தினமணி கதிர்

சொன்னால் நம்பமாட்டீர்கள்! 18 சின்ன அண்ணாமலை

4th Mar 2019 12:02 PM

ADVERTISEMENT

மாலையில் கூட்டம் துவங்கியது. எல்லோரும் என்னை "நாடோடி' என்று நினைத்தே தவறாகப் பேசினர், அப்படிப் புகழ்ந்து பேசினர். எட்டயபுரம் பாரதி மண்டப நிதிக்கு ரூ.2000/- கொடுத்தார்கள். நிதியைப் பத்திரப்படுத்திக் கொண்டேன். கடைசியில் என் முறை வந்தது. சுமார் ஒரு மணிநேரம் நகைச்சுவை வெள்ளத்தில் கூடியிருந்தவர்களை மிதக்க வைத்து இப்போது சபை என் "கைக்குள்' வந்துவிட்டதை உணர்ந்தேன். நான் இன்னும் நாடோடியாகவே பேசிக்கொண்டிருந்தேன். கடைசியாக சபையோரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். ""நான் இப்போது என் பேச்சை முடிக்க விரும்புகிறேன். முடிக்கும் முன்பு ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். அந்த உண்மையை நீங்கள் கேட்டால் திடுக்கிட்டுப் போவீர்கள். "ஆகா' என்று ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அந்த உண்மையை நான் இலவசமாகச் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் அனைவரும் பாரதி மண்டப நிதிக்கு ஆளுக்கு நான்கணா தருவதாகச் சொன்னால், சொல்கிறேன்'' என்று கூறினேன்.
 "பேஷாகத் தருகிறோம், ஆனால் நீங்கள் சொல்லப் போகும் உண்மை எங்களுக்குத் தெரிந்ததாக இருந்தால் என்ன செய்வது?'' என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.
 "ஒருக்காலும் உங்களுக்குத் தெரிந்திருக்க முடியாது'' என்றேன்.
 "தெரியும்'' என்று பல குரல்கள் கேட்டன.
 "என்ன தெரியும்?'' என்று நான் கேட்டேன்.
 "நீங்கள் நாடோடி அல்ல, சின்ன அண்ணாமலை என்பது தெரியும். இதைத் தவிர வேறு ஏதாவது உண்மை உண்டா?'' என்று கேட்டார்களே பார்க்கலாம். நான் அப்படியே அசந்து போனேன், பின்னர் விசாரித்ததில் கூட்டத்தின் செயலாளருக்கு, ""நாடோடி வர இயலவில்லை, சின்ன அண்ணாமலை வருகிறார்'' என்று கல்கி தந்தி கொடுத்திருக்கிறார் என்று தெரிய வந்தது. அதை வேண்டுமென்றே செயலாளர் மறைத்து விட்டுக் கடைசியில் நான் பேசிக் கொண்டிருக்கும்போது சிலரிடம் பிரஸ்தாபித்திருக்கிறார். அது சபை பூராவும் பரவி விட்டது. ஆக நான் நடித்ததைவிட சபையோர் சிறப்பாக நடித்து விட்டார்கள். ஆயினும் சபையோர் என்னைக் கெüரவிக்கத் தயங்கவில்லை. என் சொற்பொழிவு அவர்களை எல்லாம் மிகவும் கவர்ந்துவிட்டது போலும்.
 சொன்னால் நம்ப மாட்டீர்கள், கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அப்போது தனித்தனியாக வந்து கொடுத்த காசுகளைக் கூட்டிப் பார்த்ததில் ரூ.650/- இருந்தது.
 அன்னையின் பிரிவு
 1945 -ஆம் ஆண்டு சென்னை தியாகராய நகர் நானா ராவ் நாயுடு தெருவில் 6-ஆம் எண் இல்லத்தில் நான் குடியிருந்த சமயம். எனக்கு மிகவும் வேண்டியவர்களான பெங்களூர் சுவாமி அவர்களின் மூத்த புதல்வன் வேலுவிற்குத் திருமணம் செய்யப் பெண் பார்க்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.
 நானும் பல இடங்களில் பெண் பார்த்து, கடைசியில் அடையாறு "ஒளவை இல்லம்' சென்று திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன்.
 திருமதி. முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் என்னிடம் மிகவும் பிரியமுடையவர்கள். அடிக்கடி என்னை ஒளவை இல்லத்திற்கு அழைத்து சொற்பொழிவு ஆற்றும்படி செய்வார்கள்.
 என் நகைச்சுவைப் பேச்சுகளைக் கேட்டு மாணவிகள் கலகலவென்று சிரிப்பதை மிகவும் விரும்புவார்கள். வாழ்க்கையில் துன்பத்தையே கண்ட மேற்படி மாணவிகள் ஒரு மணி நேரம் அம்மாதிரி சிரித்துக் குதூகலமாக இருப்பது திருமதி ரெட்டி அவர்களுக்கு பெருத்த ஆறுதலாக இருந்தது. அதனால் என்னை அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். ஆகவே அவர்கள் எனக்காக சிரத்தை எடுத்து ஒளவை இல்லத்தில் படித்துக் கொண்டிருந்த ஒரு நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள். அதன்பின்னர் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்தார்கள்.
 பரஸ்பரம் சம்மதம் தெரிவித்ததும், என் வீட்டில் மறுநாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்வது என்று முடிவாயிற்று.
 மறுநாள் காலை 11- மணி நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் வந்துவிட்டனர். திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் உட்பட பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.
 நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் எனக்கு ஒரு தந்தி வந்தது. நான் வெளியில் வந்து தந்தியை வாங்கினேன். வாங்கிப் படித்தேன். பலர், " என்ன தந்தி?'' என்று விசாரித்தார்கள். ""நிச்சயதார்த்தத்தை வாழ்த்தி தந்தி வந்திருக்கிறது'' என்று அனைவருக்கும் கூறினேன்.
 நிச்சயதார்த்தம் முடிந்து விருந்து அமர்க்களமாக நடந்தது. எல்லோரையும் முக மலர்ச்சியுடன் திருப்தியாக விசாரித்து விழாவைச் சிறப்பாக முடித்தோம்.
 எனது நெருங்கிய குடும்ப நண்பர்களான பெங்களூர் சுவாமி குடும்பத்தைத் தவிர மற்ற அனைவரும் சென்றுவிட்டனர். அவர்கள் அன்று இரவு இரயிலில் புறப்படுவதாக இருந்தார்கள்.
 நான் அவர்களிடம், "நீங்கள் அனைவரும் இரவு ஊருக்குப் புறப்படுங்கள். நான் இப்போதே காரில் எனது ஊருக்குப் புறப்பட வேண்டியிருக்கிறது'' என்றேன்.
 "ஏன் என்ன, தந்தி வந்த விஷயமாகவா?'' என்றெல்லாம் அவர்கள் கேட்டார்கள்.
 "ஆம். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தந்தி வந்திருக்கிறது'' என்றேன்.
 "சரி, அப்படி என்றால் உடனே புறப்படுங்கள்'' என்று வேகமாக என்னைப் பயணம் செய்ய வைத்தார்கள்.
 "நானும் காரில் புறப்பட்டு சைதாப்பேட்டை தாண்டியதும் "ஓ' வென்று வாய்விட்டுக் கதறி அழுதேன். டிரைவர் பயந்து போய் வண்டியை நிறுத்திவிட்டு "என்ன என்ன'' வென்று கேட்டார். அவரிடம் தந்தியைக் காட்டினேன்.
 சொன்னால் நம்ப மாட்டீர்கள் அந்த தந்தியில் "என் அன்னை இறந்துவிட்டாள். உடனே புறப்படு' என்று இருந்தது.
 "இதை ஏன் அப்போதே சொல்லவில்லை'' என்றார் டிரைவர்.
 "கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் நமது துக்கத்தை வெளிக்காட்டக் கூடாதல்லவா?
 சரி... சரி... எடு காரை'' என்று சொல்லி பிரயாணத்தைத் தொடங்கினேன்.
 சங்கப் பலகை
 1947 - ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. மேற்கு வங்காளத்தின் முதல் கவர்னராக ராஜாஜி அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார். அந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் நானும் கல்கத்தா சென்றோம்.
 கல்கத்தாவில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். அதில் ஒரு நிகழ்ச்சியில் கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படத்தைத் திறந்து வைத்து பேசும்படி என்னைப் பணித்தார்கள். நானும் மிக்க மகிழ்ச்சியுடன் கல்கியின் திரு உருவப்படத்தைத் திறந்து வைத்து விட்டுப் பேசலானேன்.
 "தமிழ்நாட்டில் மதுரை மாநகர் மிகவும் பிரசித்தி பெற்றது. அறுபத்துநான்கு திருவிளையாடல்கள், பாண்டிய மன்னர்களின் ஆட்சித் திறமை, தமிழ் வளர்த்த சங்கம்--இவைதான் அதற்குக் காரணமாகும். இதெல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் நாகரீகத்தையே உலகிற்கு எடுத்துக்காட்டுவது போன்ற விண்மறைக்கும் கோபுரமாகவும், வினை மறக்கும் கோயிலாகவும், கண்ணமைந்த காட்சியாகவும் மீனாட்சி அம்மன் ஆலயம் மதுரை மாநகரத்தின் நிரந்தரமான சிறப்புக்குச் சிகரம் வைத்தது போல் அமைந்திருக்கிறது.
 தற்போது மதுரை அரசியல் துறைகளிலும் பிரசித்தமடைந்திருக்கிறது. தேசிய இயக்கத்தில் மதுரை எப்போதும் முன்னணியில் நின்று வருகிறது. ஆலயப் பிரவேசம்கூட முதன் முதலில் மதுரையில்தான் நடந்தது!
 இப்படி எல்லாத் துறைகளிலும் முன்னணியில் நிற்கும் மதுரை, சங்கீத விஷயத்திலும் முன்னணியில் நிற்பதில் ஆச்சரியமில்லை.
 பிரபல சங்கீத வித்வான் புஷ்பவனம் அய்யர், மதுரை மணி அய்யர், ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி முதலிய முதல் தர வித்வான்களைத் தமிழ்நாட்டுக்கு ஈந்த பெருமை மதுரைக்குத்தான் உண்டு.
 இத்தகையப் பிரசித்தி வாய்ந்த மதுரை மாநகரத்தில் "பொற்றாமரைக் குளம்' என்று ஒரு குளம் இருக்கிறது. அந்தக் குளத்தில் வெகுகாலத்துக்கு முன்பு "சங்கப் பலகை' என்பதாக ஒரு பலகை இருந்ததாம். அந்தப் பலகைக்குத் தயை தாட்சண்யம் என்பது கொஞ்சமும் கிடையாதாம். தகுதியுள்ளவர்களை ஏற்றுக்கொள்வதும், மற்றவர்களைத் தள்ளி விடுவதும் அதன் பிடிவாத துர்குணமாக இருந்ததாம்!
 இதனால் அநேகர் அதில் ஸ்தானம் பெற முயன்றும் முடியாமற் போய்விட்டது. சங்கப் பலகை அங்கீகரித்த வித்வான்கள்தான் வித்வான்கள் என்றும் மற்றவர்கள் எல்லாம் "போலி' என்றும் ஆகிவிடுமாம். ஆகவே சங்கப் பலகையால் ஏற்றுக்கொள்ளப்படாத பண்டிதர்கள், கவிஞர்கள் கலைஞர்கள் அனைவரும் கோபம் கொண்டு மேற்படி பலகையைச் சுக்குநூறாக்கிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.
 (தொடரும்)
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT