தினமணி கதிர்

திரைக்கதிர்

22nd Sep 2019 05:15 PM

ADVERTISEMENT

* தமிழில் "ஒரு நாள் கூத்து', "திமிரு பிடிச்சவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். ஒரு சில படங்களில் நடித்து வந்தவருக்கு, பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இதனால் தெலுங்கில் தனக்கென மார்க்கெட்டை உருவாக்க நினைத்தார். நினைத்தபடியே தெலுங்கில் திடீரென்று தனக்கு மார்க்கெட் உருவானதால், அங்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த அவர், துபாயில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்ப் படங்களில் நடிக்கும்போது சென்னையில் உறவினர் வீடு அல்லது நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அவர், தெலுங்கில் நடிக்கும் போது ஹைதராபாத்தில் வாடகை வீட்டில் தங்குகிறார்.
இந்தநிலையில், கணிசமான சம்பளம் வாங்கும் ஹீரோயினாக உயர்ந்துள்ளதால், ஹைதராபாத்தில் தனி பங்களா வாங்கி குடியேற நினைத்திருக்கிறார். இதையடுத்து, தன் உதவியாளர்கள் மூலம் புது பங்களா தேடும் படலத்தை தொடங்கியுள்ளார்.

* "பாகுபலி'க்கு அடுத்தபடியாக மிகப் பெரும் கனவுப் படமாக உருவாகி வருகிறது "சாயிரா நரசிம்ம ரெட்டி'. 
சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்ளிட்ட இந்திய அளவிலான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இது தவிர பல முன்னணி நட்சத்திரங்களும் இதில் நடிக்கின்றனர். சுமார் 270 கோடி ருபாய் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. வி எப் எக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் சுமார் 45 கோடி ரூபாய் வரை படக்குழு செலவிட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மேலும் "சாயிரா' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எப்படி இருக்கும் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. இறுதியில் "சாயிரா நரசிம்ம ரெட்டி' உயிரை விடுவது போலத்தான் கதை இருக்கும் என்கிற தகவலும் தற்போது கசிந்துள்ளது. இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக தமிழகத்தைச் சேர்ந்த ரத்னவேலு பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததால், "இந்தியன் 2' படத்தில் பணியாற்றி வருகிறார்.

* ஆர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அது போல் இளம் நடிகைகளிடம் அந்த ஆர்வம் இருப்பதில்லை. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்ளிட்டோர் இணைந்து நடித்தனர். இந்த வரிசையில் தற்போது மூன்று பேர் இணைந்துள்ளனர். "எப் ஐ ஆர்' என்ற புதிய படத்தில் 3 நடிகைகள் இணைந்து நடிக்கின்றனர். கௌதம் வாசுதேவ்மேனனிடம் பல படங்களில் தலைமை இணை இயக்குநராகப் பணியாற்றிய மனு ஆனந்த் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சென்னையில் வசிக்கும் இஸ்லாமிய இளைஞர் குழப்பமான மன நிலையில் சிக்குகிறார். அது அவரது வாழ்க்கையைத் தலை கீழாகப் புரட்டிப் போடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என பரபரப்பான திருப்பங்களுடன் சொல்வதே கதை. விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். ரைசா, மஞ்சிமா மோகன், ரெபோ மோனிகா ஜான் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். அமான் பிரவின்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவமாக இருக்கும். ஆனந்த ஜாய் தயாரிக்கிறார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். அஷ்வத் இசையமைக்கிறார். 

* "டியர் காம்ரேட்' படத்தில் விஜய் தேவரகண்டாவுடன் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தன்னா. இந்தப் படத்தின் மூலமாகத் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார் ராஷ்மிகா. அதற்கு முன்னரே விஜய் தேவரகொண்டாவுடன் "கீதகோவிந்தன்' படத்தில் நடித்த போதே, தெலுங்கில் வரவேற்பைப் பெற்றிருந்தார். இப்போது தமிழில் அவருக்கென சிறு அளவில் மார்க்கெட் உருவாகியிருக்கிறது. கன்னடப் படங்களில் மட்டுமே நடித்து வந்த ராஷ்மிகாவுக்கு இப்போது தமிழ், தெலுங்கு என இரு சினிமாக்களிலும் கதவு திறந்திருக்கிறது. "பிகில்' படத்தையடுத்து விஜய்யின் 64-ஆவது படம் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க, ராஷ்மிகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்காக அவரது பெயர் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் ராஷ்மிகா இதற்குப் பிடிகொடுக்காமல் விலகி போனதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் வேறு படங்களுக்கு அவரது கால்ஷீட் ஒதுக்கியிருப்பதுதான். ஹிந்தியில் வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டதாலேயே விஜய் பட வாய்ப்பை அவர் ஏற்க மறுக்கிறார். இது பற்றி பேசும் போது விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பை தவற விடுவது ஏமாற்றமாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார். 

ADVERTISEMENT

* உடல் எடையை ஏற்றுவது, குறைப்பது என்பது நடிகைகளின் அன்றாட வழக்கம். இந்த பயிற்சிகளின் போது முகச் சாயல் மாறாமல் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அசின் தற்போது தன் முகச் சாயலையும் மாற்றி இது அசின்தானா என்று கேட்கும் அளவுக்கு மாறியிருக்கிறார். இந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் முன்னணி இடத்தில் இருந்த போதே, திடீரென்று ஹிந்திப் பக்கம் போனார் அசின். ஹிந்தி கஜினி அவருக்கு பெரிதும் கைக் கொடுத்து உதவியது. அதன் பின்னால் பெரிதாக அவருக்கு எந்த படங்களும் கைகொடுக்கவில்லை.ஒரு சில படங்களில் நடித்த பின்னர் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பெண் குழந்தைக்குத் தாயான அவர், இனி நடிக்க வர மாட்டார் என பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கணவர், குழந்தையுடன் இருக்கும் படத்தை அவ்வப்போது வெளியிட்டு வந்த அசின், தற்போது தனியாக இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இதில் உடல் தோற்றம், முகச்சாயல் எல்லாமே மாறிப் போய் இருக்கிறது. இந்தப் படம் இணையதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம் என்கிறார்கள். விரைவில் தமிழ் சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
ஜி.அசோக்

ADVERTISEMENT
ADVERTISEMENT