தினமணி கதிர்

சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் முதல் இடம்!

22nd Sep 2019 04:57 PM

ADVERTISEMENT

ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்றால் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள். புதிய இடம், புதுமையான மனிதர்கள். அவர்கள் கலாசாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாமே வேறு வேறானவை. அதை அறிந்து கொள்ளும் ஆசை யாருக்குதான் இருக்காது. ஏன் இந்த சுற்றுலாவை பற்றி திடீரென்று எல்லோரும் பேசுகிறார்கள் என்று கேட்கலாம். உலக சுற்றுலா தினம் இந்த மாதம் 27 -ஆம் தேதி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. 
இதனையொட்டி தமிழ் நாட்டில் சுற்றலா குறித்து என்னென்ன செய்துள்ளார்கள், இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு சுற்றுலா பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கத் தலைவரும், மதுரா டிராவல்ஸ் நிறுவனருமான வி.கே.டி.பாலனிடம் கேட்டபோது, "செய்ய வேண்டியது நிறைய. சிலவற்றை மட்டும் இங்கு கூறுகிறேன்'' என்று சொல்லத் தொடங்கினார்: 
"சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் கடந்த 4 ஆண்டுகளாக முதல் நிலையில் உள்ளது. அதாவது உள்ளூர் சுற்றுலா, மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் நாம் முதலிடத்தில் தான் இருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளலாம். இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதல் நிலையில் இருந்தாலும், உலக சுற்றுலாவில் நமக்கு முதல் இடம் எப்போது கிடைக்கப் போகிறது என்று நாம் ஆவலாக உள்ளோம். நம் தமிழகத்தில் சுற்றுலாத் துறையை பொறுத்த அளவில் எல்லாமே இருக்கு, அதுவும் நல்லாவே இருக்கு. இன்னும் சொல்லப்போனால் இன்பெளண்ட் (inbound) என்று சொல்வார்களே அதாவது (domestic) சுற்றுலாவிற்கு என்ன தேவையோ இங்கு கொட்டிக் கிடக்கு. 
ஒரு சுற்றுலா என்றால் பல்வேறு நிலைகளில் அதனைப் பார்க்க வேண்டும். Adventure, eco, water sports, mountaineering போன்ற பல்வேறு வகை சுற்றுலாக்கள் இங்கு உள்ளன. இவை எல்லாமே தமிழகத்தில் நிறைய இருக்கின்றன. ஆனால் நாம்தான் இதனை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம். உலக சுற்றுலா தினம் இந்தியாவில் கொண்டாடப்படும் என்று அறிவிப்பு UNWTO வந்த உடனேயே இந்தியாவை எல்லோரும் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அரசு ரீதியாக புது தில்லியில் ஒரு விழாவும், நமது தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் சேலத்தில் ஒரு விழாவும் நடக்க இருக்கிறது என்று சட்டசபையிலேயே முதல்வர் அறிவித்துள்ளதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
Untapped என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போன்று தமிழகத்தில் என்னென்ன உள்ளன என்று நாம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். தொடர்ந்து ஒரே இடத்தை சுற்றுலா பயணிகள் பார்க்க விரும்புவதில்லை. அது மதுரை மீனாட்சியம்மன் கோயில், மகாபலிபுரம், தஞ்சை கோயில்கள் என்று கூறிக் கொண்டே போகலாம். ஆனால் நமது தமிழகத்தில் பல்வேறு இடங்கள் இதுவரை மக்கள் போகாத இடங்களாகவும், போனால் ரம்யமான காட்சியாகவும், மனதுக்கு இதமாகவும் இருக்கும் இடங்கள் பல. ஒரு சுற்றுலா வளர்ச்சி என்றால், நல்ல காற்றோட்டமான இடமும், சுவையான உணவும், கண்ணியமான ஆடை மற்றும் இருப்பிட வசதிகள் இருந்தால், அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருவார்கள். அதிலும் விருந்தினர்களை வரவேற்கும் பண்பாடும், வரலாற்றுச் சின்னங்களும், கடற்கரை, மலைகள், அருவிகள், கோடை வாசஸ்தலம் என்று இவை அத்தனையும் நமது தமிழகத்தில் நிரம்பி வழிகின்றன என்று தைரியமாகச் சொல்லலாம். இதில் அரசு செய்யவேண்டியது பல உள்ளன. 
நமது கடற்கரை உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை. இதில் நாம் பல்வேறு நீர் விளையாட்டுகளை உருவாக்கலாம். அதே போன்று கன்னியாகுமரியில் முக்கூடல் சங்கமம் நடக்கும் இடத்தில் அகண்ட கடல் இருப்பதால், இங்கும் பல்வேறு சுற்றுலா விளையாட்டுகளை அழகாக நடத்தலாம். இவை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். சில விஷயங்களை தனியார் வசம் ஒப்படைப்பதால் தவறொன்றும் ஏற்படாது. மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 
புதுச்சேரி, மற்றும் கோவாவிலும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சிலவற்றை சுற்றுலாத் தலமாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அதில் boat house, நீர் விளையாட்டுகள், cruise என்று பல உள்ளன. National institute of water sport என்பது மத்திய அரசு நிறுவனம். இதில் பயிற்சி பெற்ற பலரின் ஒத்துழைப்போடு, நீர் விளையாட்டுகளை இங்கு அமைக்கலாம். வட நாட்டவர்கள் 500 பேர்கள், இந்த கல்லூரியில் படித்து பயிற்சி பெற்றுள்ளார்கள். இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. இதில் படித்து பயிற்சி பெற்றால் வேலை வாய்ப்பு கிடைக்கும். 
மலை ஏறும் பயிற்சி இருந்தால், இங்கு மேற்கு தொடர்ச்சி மலை போல் 1000 மலைகள், 2000 நீர்வீழ்ச்சிகள் தமிழகத்தில் உள்ளன. இவைகள் எல்லாம் வெளிநாட்டவர்களைக் கண்டிப்பாக கவரும். 
நம் தமிழகத்தில் பல்வேறு பழங்குடி இன மக்கள் வாழ்கிறார்கள். Eco tourism மூலம் இவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்தால் 1000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். பறவை சரணாலயம், முதுமலையில் உள்ள யானை சரணாலயம் போல் பல்வேறு இடங்களிலும் இப்படிபட்ட சரணாலயங்களையும் நாம் நிறுவலாம். 
சென்ற ஆண்டு "குராங்கனியில்' நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இப்படி நடக்காமல் இருக்க Indian Mountaineering Foundation உள்ளது. அவர்களிடம் பயிற்சி பெற்றவர்களை வரவழைத்து இங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தால் வேலை வாய்ப்பும் பெருகும்.
திருநெல்வேலி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் காடு செழிப்பாக இருக்கிறது. இந்த பகுதியையே சிங்கம் வசிக்கும் பகுதியாக மாற்றலாம். குஜராத்தில் 700 சிங்கங்கள் உள்ளனவாம். ஆனால் அங்கு 400 சிங்கங்கள் மட்டும்தான் வசிக்க இடம் உண்டு என்று கூறுகிறார்கள். அங்கிருந்து 3 சிங்க குடும்பத்தை இங்கு கொண்டு வந்தால் போதும், இங்கும் சிங்க காடாக இந்த இடம் மாறிவிடும். அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குவிவார்கள். இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி பெரும், வேலை வாய்ப்பு பெருகும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று கண்டிப்பாக நம்பலாம்'' என்றார். 
- சலன்

சுற்றுலா தினம் உருவானது எப்படி என்று கொஞ்சம் பின் நோக்கி பார்த்தால் பல்வேறு சுவையான நிகழ்வுகள் தெரிகிறது. யுனைட்டெட் நேஷன்ஸ் சர்வதேச சுற்றுலா சங்கம் (United Nations World Tourism Organization) 1979- ஆம் வருடம் முடிவு செய்ததுதான், ஒவ்வொரு வருடமும் ஒரு நாளை சர்வதேச சுற்றுலா தினமாகக் கொண்டாடலாம் என்பது. 
அந்த நாள் எல்லா நாட்டிற்கும் பொதுவானதாகவும், தட்ப வெப்ப சூழ் நிலைகளை மனதில் கொண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நாளை இக்னெசியஸ் அமடுவா அடிக்பி 
(Ignatius Amaduwa Atigbi) என்ற நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் சொல்ல, எல்லோரும் ஏற்றுக்கொள்ள, உலக சுற்றுலா தினம் பிறந்தது. 
சர்வதேச சுற்றுலா தினத்தின் வண்ணம் நீலம். எந்த நாடு எந்த ஆண்டு இந்த சுற்றுலா தினத்தை கொண்டாட வேண்டும் என்பதையும், நிலவியல் ரீதியாக சங்கம் இந்த தினத்தை அறிவிக்கும். ஆரம்ப கொண்டாட்டம் 2003-ஆம் வருடம் சீனாவில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அது முதல் செப்டம்பர் 27- ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச சுற்றுலா தினமாக ஒவ்வொரு நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருட சுற்றுலா தின கொண்டாட்டம், இந்தியாவில் கொண்டாட முடிவு செய்து, தலைநகர் புது தில்லியில் ஒரு விழாவும், தமிழ் நாட்டில் சேலத்தில் முதலமைச்சர் பங்கு கொள்ளும் ஒரு விழாவும் நடக்க இருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT