தினமணி கதிர்

 தசைகளில் வாயுப் பிடிப்பு!

25th Feb 2020 12:28 PM

ADVERTISEMENT

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
 
என் வயது 48. அடிக்கடி உடலில் வாயுப் பிடிப்பு ஏற்பட்டு தசைகளில் கடும் வலியை உணர்கிறேன். ஏதேனும் ஒரு பக்கத்தில் உடலை அழுத்தினால், உடனே ஏப்பமாக வாயு வெளியேறுகிறது. குடலில் வாயுவின் ஓட்டமும், உப்புசமும், மலக்கட்டும் ஏற்பட்டு துன்பப்படுத்துகின்றன. இவை எதனால் ஏற்படுகிறது? எப்படிக் குணப்படுத்துவது?
 -ஸ்ரீதர், தாம்பரம், சென்னை.
 வாயு இயற்கையாக எவ்வழியே வெளியே செல்வதாக இருந்தாலும் அதைத் தடுக்காதே என்கிறது ஆயுர்வேதம். வாயு இயற்கையாக வெளியே செல்ல ஆறு வழிகள் தான் உள்ளன.
 அபானத்தின் வழியே வெளிப்படும் கீழ் வாயு. ஏப்பம், தும்மல், இருமல், உடற்பயிற்சிக்குப்பின் ஏற்படும் பெருமூச்சு, கொட்டாவி.
 இவற்றை சமூக மரியாதைக்காக சிலர் வலுக்கட்டாயமாக அடக்குவார்கள். இதனால் ஏற்படும் வேகத்தடை, பல நோய்களுக்குக் காரணமாவதால், அவற்றை சற்று ஒதுக்குப் புறமாகச் சென்றாவது வெளியேற்றிவிடுவதே நன்மை.
 கீழ் வாயுவைத் தடை செய்தால் - வயிற்றுவலி, மலச்சிக்கல், வயிற்றுப்பொருமல், வெளியேற வேண்டிய கெட்ட வாயு தடுக்கப்பட்டு உள்சேருவதால் அயர்வு, களைப்பு, மறுபடியும் முயன்றாலும் கீழ்வாயு வெளியேறாமை, நீர்க்கட்டு, கண்பார்வை மங்குதல், பசியின்மை, மார்பில் பிடிப்பு வலி இவை ஏற்படும்.
 இவற்றைக் குணப்படுத்த ஆசனவாயின் உள்ளே சொருகி வைக்கப்படும் "வர்த்தி" எனும் மூலிகை மருந்து, உடலெங்கும் மூலிகைத் தைலம் தடவி, வியர்வையை ஏற்படுத்தும் நீராவிக்குளியல், உடலை இளஞ்சூடான மூலிகை நீரில் அமிழ்த்தி வைத்தல், "வஸ்தி" எனும் ஆசனவாய் வழியாக உள்கடத்தப்படும் மூலிகைத்தைலம் மற்றும் கஷாயங்கள், உணவு மற்றும் பானகங்களின் மூலம் மலத்தை உடைத்து வெளியேற்றுதல் ஆகியவை நல்ல பலனைத் தரக் கூடியவை.
 ஏப்பத்தைத் தடை செய்தால் - ருசியின்மை, உடலில் ஆட்டம், மார்பிலும் இதயப் பகுதியிலும் மூச்சுவிட முடியாதவாறு ஒரு பிடிப்பு, வயிற்று உப்புசம், இருமல், விக்கல் முதலியவை ஏற்படுகின்றன. இதில் விக்கலை நிறுத்தக் கூடிய உபாயங்களை தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும். ஒரு சில ஆயுர்வேத மருந்துகளாகிய தான்வந்திரம் குளிகை, வாயுகுளிகை, தசமூலாரிஷ்டம், ஹிங்குவசாதி சூரணம், அகஸ்திய ரஸாயனம் எனும் லேகியம் போன்ற மருந்துகள் சிந்தனைக்குரியவை.
 தும்மலையும் கொட்டாவியையும் தடைசெய் வதால் - தலைவலி, கண், காது, மூக்கு முதலிய புலன்களின் பலவீனம், மென்னியில் பிடிப்பு, முக பக்கவாதம் முதலியவை ஏற்படலாம். இவற்றைக் குணமாக்க - ஊடுருவும் தன்மை கொண்ட மூலிகைப் புகைகளை மூக்கினுள் செலுத்துதல், கண்களில் மருந்து இடுதல், மூலிகை மூக்குப்பொடி உபயோகித்தல், மூக்கினுள் மூலிகை எண்னெய்யை விடுதல், சூரிய ஒளியைப் பார்த்துத் தடைப்பட்ட தும்மலை தோற்றுவித்தல் ஆகியவையாகும்.
 இருமலை அடக்கினால்- அது அதிகமாகும்; மூச்சுத்திணறும்; ருசியின்மை, மார்பு இதயநோய், உடல் இளைப்பு, விக்கல் முதலியவை ஏற்படும். இருமலை குணப்படுத்தக் கூடிய எண்ணற்ற ஆயுர்வேத மருந்துகளை உடல் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு செய்து கொடுப்பதே இதற்கு வழியாகும்.
 பெருமூச்சை அடக்க - வயிற்றுவலி, மார்பு வலி, மயக்கம் போன்றவை ஏற்படும். அதற்கு நல்ல ஓய்வும், வாயுவை அமைதிப்படுத்தக் கூடிய சிகிச்சை முறைகளையும் இங்கு கையாள வேண்டும்.
 நவேகித: அந்யகார்ய: ஸ்யாத் என்று ஆயுர்வேதம் - அதாவது இயற்கை வேக மேற்படின் வேறு வேலை செய்யாதே என்ற இந்த அறிவுரையை நாம் என்றும் நினைவிற்கொள்ள வேண்டும்.
 நீங்கள் மேற்கூறிய தவறுகளைச் செய்பவராக இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளையும், சிகிச்சை முறைகளையும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. நான் அதுபோல எதுவும் அடக்குவதில்லை என்று கூறினால், வாயுவைக் குடலில் அதிகரிக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதும், ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளில் செய்யப்படும் எண்ணெய் தேய்ப்பு, வியர்வை சிகிச்சை முறை, வஸ்தி எனும் எனிமா, தலைக்கு "சிரோ- வஸ்தி" சிகிச்சை, நஸ்யம் எனும் மூக்கினுள் மூலிகை எண்ணெய்யைப் பிழிதல், நவரக்கிழி சிகிச்சை ஆகியவற்றை உடனடியாகச் செய்து கொள்ள வேண்டிய
 நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை அறியவும்.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT