22 செப்டம்பர் 2019

ரத்தமும் சதையுமாக

DIN | Published: 19th May 2019 01:09 PM

கல்லூரியில் இருந்து வந்ததும் அம்மாவைத் தேடினேன். சத்தம் போட்டு அழைக்க, "உஷ்' அப்பா என்று ஜாடை காட்டினார். அப்பா பூஜையறையில் அமைதியாக அமர்ந்து இருந்தார். அங்கு எல்லா கடவுள் படங்கள் இருந்தாலும், அப்பா, இள வயதில் இறந்து போன எங்கள் அத்தையின் ஆளுயுர போட்டோ முன்புதான் பிரார்த்தனை பண்ணுவார். அப்பா இந்த ஏரியாவில் ஆஸ்பத்திரி ஒன்றை நிறுவி மிக குறைந்த செலவில் வைத்தியம் பார்த்து வருகிறார். ஆஸ்பத்திரி, இறந்து போன அத்தை பெயரால் "இந்திரா நினைவு மருத்துமனை' என்றே இயங்குகிறது. நான் மருத்துவம் முடித்து மாஸ்டர் ஆஃப் சர்ஜன் படித்து வருகிறேன்.
தாத்தா, பாட்டி சில வருடங்களுக்கு முன்பு தான் அடுத்தடுத்து இறந்து போனார்கள். அப்பாவோட தங்கை இந்திரா இருபதாவது வயதில் உடம்பில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், காரணம் என்னவென்று யாருக்குமே தெரியாமல் போய் விட்டது என கூறுவார்கள். ஒரே மகளின் கோர சாவின் சோகத்தில் தாத்தா பாட்டியும் முடங்கி விட்டார்களாம். நானும் அம்மாவிடம் அடிக்கடி கேட்பேன், "தற்கொலைக்கு என்ன காரணமாக இருக்கலாம்' என்று.
"அப்பா இதுவரை என்னிடம் எதுவும் சொன்னதில்லை. நானும் உங்கள் அத்தையை பார்த்தது இல்லை. அவர் இறந்து இரண்டு வருடங்கள் கழித்துதான் எங்கள் கல்யாணம் நடந்தது'' என்பார்.
அப்பா- டாக்டர் சவுந்தரபாண்டியன் - வீட்டில் மிகவும் அமைதியாக இருப்பார். யாருடனும் அதிகம் பேசமாட்டார். சில நேரம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி வீட்டுக்குள்ளேயே சிகரெட் புகைக்க ஆரம்பித்து விடுவார். அன்று வழக்கம் போல் ஆஸ்பத்திரி இயங்கிக் கொண்டிருந்தது. தலைமை நர்ஸ் வேகமாக ஓடி வந்து, "டாக்டர்... நீங்கள் பூஜை அறைக்குள் வராமல் நேராக கேபினுக்குள் வந்து விட்டீர்கள்... நாங்கள் உங்களுக்காக அங்கே காத்துக்கொண்டிருந்தோம்'' என்றார்.
" ஓ ...அப்படியா'' என்று பூஜை அறைக்குச் சென்று திரும்பினார்.
" நான் ஏன் இப்படி ஆகிவிட்டேன். என்னவாயிற்று எனக்கு? எப்படி மறந்தேன். இந்திரா... அண்ணனை மன்னித்து விடு. இந்த இருபத்தைந்து வருடம் உன்னிடம் தினமும் மன்னிப்புக் கேட்கிறேன். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உன்னுடைய அந்த மரண ஓலம் இன்றும் என் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அன்று நம் அப்பா அம்மா வீட்டில் இல்லை, ஒரு வேளை அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் இருந்து இருந்தால் நீ பிழைத்து இருக்கலாமோ! வேண்டாம் இந்திரா அந்த நிலையில் நீ மரணத்தை தான் தழுவி இருக்க வேண்டும். நான் எடுத்த முடிவு சரியானதுதான் என்று எனக்குத் தெரியும். ஆனால் உன்னால் அந்த மரண வேதனையில் நீ எதையும் புரிந்து இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அந்த கண நேரத்தில் நான் உனக்கு ஒரு கொடுங்கோலனாகத் தான் தெரிந்து இருப்பேன்''
இன்று அத்தை இந்திராவின் பிறந்த நாள். அப்பா இன்னும் வரவில்லை. எனக்குள் பல ஆச்சரியங்கள். அப்பாவுக்கு நான்கு வயது இருக்கும் போதுதான் அத்தை பிறந்தாராம். தாத்தா பாட்டியிடம், அப்பா பேசும்போது, அத்தையோட விளையாட்டு சாமான்கள், அவரோட ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் என்ன கலர் டிரஸ் எடுத்தது வரை அப்பா ஞாபகப்படுத்தி சொல்வாராம். ஆனால் பாட்டியோ தனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை என்றும், உன்னால் எப்படி ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது என்றும் கேட்பாராம். அந்த வீட்டின் ஒவ்வொன்றையும் அத்தை நினைவுகளைத் தொடர்புபடுத்தி எல்லாவற்றையும் சொல்லுவாராம். ஏன், அத்தையின் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மார்க்குகள் கூட தாத்தா பாட்டியிடம் சொல்லுவாராம். அப்படிப்பட்ட தங்கையை இழந்து தவிக்கும் அவரோட துயரத்தை நாங்கள் எல்லோரும் உணர்ந்தே இருக்கிறோம். அப்பா வந்த உடன் பூஜையைத் தொடங்கினார். பின்பு "என்னிடம் இன்று மாலை கிளினிக் செல்லமாட்டேன். நீ சீக்கிரம் சென்று விடு'' என்று சொல்லிவிட்டு தனியாக அமர்ந்து கொண்டார்.
"இந்திரா, எத்தனை வருடம் ஆகிவிட்டது. அன்று ஏன் நீ அப்படி செய்தாய். நான் ஏன் அப்படி உன்னிடம் நடந்து கொண்டேன். அப்பொழுது நீ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாய். நானோ தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஆக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்தேன்.
"அண்ணா...அப்பா அம்மா வீட்டில் இல்லை. மூன்று மணிக்குத்தான் வருவாங்க. உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்''
" சொல்லுப்பா'' என்றேன்.
"என்னைத் திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது. அப்பா அம்மாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை அமைத்துக் கொடுக்கணும்'' என்று சொன்னாய்.
"எங்கள் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் ஒருவரை நான் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுடைய படிப்பு முடியும்வரை காத்திருந்து பின்பு ஊரறிய சொல்லிக் கொள்ளலாம் என நினைக்கிறோம்'' என்று கூறினாய். எனக்குள் ஆத்திரம் தலைக்குள் ஏறியது. ஆனால், அமைதியாக நான் உனக்கு அறிவுரை சொன்னேன்.
"இதெல்லாம் சரிப்பட்டுவராது. கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இரு'' என்றேன். நீ மிரட்சியாக என்னைப் பார்த்தாய்.
"சரி நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். உன் நண்பர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?'' என்று கேட்டேன்.
"இல்லை அண்ணா... யாருக்கும் தெரியாது'' என்றாய்.
""நாங்கள் ஒரு உந்துதலில் மாலை மாற்றிக்கொண்டோம். அவர்கள் வழக்கப்படி எனக்கு மோதிரம் அணிவித்தார்''
" வேண்டாம் இந்திரா... இதெல்லாம் நம் குடும்பத்துக்கு ஒத்துவராது'' என்றேன்.
"என்ன அண்ணா... நீயே இப்படி சொல்கிறாய்? நீ படித்தவன். இன்றைய நாகரீக உலகில் வாழ்பவன் என நினைத்து தான் முதலில் உன்னிடம் சொல்கிறேன். நீயே என்னைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் நம் அப்பா அம்மாவுக்கு எப்படி புரிய வைப்பேன். அவர்கள் எப்படி எங்களை ஏற்றுக்கொள்வார்கள். அண்ணா எனக்காக ப்ளீஸ்....ப்ளீஸ்....''
"இல்லை இந்திரா, இது ஒரு பொம்மைக் கல்யாணம். இதை விட்டு நீ வெளியே வர வேண்டும். உன் அழகுக்கு என்னுடன் படிக்கும் மருத்துவ மாணவர்கள், அதுவும் நம் ஜாதியிலேயே உன்னுடைய திருமணம் என்று நாங்கள் எல்லோரும் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் இப்ப வந்து நீ இப்படி சொல்கிறாய்.''
சிறிது நேரம் அமைதி. நீ எதுவும் பேசவில்லை. என்னைப் பார்த்து சிரிக்க முயன்றாய்.
அவளுக்குப் புரிந்ததா, இல்லை புரிந்தது மாதிரி நடிக்கிறாளா, அல்லது நான் சொல்வது சரியென்று விலகி வந்து விடுவாளா என்று அவள் முகத்தைப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. மிகவும் இயல்பாகவே அவள் எனக்குத் தெரிந்தாள்.
"சரி அண்ணா! ஒரு விஷயம் எனக்காகச் செய்வியா? நான் ஒரு முடிவுக்கு வரும் வரை நான் சொன்னதை அப்பா அம்மாவுக்கு நீ சொல்லக்கூடாது. விதி எதுவோ அதுபடி நடக்கட்டும். இப்ப நீ சாப்பிட வா'' என்றாள். மெளனமாகவே டைனிங் டேபிளில் நேரம் கழிந்தது.
"அண்ணா'' என்று மெதுவாக என்னை அழைத்தாள்." சொல்லுப்பா'' என்றேன்.
"நீ ஆரம்பிக்கப் போகும் ஆஸ்பத்திரிக்கு என்ன பெயர் வைக்கப்போகிறாய்?'' என்று கேட்டாள். சூழ்நிலையை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறாள் என்று புரிந்து கொண்டேன்.
வெளியே கிளம்பினேன்.
"அண்ணா, அம்மா ஒரு சாவி எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். ஒரு வேளை நான் தூங்கிடுவேன், அதனாலே நீ வெளியே பூட்டிக்கொண்டு போயிடு'' என்றாள்.
"வேண்டாம் இந்திரா, அம்மா வரும் வரை காத்துக்கிட்டு இருக்கிறேன்'' என்றேன்.
"என்ன அண்ணா? என் மீது பயமா? ஓடிப் போயிடுவேன்னு நினைக்கிறாயா?''ன்னு சிரித்துக்கொண்டே கேட்டாள்.
"நீ அப்படி செய்ய மாட்டாய். உன்னை நம்புகிறேன்'' சிறிது யோசனைக்குப் பிறகு, "வரேன் இந்திரா'' என்று வெளியே பூட்டிவிட்டுச் சென்று விட்டேன். கொஞ்ச தூரம் சென்று இருப்பேன். வெளியே ஏன் பூட்ட சொன்னாள், சம்திங் ராங், ஏதோ நடந்து விட்டது. வண்டியை வீட்டுக்கு திருப்பினேன். ஐந்து நிமிடத்திற்குள் வீட்டுக்குச் சென்று விடலாம். வண்டியை விரட்டினேன்.
வீட்டை நெருங்கும் போதே இந்திராவின் அலறல் சத்தம். வீட்டிற்குள், இந்திரா உடல் முழுவதும் கெரோசின் ஊற்றி தீ வைத்துக்கொண்டு வலி தாங்க முடியாமல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு இருந்தாள். அவளுடைய மரண ஓலம் என்னை நடுநடுங்க வைத்துவிட்டது.
"அண்ணா என்னை காப்பாத்து, எரிச்சல் தாங்க முடியலையே, ஐயோ! மரணம் இவ்வளவு கொடுமையானது என்று எனக்குத் தெரியவில்லையே''
நான் அங்கு பார்த்த காட்சி மிகவும் கொடுமையானது. தலைமுடி கொத்து கொத்தாக தரையில் விழுந்து கொண்டிருந்தது. சதைப்பிண்டங்கள் அப்படியே தொங்கி விழுந்தது. தீ இன்னும் உடம்பில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
"அண்ணா உள்ளே வா. காப்பாற்று அண்ணா... நீ டாக்டர் தான? சீக்கிரம் வா'' என்று அலறினாள். அவளே தீயை கை கொண்டு அணைக்க அணைக்க உடம்பில் உள்ள சதை அவள் கையிலேயே ஒட்டிக்கொண்டு வந்ததைக் கண்டு மிகவும் பயத்தில் என்னைப் பார்த்து கதற ஆரம்பித்தாள்.
வீட்டுச் சாவியை எடுக்க எத்தனித்தேன். இந்த மாதிரி பாதி எரிந்த உடம்பு ஆஸ்பத்திரியில் நிறையப் பார்த்து விட்டேன். இப்ப அவளுக்கு முதலுதவி செய்தாலும் குற்றுயிரும் குலையுயிருமாக மரண வேதனையை வாரக் கணக்கில் அனுபவிப்பாள். கதவைத் திறக்காமல் அமைதியாக நின்று விட்டேன்.
"என்ன அண்ணா இப்படி செய்கிறாய்? கதவைத்திற. நான் எப்படியாவது பிழைத்துக்கொள்வேன்'' என்று அலறினாள். கட்டியிருந்த தாவணி முழுவதும் எரிந்து முக்கால் நிர்வாணக் கோலத்தில் அவள்.
முகத்தைத் திருப்பிக்கொண்டேன். எனக்குத் தெரியும். அவளை வாழை இலையில் சுருட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு போகணும். உணர்வுகள் இருக்கும். ஊசி கூட போட முடியாது. அவ்வளவு எரிந்து விட்டாள். உடலை தீ ஒவ்வொரு பாகமாக எரித்துக் கொண்டிருக்கிறது. அவள் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போவதைப் பார்க்க எனக்கு தைரியம் இல்லை. "இந்திரா என்னை மன்னித்துவிடு" இன்னும் ஐந்து நிமிடம்தான் நீ உயிரோடு இருக்கப்போகிறாய்' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.
மனதைக் கல்லாக்கிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். வீட்டினுள் இருந்து எந்தவித முனகலும், அலறலும் கேட்கவில்லை. நிசப்தம். கதவைத் திறந்து உள்ளே போனேன். தங்கத் தேவதையான என் தங்கை கரிக்கட்டையாய். சிரமப்பட்டுப் பேசினாள். "அண்ணா! அம்மா அப்பாவிடம் நான் சொன்னதை எதுவும் சொல்ல வேண்டாம். அது இரகசியமாகவே இருக்கட்டும். இது சத்தியம்''
என் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர்த் துளிகள் அவள் உடம்பில் பட"...ஸ்...வலிக்குது'' என்றாள். உயிர் பிரியும் நேரம்.
"அண்ணா தாகமா இருக்கு தண்ணீர் கொடு'' என்றாள். வேகமாக தண்ணீர் எடுக்க ஓடினேன். திரும்பி வந்தேன். உயிர் பிரிந்து விட்டது. "
""போயிட்டியா இந்திரா" மருத்துவ தர்மம் உனக்கு நான் முதலுதவி பண்ணியிருக்கணும். தேவதை போன்ற நீ கருகிக் கொண்டிருப்பதைப் பார்த்த பின்பு எனக்கு மனசு வரவில்லை. நீ அன்று பட்ட வேதனையை அப்பா அம்மா நல்லவேளை பார்க்கவில்லை.
பிண்டமாக உனக்கு காரியம் பண்ணின நொடி முதல், உன் தற்கொலைக்கு கண், காது, மூக்கு வைத்துப் பேசின ஊரின் வாயை அடைக்க நான் விரும்பவில்லை. அவர்கள் ஆசை தீர பேசிக் கொள்ளட்டும் என, விட்டுவிட்டேன். சத்தியம் காத்தேன். உன் ஆத்மா என்னை கண்டிப்பாக மன்னிக்கும் என்ற நம்பிக்கையுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்திரா இன்று உனது பிறந்த நாள். உனக்கு ஞாபகம் இருக்கா, உன்னோட பத்தொன்பதாவது பிறந்த நாளுக்கு நான் உனக்கு கொலுசு ப்ரசென்ட் பண்ணினேன். அண்ணன் வாங்கி கொடுத்த கொலுசு என வீடு முழுவதும் சுற்றி வருவாய். அதிலும் உன் குதிங்காலை வைத்து "டங் டங்'கென்று கொலுசு ஓசை எழுப்பி நான் வந்துவிட்டேன் அண்ணா என்பதை எனக்கு உணர்த்தி சிரித்துகொண்டே என் அருகில் வருவாயே! எதுவும் மறக்கவில்லை. மறக்கவும் மாட்டேன்.
மனைவி கமலா என்னைப் பார்த்து, "என்ன யோசித்துக் கொண்டிருகிறீர்கள்? காபி அடுப்பில் இருக்கு. அடுப்பு சிம்ல தான் இருக்கு. ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிடும். மறந்துடாதீங்க, எடுத்து குடிச்சிடுங்க, நான் வெளிய போய்ட்டு பதினைந்து நிமிடத்தில் வந்துவிடுவேன்'' என்று அவசரமாக வெளியே கிளம்பிட்டாள்.
அன்று உனக்குப் பிடித்த அந்த பழைய பாடல். "கொடியில் இரண்டு மலர் உண்டு'" என்ற அண்ணன் தங்கை பாச பாடலை மனதில் அசை போட்டுக்கொண்டே சிகரெட்டை எடுத்தேன். லைட்டர் ஒர்க் பண்ணவில்லை. கிச்சனுக்குள் நுழைந்து தீப்பெட்டியில் பற்ற வைத்தேன். டமார் என்ற வெடிச்சத்தம். சிலிண்டர் வெடித்து சிதறியது. என் உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஓடி வந்து நெருப்பை அணைக்க முயற்சி செய்தார்கள். என் உடம்பு பாதி எரிந்த நிலையில், வலி தாளாமல் அலறித் துடித்தேன்.
ஓரளவு உணர்வு வரும்பொழுது, ஆஸ்பத்திரியில் உடம்பு முழுவதும் வெள்ளை துணியால் போர்த்தி இருப்பதை உணர்ந்தேன். உடல் முழுக்க தீ எரிச்சல். வலி தாங்காமல் கத்துவேன். கண்கள் மங்கலாக தெரிந்தன. வாய் வழியே உணவு செலுத்திக்கொண்டிருந்தார்கள். மகன் சந்திரனை அழைத்தேன். சத்தம் வரவில்லை. "என்னை ஏன் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள்?'' இவ்வளவு வைத்தியத்தையும் மீறி என் வேதனையைத் தாங்க முடியாமல் அலறுகிறேன். அதோ ஆக்சிஜன் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். "அந்த ஆக்சிசனை நிறுத்தச் சொல்லுங்கள். அதுதான் என் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது. வேகாத சதையில் நரம்பு கண்டுபிடித்து மருந்து ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் பிடுங்கி ஏறிய வேண்டும். ஆனால் கையை கொஞ்சம்கூட அசைக்க முடியவில்லை. உடம்பின் ஒவ்வொரு பகுதியும் எரிகிறதே''
அவ்வப்போது என் மனைவியை அந்த சிறிய கண்ணாடி மூலம் என்னைப் பார்க்க அனுமதிக்கிறார்கள். தலையில் அடித்து பலமாக அழுகிறாள்.
"கமலா உள்ளே வா எரிச்சல் தாங்க முடியவில்லை. என் உடம்பு முழுவதும் ஐஸ் கட்டிகள் கொண்டு வந்து கொட்டு. சந்திரா மேற்கொண்டு எனக்கு வைத்தியம் பார்க்க வேண்டாம். நான் சாகணும். மரண வேதனையை என்னால் அனுபவிக்க முடியவில்லை'' என்று சொல்லத் துடிக்கிறேன். இங்கு வந்து ஆறு நாள் ஆகிவிட்டதாம், ஏன் இந்த நரக வேதனை. என்னை பார்க்கத் துடிக்கும் என் மனைவியை முகத்திரையை போட்டு சில நிமிடங்கள் அனுமதிக்கிறார்கள். என்னை தொடக்கூட முடியாமல் அழுகிறாள். எனக்குப் புரிகிறது, என் உடம்பின் எல்லாப் பாகமும் செயல் இழந்து கொண்டிருக்கிறது. ஏன் இந்த பாழாய் போன இருதயம் மட்டும் துடித்துக்கொண்டிருக்கிறது. பல்ஸ் குறைய வேண்டும். அப்பத்தான் நான் சாக முடியும்.
ஹலோ டாக்டர்ஸ், என்னால் முடியல, இந்த ஒரு வாரமாக நான் சாகத்தான் துடிக்கிறேன். எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள். நான் செத்து விடுகிறேன். என் கண்களால் எல்லாவற்றையும் பார்க்கிறேன். என் உடம்பில் உள்ள துணியை விலக்கிப் பார்த்தால் என் கருகிப்போன உடம்பைப் பார்க்கலாம். வேண்டியதில்லை நான் பார்த்து இருக்கிறேன், என் தங்கை எப்படி இருந்தாளோ அப்படித்தான் நானும் இருக்கலாம்.
இந்திரா! நான் ஏன் உன்னைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை, என்று இப்பத் தெரிகிறதா? நீ பத்து, பதினைந்து நிமிடங்கள் பட்ட வேதனையை நான் வாரக்கணக்கில் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் உன்னைக் காப்பாற்றாத காரணம் இப்ப உன் ஆத்மாவுக்கு புரிந்திருக்கும். உன் அண்ணன் இப்படி வேதனையை அனுபவிப்பதை உன்னால் தாங்க முடிகிறதா சொல்லு? எனக்கு வேண்டியது இந்த வேதனையில் இருந்து உயிர் விடுதலை தான்.
என் மனம் துடிக்கிறது. உடல் எரிகிறது. மனசுக்குள் ஓங்கி கத்தினேன். சத்தம் வரவில்லை. இந்திரா, என் தங்கையே உன்னை அன்று மரண வேதனையில் இருந்து, இப்படி என்னைப்போல் வாரக்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக துடிதுடித்துச் சாக வேண்டாமே என்று கதவைத் திறக்காமல் விட்டுவிட்டேன். அதற்காகவா எனக்கு இந்த தண்டனை? சொல்லு இந்திரா! என்னை காப்பாற்ற வர மாட்டாயா? எனக்கு விடுதலை கொடு. இந்த அண்ணன் மேல் உண்மையான பாசம் வைத்து இருந்தால், நான் அன்று செய்தது சரியென்று உனக்குப்பட்டால், நான் படும் வேதனைக்கு முடிவுகட்டு என்று மனதுக்குள் கதறினேன். வா...உன் அண்ணன் அழைக்கிறேன் வா....
அப்போது அறைக்குள் குதிங்கால் அழுத்த கொலுசு சத்தம், "டங் டங்'கென்று ஒலித்தபடி என் அருகில் வரும் சத்தம் கேட்டது.

ரா.கதிரேசன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புரிதல்
 

 எளியமுறை... சிறந்த பயன்!
 

சிரி... சிரி... 

திரைக்கதிர்
 

மைக்ரோ கதை