கழிவறைக்குச் செல்லாமல் அடக்கி கொள்ளும்நிலை ஏற்பட்டுவிடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் இதே அவதி. 
மும்பையில் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகம். அதிலும் குறிப்பாக மின்சார ரயில்களில் பயணம் செய்து வேலைக்குச் செல்வது மிக அதிகம். மும்பை மின்சார ரயில்களில் சராசரியாக 80 லட்சம் பேர் ஒவ்வொரு நாளும் பயணம் செய்கிறார்கள். அதில் சுமார் 32 லட்சத்து 80 ஆயிரம் பேர் பெண்கள். மும்பையிலுள்ள 140 ரயில்வே ஸ்டேஷன்களில் 100 ரயில்வே ஸ்டேஷன்களில் எப்போதும் கூட்டம் அதிகம். குறைந்தது 35,000- 40,000 பெண்கள் தினம்தோறும் இந்த ரயில்நிலையங்களைப் பயன்படுத்துகிறார்கள். 
மிகவும் கூட்டமுள்ள ரயில்களின் நெரிசல்களில் சிக்கி, கசங்கி, வியர்த்து விறுவிறுத்து, இறங்குமிடம் வந்ததும் அப்படியே ஓடி, பஸ், ஆட்டோ பிடித்து அலுவலகம் செல்பவர்களே அதிகம். அவர்கள் சிறிது நேரம் நின்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள எந்த பாதுகாப்பான இட வசதியும் ரயில்நிலையங்களுக்கு அருகில் இருப்பதில்லை. 
ரயில்நிலையங்களுக்கு அருகில் ஏதேனும் கழிவறைகள் இருக்குமானால் அவற்றினுள் கால்களை வைக்கவே முடியாது. அந்த அளவுக்கு மிகவும் தூய்மையில்லாதவை; பராமரிக்கப்படாதவை; நாற்றமடிப்பவை; அங்கே முகத்தை நன்கு கழுவி, தலைவாரி, சிறிது ஓய்வு எடுப்பதென்பதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதற்கான இடங்கள் எதுவும் மும்பையில் இல்லை. 
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு உலக டாய்லெட் தினத்தன்று மும்பை தாணே ரயில்நிலையத்துக்கு அருகில் ஒரு "பவுடர் ரூம்' - ஐ தொடங்கியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த ஷிவ்கலா. 
"நாங்கள் இதுபோன்ற POWDER ROOM - ஐ இந்தியாவில் முதன்முதலில் ஏற்படுத்தியதே ஒரு திருப்பம்தான். வழக்கமாக உள்ள பவுடர் ரூம்களில் கழிவறை மட்டும்தான் இருக்கும். நாங்கள் அதையும் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். தூய்மையான கழிவறை. சற்று ஓய்வு எடுத்து தேநீரோ, காபியோ குடித்து தின்பண்டங்களைக் கொறிக்கும் வசதி. ரயிலில் வியர்த்து கசங்கி வருபவர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய கடை. அதில் அழகு சாதனப் பொருள்கள், பேண்ட்டீஸ், சானிட்டரி நாப்கின்கள் எல்லாம் கிடைக்கும் வசதி. பின்னணியில் மிக மெல்லிதாக ஒலிக்கும் இசை.
எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளுக்குப் பால் கொடுக்க, அவர்களின் உள்ளாடைகளை மாற்றி தூய்மை செய்ய தனியறை. இவ்வளவு வசதிகளும் சேர்ந்தவைதான் நாங்கள் ஏற்படுத்தியுள்ள பவுடர் ரூம். 
சாதாரணமாக மும்பையில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மின்சார ரயில் பிடிக்கும் அவசரத்தில், காலையில் சாப்பிடாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி, குளித்த தலையை வாரக் கூட நேரமில்லாமல் ரயிலில் ஏறி அவசர அவசரமாகச் செல்வதே வழக்கம். ரயில்களில் உட்கார இடம் கிடைக்காது. அவர்களுக்கு உதவும்விதமாகவே இந்த பவுடர் ரூமை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம்'' என்கிறார் ஷிவ்கலா. 


இந்த பவுடர் ரூம் பெண்கள் தங்களைப் புத்துணர்வாக்கிக் கொள்ள மட்டும் பயன்படுவதில்லை. வேலைக்கோ, கல்லூரிக்கோ சென்ற தனது மகளைத் திரும்ப வீட்டுக்கு அழைத்துச் செல்ல ரயில்நிலையத்துக்கு வந்த தாய், ஏதோ காரணத்தினால் ரயில் வர தாமதமாகிவிட்டால், காத்திருக்க இடம் இன்றி தவிக்க நேரிடுகிறது. இப்போது இந்த பவுடர் ரூமுக்கு வந்து அமர்ந்து கொண்டு மகளை அங்கே வரச் சொல்லி செல் பேசியில் பேசுகிறார்கள். 
வேலைக்குச் சென்ற பெண்கள், வேலை முடிந்ததும் மாலையில் ஒரு திருமண விழாவிலோ, ஏதோ விருந்திலோ கலந்து கொள்ள வேண்டியிருந்தால் அந்தப் பெண்கள் இங்கே வந்து உடைமாற்றி அலங்கரித்துக் கொண்டு கிளம்புகிறார்கள். 
பெண்கள் இங்கு வந்து பவுடர் ரூமைப் பயன்படுத்த ரூ.20 செலுத்த வேண்டும். தினம் தோறும் பயன்படுத்துபவர்கள் ரூ.499 செலுத்த வேண்டும். தேநீர், காபி என்று அவர்களுக்குத் தேவையான ஒன்றைத் தினம்தோறும் பெற்றுக் கொள்ளலாம். 
தாணேயில் மட்டுமல்லாமல், மும்பையின் பெரும்பாலான ரயில்நிலையங்களுக்கு அருகிலும், நாட்டிலுள்ள அனைத்து மாநகரங்களிலும் இதுபோன்ற பவுடர் ரூம் வசதியை ஏற்படுத்துவதுதான் ஷிவ்கலாவின் லட்சியமாக இருக்கிறது.

ADVERTISEMENT

- ந.ஜீவா

ADVERTISEMENT
ADVERTISEMENT