தினமணி கதிர்

பேல்பூரி

23rd Aug 2020 06:00 AM

ADVERTISEMENT

 

கண்டது

 

(சென்னை நங்கநல்லூரில் உள்ள அக்குபஞ்சர் மருத்துவ அகம் ஒன்றின் பெயர்)

 தேவி  குத்தூசி  சிகிச்சையகம் 

ADVERTISEMENT

த லட்சுமி காந்த்,  சென்னை -  61. 

 

(பெருந்துறை அருகே ஆட்டோ ஒன்றில்)


பெண் பிள்ளை பெற்றால் பரிசு
ஆண் பிள்ளை பெற்றால் வாரிசு

 

த.வேல்முருகன்,  கோவில் பாளையம். 


கேட்டது


(செய்யாறு  கீழ்புதுப்பாக்கம் நியாயவிலைக் கடை ஒன்றில்  இரு பெண்கள்)
""அக்கா  உன் புதுமருமக தங்கக் குடமாட்டம்  இருக்கா...  கூட கூட்டியாற வேண்டியதுதானே?''
""நானும் வரச் சொன்னேன்... அவதான்  அங்க பித்தளை குண்டானெல்லாம்  வந்து வாயாடும்... 
வரலேன்னுட்டா''

மா.வி.கோவிந்தராசன்,  செய்யாறு- 7

 

(கீழக்கரையில் ஒருவர் தன் நண்பருடன் செல்போன் அவுட் ஸ்பீக்கரில்)

""ஹலோ... நான் மண்ணடியில இருந்து பேசுறேன்''
""உயிரோட இருக்குற  உன்னால எப்படி மண்ணுக்குள்ள இருந்து பேச முடியும்?''
"" நான் சென்னையில் இருக்குற மண்ணடிங்குற இடத்துல இருந்து பேசுறேன்''

நா.ஆமினத்து ஜாக்ரினா,  
கீழக்கரை .

 

(தஞ்சாவூர் காவேரி நகர் காய்கறி மார்க்கெட்டில் இருவர்) 

""தினமும் நான்  7 கி.மீ. தூரம் வாக்கிங்  போறேன் சார்''
""நடந்தேவா?''

-வி. ரேவதி, தஞ்சை

 

யோசிக்கிறாங்கப்பா!

 

ஜெயிக்கும் வரை
நீ பேசுவதைக் கேட்க ஆளிருக்காது.
ஜெயித்த பின் நீ பேசுவதை
கேட்காத ஆளிருக்காது. 

 

துடுப்பதி வெங்கண்ணா,  பெருந்துறை. 

 

மைக்ரோ கதை

 

அலுவலகம் முடிந்து மாலை 7 மணிக்கு வீடு திரும்பிய கோபுவிடம், ""நான் வைத்திருந்த புது நூறு ரூபாய் நோட்டைக் காணவில்லை'' என்று அம்மா சொன்னது அவனுக்கு சற்று அதிர்ச்சியை அளித்தது. தெரியாமலோ, கேட்காமலோ எடுப்பவர் நம் குடும்பத்தில் இல்லை. அதற்கான தேவையும் இருக்காது.  பிறகு எப்படி? யோசித்துக் கொண்டிருந்த போது கரண்ட் கட் ஆனது.  
""அம்மா உங்கள் பணம் எங்கேயும் போய்விடாது... நீங்கள் வெற்றிலை போடும்போது காற்றில் பறந்து போய் சோபாவுக்கு அடியில் தான் கிடக்கும். கரண்ட் வந்ததும் தேடி எடுத்துவிடலாம்'' என்று சொல்லிய பத்து நிமிடத்தில், கரண்ட் வரவே சோபாவை நகர்த்திப் பார்த்தபோது அங்கே மூன்று புது நூறு ரூபாய் நோட்டுகள் கிடந்தன.

"நான் ஒரு நூறு ரூபாய் நோட்டுதானே போட்டேன். மூன்று வந்தது எப்படி?'' என்று யோசித்தான் கோபு.  

குடும்பத்தில் யார் மீதும் பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக தன்னைப் போலவே தன் மனைவி ஒரு நோட்டும், மகன் ஒரு நோட்டும் சோபாவுக்கு அடியில் போட்டிருக்கலாம் என்று யோசித்தான்.

அப்போது அங்கு வந்த  அம்மா, "" காலையில் பால் வாங்க நான்தான் நூறு ரூபாய் கொடுத்தேன்... அதை மறந்துட்டேன்'' என்றார்.  சோபாவுக்கு அடியில் கிடந்த  மூன்று நூறு ரூபாய் நோட்டுகளைப் பற்றி மூச்சுவிடவில்லை கோபு.  

வீ.இராமலிங்கம்,  தாணிக்கோட்டகம்.

 

எஸ்.எம்.எஸ்.


என்னென்னவோ ஆக வேண்டுமென்று
கனவு கண்டு...
கடைசியில் என்னவானோம் என்று 
யோசித்துப் பார்க்கும் நேரம்தான்... 
நம் வாழ்க்கைக் கதையின் மறு ஒளிபரப்பு.

பா.சக்திவேல்,  கோயம்புத்தூர். 

 

அப்படீங்களா!

 

வட ஆப்ரிக்காவில் உள்ள நாடு துனிசியா. இந்த நாட்டின் தலைநகர் துனிஸ். கரோனா தொற்றைத் தொடர்ந்து, இந்நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  பொதுமுடக்கத்தை மக்கள் மீறாமல் தடுக்க அந்நாட்டின் காவல்துறை  ரேபோவை  சாலைகளில் இறக்கிவிட்டுள்ளது. 

"ரோபோகாப்' என்று அழைக்கப்படும் இந்த ரோபோவில்  எல்லாக் கோணங்களிலும் வெப்பநிலையை அறியும் தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  இது தவிர சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. 

சாலையில் எதிர்ப்படும் ஒருவரிடம் இந்த ரோபோ, ""பொது முடக்கக் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?  உங்களுடைய அடையாள அட்டையைக் காட்டுங்கள்'' என்று கேட்கும். 

அடையாள அட்டையை ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா முன்பாகக் காட்ட வேண்டும்.  மருந்துப் பொருள்கள்,  மிகவும் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறுபவர்களை இந்த ரோபோ மூலம் அடையாளம் கண்டு கட்டுப்படுத்துகிறார்கள் காவல்துறையினர். 

இதைத் தயாரித்த  இனோவா ரோபோட்டிக்ஸ் நிறுவனம்,  துனிஸ்  நகரில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் ரோபோவையும் தயாரிக்கத் திட்டமிட்டு  உள்ளது. 

என்.ஜே., சென்னை-58.

ADVERTISEMENT
ADVERTISEMENT