தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நீர் வடியும் புண் விரைவில் ஆற...!

27th Dec 2020 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

நான் என் ஊரில் மோர் மிளகாய் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்தி ஊற வைக்கும் தொழில் செய்து வருகிறேன். என் வயது 43. காலில் சிறிய புண் ஏற்பட்டு நீர் வடியத் தொடங்கி தொடையில் நெறி கட்டியது. 15 ஆண்டுகளாகச் சிகிச்சை எடுத்தும் பலனில்லாமல் தற்சமயம் வலது மேற்புறம் பாதத்தில், கால்விரல்களில் கறுப்பாக மாறி அரிப்புடன் நீரும் வடிகிறது. இதை எப்படிக் குணப்படுத்துவது?

எஸ்.கோபி, போலி அம்மனூர்.

தொழில்சார்ந்த உபாதை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. உடலில் இதுபோல் புண் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், புதிதாக அறுவடை செய்யப்பட்ட சிறுதானியங்கள், எள், உளுந்து, பால், பால் பொருள்கள், கரும்புச்சாறு, நீர்வாழ் பிராணிகள், புளிப்பு, உப்புமற்றும் மசாலாப் பொருள்கள், மலக்கட்டு மற்றும் குடலில் வாயுவை அதிகரிக்கும் கிழங்குகள், செரிமானத்தில் உடல் உட்புறச்சூட்டை அதிகரிக்கும் ஊறுகாய், மிளகாய் வற்றல், செரிமானத்துக்குக் கடினமானவை, குளிர்ந்த உணவு, மதுவகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவை அனைத்தும் புண்ணிலிருந்து நீரை அதிகம் கசிய வைப்பதுடன், அந்தப் புண் ஆறாமல் செய்வதில் தேர்ந்தவையுமாகும்.

ADVERTISEMENT

பார்லி, கோதுமை, அறுபது நாளில் விளையக் கூடிய அரிசி (சிவப்புநிறம் கொண்டது), கடலை, துவரை, பச்சைப் பயறு, முற்றாத இளைய முள்ளங்கி, கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், இந்துப்பு, மாதுளம் பழம், நெல்லிக்காய், நெய், கொதித்து ஆறியதண்ணீர், ஆடு, கோழி போன்ற கிராமத்து இறைச்சிகள் போன்றவை நீங்கள் சாப்பிட உகந்தவை. இவற்றால் நீர்க்கசிவு குறைந்து புண் விரைவில் ஆறும்.

புண்ணில் இருக்கக் கூடிய அணு கிருமிகளை அழிப்பதற்காக, திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை சுமார் 10 கிராம் மொத்தமாக எடுத்துக் கொண்டு, அதில் 5 கிராம் கருங்காலிக்கட்டையின் பெருந்தூளையும் சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அது கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, கால் புண்ணைக் கழுவவேண்டும். அதன் பிறகு, கழுவிய பகுதியில் குக்குலு, அகில் கட்டை, கடுகு, பெருங்காயத்தூள், சாம்பிராணி, இந்துப்பு, வசம்பு, நெய்யில் புரட்டிய வேப்பிலை ஆகியவற்றைக் கரி அடுப்பில் போட்டு, வரும் புகையை புண் மீது காட்ட, விரைவில் நீர் வரத்தானது நின்று, புண் விரைவில் ஆறிவிடும். எள், நெய், தேன் ஆகியவற்றை 4:2:1 என்கிற விகிதத்தில் அரைத்து, துணியில் தடவி, புண் மீது வைத்துக் கட்டுவதும் மிக நல்லதே.

முன் குறிப்பிட்ட பித்தம் மற்றும் கபதோஷங்களை வளர்க்கும் சாப்பிடக் கூடாத உணவு வகைகளால் ரத்தம் கெட்டு ஏற்படும் புண் உபாதைகளில் ரத்தத்தை சுத்திகரிக்கும் மூலிகைகளும் பயன்தரக் கூடியவையே. நன்னாரி வேர்ப்பட்டை, சுக்கு, கடுக்காய் கொண்டு தயாரிக்கப்படும் சோனிதாமிர்தம் கஷாயத்தையும், படவலம், வேப்பம்பட்டை, கடுகு ரோஹிணி போன்ற மருந்துகளைக் கொண்டு தயாரிக்கப்படும் திக்தகம் எனும் கஷாயத்தையும் கலந்து, காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, ரத்தம் சுத்தமாகி, உங்களுக்கு ஏற்பட்டுள்ள உபாதை விரைவில் குணமாகிவிடும். கெட்ட ரத்தத்தை கீறி வெளிப்படுத்தும் வ்ரண சிகிச்சையும் தங்களுக்குப் பயனளிக்கக் கூடியதே.

சரக்கொன்றைப் பட்டை, வேப்பம்பட்டை, கருங்காலிக்கட்டை, புங்கம்பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, நால்பா மரப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு கஷாயம் தயாரித்து உள்ளுக்குச் சாப்பிடுவதையும், புண்ணைக் கழுவுவதற்காகப் பயன்படுத்துவதாலும், உங்களுடைய பிரச்னையானது, விரைவில் தீர்ந்துவிடும். இவை அனைத்தும் சிறந்த கிருமி நாசினியாகும். எதஅஆ என்ற பெயரில் தற்போது விற்பனையாகும் கேப்சூல் மருந்து புண்ணை விரைவில் ஆற்றக் கூடிய ஆயுர்வேத மருந்தாகும்.

கால் புண்ணுள்ள பகுதியில் அடிக்கடி தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வதும், கைத்தறி வேட்டியைக் கட்டிக் கொள்வதும், கொசு, ஈ, எறும்பு ஊர்வதைத் தவிர்க்கும்விதம் வாழ்வதையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT