ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய்களுக்கெல்லாம் அரசர்!

பாத்திரங்கள், உணவு வகைகள், பானகங்கள் எல்லாம் சுத்தமாக இருந்தாலும் அவற்றில் அழுக்கு, பூச்சிகள், முடி போன்றவை கிடப்பதைப் போல உணர்கிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய்களுக்கெல்லாம் அரசர்!

பாத்திரங்கள், உணவு வகைகள், பானகங்கள் எல்லாம் சுத்தமாக இருந்தாலும் அவற்றில் அழுக்கு, பூச்சிகள், முடி போன்றவை கிடப்பதைப் போல உணர்கிறேன். அதனால் குமட்டல், பசியின்மை, பயங்கரக் கனவுகள், கை கால் குச்சி போல ஆகிவிட்டது என்ற நினைப்பு போன்றவை ஏற்படுகின்றன. எனக்கு என்னவாயிற்று என்று புரியவில்லை.  விளக்க முடியுமா?

-பாஸ்கர், புதுச்சேரி.

"ராஜயக்ஷ்மா' என்று ஒருவகை நோயைப் பற்றிய வர்ணனையில் நீங்கள் குறிப்பிடுவது போன்ற உபாதைகள், அந்நோய் தோன்றுவதற்கு முன் காணப்படும் என்று அஷ்டாங்க ஸங்கிரஹம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. "நோய்களுக்கெல்லாம் அரசர்' என்று ராஜயக்ஷ்மாவிற்கு பதவிளக்கம் கூறலாம்.

மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல், தும்மல்,  அதிகமாக எச்சில் ஊறுதல்,   இனிப்புச் சுவை உணர்தல், செரிமானகேந்திரம் மற்றும் உடல் வலுவிழத்தல், தூயபாத்திரம், உணவு பானங்களில் அழுக்கு படிந்திருப்பதாகவும், பூச்சி, புல், முடி விழுந்துள்ளதாகவும் குறை கூறுதல், குமட்டல், வாந்தி, உணவை உண்ட போதிலும் வலுவின்மை, அடிக்கடி கைகளை உற்று நோக்குதல், கால்வீக்கம், கண்கள் வெளிறுதல், தன் கைகள், உடல் சூம்பிவிட்டதாக சந்தேகமடைதல், பயம், கவலை, பெண்கள் மீது மோகம் அதிகரித்தல், மதுபானம், புலால் உணவுகளில் அதிக விருப்பம், கோபம், தூங்கும் போது தலையைத் துணியால் மூடிக்கொள்ளுதல், நகம், தலைமுடி வேகமாக வளர்தல், வண்ணத்துப் பூச்சி, பாம்பு, குரங்கு, பறவைகள் ஆகியவற்றால் தான் அடிமைப்பட்டு விட்டதாகக் கனவு தோன்றுதல், கனவில் மேலும் தான் முடிக்குவியல், எலும்புகள், உமி, சாம்பல் போன்றவற்றின் மீது நிற்பதாகவும் காலியான கிராமங்கள், வறண்ட நிலங்கள், வறண்டு போன தடாகங்கள், மலைகளின் மீது நெருப்பு கோளங்கள் வீழ்வதைப் போலவும், மரங்கள் தீப்பிடித்து எரிவதைப் போலவும் காண்பர். இவை அனைத்தும் வெகுவிரைவில் "ராஜயக்ஷ்மா' என்ற நோய் ஆரம்பிக்கப்போவதற்கான முன் குறிகளாகும்.

உடலின் மேற்பகுதியில் நோயின் தாக்கம் அதிகரித்தால் - ஜலதோஷம், மூச்சிரைப்பு, இருமல், தோள்பட்டை வலி, தலைவலி, பேசும் போது தொண்டை வலி, ருசியின்மை ஆகியவை ஏற்படும். மலம் இறுகி வெளிப்பட்டால் உடலில் கீழ் பகுதியில் நோயின் தாக்கம் அதிகரிக்கத்திருக்கிறது என்பதை அறியலாம். வாந்தி ஏற்பட்டால் குடல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை  அது உணர்த்துகிறது. தொண்டைவலி, நெஞ்சுவலி, அதிக கொட்டாவி, உடல்வலி, சளிதுப்புதல், செரிமானம் மந்தமடைதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை இந்நோயின் பின் தொடரும் ஆபத்துகளாகும்.

தன் சக்திக்கு மீறிய சாகசம் , இயற்கை உந்துதல்களாகிய மலம், சிறுநீர் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல்,  ஓஜஸ் எனும் தாது சாரம், தாதுக்களின் நெய்ப்பு ஆகியவை குறைதல், உணவு பானகங்களைச் சாப்பிடும் நியமங்களை மதிக்காதிருத்தல் ஆகிய காரணங்களால் இந்த உபாதை ஏற்படக்கூடும்.

நல்ல உடல் வலுவும், அதிக அளவில் உபாதையின் தாக்கமுமிருந்தால், உடலெங்கும் மூலிகைத் தைலம் தடவி, வியர்வை வரவழைத்து, வாந்தி மற்றும் பேதி முறைகளைச் செய்தால், உடல் உட்புற சுத்தம் நன்கு ஏற்படும். அதன் பிறகு உடல் போஷாக்கை ஏற்படுத்த கூடியதும், பசியைத் தூண்டிவிடக் கூடியதுமான ஒரு வருடம் பழமையான அரிசி, கோதுமை, பார்லி, பச்சைப் பயறு போன்றவை எளிதில் செரிக்கும் வகையில் மனதிற்குப் பிடித்த வகையில், வலுவூட்டும் முறையில் சாப்பிட வேண்டும்.

ஆட்டுப்பால், ஆட்டுப்பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய், ஆட்டு மாமிசம் ஆகியவை, இந்த நோய்க்கு சிறப்பானவை என்று ஆயுர்வேதம் உபதேசிக்கிறது.
சுக்கும் தனியாவும் இடித்துப் போட்டுக் காய்ச்சிய வெந்நீரைப் பருகுவதால், உடல் உட்புறக் குழாய்கள் சுத்தமடையும். ஷட்பலக்ருதம் எனும் நெய் மருந்தைப் பயன்படுத்தினால் - குல்மம், காய்ச்சல், வயிறு உப்புசம், மண்ணீரல் உபாதை, சோகை, ஜலதோஷம், இருமல், ஆஸ்த்துமா, பசியின்மை, வீக்கம், ஏப்பம் போன்ற உபாதைகள் குணமடைவதுடன், "ராஜயக்ஷ்மா' நோயில் ஏற்படும் உட்புற குழாய் அழுக்குகள் அனைத்தும் நீங்கும்.

 எள்ளு, உளுந்து மற்றும் அமுக்குராக்கிழங்கை நன்கு பொடித்து தேன் மற்றும் ஆட்டுப்பால் நெய்யுடன் கலந்து சாப்பிட, "ராஜயக்ஷ்மா' சார்ந்த உபாதைகள் அனைத்தும் நன்கு குணமடையும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com