எளியமுறை... சிறந்த பயன்! 

மருத்துவம் அதிகம் வளர்ந்திருக்காத பண்டைய நாட்களில், வீட்டிலேயே சிறு சிறு வைத்திய முறைகளைக் கையாண்டு பல உபாதைகளையும் குணமாக்கிக் கொண்ட நம் முன்னோர் விட்டுச் சென்ற சில குறிப்புகளே
 எளியமுறை... சிறந்த பயன்! 

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
 மருத்துவம் அதிகம் வளர்ந்திருக்காத பண்டைய நாட்களில், வீட்டிலேயே சிறு சிறு வைத்திய முறைகளைக் கையாண்டு பல உபாதைகளையும் குணமாக்கிக் கொண்ட நம் முன்னோர் விட்டுச் சென்ற சில குறிப்புகளே... இன்று வளர்ந்துள்ள மருத்துவத்தையும் தாண்டி சிறப்பாக இருந்திருக்குமோ? என்ற எண்ணம் மறுபடியும் மக்கள் மனதில் எழத் தொடங்கியுள்ளது. அது போன்ற அரிதான சில எளிய ஆயுர்வேத மருத்துவ முறைகளை விளக்கிட முடியுமா?
 - சீனிவாசன், திருநெல்வேலி.
 எலுமிச்சம் பழத்தின் தோலில் காற்றில் சீக்கிரம் பறந்து செல்லும் எண்ணெய் போன்ற திரவ பதார்த்தம் கிடைக்கிறது. வயிற்றில் உப்புசம், செரிமானமின்மையுடன் கூடிய ஏப்பம், வயிற்று வலி, வாந்தி, அடிக்கடி மலம் அஜீரணத்துடன் வெளியேறுதல் இவற்றுக்கு இத்தைலத்தைச் சர்க்கரையுடன் ஒன்றிலிருந்து மூன்று சொட்டுகள் வரை கலந்து கொடுத்தால் நல்ல குணம் கிடைக்கும்.
 தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு 2 -4 சிறிய வெங்காயத்தை 300 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மி.லி. ஆக வற்றியதும் வடிகட்டி இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால், நல்ல தூக்கம் வரும். மாதாமாதம் தீட்டு சரி வர வெளிச் செல்லாமல் இடுப்பு, தொடைகள் வலியுடன் கஷ்டப்படும் பெண்கள், தினம் காலை பல்துலக்கியவுடன் 2 வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, மேல் குளிர்ந்த தண்ணீர் சாப்பிட்டால் நாளடைவில் வலிகள் நின்று தீட்டும் சரி வர வெளியாகும்.
 செரிமானமாகாமல் ஆகக் கூடிய பேதிக்கு சோம்பு, சுக்கு, கொத்துமல்லி விதை ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் பொடித்துப் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அரை லிட்டர் மிச்சமாக காய்ச்சி வடிகட்டி, 60 மி.லி. முதல் 90 மி.லி. வரை ஒரு வேளைக்கு கொடுத்து, பின்னர் 2 மணி நேரத்துக்கு ஒரு தரம் சூடாய் சாப்பிடவும். வயிற்றிலுள்ள பொருமல், அஜீரணம் மாறி பசி ஏற்படத் தொடங்கும். வயிற்றில் எரிச்சலுடனும், தண்ணீர் தாகமும் கூடிய பித்த பேதிக்கு சுக்கு சேர்க்கக் கூடாது. மற்ற இரண்டும் மட்டுமே போதுமானவை. புளித்த மோரில், உப்பு, கறிவேப்பிலை, ஓமம், பெருங்காயம் சிறிது கலந்து சிறிது சிறிதாகப் பருகுவது மேன்மை. புழுங்கலரிசியை வறுத்து சன்னமாய் உடைத்து, சிறிது ஆரோரூட் மாவு, சவ்வரிசி கலந்த கஞ்சி காய்ச்சிக் குடிப்பது பேதியை நிறுத்த மிகவும் உபயோகமாக இருக்கும்.
 பிறந்து 2 - 3 மாதங்களே ஆன குழந்தைகள் மலம் சரி வரப் போகாமல் கஷ்டப்படும் நிலையில் உலர் திராட்சைப்பழம் 15 - 20, பிஞ்சு கடுக்காய் ஒன்று, கறிவேப்பிலை காய்ந்தது 15 - 20 இலை, சுக்கு 2- 4 அரிசி எடை இவற்றை 90 மி.லி. தண்ணீருடன் கொதிக்கவிட்டு, 30 மி.லி. ஆக வற்றியதும் வடிகட்டி சிறிது சிறிதாகப் புகட்ட, மலச்சிக்கல் நீங்கும். இவற்றையே அளவில் சிறிது அதிகப்படுத்திச் சாப்பிட்டால், பெரியவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் உபாதை நீங்கிவிடும்.
 தயிருடன் தேன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. உடலில் பலவித திரவங்களும் உணவும் உட்செல்லும் குழாய்கள் அடைபட்டுப் போகும் நிலையை தயிருடன் தேன் சேர்த்துச் சாப்பிடுவதால் நீக்கப்படுகிறது.
 30 கிராம் சுக்கைத் தூள் செய்து பசுவின் பால் விட்டரைத்து விழுதைத் துணியில் உளுந்து கனம்பூசிச் சுருட்டி உலர்த்தி நல்லெண்ணெய்யில் தோய்த்து எரியவிட்டு, அதன் மேல் 250 மி.லி. நல்லெண்ணெய்யைச் சிறிது சிறிதாகத் திரி அணையாத வண்ணம் இட்டுக் கொண்டே வர சுடர் சுடராகக் கீழே உள்ள கோப்பையில் விழும். இந்த எண்ணெய்யைப் பிடறியிலும், கழுத்திலும் தேய்த்துக் குளித்தால், கடும் தலைவலியும் நீங்கும். பிடறி, முதுகுப் புறங்களில் தேய்த்து 1 - 2 மணி நேரம் கழித்துத் துடைத்து விட கழுத்து நரம்புவலி, தோள்வலி, முதுகுநரம்பு வலி நீங்கும்.
 ஏலக்காயை (5 -6) 150 மி.லி. தண்ணீரில் கொதிக்கவிட்டு, 30 மிலி ஆகவற்றியதும் வடிகட்டி, 5 கிராம் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட, தலைசுற்றல் மயக்கம் நீங்கும்.
 லேசாக வறுத்த ஓமத்தைத் தூளாக்கிப் பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட, குடற்புழு வெளியாகி சீரண உறுப்புகள் சுறுசுறுப்புடன் இயங்கும். ஓமத்தைப் பொடித்து வெந்நீரில் போட்டு மூடிவைத்துச் சிறிது இந்துப்புடன் சாப்பிட, வயிற்று வாயுத்தடை வலி நீங்கும்.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com