தினமணி கதிர்

இரு ஆட்டுக்குட்டிகள்

6th Dec 2020 06:00 AM | ஸிந்துஜா

ADVERTISEMENT


நல்லுசாமி ஊருக்குக் கிளம்பிப் போகும் போது சின்னவன் கையில் பத்து ரூபாயும், பெரியவன் கையில் பத்து ரூபாயும் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

""எதுக்கு அண்ணே பணத்தைக் குடுத்து பழக்குறீங்க? அதான் ஊர்லேந்து வரப்பவும், இங்க நாலு நாள் இருந்தப்பவும் ஓட்டல்ல போயி பலகாரம், கடையிலிருந்து பன்னு பிஸ்கட்டு மிச்சரு முட்டாயின்னு வாங்கி வாயில அடைச்சிட்டே இருந்தாச்சில்ல? இப்ப எதுக்கு கைல வேற?'' என்றாள் மகேசுவரி.
""அடச்சே! என்னவோ கொட்டிக் கவுத்துட்டாப்புல இல்ல இருக்கு நீ பேசுறது. பொடியங்க இன்னும் ரெண்டு நாளைக்கி பிடிச்சத வாங்கித் தின்னட்டுமே'' என்று தங்கைக்காரியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்.
அவர் தலை மறைந்ததும் ""டேய் ராமு, டேய் சோமு!
உங்க மாமன் சொல்லிட்டுப் போயிட்டாருன்னு எங்கயாவது ரோடுலஇருக்கறத வாங்கித் தின்னிங்க, அப்புறம் இருக்கு சேதி'' என்று இரு பிள்ளைகளையும் கடுமையான குரலில் எச்சரித்தாள். இருவரும் அவள் முகத்தைப் பார்க்க அஞ்சி, தலையைக் குனிந்து கொண்டு நின்றனர். அவள் எங்கே பணத்தைப் பிடுங்கிக் கொண்டு விடுவாளோ என்று அஞ்சியவர்கள் போல
மெதுவாக அதைத் தத்தம் டிராயர் பாக்கெட்டுக்குள் தள்ளி விட்டனர்.
மகேசுவரி வேலையைக் கவனிக்க என்று உள்ளே போனதும் இருவரும் வாசலுக்கு வந்தார்கள். அன்றைக்குக்
குழந்தைகள் தினம் என்று பள்ளியில் விடுமுறை விட்டிருந்ததால், தெருவே கிரிக்கெட்
மைதானமாகி விட்டது.
""என்னடா பண்ணுவே பத்து ரூவாய வச்சுக்கிட்டு?'' என்று ராமு கேட்டான். அவன்தான்
பெரியவன்.
""தெரியல. எதாச்சும் வாங்கித் தின்னலாம்னா, அம்மாக்குத் தெரிஞ்சிச்சின்னா வெறகு கட்டைதான்'' என்றான் சோமு. அவன் குரலில் நிஜமாகவே பயம் தெரிந்தது. தொடர்ந்து "" நீ என்ன பண்ணுவே அண்ணே?'' என்று கேட்டான்.
""பண்டிகை வருதில்ல'' என்றான் ராமு.
""ஐயோ, எனக்கு வெடின்னா பயம்'' என்றான் சோமு.
""சரி, அப்ப என் கிட்ட குடுத்திரு. அண்ணா வாங்கி வெடிக்கிறேன். நீ வேடிக்கை பாரு'' என்று சிரித்தான் பெரியவன்.
""அட, ஆசைதான்'' என்று டிராயர் பாக்கெட்டின் உள்ளே ஒரு கையை வைத்துக் கொண்டான் சோமு.
சோமு பயப்பட்டதில் உண்மையும் அனுபவமும் இருந்தன. இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் வாசலில் ஜவ்வு மிட்டாய்க்
காரன் வந்தான்.
அவன் கையில் இருந்த நீண்ட கோலின் உச்சியில் சிறிய சைஸ் கால்பந்து போல ஜவ்வு மிட்டாய் உருட்டப்பட்டு நின்றது. வரும் குழந்தைகள் கேட்டபடி அவன் கோலைச் சாய்த்து உருண்டையிலிருந்து மிட்டாயைப் பிய்த்து இழுத்து, கையில் கட்டும் கடிகாரமோ, மோதிரமோ, டார்ச் லைட்டோ, தண்ணீர் பாட்டிலோ எதைக் குழந்தைகள் கேட்டனவோ அதைப் பண்ணிக் கொடுத்து விற்றுக் கொண்டிருந்தான். ஒருவன் தண்ணீர் பாட்டிலை நக்கிக் கொண்டே, ""டே தண்ணி இனிக்குதுடா !'' என்றான்.
சோமு ஜவ்வு மிட்டாய்க்காரனிடம் ஒரு கடிகாரம் கேட்டான். அவன் அதைச் செய்து சோமுவின் கையில் கட்டி விட்டு ""காசு?'' என்றான்.
""வாங்கிட்டு வரேன்'' என்று சோமு வீட்டுக்குள் போனான். ராமுவும் உடன் ஓடி வந்தான்.
சோமு மகேசுவரியிடம் போய், ""அம்மா! இங்க பாரு வாச்சு'' என்று பெருமையாகக் காண்பித்தான்.
அதைப் பார்த்ததும் மகேசுவரிக்கு முகம் மாறிற்று.
""யார்ரா குடுத்தது?'' என்று கேட்டாள் கோபமாக.
அந்தக் குரலைக் கேட்டதும் சோமுவுக்கு வாய் எழும்பவில்லை. கண்ணில் நீர் வர ஆரம்பித்தது.
ராமு, ""வாசல்ல ஜவ்வு மிட்டாய்க்காரர் கிட்ட இவன் வாங்கினாம்மா. அவுரு காசு வாங்கிட்டு வரச் சொன்னாரு'' என்றான்.
""அடி செருப்பால'' என்று கையை ஓங்கிக் கொண்டு வந்தாள் மகேசுவரி. சோமு வெளியே ஓடினான். அவளும் பிள்ளையின் பின்னாலே சென்றாள்.
வாசலில் நின்ற ஜவ்வு மிட்டாய்க்காரனிடம், ""ஏம்ப்பா, எதுக்கு நீ காசு வாங்காம மிட்டாயக் குடுத்த புள்ளைகிட்ட ?'' என்று கேட்டாள்.
அவன், ""காசு வாங்கிட்டு வரேன்னு போச்சே'' என்றான்.
""மிட்டாய கொளந்தைங்க தலையில கட்டிட்டா எப்பிடியும் காசு வந்திடும்னு தான? பாரு, எப்பிடி ஈ மொய்க்கிது உன் மிட்டாய் மேல? இந்தக் கருமாந்திரத்தை எல்லாம் கொளந்தைங்க மேல கட்டறதும் ஒரு பொழப்பா?'' என்று மகேசுவரி கோபமாகக் கத்தினாள்.
மேலும் வியாபாரம் கெட்டுப் போகும் என்று பயந்தவனாய் ஜவ்வு மிட்டாய்க்காரன் அங்கேயிருந்து நகர்ந்து சென்றான்.
அங்கு நின்று கொண்டிருந்த சோமுவை மகேசுவரி பார்த்து, ""வீட்டுக்குள்ள போடா நாயி'' என்று திட்டினாள். அவன் அசையாமல் நின்றான்.
""சரி நீ வாடா ராமு. நா வாசக் கதவ பூட்டிர்றேன். இந்த நாயி வாசல்லயே நின்னுக்கிட்டு இருக்கட்டும்'' என்று வீட்டின் உள்ளே புகுந்தாள். ராமுவைத் தொடர்ந்து சோமுவும் பயந்தவனாய்ப் பின்னால் ஓடி வந்தான்.
மகேசுவரி உள்ளே நுழைந்த அவனைப் பிடித்து, "" இந்த வாய்தான் தின்னுறதுக்கு ஆசப் பட்டிச்சு இல்ல?'' என்று வாயைச் சேர்த்து கன்னத்தில் அறைந்தாள். அவன் வலி பொறுக்க முடியாமல் பெருங் குரல் எடுத்து அழ ஆரம்பித்தான்.
""வாய மூடு. இல்ல, அடுப்புல கரண்டி வச்சி இளுத்திருவேன்'' என்றாள் மகேஸ்வரி.
அவன் சட்டென்று அழுகையை நிறுத்தி விட்டான். அவனை வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்று சிறுகற்களும், மண்ணும் கலந்திருந்த தரையில் முட்டிக் கால் போடச் சொன்னாள். சோமுவைத் தானும் தண்டிக்க விரும்புவது போலத் தலைக்கு மேல் வெய்யில் பளீரென்று அறைந்தது. ஒரு மணி நேரம் கழித்து அவனை எழுந்திருக்க மகேசுவரி அனுமதித்த போது அவன் நொண்டிக் கொண்டே வீட்டுக்குள் வந்தான்.
மறுநாள் பள்ளிக்கூட மதிய சாப்பாட்டு நேரத்தில் வகுப்பில் உள்ள மற்ற பிள்ளைகளோடு சோமுவும் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த டிபன் டப்பாவைத் திறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்குப் பின்னால் இருந்து "அடி சக்கை !' என்று குரல் கேட்டது. சோமு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ராமு அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
சோமு தனியாக வைத்திருந்த டப்பா மூடியைப் பார்த்து, ""உனக்கு மட்டும் அம்மா வடை சுட்டுக் கட்டிக் குடுத்தாங்களா?'' என்று கேட்டான்.
சோமு இடது கையால் வடையை மறைத்துக் கொண்டான்.
""எப்படிடா வடை வாங்கிட்டு வந்தே?'' என்று கேட்டான் ராமு.
""மாமா குடுத்த பணத்துலதான?''
சோமு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு ராமுவைப் பரிதாபமாகப் பார்த்தான்.
""இன்னிக்கு இருக்குடி உனக்கு அம்மாகிட்டே'' என்றான் ராமு இரக்கமற்ற குரலில்.
""அண்ணே , வேண்டாம், சொல்லிறாதே'' என்று சோமு கெஞ்சினான்.
""மாமா குடுத்த காச வச்சுதான வடை வாங்கின?''
""இல்ல, எனக்கு ஆரோக்கியம் கொண்டு வந்து குடுத்தான்.''
ஆரோக்கியம் சோமுவின் வகுப்பில் படிக்கிறான். அவன் அம்மாதான் பள்ளி வாசலில் வடை சுட்டு வியாபாரம் செய்கிறாள்.
""பொய் வேற புளுகுறயா?'' என்று கேட்டபடி திடீரென்று ராமு சோமுவின் ஒரு பாக்கெட்டில் கையை விட்டான். அங்கு ஒன்றும் சிக்கவில்லை. ராமுவை முந்திக் கொண்டு சோமு இன்னொரு பாக்கெட்டைக் கையை வைத்து மூடிக் கொண்டான். ராமு அவன் கையை விலக்க முயற்சித்தான். உள்ளிருந்து நாணயங்கள் உருளும் சத்தம் கேட்டது.
""டேய், நீ பத்து ரூபாய மாத்தி வடை வாங்கியிருக்க'' என்று கூச்சலிட்டான் ராமு. அவன் கண்கள் டிபன் மூடியின் மீதிருந்த மிச்ச வடையை
நோக்கின.
அதைப் பார்த்த சோமு, ""சரி, நீ இத எடுத்துக்க'' என்று அந்தத் துண்டை எடுத்து அவனுக்குக் கொடுத்தான்.
ராமு அதை வாங்க மறுத்து பிகு பண்ணிக் கொண்டான். பிறகு ஏதோ வற்புறுத்தலுக்கு இணங்கியவன் போல வாங்கி வாயில் போட்டுக் கொண்டான்.
சோமு அவனிடம், ""அம்மா கிட்ட சொல்ல மாட்டீல்ல?'' என்றான்.
ராமு பதிலளிக்காது அவனது வகுப்பை நோக்கிச் சென்றான்.
அன்று மாலை வழக்கம் போல இருவரும்
பள்ளியிலிருந்து சேர்ந்து வீட்டுக்குச் சென்றார்கள். வழியில் சோமு ""அண்ணே அம்மா கிட்ட சொல்லிறமாட்டீல்ல?'' என்று ராமுவிடம் கேட்டான்.
""நீ எப்பிடிடா அம்மா சொல்லுறதைக் கேக்காம வடைய வாங்கித் தின்னலாம்?''
""அம்மா கிட்ட சொல்லாதேண்ணே''
""சொல்லுவேன். அன்னிக்கி நான் கணக்கு சார் கிட்ட அடி வாங்கினத வீட்ல அம்மா கிட்ட சொல்லி மறுபடியும் என்னைய அடி வாங்க வச்சில்ல?'' என்றான் ராமு.
""அப்ப நீ எங்கிட்டேர்ந்து வடைய வாங்கித் தின்னேன்னு அம்மா கிட்ட சொல்லுவேன்'' என்றான் சோமு.
""சொல்லிக்க. நான் திங்கவேயில்ல. இவன் பொய் சொல்றான்னு சொல்லுவேன். நீ வடைய காசு குடுத்து வாங்கலேன்னா பத்து ரூபாய காட்டச் சொல்லுங்கம்மான்னு அம்மா கிட்ட சொல்லுவேன்'' என்றான் ராமு.
சோமுவுக்குக் கோபமும் அழுகையும் சேர்ந்து வந்தன. அடக்கிக் கொண்டான். இன்று அடி விழப்போவது நிச்சயம். இவனிடம் போய் என்ன கெஞ்சினாலும் பிரயோசனம் இல்லை என்று முடிவுக்கு வந்து விட்டவன் போல மேலே எதுவும் பேசாமல் நடந்து சென்றான்.
ஆனால் அன்று வீட்டுக்குப் போனவுடனோ, வீட்டுப் பாடம் எல்லாம் முடித்ததற்குப் பிறகு அம்மாவுடன் சேர்ந்து டி. வி.பார்க்கும் போதோ, இரவு சாப்பிடும் போதோ , கடைசியாகப் படுக்கையில் விழும் போதோ சோமு பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. சோமு ராமுவைப் பார்க்கும் போதெல்லாம் அவன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே நேருக்கு நேர் கண்கள் சந்தித்த போதும் உடனே கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு போனான் ராமு. சோமுவுக்கு ஒன்றும் புரியவில்லை. திடீரென்று அவனுக்கு ராமுவின் மீது சந்தேகம் வந்தது. அவனும் தன்னைப் போல் ஏதாவது வாங்கித் தின்றிருப்பானோ? அதனால்தான் சோமுவைப் பற்றி பேசாமல் இருக்கிறானோ? அப்படி நினைக்கையில் சோமுவுக்குத் திருப்தியாக இருந்தது. ஆம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒருவித உறுதி கூட அவன் மனதில் ஏற்பட்டு விட்டது.
மறுநாள் மதிய உணவுக்கான பெல் அடித்த போது சோமு சாப்பிட உட்கார்ந்தான். அப்போது ராமு தன்னை நோக்கி வருவதைப் பார்த்தான். அவன் கையில் டிபன் பாக்சுடன் வந்தான். வழக்கம் போல அவனுடைய வகுப்பில் உட்கார்ந்து சாப்பிடாமல் எதற்கு இங்கே வருகிறான்?
ராமு சோமுவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
பிறகு சோமுவைப் பார்த்து, ""நேத்தி அந்த வடை நல்லா இருந்திச்சில்ல?''என்று கேட்டான்.
சோமு ஆச்சரியத்துடன் அண்ணனைப் பார்த்தான்.
ராமு தன் பாக்கெட்டிலிருந்த பத்து ரூபாய் நோட்டை எடுத்து சோமுவிடம் கொடுத்தான்.
""நீ போயி ஒரு வடை வாங்கிட்டு வரியா?'' என்று தம்பியிடம் கேட்டான் அண்ணன்.
""ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்குவம்''

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT