தினமணி கதிர்

கும்பராசியும் மகிழ்ச்சியும்

25th Feb 2020 12:11 PM | எஸ்.கோகுலாச்சாரி

ADVERTISEMENT

குமாருக்கு மனசே சரியில்லை. மணி பகல் பன்னிரண்டாகிறது. இதுவரை ஒரே ஒரு சவாரிதான் கிடைத்திருக்கிறது. அதுவும் ஒரு கிலோ மீட்டருக்குள் தான். பார்த்தசாரதி கோயிலில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகம் வரை ஒரு சவாரி கிடைத்தது. திரும்பி வருவதற்கும் சவாரி இல்லை.
காலி ஆட்டோவில் திரும்ப வந்து நின்று கொண்டிருந்தான். ஒரு பிரயோஜனமும் இல்லை. 
ஆலா , ஓலா என்று வந்த பிறகு எல்லோரும் அதில் போய் விடுகிறார்கள். வேறு வழி இல்லை. இதை நம்பித்தான் குடும்பம் நடத்த வேண்டியிருக்கிறது.இன்று காலையில் நடந்த நிகழ்ச்சி வேறு அவனை முள்ளாக வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. 
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக வாயில் பிரஷ்ஷை வைத்துக் கொண்டு காலண்டர் தாளைக் கிழித்து சுருட்டி தரையில் போட்டுவிட்டு அந்த நாள் ராசி பலனைப் பார்ப்பான்.
அது போல் இன்றும் முதல் நாள் தாளைக் கிழித்துவிட்டு அன்றைய ராசிபலனைப் பார்த்தான்.
கும்ப ராசிக்கு "மகிழ்ச்சி' என்று போட்டிருந்தது. 
அடுத்த நொடி மனைவி துர்கா பயங்கரமாக கூச்சல் போட்டாள். 
"இதென்ன கூச்சல்... காலங்கார்த்தால...' வாயைக் கொப்பளித்துவிட்டு எரிச்சலோடு அதட்டினான். "ஏய் துர்கா...இதென்ன கூச்சல்... எழவு விழுந்த மாதிரி... காலங்காத்தால... மனுஷனுக்கு நிம்மதியே இல்லை. என்னடி ஆச்சு? இப்படி கத்துற ?''"
இவனுடைய அதட்டலை பற்றிக் கவலைப்படாமல் அவள் சத்தமாகப் புலம்ப ஆரம்பித்தாள். 
"அய்யோ அய்யோ... எல்லாம் போச்சு... எல்லாம் போச்சு''" 
"என்னடி எல்லாம் போச்சு?''" 
"இங்க வந்து பாருங்க... இதோ படுத்திருக்கிறா... இவ கழுத்தப் பாருங்க''" 
குமார் ஓடிப்போய் தன் பெண் குழந்தைக்கு ஏதோ என்னமோ என்று பதறிப் போய்ப் பார்த்தான்.
அவள் அமைதியாகத் தூங்க ஒன்றும் புரியாமல் கேட்டான். 
"என்ன ஆச்சு?''"
"இவ சாயங்காலம் விளையாடும்பொழுது சங்கிலி போட்டு இருந்தா இல்லையா ?''"
"ஆமாம்... ஒரு பவுன் சங்கிலி பர்த்டேக்கு வாங்கினது''" 
"ஆனா... இப்ப நான் என்ன பண்ணுவேன்... இப்பத்தான் கவனிக்கிறேன்... காணோமே... 35 ஆயிரம் போச்சு. 35 ஆயிரம் போச்சே''" என்று புலம்பினாள். 
குமார் பதட்டம் அடைந்தான். ஒரு வாரம் முன்னால்தான் அவளுடைய பிறந்த நாளுக்கு என்று வாங்கியிருந்தான்.
மனைவி தினம்தினம் அரித்ததால் நகை சீட்டில் வாங்கியிருந்தான். இன்னும் கொஞ்சம் பணமும் அதற்குக் கட்ட வேண்டியிருந்தது.
குமார், "நல்லாத் தேடு. இங்க தானிருக்கும்... சத்தம் போடாதே'' என்று தானும் தேட ஆரம்பித்தான். 
கணவன், மனைவி இருவரும் தேட ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தேடியும் நகை கிடைக்கவில்லை. 
குமார் கேட்டான்:
"விளையாட எங்காவது அழைத்துப் போனாயா?''
"இல்லியே... நம்முடைய வீட்டில் தான் விளையாடிக்கொண்டிருந்தாள். வேறு எங்கும் போகவில்லை'' " "யாராவது வந்தார்களா?''" 
"வீட்டிற்கு யாரும் வரவில்லை... எதிர்வீட்டு சுரேஷ் தான் இவளோடு விளையாடிக்கொண்டிருந்தான். ஆனால் அவன் சின்னக்குழந்தை. எடுத்திருக்க மாட்டான்''" 
வெறுத்துப் போனான். என்ன செய்வது? எங்கே போய்த் தேடுவது? இருக்கிற கடனை அடைக்க முடியவில்லை. இந்த நகைக்கு வேறு இப்பொழுது 35 ஆயிரம் தண்டம் என்று முணுமுணுத்துக்கொண்டே வெளியே ஆட்டோவை ஓங்கி உதைத்துக் கிளப்பினான். 
கவலையில் வந்ததால் சாப்பிடக் கூட இல்லை. காலண்டர் தாளில் கும்ப ராசிக்கு போட்டிருந்த மகிழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது .
"மகிழ்ச்சி' என்று போட்டு இருந்ததே... ஓ... அதற்கு நேர் எதிராக பலனை எடுத்துக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். 
அப்பொழுதுதான் அந்தச் சவாரி வந்தது.
தி நகர் பாண்டி பஜார் போக வேண்டும் என்று சொன்னார்கள். பெரியவர்...அறுபத்தைந்து இருக்கும். இரண்டு மூன்று பையோடு ஒரு தோள் பை வைத்திருந்தார். வேட்டி அழுக்காக இருந்தது. பனியன் போடாது ஒரு காவிகலர் சட்டையைப் போட்டிருந்தார். இரண்டு மூன்று பொத்தான்கள் இருந்தும் போடவில்லை. கூட அவரை விட ஐந்தாறு வயது குறைவாக அந்த அம்மா... 
ஒரு பெரிய கட்டைப் பை வைத்திருந்தாள். 
ஏதோ துணிமணி வாங்குவதற்காகச் செல்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். 
"பாண்டிபஜாரில் எங்கே?''"
"பூங்கா கிட்ட இறக்கிடு. நாங்க போறோம்''" என்றாள் அந்த அம்மா. 
அவர்களை விட்டு விட்டு வர மணி மூன்று ஆகி விட்டது. 
பசி கிள்ளியது. பார்த்தசாரதி கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சந்து முட்டில் ஒரு கையேந்தி பவன். சூடாக வெஜிடபிள் பிரியாணி போட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவன் ஒரு பிரியாணி வாங்கி சாப்பிட்டு விட்டு கையைக் கழுவிக் கொண்டு மறுபடியும் யாராவது வருகிறார்களா என்று நின்றான். 
வர வர ஆட்டோவுக்கு அவ்வளவு சவாரி கிடைப்பதில்லை. என்ன செய்வது? நாளை ஆட்டோ தண்டல் கட்ட வேண்டும். வீட்டு வாடகை தர வேண்டும். காய்கறி, மளிகை கடைக்காரர் பாக்கியிருக்கிறது. தம்பி வீட்டிலிருக்கும் அம்மாவுக்கு வைத்தியச் செலவுக்குப் பணம் தர வேண்டும். இதோடு காலையிலே தொலைந்து போன ஒரு பவுன் சங்கிலி வேறு. 
எப்படிச் சமாளிப்பது? 
எல்லாம் சேர்ந்து அவனுடைய மனதைக் கடுமையாகப் பாதித்தது. 
கஷ்டப்பட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லையே. இப்படியே வாழ்க்கை முழுக்க போக வேண்டியது தானோ?
மறுபடி சங்கிலி ஞாபகம் வந்தது. கிடைத்திருக்குமா? போன் செய்து பார்ப்போம் என்று மனைவிக்கு போன் செய்தான் 
"என்ன சங்கிலி கிடைத்ததா?''"
அவள் அழுதாள். குரல் "கர கர' என்றிருந்தது. நிறைய அழுதிருப்பாள் போலிருந்தது. அதுவும் அவள் நச்சரித்து வாங்கியதால் அதிக அழுகை...
"இல்லீங்க''"விசும்பிக் கொண்டே சொன்னாள்.
"எல்லா இடமும் பாத்தாச்சு''"
"சரி விடு... நீ சாப்பிட்டியா?''"
"ம்... சாப்பாடுதான் இப்ப ஒரு கேடு''"
"அதெல்லாம் சொல்லாதே... குழந்தைக்கு ஆகாரம் கொடுத்தியா...இல்லையா?''
அதட்டலாக இழுத்தான்.
"கொடுத்தேன்''
"என்ன செய்யறா''"
"மவராசி ஒரு பவுன் தொலைச்சிட்டு கவலைப்படாம தூங்கறா''"
அவள் துக்கத்தோடு சொன்னாலும் குமார் சிரித்து விட்டான்.
"சரி நேத்து எப்ப சங்கிலிய பார்த்தே?''"
"ஐந்து மணியிருக்கும் சுரேஷ் வந்து விளையாடிக் கொண்டிருந்தான். பார்த்தேன். "ஒரு வேளை அவன் அதை ஏதோ விளையாட்டுப் பொருள் என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டானோ?'' "
குமார் யோசித்தான். கேட்கச் சொல்லலமா?
கேட்டால் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்...
நாம் சாதாரணமாகக் கேட்டால் கூட அவர்கள் தவறாக அல்லவா நினைத்துக் கொள்வார்கள். அதிலும் அவர்கள் தன்னை விட கொஞ்சம் வசதியானவர்கள். செல்வாக்கு மிகுந்தவர்கள். முக்கியமான ஒன்று. சுரேஷ் மாமா ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருக்கிறார். ஒரு விஷயம் கேட்கப்போய் அது இன்னொரு விஷயம் பிரச்னை எனப் போய்விடக் கூடாதல்லவா? 
யோசனை எப்படியெல்லாமோ போனது. எல்லாம் சேர்ந்து மேற்கொண்டு இந்த விஷயத்தில் 
எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அவனை முடக்கிப் போட்டது. 
"தலை விதி' என்று நொந்து கொண்டான். அப்படியே பின் சீட்டில் சாய்ந்து கொண்டான். 
மாலை ராயப்பேட்டைக்கு ஒரு சவாரியும் மைலாப்பூருக்கு ஒரு சவாரியும் வந்தது. யாரோ ஒருவர் ஜிப்பா போட்டுக் கொண்டு தொலைக்காட்சி நிலையம் போக வேண்டும் என்று சொன்னார். 
எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் போது மணி ஒன்பது. 
பையைத் தொட்டுப் பார்த்தான். 400 ரூபாய்க்கு மேல் செல்லவில்லை.நூற்றி ஐம்பது ரூபா டீசலுக்குப் போய்விட்டது. 
கொஞ்ச நேரத்தில் நாள் தவறினாலும் ஆள் தவறாமல் தண்டல்காரன் வந்துவிடுவான். ஆட்டோ தண்டல் ஒரு நாள் 300 ரூபாய் கட்ட வேண்டும். அல்லாமல் தனிப்பட்ட கடனுக்கு தினம் 100 ரூபாய் தண்டல் கட்ட வேண்டும். 
தண்டல் கட்டுகிறோமா? உழைத்து உழைத்து தண்டம் கட்டுகிறோமோ? என்று புரியாத ஒரு மனக் குழப்பத்தில் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தான். 
ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தினான். சாப்பிட்டுவிட்டு இரவு சவாரிக்குச் செல்லலாமா என்று எண்ணினான். உடல் சோர்வை விட மனச்சோர்வு அதிகமாக இருந்தது. 
"ம் போனால் மட்டும் என்ன பெரிய சவாரி கிடைத்துவிடுமா... பார்ப்போம்'
ஆட்டோவை ஆப் செய்துவிட்டு பின் சீட்டுக்கு ஸ்கிரீனை இழுத்து விடும்பொழுது தான் கவனித்தான். ஒரு சிறிய பை போல தெரிந்தது. இதை இங்கே யார் வைத்து விட்டுப் போனது .? 
ஸீட்டுக்குள் நுழைந்து பின் பக்கம் இடுக்கில் இருந்த அந்த பையை எடுத்தான். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 500 ரூபா தாள்கள். ஐம்பதாயிரம் ஒரே கட்டாக... 
"யார் விட்டுட்டுச் சென்றிருப்பார்கள்?''"
திடீரென்று ஓர் எண்ணம் 
ஒரு பவுன்... தொலைந்து போனதற்கு பகவான் இரண்டு மடங்கு ஐம்பதாயிரம் கொடுத்திருக்கிறார் என்று நினைத்தான்.அடுத்த நிமிஷம் தன்னைத்தானே கண்டித்துக் கொண்டான்.
"சீச்சி இது என்ன நினைப்பு... யார் வீட்டுப் பணமோ?''
மொத்தமே ஐந்து அல்லது ஆறு பேர்கள் தான் ஏறி இருக்கிறார்கள். யாரோ விட்டுச் சென்றிருக்கிறார்கள். பாவம் எப்படி துடிக்கிறார்களோ? "
என்ன செய்யலாம்? 
பேசாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று இந்த பணத்தைக் கொடுத்து விடலாமா "
இல்லை பார்ப்போம்... என்ன செய்வது என்று யோசிப்போம்... என்று குழம்பியபடியே உள்ளே போகும் பொழுது உள் வாசலில் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மனைவி துர்கா நின்று கொண்டிருந்தாள் 
"என்ன செயின் கிடைத்ததா ?''
அவள் உதட்டை பிதுக்கினாள்... கண்களில் அழுத சுவடு தெரிந்தது.
இனி எதையும் இவளிடம் கேட்க வேண்டாம் என்று நினைத்தவன், "சாப்பாடு போடு... பசிக்கிறது''" என்றான். 
அதற்குள் கவரில் பணம் இருப்பதை துர்கா பார்த்து விட்டுக் கேட்டாள்.
"இது என்ன ?''" 
"பணம்''
"யார் கொடுத்தது? கடன் வாங்கினீர்களா?''"
"கடனா... எல்லாம் வாங்கியாகிவிட்டது... இனி நமக்குக் கடன் தருவதற்கு யாரும் இல்லை... இதுவரை வாங்கின கடனைக் கட்ட வேண்டியது மட்டும் தான்''"
துர்கா மெளனமாகச் சாப்பாடு போட அவனே பேசினான்.
"துர்கா யாரோ ஒருவர் ஆட்டோவில் இந்தப் பணத்தை விட்டுச் சென்றுவிட்டார்... இப்போது தான் கவனித்தேன். யார் என்று தெரியவில்லை. எதாவது முகவரி இருக்கிறதா என்று தேடேன். பார்க்கலாம்''
"எவ்வளவு?''" என்றாள் துர்கா ஆவலாக.
குமார் சிரித்துக் கொண்டே சொன்னான்:" "ஐம்பதாயிரம் ... போதுமா?'' "
துர்கா சொன்னாள். 
"பகவான் படியளந்து விட்டான். காலையில் ஒரு பவுன் போனதற்குப் பதில் ஐம்பதாயிரம் கொடுத்திருக்கிறான்'' "
குமார் சொன்னான்.
"ஆமாம்... பகவான் தன் கைப் பணத்திலிருந்து அம்பதாயிரம் கொடுத்தது போல் பேசுகின்றாய். இது யாரோ விட்டுச்சென்ற பணம்... அவர்கள் என்ன சங்கடப்படுகிறார்களோ? என்ன கஷ்டப் படுகிறார்களோ? தெரியவில்லை. இதை வைத்துக் கொண்டு நீ ஏதோ நம்முடைய கஷ்டத்திற்கு வந்த பணம் என்று நினைக்கிறாய்?'' துர்கா ஒரு கணம் அவனுடைய பேச்சில் திகைத்தாலும் சலித்துக்கொண்டாள்.
"ம்... இப்படியே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது தான்... அடுத்தவன் பணம் நமக்கெதுக்கு என்று நினைப்பவர்களுக்குத்தான் தான் பகவான் அதிகம் சோதனை வைக்கிறார். சல்லிப் பைசா கூட பிறத்தியார் பணம் நமக்கு வேண்டாம் என்று நினைக்கிறோம். ப்ச்...நாம் உழைத்து சம்பாதித்த ஒரு பவுன் போய்விட்டது''" 
துர்கா வருத்தமும் ஆயாசமும் கலந்த வேதனைக்குரலில் பேசிக்கொண்டிருந்தாள்.
"அது சரி உன் நியாயம், உனக்கு...''" குமார் எழுந்தான். 
வெளியில் இருந்த பெஞ்ச்சில் அமர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தான் குமார். 
இந்த பணத்தை என்ன செய்வது ? போலீஸ் ஸ்டேஷன்ல தந்து விடலாமா? இல்லை... நண்பர்களிடத்தில் சொல்வதா..சொல்லி யார் என்று தேடிக் கண்டுபிடித்துத் தருவதா ?
இப்பொழுது குமாருக்கு சங்கிலி தொலைந்தது கூட மறந்து விட்டது. இதை விட்டுச் சென்றவர்களிடம் எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்கிற ஒரே நினைவு மட்டுமே இருந்தது. 
யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது செல்போன் அழைத்தது.
ஸ்டாண்டிலிருந்து செல்வம் தான்... "
"குமார் அண்ணே... யாரோ தெரியவில்லை. ஒரு வயதான தாத்தாவும் பாட்டியும் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார்கள். மதியம் அவர்கள் ஏதோ ஓர் ஆட்டோவில் ஏறினார்களாம். எந்த ஆட்டோ என்று தெரியவில்லை. தி நகர் போவதற்கு ஏறினார்களாம். அவர்கள் வைத்திருந்த பணம் அம்பதாயிரம் போய்விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டோ நம்பர் தெரியுமா என்று கேட்டேன்... அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. விசாரித்தோம். டிரைவர் எப்படி இருப்பார் என்று கேட்டோம். அவர்கள் சொன்ன அடையாளங்களை எல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது அது உன்னுடைய தாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு கேட்கிறேன். குமார் அண்ணே காலையிலேயே அப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடந்ததா? இல்லை என்றால் சொல். இவர்களை அனுப்பிவிடலாம். வேறு எங்காவது அவர்கள் தேடிச் செல்லட்டும். பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. எதோ நகை வாங்குவதற்காகக் கொண்டு வந்த பணம் என்கிறார்கள்...என்ன சொல்லட்டும்?''" கடகடவென்று விடாமல் பேசினான்.
குமாருக்கு காலையில் பவுன் தொலைந்த வருத்தமோ தண்டல் கட்ட வேண்டிய வருத்தமோ மறைந்து ஒருவிதமான நிம்மதியும் மகிழ்ச்சியும் பிறந்தது. 
"செல்வம்... அவர்கள் தான்... அவர்கள் தான்... இப்பொழுதுதான் ஆட்டோவில் பார்த்தேன். பணம் பத்திரமாக இருக்கிறது என்று சொல்... அவர்களைப் பத்திரமாக பார்த்துக்கொள். பத்து நிமிடங்களில் நான் வந்துவிடுகிறேன்'' "
சட்டையை மாட்டிக்கொண்டு துர்காவை அழைத்தான். 
"பணத்துக்கு உரியவர்கள் வந்துவிட்டார்கள்.
பகவான் நம்மை கைவிடவில்லை'' என்று சொல்லிக்கொண்டே ஆட்டோவில் ஏறினான். 
அடுத்த நிமிடம் வேகமாக ஆட்டோவை எடுத்துக் கொண்டு பறந்தான். 
ஆட்டோ ஸ்டாண்டில் செல்வம். பக்கத்தில் பரிதாபமாக அந்த தம்பதியர் நின்று கொண்டிருந்தார்கள். பணத்தை அந்தப் பெரியவர்கள் பெற்றுக் கொள்ளும் போது தழுதழுத்த குரலில் ஆசியுரை சொன்னார்.
"மகாராசனா இருக்கணும்... தீர்க்காயுசா இருக்கணும். ஒரு குறையுமில்லாம இருக்கணும்... உன் குடும்பத்துக்கு ஒரு குறையும் வராது... பார்த்தசாரதி பெருமாள் பார்த்துக் கொள்வான்''
இழந்ததைப்பெற்ற நிம்மதி... வயதான தம்பதி
களின் ஆசீர்வாதம் குமாரின் மனத்துன்பத்தை அந்தக்கணம் லேசாக்கியது. உணர்ந்தான்.
செல்வம் குமாரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில், "கிரேட்டுப்பா நீ''" என்றான்.
காலையில் கண் விழிக்கும் பொழுது காலண்டரில் கும்பராசிக்கு மகிழ்ச்சி என்று போட்டிருந்தது இதுதானோ என்று நினைத்துக் கொண்டான்.
இதுவும் மகிழ்ச்சிதானே?
வீட்டுக்குள் நுழையும் பொழுது ஓடி வந்த துர்கா பரபரப்போடு சொன்னாள். 
"ஏங்க நகை கிடைச்சிடுச்சி... நகை கெடச்சிடுச்சி''
"எங்கே? எப்படி? சுரேஷ் வீட்டிலிருந்து அவர்களே கொண்டு வந்து கொடுத்தார்களா?'' வியப்போடு கேட்டான் 
"அதெல்லாம் ஒன்றுமில்லை இவள் அழுது கொண்டே இருந்தாள். சரி விளையாடுவதற்கு எதோ பொம்மை தரலாம் என்று இவளுடைய பொம்மைக் கூடையைக் கவிழ்த்தேன். அந்த பொம்மைக்குள் பொம்மையா இந்த நகை இருந்தது. பகவான் நம்மை கைவிடவில்லை'' "
குமார் மகிழ்ச்சியோடு "சரிதான்'" என்றான். 
மறுபடியும் மறுபடியும் அன்றைய நாள்காட்டித் தாளைப் பார்த்தான். கும்பராசிக்கு மகிழ்ச்சி என்று இருந்ததை ஓரிரு நிமிடங்கள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT