வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

இப்படியும் சிலர்!

By மனோரஞ்சிதம் சு.பாபு| DIN | Published: 08th September 2019 10:15 AM

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை
தீதும் நன்றும் பிறர்தர வாராது என்பார்கள். ஆனால் வந்துவிட்டது. சும்மா இருப்பவனையும் தேடி ஒரு பிரச்னை வரக்கூடும் என நான் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. பல திரைப்படங்களில் பார்த்து, நமக்கே சலித்துப் போன பிரச்னை போல இருந்தாலும், நிஜத்தில் நேருக்குநேர் சந்திக்கும்போது புதியதாகவும், பயமாகவும் இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல், பாவமும் பழியும் எங்கிருந்து வருகின்றன எனத் தெரியவில்லை. ஒருவேளை, "பட்டாம்பூச்சித் தியரி' என்கிறார்களே, அதைப் போல எங்கோ, என்றோ, என்னவோ நிகழ்ந்து, படிப்படியாய் வளர்ந்து பிரச்னையாகி, இன்று என் முன்னால் வந்து நிற்கிறதா? 
எப்போதும் அந்த கடைவீதியில் கூட்டம் "நசநச'வென இருந்து கொண்டேயிருக்கும். எல்லாரும் அங்கே பொருட்களை வாங்குவதற்காக வருகிறார்களா அல்லது அந்த பகுதியைக் கடந்து போகிறார்களா என யாரையாவது கேட்டால், இரண்டுமே என்பார்கள். காரணம், பழைய பேருந்து நிலையத்திற்கு போகும் வழிகளில் அதுவும் ஒன்று. அது ஒரு வழிப்பாதை தான் என்றாலும், எதிரெதிரே வரும் வாகனங்களால் வழியடைத்துக் கொண்டு, எப்போதும் திணறிக் கொண்டிருக்கும். போதாக்குறைக்கு, சாலையின் இருபக்கமும் கடைகளைப் பெரியதும் சிறியதுமாக விரித்து, ஆக்கிரமிப்பு செய்திருக்கும் சில்லரை வியாபாரிகள், எந்நேரமும் கூவிக்கூவி மக்களை அழைத்துக் கொண்டிருக்கும் இரைச்சலான இடம் அது.
அங்கே இருக்கும் மிகப் பழைய கட்டடத்தில்தான் என் புதிய அலுவலகத்தைத் தொடங்கியிருந்தேன். அச்சகங்களுக்கு கணினியில் விளம்பர வடிவமைப்பு செய்து தருவதுதான் என் வேலை. அங்கே போய் சில மாதங்கள்தாம் ஆகின்றன. அக்கம் பக்கம் நன்றாகப் பழக்கமாகி விட்டார்கள். இதுவரையில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், பிரச்னையே இல்லை என நானும் நிம்மதியாக இருக்க முடியாது போலிருக்கிறதே. 
நான் அன்று வழக்கம் போல, முற்பகல் சுமார் பன்னிரண்டு மணிக்கு தேநீர் குடிக்க, மாடியிலிருந்து இறங்கி கடைவீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். தேநீர் கடைக்கு சிறிது தூரமாகப் போகவேண்டும். அதிக வெயில் காரணமாக சாலையோரக் கடைகள் கொஞ்சம் குறைந்திருந்தன. ஆனாலும் கூவி அழைக்கும் வணிகக் குரல்களுக்கு குறைவில்லை.
அந்த கலவையான இரைச்சலிலும் கூட, ஒரு பெண்ணுடைய குரல் "அண்ணா' என்று கூப்பிடுவது தனியாகக் கேட்டது. இந்த ஊரில் யாராக இருந்தாலும், யாரையும் வயது பாராமல் மரியாதையோடு "அண்ணா, அக்கா' என்று கூப்பிடுவதுதான் வழக்கம்.
யாரோ யாரையோ அழைத்தாலும் யாருமே திரும்பிப் பார்க்கத்தான் செய்வார்கள். யாருக்குமே இயல்பான செயல்தானே அது? இரண்டாவது முறையாக அந்த குரல் இன்னும் சத்தமாகக் கூப்பிட்டதால், நானும் திரும்பிப் பார்த்தேன். "என்னையா? யாராயிருக்கும்?' என கண்களால் தேடினேன். சாலையோரம் சின்னதாக சோளக்கதிர் கடைவிரித்து அமர்ந்திருந்த பெண்மணி என்னைப் பார்த்து, வருமாறு கையால் சைகை காட்டியதால், அழைக்கப்படுவது நான்தான் என்பதை அறிந்து கொண்டேன். 
என்னை அழைத்த பெண்மணிக்கு அறுபதைக் கடந்த வயதிருக்கும். முக்கால் நரையோடு, ஒல்லியாகவும் இல்லாமல், செழிப்பாகவும் இல்லாமல், திடமான கிராமத்து தோற்றம். கண்களில் கூரான பார்வை. என் வயதோடு ஒப்பிடும் போது அந்தம்மா தான் எனக்கு அக்கா மாதிரி. அதுவும் பெரியக்கா. 
அந்தம்மா வியப்பான விழிகளோடு, வெற்றிலைக்கறைப் பல்வரிசையுடன் என்னை பார்த்துச் சிரித்தார். நன்றாகப் பழகியவர்கள் ரொம்ப நாள் கழித்து சந்திக்கும் போது, எப்படி உரிமையோடு சிரிப்பார்களோ, அப்படி நெருக்கமாக இருந்தது அந்தச் சிரிப்பு. 
"ஆனால், பழகிய முகமாக இல்லையே. யாராயிருக்கும்?' என எனக்குள் தடுமாற்றம். சாதாரணமாக இங்கே ஒருவரைச் சந்தித்து விட்டு, அடுத்த நாள் வேறிடத்தில் அவரையே மீண்டும் பார்த்தால் திருதிருவென விழிப்பவன் நான். சிலபேர் என்றைக்கும் மறக்காமல் முகங்களை நினைவில் வைத்திருக்கிறார்களே, அது எப்படி? எனக்கு வியப்புதான். ஒருவேளை வெண்டைக்காய், வல்லாரை, சுரைக்காய் சாப்பிட்டால் எனக்கும் அது சித்திக்குமா எனத் தெரியவில்லை. எதுவானாலும் நமக்குள் என்ன இருக்கிறதோ அதுதானே நம் இயல்பு. 
இருந்தாலும் இப்படி முகமலர்ச்சியான சிரிப்புடனும், நேச பாவனையுடனும், மிகவும் உரிமையோடு அழைத்தால், யாராயிருந்தாலும் பதிலுக்குச் சிரிக்காமலோ, குறைந்தபட்சம் ஒரு மரியாதை நிமித்தமாவது அருகில் சென்று, ""நீங்க... யாருன்னு நினைவில்லையே...''" என்று அசடு வழிய விசாரிக்காமலோ கடந்து செல்லவே முடியாது. நான் மட்டும் என்ன செய்துவிட முடியும்? 
யோசனையுடன் நானும் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு கடை அருகில் சென்றேன். அந்தம்மாவை விசாரிக்கலாமா வேண்டாமா என தயங்கிய நேரத்தில் அவரே முந்திக்கொண்டு என்னை விசாரித்தார்.
""ஏண்ணா, நீ உடையாப்பட்டியில தானே இருக்கே? நல்லாயிருக்கியா? எங்க இந்தப் பக்கம்?''" என்று கேட்டதால் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 
உடையாப்பட்டியா? அங்கே சில வேலைகளுக்காக ஓரிரு முறை போயிருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி வெளியூருக்குப் போகிற வழியில் அது ஒரு பேருந்து நிறுத்தம் என்பது தெரியும். அங்கு என்னை எப்படிப் பார்த்திருக்க முடியும்? ஒருவேளை தூரத்துச் சொந்தமா? நான்தான் மறந்து விட்டேனா? எப்படிப் பார்த்தாலும் நம்ம ஆளுங்க சாயலோ சாடையோ தெரியவில்லையே. நானும் யோசனையுடன் சிரித்தபடி, "இல்லைங்களே, நான் சின்னத்திருப்பதியில இருக்கேன்''" என்றேன்.
அதற்கு எதிர்வினையாக அந்தம்மாவிடமிருந்து நீலாம்பரித்தனமான சிரிப்பை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. என் பதிலை அவர் நம்பவில்லை என்பதை அந்த சிரிப்பே காட்டியது. " 
"இல்லையில்லை, நீ உடையாப்பட்டிதான்னு எனக்கு நல்லாத் தெரியும். என் வீட்டுக்கு நீ எத்தனை முறை வந்து போயிருக்கே எனக்குத் தெரியாதா? இப்ப எதுக்காக நீ பொய் சொல்றே?'' என்றார் என்னை கூர்மையாகப் பார்த்தபடி.
நான் திகைத்தேன். பொய்யா? அந்தம்மாவின் வீடு எங்கே இருக்கு? எப்போ போனேன், வந்தேன்? எதுக்காக? எத்தனை முறை? என்று என் நினைவுத்தரவுகளைத் துழாவிப் பார்த்தேன். துப்பு ஏதும் கிடைக்கவில்லை.
இப்போது அந்தம்மாவின் முகத்தில் சிரிப்பெல்லாம் வடிந்து, விசாரணை தொனி படிந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை. சிறந்த புலன் ஆய்வாளரைப் போல என் முகத்தையே ஆழமாக உற்றுப் பார்த்தபடி இருந்தார். அதனால் எனக்குள் இனம் புரியாத பயம் கலந்த எச்சரிக்கை உணர்வு மேலோங்கியது. " சில நேரங்களில் சில இடங்களை விட்டு அகன்று விடுவதே அறிவான செயலாகும்' என என் தாயார் சொன்னது நினைவுக்கு வந்து போனது. 
"இல்லேம்மா, நீங்க யாரையோ நினைச்சி, நான்தான்அவருன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசறீங்கன்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடி உங்களைப் பார்த்ததாகக்கூட எனக்கு ஞாபகமில்லை. சரியா யோசனைப் பண்ணிப் பாருங்கம்மா''" என சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு வெகு இயல்பாக அந்த இடத்திலிருந்து கழன்று வந்து விட்டேன்.
நான் தேநீர் கடைக்கு போய்விட்டு திரும்பும் போதும்கூட எனக்கு ஒரே யோசனையாகவே இருந்தது. ஓர் ஆளை ஒருவருக்கு அடையாளம் தெரியாவிட்டால் என்ன? தன்னை இன்னார் என மறு அறிமுகம் செய்துக் கொள்வதால் என்ன குறைந்து விடும்? அந்த அடிப்படை நாகரிகம் எப்போது இவர்களுக்கு வரும்?
ஒருவேளை என்னைப் போல எவனாவது இருப்பானோ? என்னையே அச்சில் வார்த்தது போல யாராவது நிஜத்தில் இருக்கலாமோ, அதுவும் இதே ஊரில்? ஒரே மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பதாக சொல்வார்கள். அது எல்லாம் உண்மைதானா? ச்சேச்சே, அதற்கு வாய்ப்பே இல்லை. அந்தம்மாதான் அடையாளக் குழப்பத்தில் இருக்கிறார் என நினைக்கிறேன். 
நம் திரைப்படங்களில் தோன்றும் இரட்டை வேடங்களை நான் எப்போதுமே கிண்டல் செய்து கொண்டிருப்பேன். அதில் வரும் குழப்பங்கள் எல்லாம் எனக்கு அபத்தமாய் தெரியும். ஆனால் இப்போது? 
எனக்கு ஒருவரைத் தெரியும். தினமும் செய்தித்தாள்களை வீடு வீடாகப் போடுகிறார். அவரை பார்த்தால், என் நெருங்கிய நண்பரின் சாயலில் அப்படியே இருப்பார். அருகில் சென்று பார்த்தால் தான் ஆறு முதல் அறுபது வேறுபாடுகள் வரை தெரியும். 
என் அலுவலகத்திற்கு நான் வரும் போது, அந்த சாலை முனையிலிருந்து அருகில் வரும் வரை, அந்தம்மா வைத்த கண் வாங்காமல் என்னையே மிக உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார். நான் அதை தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. இருந்தாலும் இயல்பான ஒருவித மன உந்துதலால் கடை பக்கம் பார்க்க நேரிட்டது. நான் பார்த்ததை அந்தம்மாவும் கவனித்து விட்டார். மீண்டும் பிடித்துக் கொண்டார். "
"ஏண்ணா, இங்க வா...''" என மறுபடியும் அழைத்தார். நான் தயக்கத்துடன் கடை அருகில் போனேன்.
"ஏண்ணா, என்னை இதுக்கு முன்னாடி நீ பார்த்ததே கிடையாதா? என்னை யாருன்னே உனக்குத் தெரியாதா?''" என நக்கலான குரலில், வம்பு இழுக்கும் தோரணையில் கேட்டதால், எனக்குள் கோபம் எட்டிப் பார்த்தது. மரியாதையும் குறைந்து போனது.
"அட, என்னம்மா, நல்லா யோசனைப் பண்ணி பாரும்மா. நீ நினைச்சிக்கிட்டிருக்கிற ஆள் நான் இல்லே. சும்மா போறப்ப வர்றப்ப எல்லாம் தொந்தரவு பண்ணாதே. அப்புறம் நல்லாயிருக்காது... சொல்லிட்டேன்''" என்றேன் எரிச்சலுடன்.
"நான் என்னாத்துக்கு உன்னை தொந்தரவு பண்றேன்''" என்று அந்தம்மா யோசனையோடு சிரித்தபடி, சமாதானமாகச் சொன்னதால் எனக்குள் நிம்மதி வந்தது. அந்த நிம்மதி ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை. அவர் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொண்டார். அது வெள்ளைக்கொடி சிரிப்பு இல்லை என பிறகு புரிந்தது.
"இல்லையில்லை, எனக்கு நல்லாவே தெரியும். நீ உடையாப்பட்டிதான்''" என மிகவும் அழுத்தமாக, உறுதியான குரலில், சத்தமாகச் சொன்னதால் என் கோபம் வீங்கியது. என்னால் பொது இடத்தில் கோபத்தைக் காட்ட முடியவில்லை. அதுவும் வயதான ஒரு பெண்ணிடம் கோபத்தைக் காட்டினால் பார்ப்பவர்கள் என்னை நிச்சயம் வாழ்த்தமாட்டார்கள். 
ஒருவன் சொல்கிறானே, ஒருவேளை அது உண்மையாக இருக்குமா? இல்லையா? என கொஞ்சம் கூட யோசிக்காமல், அந்தம்மா பிடிவாதமாய் பேசுவதைக் கேட்டால் எனக்கு கோபம் தான் வருகிறது. "நான் உடையாப்பட்டியில் இருந்தால் என்ன? உடைந்த பெட்டியில் இருந்தால் என்ன?' 
என் கோபத்தை வெளியே காட்டாமல், ""நான் எங்கேயோ இருந்துட்டுப் போறேன். அதுல உனக்கு என்னம்மா பிரச்னை?'' எனக் கேட்டேன் . 
அந்தம்மாவும் இந்த கேள்விக்காகவே தான் காத்திருந்தது போல தெரிந்தது. " 
"ஆங்.. ஞாபகமில்லீயா? சோளக்கதிரை வாங்கி தரேன்னுட்டு ஐநூறு ரூபா அட்வான்சு வாங்கிட்டுப் போனீயே, மறந்துட்டியா? நீ மாசக்கணக்கா வராம போனா நான் மறந்துடுவேனா? பேண்டு சொக்காவ கலர்கலரா மாத்திக்கிட்டு போனா எனக்கு தெரியாதா?'' என்றதும், மின்சாரம் தாக்கியது போல எனக்குள் தூக்கிவாரிப் போட்டது. வெயிலில் எனக்கு இன்னும் அதிகமாகவே வியர்த்தது. 
இது என்ன புதுக்கதையா இருக்கே? யார் மீதோ விழவேண்டிய பழி, என் மேலேயா சுமத்தப்பட வேண்டும்? அதுவும் ஒரு பெண் சொன்னால் உடனே நம்பி விடும் இந்த சமுதாயத்தில்? இது பைத்தியமாய் இருக்குமோ? பதிலுக்கு நான் எதிர்த்து பேசாமல் அலட்சியமாக இருந்தால் அது என் தரப்பை பலவீனமாக்கி விடும் என்பதை உணர்ந்து விழிப்பானேன். 
ஒருவேளை, என்னை முந்திக்கொண்டு முதலில் அந்தம்மா சத்தம் போட்டு பேசிவிட்டால், பிறகு எல்லாருடைய பார்வையிலும் நான் தப்பான ஆளாகத்தான் தெரிவேன். யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடும் எளிதான மக்களாயிற்றே நம் மக்கள். போயும், போயும் ஒரு கிழவியை ஏமாற்றி பணம் பறித்தவன் என்ற பிம்பம் எல்லோர் மனதிலும் படிந்து விடும். பிறகு அதை அழிப்பது என்பது ஆகாத வேலை. அதனால் இங்கே யோசிப்பதை விட அதிரடியாக செயல்படுவதே அவசியத் தேவை என என் உள்மனம் எச்சரித்தது. எனவே இந்த விசயத்துக்கு மென்மையான அணுகுமுறை எடுபடாது எனத் தீர்மானித்தேன்.
சுதாரித்து, "" நீ யாருகிட்ட பணத்தை குடுத்தியோ அங்கே போயி கேளு. ஆள் தெரியாம என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டிருக்கே. என்னைப் பத்தி உன் மனசில என்ன நினைச்சிட்டிருக்கே? இந்த ஏரியாவுல கேட்டுப்பாரு... என்னைப் பத்தி சொல்வாங்க. போ, போ, உன் ஊருக்குள்ள போயி நல்லா விசாரிச்சு பாரு, போம்மா, யாருகிட்ட வந்து பேசறே நீ?''" என்று கோபத்தையும், அதனால் ஏற்பட்ட உதறலையும் வெளிக்காட்டாமல் பேசிவிட்டு விடுவிடுவென என் அலுவலகத்திற்கு வந்து விட்டேன். 
பக்கத்து அலுவலக நண்பரிடம் இதை சொன்னேன். அவர் ஆர்வத்துடன் கேட்டுவிட்டு, "அட பணமா சார் முக்கியம். போனாப்போவுது, ஐநூறுறை ஆயிரமாக் குடுத்துட வேண்டியதுதானே'' என்றார் சிரித்தபடி.
எனக்கு வேதனை, அவருக்கு நகைச்சுவை. எருது புண் காக்கைக்குத் தெரியாது என்பார்களே. நானும் வேண்டாவெறுப்பாய் லேசாகச் சிரித்து விட்டுவந்தேன்.
இதை உடனடியாக சரிசெய்ய வேண்டுமே என்ற எண்ணத்தோடு எனக்கு தெரிந்த ஒரு நண்பரைத் தேடிப் போனேன். அவரிடம் சொன்னேன். எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்டார். பிறகு பெரிய நகைச்சுவை காட்சியைக் கேட்டதைப் போல, தவணை முறையில் சத்தம் போட்டுச் சிரித்தார். பிறகு அவருடைய விசயத்துக்குத் தாவி விட்டார். துன்பம் வரும் வேளையில் யாரை சிரிக்கச் சொன்னார் வள்ளுவர் எனத் தெரியவில்லை. எனக்கு மறுபடியும் ஏமாற்றமாக இருந்தது. 
எதற்காக இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கிக் கொண்டு? அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால் அதுவே நீர்த்துப் போகும் என நினைத்திருந்த சமயத்தில், இன்னொரு நாள், நான் தேநீர் கடையிலிருந்து திரும்பி வரும்போது அந்தம்மாவின் அருகில் யாரோ ஓர் ஆள் அமர்ந்திருக்க, குற்றம் சாட்டும் முகத்தோடு, அவனிடம் என்னை சுட்டிக்காட்டியபடி ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். அந்த ஆள் அதை கேட்டவாறு பகைமுகத்துடன், சிவப்பேறிய கண்களால் என்னை அழுத்தமாகப் பார்த்தபடி இருந்தான். 
அப்புறம், பூண்டு விற்கிற அந்த பெண், ""உங்கள பாத்தா அப்படி தெரியலேண்ணா. அந்த கெழவியும் பாவம்தான். அப்படி எதாச்சும் இருந்தா குடுத்துட்டு போங்கண்ணா''" என்கிறாள். 
அந்த மாதுளம் பழக்காரி, "அந்த கிழவி சரியான லூசுண்ணா. இன்னிக்கு காசை குடுத்துட்டு நாளைக்கே கேப்பா. நல்ல மனுசனுங்க யாரும் அவ கிட்ட யாவாரம் பண்ண முடியாது. பேசாம, அந்த காசை, அவ மூஞ்சியில தூக்கி எறிஞ்சிட்டுப் போங்க''" என்கிறாள். 
இவர்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தால் எப்படித்தான் தோன்றுமோ? அந்தம்மா இந்த விசயத்தை இன்னும் எத்தனை பேரிடம் ஒப்பாரி வைத்திருக்கிறதோ? தெரியவில்லை. ஆனால், இப்படியே விட்டால், என் மானம், மரியாதையை கெடுத்துவிடும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. இதற்கு ஒரு முடிவுகட்டியே தீர வேண்டிய மனநிலைக்குத் தள்ளப்பட்டேன். அதற்கு என்ன செய்யலாம் என தீவிரமாக யோசித்தேன்.
இன்னொரு நண்பர் நினைவுக்கு வரவும் கொஞ்சம் தெம்பானேன். என் அலுவலகத்தின் பக்கத்து தெருவில் கடை வைத்திருக்கிறார். எனக்கு இருபது வருடங்களாகப் பழக்கம். கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவர். எதையும் அதிரடியாக உரக்க பேசக் கூடியவர். தானுண்டு தன் வேலையுண்டு என்றுதான் இருப்பார். வம்பு தேடி வந்தால் விடமாட்டார். கடைசிவரை அதுவா, அவரா எனப் பார்த்து விடுவார். அங்கிருக்கும் அடாவடித்தனமானத் தறுதலைகள், ஆட்டோ நிறுத்த ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் பலருக்கும் அவரை நன்றாகத் தெரியும். அவரிடம் மரியாதையாகவும், உரிமையாகவும் பழகுவார்கள். இந்த பிரச்னைக்கு அவர்தான் சரி என மனதுக்குப் பட்டது. 
அவருடைய கடைக்குச் சென்றேன். அவர் இல்லை. அவரோடு அலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். வெளிவேலையாக தூரத்தில் இருப்பதால் மாலை வந்து பார்ப்பதாகச் சொன்னார். "செத்தாள் கிழவி' என்று நினைக்கும் போதே எனக்குள் சிரிப்பு வந்தது. நம்பிக்கையோடு என் அலுவலகத்திற்கு வந்து விட்டேன். என்னுடைய வேலைகள் எல்லாம் அப்படியே கிடந்தன. செய்து முடிப்பதற்கு மனம் தான் அமைதியாக இல்லை.
மாலை நண்பரும் சொன்னபடியே வந்து விட்டார். மீண்டும் ஒருமுறை நடந்தவற்றைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டார். என்னுடன் புறப்பட்டு 
வந்தார். 
(அடுத்த இதழில்)

"சு.பாபுவுக்குச் சொந்த ஊர் வேலூர். தற்போது சேலத்தில் வசிக்கும் இவர் விழுப்புரம் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல், இளங்கலை உளவியல் மற்றும் முதுகலை சமுகவியல் படித்திருக்கிறார். கல்லூரிகளில் அனிமேட்டராக, டிசைனராக இருந்த இவர், தற்போது சொந்தமாக சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 2006 கல்கி சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது."

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புரிதல்
 

 எளியமுறை... சிறந்த பயன்!
 

சிரி... சிரி... 

திரைக்கதிர்
 

மைக்ரோ கதை