வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

தந்தையு  மானவள்..

Published: 30th June 2019 12:30 PM

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.25,000 பெற்ற கதை


காலையில்  கதவு  திறந்ததும் வாசலில்  கொட்டிக் கிடந்த அரிநெல்லிக்காயைப் பார்த்ததும் நாக்கில்   தேனூறியது  பொன்னுத்தாயிக்கு. எத்தனை  முறை பார்த்தாலும், எத்தனை முறை சுவைத்தாலும் நெல்லிக்குண்டான  சுகம்  அதை வெறுப்பவர்களையும்  வாயூற  வைப்பது.

இது ஓர் அலாதியான வரம்.  விரும்பாதவர்களையும்  இதழ்  ஊற வைக்கும் அற்புத குணம். பொன்னுத்தாயின் கணவன் சீனியப்பன் எப்போதும் இதைத்தான்  சொல்லி சொல்லி  சிரிப்பார்.

""பொன்னு,  நீயும்  நம்ம வாசல்ல  கொட்டி  கிடக்கிற  நெல்லிக்காயும் ஒண்ணுதான். ஏன்னா உன்னை பிடிக்கலைன்னு  சொல்றவங்க கூட  உன்னை விரும்ப ஏதாவது காரணம் இருக்கும்'' வார்த்தைகள் இப்போதுதான் சொல்லப்பட்டது போல் மனசுக்குள் பசுமை மாறாமல்  இருந்தது.  ஆனால் அந்த நினைப்பை மனசுக்குள் ஏற்படுத்தி தந்திருந்த மனிதர்  இப்போது அவளுக்கு அருகில் இல்லை.

ஓலைக் கூடையில் நெல்லிக்காய்களை சேகரம் செய்து, தண்ணீரில்  கழுவி, திண்ணையில்  உலர்த்தினாள். நிமிர்ந்து  பார்த்தாள்.  உலுப்பிற்குக் காத்திருந்த நெல்லிக்காய்கள்  தங்க பூக்களாய்  கிளைகளில்   சொப்பிக் கிடந்தது.

மாரிமுத்தை  வரச் சொல்ல  வேண்டும்.. கனிந்த பிறகும்  கிளையில்  தங்குவது பழத்திற்கு தண்டனை என்றால் மிகையில்லை. அதை அதை பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். அது பயிராக  இருந்தாலும்  சரி, பருவமாக இருந்தாலும் சரி.

""அத்தாச்சி, என்ன இன்னைக்கு  கருக்கல்லயே  முழிச்சுட்ட... மேலுக்கு  எதுவும் நல்லாயில்லயா''  பக்கத்தில்  வந்து நெற்றியில்  கைவைத்து  ஆதரவாகக் கேட்ட சுந்தரியை,  கண் நிறையப்  பார்த்தாள்.  இறைவன் வயிற்றை  ஏமாற்றினாலும் மனசை ஏமாற்றுவதில்லை என்பதற்கு  இதுபோன்ற  மனிதர்களே  சாட்சி... குழந்தை  இல்லாதவர்களுக்கு   குழந்தையாய்,  தாயில்லாதவர்களுக்கு தாயாய்.

""சுந்தரி  மேலுக்கெல்லாம்  ஒண்ணுமில்ல.. அறுவத்தி  சொச்ச வயசுல  கூட வகையும் தொகையும்  அறியாமயா  தூக்கம் வரும்?  நீ  கொஞ்சம் காப்பி போட்டு கொண்டா.  பிரேமா எழுந்துகிட்டாளான்னு  பாரு...'' என்று  சொல்லி சுந்தரியை  உள்ளே  அனுப்பி வைத்தாள்.

சொப்புக் காசாய்  சில்லறை வெயில் முற்றத்தில் கோலம் போட்டு இருந்தது.

அவள்  எதிர்பார்த்தபடியே  நெல்லிக்காயின்  வாசம்  சுண்டி  இழுக்க, தெருப்பிள்ளைகள்  தலை சொறிந்தபடி  அவளுக்கு  முன்னால்  வந்து நின்றார்கள்.  திண்ணையில்  காய்ந்த  நெல்லிக்காயை  கொத்து   கொத்தாய் அள்ளி பிள்ளைகளுக்கு  தந்தாள்.

கொடுக்கும்போது  நிஜமாகவே  சுகமாய்த்தான்  இருக்கிறது.  அதை  வாங்கிக் கொள்பவர்களின் அகமும்  முகமும் மலர   சிரிக்கும்போது  மனசு  நிறைகிறது.

""என்னக்கா இன்னைக்கு காலங்காத்தால இப்படி வாசல்லவந்து உட்கார்ந்துட்ட...  இன்னைக்கு  உன்னோட  தொண்டூழியம்  பிள்ளைககிட்ட இருந்து  தொடங்குதாக்கும்''  என்று கேலி  பேசியபடி  பக்கத்தில்  வந்தமர்ந்தான் தட்சிணம்.

""அட  போக்கத்தவனே... ஊர்ல  உள்ளவன் தான்  என்னைக் கேலியும், கிண்டலும்  பண்ணுறான்னா, நீயுமாயா  அதைச் செய்யுற...''  பொய் கோபமாக அவனை  அடிக்க  கை ஓங்க, தட்சிணம்  விலகி  வாய்விட்டு  சிரித்தான்.

""யக்கா, இது கேலி  இல்ல..  பகுமானம்.  ஆம் பிள்ளைக  மீசை முறுக்கிட்டு திரியுற  ஊர்ல,  பொம்பளை  நீ எம்புட்டு  வைராக்கியமா  தனியா  நின்னு, நாலு பேருக்கு  உபயோகமா  வாழ்றே...  அந்த சந்தோசத்துல  நானும் உனக்கு  தம்பி முறைங்கிற  பகுமானம்  தான்கா'' என்றான்  கண்கள்  விரிய.

""அதெல்லாம்  இருக்கட்டும்,  நீ  சேலை  ஆர்டர்  வாங்க  போயிருந்தியே என்னாச்சு?  அங்க!  எதுவும்  ஆர்டர்  கிடைச்சுதா?''

பொன்னாத்தா  இப்படி கேட்கவும்,  தட்சிணம்  ஒரு நீண்ட  பெருமூச்சை விட்டான். உள்ளங்கையையும்,  புறங்கையையும்  திருப்பித்  திருப்பி பார்த்தபடி அமைதியாக  அமர்ந்து இருந்தான்.

""அந்த கதையை ஏன்கா  கேட்குற.  இப்பத்தான்  உழுதவனுக்கு  உலை அரிசி இல்ல,  நெய்ஞ்சவனுக்கு  கோவணம்  இல்லைன்னு  ஆகிருச்சு.  ஆனா  எனக்கு செஞ்ச  வேலைக்கு  சரியான கூலி  கிடைக்கலைங்கறது  கூட  அம்புட்டு வருத்தமில்ல, ஆனா  நாம செய்யுற  வேலைக்கு  மரியாதை கிடைக்கலைங்கறது தான் வெசனமா இருக்கு''.

""தட்சிணம்  வெசனப்படாதய்யா''

""இல்லக்கா,  எட்டூர்ல  ஜவுளி கடல் வச்சிருக்கிறதா  டி.வி.யில  விளம்பரம்  வர்ற அந்த கடைக்காரங்கதான்  இப்போ  நம்ம விளாத்திக்குளத்துல  ஒரு கடை தொறந்திருக்காங்க.  அவங்களுக்குத்தான்  ஆர்டர்னு  போனேன். தொழிலை மதிக்க வேணாம்,  மனுசனையாவது  மதிக்கலாம் இல்ல? ம்ஹூம்... நாள் முழுக்க  வராண்டாவுல  உட்கார  வச்சு அத்தனை  அலைக்கழிச்சு  காசு தந்து அனுப்புனாங்க...  அதுவும்  சில ஆயிரங்கள்ல''.

""டி.வி.யில  அதே சேலைகளை  பல ஆயிரத்துக்கு அவங்களே  விலை சொல்லி விற்கும்போது,  மனசு   ரொம்ப  வெறுத்துப்  போகுது.  அதுசரி  அடிமாட்டுக்கு  பேரம் எதுக்கு.. நிஜமான  உழைப்பாளியின் வலி அது''. 

கொஞ்ச நேரம்  பதில் தரவும், ஆறுதல்  சொல்லவும்  வழியற்று  அமைதியாக  அமர்ந்து  இருந்தார்கள்  இருவருமே.

""ஐயா  தட்சிணம்,  நீ எதுக்கும்  வருத்தப்படாத,  இந்த  உலகத்துல  எது  ஒண்ணு அழிஞ்சாலும்  அது இன்னொரு  வடிவத்துல  நம்மகிட்ட  திரும்ப வரும். இன்னைக்கு  நம்ம கண்ணு  முன்னாடி  அழிஞ்சு  போன மாதிரி  தெரியுற எல்லாமுமே  சீக்கிரமே புது  வடிவத்தோட...   புத்துணர்வா  நம்ம  கண்முன்னால வந்து நிற்கும்.  நீ பாக்கல...  மஞ்சப் பையே  இல்லைனு  ஆன பிறகால இப்போ அதுக்கு  மறு உயிர்தந்து  எல்லாரும்  கையில  கொண்டு  போறதை.  அது மாதிரித்தான்   செத்து  போனதா  நினைக்கிற  எல்லா தொழிலும்  மறுபடி வரும்.  நீ  மனசு  வெசனப்படாம  போய்யா...'' ஆறுதலாய்ப்   பேசி  அவனை அனுப்பிவிட்டு  உள்ளே  சென்றாள்.

இட்லி அவியும்  மணமும்,  சட்னிக்கு  கடுகு  தாளித்த  மணமும்  சுகமாக வயிற்றைத் தூண்டியது.

பிரேமா  குளியலறைக்குச்  சென்றிருந்தாள்.  படுக்கையைச்  சுற்றி  வைத்து விட்டு  பெருக்குமாறை  எடுத்து  வீட்டை  துப்புரவு  செய்யத்  தொடங்கினாள் பொன்னாத்தா. அரவம்  கேட்டு உள்ளே  இருந்து  ஓடி  வந்தாள்  சுந்தரி.

""ஐயோ  அத்தாச்சி  இது எதுக்கு  நீங்க  பண்ணிட்டு... நானெதுக்கு  இங்க இருக்கேன்.  வெட்டி முறிக்கவா..'' பெருக்குமாறைப்  பிடுங்கிக் கொள்ள, அத்தாச்சி  ஆயாசமாய்   அவளைப் பார்த்தாள்.

"அடி  இவளே,  நீ வந்த  நாள்  தொட்டு  என்னை இப்படி  அப்படி  அசைய விடாம பாடாப்  படுத்தறவளா  இருக்கியே  டீ...  யோசிச்சு  பாரு...  நானென்ன சொகுசா வாழவா  உன்னை கூட்டியாந்தேன்''.

""அத்தாச்சி  சுந்தரமா  இருந்த  நான்  ஆண்டவனோட  விளையாட்டால நான் சுந்தரமா,  இல்ல சுந்தரியானு  தெரியாம  தவிச்சப்போ,  என் குடும்பமே என்னை  துரத்தி  விரட்டிருச்சு,  இதுல  அவமானப்பட  என்ன  இருக்குன்னு எனக்குப்  புரியல.  விபத்துல  கை கால்  போறதும்,  கண் போறதும்  இயல்புனா, இதுவும்  இடையில  வந்த விபத்து  மாதிரி  தான்னு  யாரும் ஏத்துக்கல.   அந்த நாள்ல  எனக்கு  ஒரு  ஆதரவு  தந்து  உங்க  வீட்டில  தங்கிக்க  இடமும்  தந்து என்னை  மனுசியா  மதிச்சது  நீங்க  மட்டும்தானே''  சுந்தரியின் கண்களில் ஈரம்  கசிந்தது.

""இந்த புகழ்  எல்லாம்  நாளைக்கு  பாடலாம்.  பிரேமா  வந்ததும்  சாப்பிட்டு தயாரா இருக்கச் சொல்லு.   அவ அப்பா  பஞ்சாயத்து  கூட்டி இருக்காரு.  நாங்க உடனே    போகணும்''. இன்னும்  அங்கே  நின்றால்  அவள்  தன்னுடைய புகழ்பாடியே  ஒரு வழி  செய்துவிடுவாள்  என்று  தலையை  வலித்து  கோடாலி கொண்டை  போட்டுக்  கொண்டு  குளியலறைக்குள்  புகுந்தாள்.

சாப்பிட்டு  முடித்த  கையோடு  பிரேமாவும்,  பொன்னுத்தாயியும் பஞ்சாயத்துக்கு  கிளம்பி  விட்டார்கள்.

ஜக்கையன்  கோயிலில்  தான்  எப்போதும்  பஞ்சாயத்து நடப்பது  வழக்கம். இவர்கள்  வருவதிற்கு  முன்பே  கூட்டம்  கூடி இருந்தது.  இவர்கள்  வரவிற்காகத் தான்  காத்திருந்தார்கள்  போலும்.

பிரேமா  யாரையும் பார்க்க பிரியம்  இல்லாமல்  ஓரமாய்  நின்றாள். அவளுடைய  அப்பா  மாணிக்கம்  தவிப்பாய்  மகளைப் பார்த்து  கண்கள்  கசிய விரக்தியாய்  நின்றார்.

""என்ன  பொன்னாத்தா,  பொழுது  விடிஞ்சு  பொழுது  போனா எதுனா பிராதோட  இங்க வந்து  நிக்கறதே  உனக்கு  வேலையாப்  போச்சு''  நாட்டாமை நக்கலாய்  பேச... பொதுவாய்  அங்கு  புன்னகை  உண்டானது.

""என்னய்யா  பண்ணுறது  உங்களுக்கெல்லாம்  பொழுது  போக வேணாமா.. அதான்  நானும் வேலை  மெனக்கெட்டு  இங்க வந்து  நிக்கறேன்''  கிராமத்து குசும்பிற்கு  நிகரில்லை  என்னும்  கணக்காய்  பொன்னுத்தாயியும் சொலவடை பேச கலகலப்பானது  கூட்டம்.

"எல்லாம்  சரிதான்  பொன்னாத்தா.  ஊருக்கு  எம்புட்டோ  நல்லது  பொல்லது செய்யுற.  சொல்லப் போனா,  மீசை  வச்ச ஆம்பளைன்னு  சொல்லிக்கிட்டு எங்களால  எதுவும்  நல்லது  பண்ண  முடியறதுல்ல.  ஆனா  நீ செய்யுற,  அப்படி இருக்கயில  ஏதோ  வழி மாறி  வந்துட்ட  ஆட்டுக்குட்டியை  அதுக்கு உரியவங்ககிட்ட  சேர்ப்பிக்காம,  நீ பாட்டுக்கு  அமைதியா  இருந்தா  எப்படி?'' பீடிகை  போட்ட  நாட்டாமையைக்  கூர்ந்து  பார்த்தாள்.

""ஐயா,  வார்த்தை   தப்பானா,  வழக்கு  தப்பாகும்.  அது வழி மாறி  வந்த ஆட்டுக்குட்டி இல்ல,  அது வாழப்போன  இடத்துல  வழி மடக்கி  அது துணையை கசாப்பு கடைக்கு  அனுப்புனதால  தானும் சாக  வழி  தேடி  போன ஆட்டுக்குட்டி, நான் காப்பாத்தி  காபந்து  பண்ணி  வச்சிருக்கேன். ஏதாவது  நல்லது நடக்கும்ங்கிற  நம்பிக்கையில...''

பொன்னுத்தாயின்  அழுத்தமான பேச்சால்  அங்கு  ஒரு நிமிசம்  மௌனம் நிலவியது.  அங்கு  எல்லோருக்கும் தெரியும்  மழை விழுந்த  பூமியில் நாய்குடை முளைக்கும்  என்று.  ஆனாலும்  அத்தனை பேரும் மௌனம்  காத்தார்கள்.

இருவான்புதூரில்  இருந்து இலஞ்சி  நத்தத்திற்கு,  காதல்  வாய்க்கால்  ஓடவிட்ட   பாவத்திற்கு  உயிர்பலி  வந்து சேர்ந்தது.

""உங்க பேரு முகிலா?  அடேங்கப்பா  உங்க  ஊர்ல இருக்கிற  எல்லாரும்  தமிழ் பற்று உள்ளவங்களாட்டம்  இருக்கு''  கம்ப்யூட்டர்  கிளாஸýக்கு  போயிட்டு வரும் வழியில் , தோழிகள்  பக்கத்தில்  இருக்கின்ற  தைரியத்துல  பிரேமா,  முகிலை கேலி  செய்தாள்.

""எங்க ஊர்  ஆளுகளுக்கு  தமிழ் பற்று  உங்க  ஊர்  ஆளுகளுக்கு  காதல் பற்றாக்கும்'' அவன் பதில் புதிர்   போட்டான்.

""காதலா?''  அவள் புரியாமல்  கைகளை  விரித்து,  உதடு பிதுக்கினாள்.

""உங்க  பேரைத்தான்  பிரேமான்னு  வச்சிருக்காங்களே  பிரேமானா  காதல் தான''  அவன் நக்கல்  செய்ய  முகம் மூடி  வெட்கப்பட்டாள்.

அடுத்தடுத்த  புதிர்களும்,  கேள்விகளும்  அவர்களுடைய  உறவைப்   புனிதமாக்கியது. 

பிரேமாவின்  அப்பா,  ஊரில்  வாய்ப்பு  நிறைந்தவர்,  பெரிய பணக்காரர். உடம்பில்  ஏற்படும்  உணர்ச்சிகளிலேயே  ஒத்துக் கொள்ள  முடியாதது  காதல் தான்  என்று நினைப்பவர்.  அதிலும்  ஒரு பெண்  அந்த உணர்ச்சிகளை வெளியாக்கி விட்டால்,  அதைவிட  பெற்றவர்களுக்கு  அசிங்கம்  எதுவும் இல்லையென்று  நினைப்பவர்.  சொல்லிப் பார்த்தார், கண்டித்துப்  பார்த்தார். அடித்தும் பார்த்தார்.  அவர்கள்  மனம்  மாறவேயில்லை.  

ஒரு  கட்டத்தில்  இருவரும்  வீட்டை  விட்டு  வெளியேறி  திருமணம்  செய்து கொள்ள  இருப்பதாக  தகவல்  வந்தது.  அவர்கள்  திருமணத்திற்கு  முதல்நாள் நடந்த  ஒரு  சாலை  விபத்தில்,  முகிலன்  செத்துப் போனான்.

இது விபத்தல்ல  ஆணவக்கொலை  என்று   போராடி  நிரூபிக்க  பார்த்து தோற்றாள்  பிரேமா.  வசதி  வாய்ப்பும், ஆள்  பலமும்  இல்லாத  முகிலனின் பெற்றோர், பிரேமாவின்  அப்பாவை  எதிர்க்க  திராணியற்று  அடங்கிப் போனார்கள்.

கிளை  நீதி மன்றத்திலும், உயர்  நீதிமன்றத்திலும்  அது ஆணவக் கொலை என்று நிரூபிக்க  இயலாமல்  தோற்றுப்  போனாள்.  அவள்  மனசாட்சி  மட்டும் இது விபத்தில்லை  என்று நம்பியபடியே  இருந்தது.  குடும்பம்  உறவுகள்  என்று எல்லாவற்றையும்  மறந்து தற்கொலை  செய்து  கொள்ளச்  சென்றவளை
காப்பாற்றி  தன்னுடன்  வைத்துக் கொண்டாள்  பொன்னாத்தா.

நாட்கள்  கடந்து மனம்  மாறி  மகள்  தன்னை தேடி  வருவாள்  என்று காத்திருந்த மாணிக்கத்திற்கு  ஏமாற்றம்தான்  மிஞ்சியது.

""என்ன பொன்னாத்தா,   அமைதியா  உட்கார்ந்திருக்க... பழைய  நினைப்பா'' நாட்டாமை  பேச்சை  ஆரம்பித்தார்.  ஆனால்  இவள்  பதிலுக்காக  வாய் திறக்கும்  முன்னே,  பிரேமா  பேசினாள்.

""இதப்பாருங்க  இதுல  எந்த  சம்பந்தமும்  இல்லாத  அத்தாச்சியை நீங்க யாரும்  எதுக்கும்  கஷ்டப்படுத்த  வேணாம்.  நான்  இன்னைக்கு  உசிரோட இருக்கேன்னா  அதுக்கு  காரணம்,  அத்தாச்சி  மட்டும் தான்.  எனக்கு  இப்பவும் உசிரு வாழ  இஷ்டமில்லை.  ஆனா, அத்தாச்சி எனக்கு  முன்மாதிரியா நிக்கிறாங்க.  தனக்கான  சுகம் இல்லாத  உலகத்துல,  மத்தவங்க  சுகத்துக்காக நம்முடைய  வாழ்க்கையை  அர்ப்பணிக்கிற  மனசு  பெரிசுனு  உணர வச்சாங்க.  அதுக்காக  மட்டும்தான் நான் உசிரோட  இருக்கேன்'' என்றாள் உறுதியாக ""என்ன  பேசுறமா  நீ ? பெத்த தகப்பனுக்கு  உன்னை காலாகாலத்துல  ஒருத்தர்  கையில  பிடிச்சு  குடுக்கணும்கிற  அக்கறை இருக்காதா?''

பிரேமா  அவர்களின்  பேச்சை  செவிமடுத்து  கேட்க  இயலாமல்  எழுந்து   கொண்டாள்.

""நான்  அன்பு வச்சதாலேயே  ஒரு  உசிரு  செத்து போச்சு.  அநியாயமா  அந்த வேதனையில நான் வெந்து  தணிஞ்சுட்டு  இருக்கேன்.  நான் இல்ல இனி அப்பாவோட வாழ்க்கையில.  அவருக்கும்  என்னைத் தவிர்த்து  இன்னும் ரெண்டு புள்ளைங்க இருக்காங்க.  அவங்களையாவது

அவர் வாழ  அனுமதிக்கட்டும்''  கை எடுத்து  கும்பிட்டுவிட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல்  அங்கிருந்து  வேகமாய்  எழுந்து  போனாள்.

அவர்கள்  கவனம்  இப்போது  பொன்னாத்தா  மீது  திரும்பியது.

""பொன்னாத்தா,  நீதான்  அதுக்கு  எடுத்து  சொல்லணும்.  புடலங்கா  முத்தினா கூட்டுக்கு  உதவாது,  பொண்ணு  முத்தினா  கல்யாணத்துக்கு  உதவாது. இதெல்லாம்  நாங்க  சொல்லியா  உனக்குத் தெரியணும்.  நீ  அடைக்கலம் தரமாட்டேன்னு   சொன்னா,  அது தன்னால  அப்பன் குடில்  வந்து சேரும்.  

இது  இனி உன் கையில''  நாட்டாமை  கறாராய்ச்  சொன்னார்.

சுருக்கு  பையில்  இருந்த  புகையிலையை  கிள்ளி  வாயில்  திணித்தபடி, அத்தாச்சி  அவர்களை  முறைத்துப்  பார்த்தது.

""என்னய்யா, கிடக்கிறது  எல்லாம்  கிடக்கட்டும்,  கிழவியை  தூக்கி  மடியில வைங்கிற  கணக்காய்  பேசுற நீ, அழுகையோ,  கோபமோ,  அன்போ,  காதலோ அதை சரியான நேரத்துல  சரியான  இடத்துல  காட்டிடணும்.  இல்லாட்டி  அது தப்பான  இடத்துல  வெளியாகியே  தீரும்.

அதைத்தான்  அன்னைக்கு  பிரேமாவோட  அப்பா  செஞ்சாரு.  தன்னுடைய   கோபத்தை  தவறான  இடத்தில  வெளியாக்கிட்டாரு.  இது அவர்  செஞ்ச தப்புக்கான  அறுவடைக் காலம்.  நாம  என்ன செய்ய முடியும்''  பிசிறும் தயக்கமும் சிறிதும்  இல்லாமல் பேசிய  பொன்னாத்தாவை மற்றவர்கள் ஆச்சரியமாய்  பார்த்தார்கள்.

ஆனால்  மாணிக்கம்  வரிந்து கட்டிக் கொண்டு  சண்டைக்குத்  தயாரானான்.
""என்ன பொன்னாத்தா,  போகிற  போக்குல  நீ  பாட்டுக்கு  ஒரு  பழியைப் போட்டுட்டு  போகுற .. கீழ்   கோர்ட்டுல  இருந்து  மேல் கோர்ட்டு  வரைக்கும் எல்லாரும்  என் மேல  எந்த தப்பும்  இல்லைன்னு  விடுவிச்ச  பிறகாலும்,  நீ என்னை  குத்தம்  சொல்ற''  என்றான்  கடுங்கோபமாக.

பொன்னுத்தாயி  இடி இடியென  சிரித்தாள்.

""மாணிக்கம், அதுக்கும்  மேல்  ஆண்டவனோட  கோர்ட்டுனு  ஒண்ணு  இருக்கு நியாபகம்  இருக்கா?  கோர்ட்டு  சாட்சியை  மட்டும்தான்  எதிர்பார்க்கும். ஆனா ஆண்டவனுக்கு  எந்த சாட்சியும்  தேவையில்லை.  அது  உனக்குத் தெரியும்'' பொன்னுத்தாயி  சொல்ல,  இதற்கு  மேலும்  இந்த விஷயத்தை  பேசினால்  வீண் வேதனைதான்  என்று எல்லோரும்  அமைதியாக  இருந்தார்கள்.

""இன்னைக்கு  பொன்னத்தா  இல்லாட்டி,  நீ உன்  மவளை  உசிரோடயே பார்த்திருக்க  முடியாது.  நீ  என்ன இப்படி  நன்றி  இல்லாம  பேசுற  மாணிக்கம்'' சிலர்  மாணிக்கத்தின்  செயலைக்  கடிந்து  கொண்டார்கள்.

""ஐயா,  அப்படியெல்லாம்  சொல்ல வேணாம்.  யாரை நம்பியும்  யாரையும் ஆண்டவன்  படைக்கல.  நான் என்னோட  வாழ்க்கையை  அர்த்தப்படுத்திக்கத் தான் இந்த வேலைகளை  இங்கே  செய்யுறேன்.  நான்  என்னைக்கும்  என்னைப் பற்றி  யோசிக்கிறதில்ல.  இதுதான்  வாழ்க்கைன்னு  ஆன பிறகால  இதுல நான் யார்னு  மட்டும்தான்  நான் யோசிக்கிறேன்.

மாணிக்கம், நம்ம  பிள்ளைகளோட  நியாயமான  ஆசைகளுக்கு  நாம மதிப்பு அளிக்கணும்.  புள்ளைங்க  நம்ம  மூலம்  இந்த உலகத்துக்கு  வந்தவங்க.  ஆனா நமக்காக  மட்டும்தான்  வந்தவங்கன்னு  நினைச்சு  அவங்களை  அடக்க நினைக்கக் கூடாது. ஏன்னா  ஆண்டவன்  இந்த உலகம்  இன்னும்  இயங்கும்கிற நம்பிக்கையை  குழந்தைகள்  மூலம்தான்  நமக்கு  காட்டிட்டு  இருக்கான். இதுல  உலகத்துல  யாரும் யாருக்கும்  பாரமுமில்லை...  ஆதாரமுமில்லை'' என்று சொல்லிவிட்டு  அவ்விடத்தை  விட்டு அகன்றாள்.

நாட்களின்  ஓட்டம்  வேகமாக  இருந்தது.  விளாத்திக்குளத்தில்  ஒரு திருமணத்திற்கு  வந்திருந்த  பொன்னாத்தாவின்  நாத்தனார் மகன்  வேணுவும், மூத்தார்  மகன் சக்திவேலும்  கல்யாண  வீட்டில்  அரசல்புரசலாக  பேசிக் கொண்ட விசயத்தை கேள்விப்பட்டு,  பின்னங்கால்  பிடறியில்  பட ஓடி வந்தார்கள்  இங்கே.  

""என்ன  சின்னம்மா, நாங்க  கேள்விபட்டது  நிஜமா?''  வந்ததும்  வராததுமாய் சக்தி,  குசலம்  விசாரிக்க கூட  மறந்து  போனவனாய்  கேட்டான்.

வேப்பம்பழத்தை ருசித்த அணில்  ஒன்று,  அதன் சுவையை  விரும்பாமல் விசிறியடித்து  விட்டுப் போனது.  அந்த எச்சில்  பழம்தான்  வேறொரு  இடத்தில் விதையாக  ஊன்றப்படுகிறது  என்று அறியாமல்  பொன்னாத்தா, அவர்களுக்கு பதில்  சொல்லாமல்  புன்னகையுடன்  காப்பி ஆற்றினாள்.

""அப்படியென்ன  தேவை  வந்திருச்சு  உங்களுக்கு ?

கிழக்கால இருக்கிற  பண்ணை  வீட்டை  அஞ்சு  லட்சத்துக்கு  விலை பேசுறீங்களாமே, அதெல்லாம்  எவ்வளவு  உசத்தியான  சொத்து,  உங்களுக்கு ஏதாவது  தேவையின்னா  எங்களைக்  கேட்க வேண்டியது  தானே''   பிள்ளை இல்லாத  சொத்துக்குத்தான்  விசாரணையும்,  விவரணையும்  அதிகமாக  
இருக்கும்.

""என்ன அத்தாச்சி,  நம்ம  புள்ளைங்களா  இவனுக?   இவனுகளுக்கு  எதுக்கு விட்டுட்டு  போகணும்னு  நினைச்சிட்டீங்களா ?''  என்றான் வேணு.

""உனக்கு  தரக்கூடாதுன்னு நான் நினைச்சாலும்,  நான் கொண்டு  போக முடியாதுப்பா.  இந்த உலகத்துல  பிறந்த எல்லாருமே மரண  தண்டனை கைதிகள்தான். என்ன, நம்மோட  தண்டனைக்காலம்  தான் வேற வேறயா இருக்கு. இதுல  எடுத்துட்டு போகவும்,  விட்டுட்டு  போகவும்  எதுக்கு  சண்டை போட்டுக்கிட்டு''  ஆழ்ந்த  அறிவாளி  போல்  பேசிய  அத்தாச்சியை   ஆச்சரியமாய் பார்த்தார்கள்.

""மன்னிச்சுக்கங்க  சின்னம்மா,  உங்களை  கஷ்டப்படுத்தி  இருந்தா''  என்றான்  சக்தி.

""சரிய்யா, அதெல்லாம்  விடுங்க,  நாங்க  உதவறோம்னு  நீங்க  சொன்ன வார்த்தையை  நம்பிக் கேட்கறேன்.  எனக்கு  அவசரமா  ஒரு அஞ்சு  லட்சம் வேணும்  கடனாத்தான்.  ரெண்டு  வருசத்துல  திருப்பி  தந்துடறேன்.  உங்களால உதவ முடியுமா?''  தடாலடியாய்  அத்தாச்சி  இப்படி  கேட்கவும்,  சிறிது  நேரம் அமைதியாக  நின்றார்கள் இருவரும்.

மறுக்க  இயலவில்லை  இருவருக்கும்.  அது  சொத்தைக்  காப்பாற்ற  வேண்டும் என்ற  சுயநலத்திற்காக  மட்டுமில்லை,  பொன்னாத்தா  மட்டும்  இல்லாமல் இருந்திருந்தால்,  அவர்கள்  வாழ்க்கையில்  இத்தனை  மாற்றமுமில்லை... ஏற்றமுமில்லை.

இருபத்தைந்து  வயசு  முதல்  தன்னுடைய  பிரத்யேகம்  என்பது, மற்றவர்களோடு   கரைவது  என்றே  ஊன்றி  வாழ்ந்த  மனுசி.  அவளின் தேவைகள்  கூட அவளுக்கானதாய்  இருக்காது  நிச்சயம்.  தவிர  கிராமத்தில் பிறந்த அவர்களை  இத்தனை  உயரத்தில்  கொண்டுபோய்  வைத்ததே அத்தாச்சி தான்.  அந்த  நன்றிக்காக  அந்த பணத்தை  இருவரும்  பகிர்ந்து தந்தார்கள்.

ஒரு  முழு  வருடம்  ஓடிப்  போனது.

பந்தலத்திற்கு  வந்துவிட்டு  அப்படியே  அத்தாச்சியை  ஒரு நடை  பார்த்துவிட்டு வரலாம்  என்று ஊருக்கு  வந்தவனுக்கு  ஆச்சர்யம்  காத்து  இருந்தது.  கண்ணில் கண்டவர்கள்  எல்லாம்  அத்தாச்சியை  வாயார  புகழ்ந்தார்கள்.

வீட்டிற்கு  போனான்.  அத்தாச்சி இல்லை.  கழனிக்குப்  போயிருப்பதாகச் சொன்னார்கள்.

""கழனியா?''  அது எது  ஊருக்குள் இருந்த விளைநிலங்களைத்தான் ப்ளாட்காரர்களுக்கு  தந்துவிட்டார்களே  எல்லாருமே , மனசுக்குள் எண்ணியபடி  நடந்தான்  வேணு.  ஆனால்  அவர்கள்  குறிப்பிட்ட  இடத்தை அடைந்ததும்  கண்ட காட்சியில்  திக்குமுக்காடிப் போனான்.

எல்லை  வாய்க்காலை  ஒட்டிய  இடத்தில்  பெரும்பரப்பில்  சூரியகாந்தி பயிரிடப்பட்டு  செழித்து  வளர்ந்து  இருந்தது.  இவனைப்  பார்த்ததும் புன்முறுவல்  பூக்க  வரப்பு  நிழலில்  இருந்து  அத்தாச்சி  எழுந்து  வந்தது.

""வாய்யா  வேணு..  எப்படி  இருக்க?  அத்தாச்சி  நினைப்பு  திடீர்னு  வந்திருச்சு போல..''  அத்தாச்சியின்  வார்த்தைகள்  காதுகளுக்குள்  போனாலும்,  அவன் கண்கள்  சூரியகாந்தியின்  அழகிலேயே  லயித்து  இருந்தது.

""அத்தாச்சி  என்னது இது...  இது யாரோட  இடம்?  எனக்கு  நினைப்பு   தெரிஞ்சு இந்த இடத்துல  இருந்த எல்லாரும்,  ப்ளாட்டுக்கு  தந்துட்டு  போனதாத்தான் நியாபகம்.  இதுல  நீங்க  எப்படி  விவசாயம்  பாக்குறீங்க?''

அத்தாச்சி  அவனுடைய  முதுகில்  செல்லமாய்  தட்டியது.

""ஐயா  வேணு,  வண்டியில  ஓடம்  ஏறுறது  ஒரு காலம்னா,  ஓடத்துல  வண்டி ஏறுறதும்  ஒரு காலம்.  ப்ளாட்டுக்கு  குடுத்துட்ட  ஒரு சாரார்  ஒதுங்க, இன்னொரு  பக்கம்  என்னை மாதிரி  யாராவது  அதை வாங்கி  விவசாயம் பண்ண ஆரம்பிக்கிற காலமும்  வந்தாச்சு''

 சுரீரென...  நிமிர்ந்து  பார்த்தான்.

""ஆமாய்யா.. நான் அன்னைக்கு  உங்க ரெண்டு  பேர்கிட்டயும்  காசு வாங்கினது  இதுக்குத்தான்.  நாலு  கிரவுண்ட்  ப்ளாட்டுக்காரன்கிட்ட  வாங்கி அதுல  விவசாயம்  பண்ணேன்.  இரண்டு  மாசம்  முன்னாடித்தான் அறுவடை முடிஞ்சுச்சு.  இடைக்கால  பயிரா  சூரியகாந்தி  பயிரிட்டு  இருக்கேன்.
நம்மோட  இந்த  இடம்  எல்லையை  ஓட்டி  இருந்ததால  யாருக்கும் எந்த இடஞ்சலும் இல்லை.  பக்கத்துல  வீடு கட்டி  இடம்  வாங்கினவங்க கூட என்னோட  இந்த  வேலையைப்  பார்த்துட்டு  அவுங்களும்  இதையே  செஞ்சா என்னன்னு  நினைக்க  ஆரம்பிச்சுட்டாங்க.

மழைநீர்  சேகரிப்பு  வசதியோட  போர்  போட்டு  தண்ணி  வசதியை ஏற்படுத்தியாச்சு.  எல்லாமே  நாம  நினைச்சதை  விடவும்  எளிதா  இருக்கு. ஏன் தெரியுமா, இந்த  வேலைகள்ல  துளிகூட  சுயநலம்  இல்லை. அதுமட்டும்தான் காரணம்'' அத்தாச்சியின்  செயல்  பிரமிப்பாய்  இருந்தது.  

இதுவரை  டி.வி.யிலும்  ஏனைய  ஊடகங்களிலும்  விளைநிலங்கள்  விற்கப்பட்ட கதைகளைத்தான்  பார்த்து  மாய்ந்து  மாய்ந்து  அதற்கு வருத்தப்பட்ட  காலம் உண்டு.

முதல்முறையாய்  ப்ளாட்டுக்கு  விற்கப்பட்ட  இடத்தை  வாங்கி  அதை விவசாய நிலமாக  மாற்றியது  ஒரு பெண்,  அதுவும்  நம்முடைய  குடும்பத்தைச்   சேர்ந்த பெண்.  நினைக்கும் போதே சிலிர்ப்பாய்  இருந்தது  வேணுவுக்கு.

பேசிக் கொண்டே  நடந்தார்கள்.  ஊரை ஒட்டி  நின்ற அவர்கள்  பண்ணை  வீடு. அதை நெருங்க  நெருங்க  இன்னும்  ஆச்சர்யம்  காத்திருந்தது.  எப்போதும் அமைதியாக  இருக்கும்  இந்த இடம்,  நிறைய  பரபரப்பாய்  இருந்தது. கிராமத்து   சனங்கள்  வந்து  போய்க் கொண்டு இருந்தார்கள்.  இடத்தின்  சூழல் மாறி இருந்தது.

உள்ளே   போனார்கள்.  பிரேமாவும்,  இன்னும்  இரண்டு  பேரும்  தனித்தனியாய் நாற்காலி  போட்டு  அமர்ந்திருக்க,  அவர்களுக்கு  முன்னே  கணிணி  திரைகள் ஒளிர்ந்தபடி  இருந்தன.  கிராமத்துச்  சனங்கள்  வந்து நிறைய  தகவல்களை விசாரிக்கவும்,  அதை அவர்கள்  இண்டர்நெட்டில்  தேடி  சேகரம்  செய்து தருவதுமாய்  இருந்தார்கள்.

இவர்களைப்  பார்த்ததும்  எழுந்து  ஓடோடி  வந்தாள்   பிரேமா. ""வாங்க அண்ணே,  நல்லா இருக்கீங்களா''  பொய்மை  துளியும்  இல்லாத  அன்பில் கேட்டாள்.

""பிரேமா,  நாம என்ன வேலை  செய்றோம்னு  என் மருமவனுக்கு சொல்லு, அதையெல்லாம்  சரியா  எடுத்துச் சொல்ல  எனக்கு  பவிசு  பத்தாது'' பொன்னாத்தா  வெள்ளந்தியாக சொன்னது.

"" ஒண்ணும்  பெரிய  வேலையெல்லாம்  இல்லண்ணே,  நீங்க  பட்டினத்துல பார்க்காத  வேலையா,  நம்ம  ஊர்  சனங்க  அவங்க  உற்பத்தி  செய்யுற பொருட்களைச்  சந்தைப்படுத்த  தெரியாம,  போற  இடங்கள்ல  அவமானத்தை சந்திச்சுட்டு  ரொம்பவும்  மனவருத்தத்துல  இருக்காங்க. 

அவங்களுக்கு  ஒரு சின்ன உதவியா  நம்மோட  இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  அவங்களுக்கு  உதவ  முன்வந்து  இருக்கோம்.  நம்ம  கிராமத்துல இருக்கிற  எல்லா  தயாரிப்புகளையும்  அப்டேட்  பண்ணி,  அவங்க பொருளுக்கான  விலையை  அதிகப்படுத்தி,  அவங்க  கஷ்டப்படாம விற்கறதுக்கு  ஒரு வழியை  ஏற்படுத்தி  தர்றது  நம்மோட  வேலை இங்கே.

நம்ம  கணேஷ்  அண்ணனுக்கு  மதுரையில  இருக்கிற  நர்சரியில  இருந்து  நூறு பூத்தொட்டிக்கு  ஆர்டர்  வந்திருக்கு.  நம்ம  செல்லதுரை  மாமாவுக்கு, விளாத்திக்குளம்  ஜவுளிக்கடையில  இருந்து  அம்பது  கதர் பட்டு புடவைக்கு ஆர்டர்  வந்திருக்கு. நினைச்சா  ரொம்ப  பிரமிப்பாவும்  சந்தோஷமாவும் இருக்குண்ணே.. இது  இதோட  நிற்கல. நீங்க  சொன்னா  ஆச்சர்யப்படுவீங்க. நம்ப நாதஸ்வர  செட் பூபதி  அண்ணனுக்கு  மேட்டூர்ல  கும்பாபி சேகத்துக்கு ரெண்டு  நாள் புக்காகி  இருக்கு.  இதெல்லாம்  ரொம்பவும்  பிரமிப்பான விசயம்.  இதையெல்லாம்  அத்தாச்சி எவ்வளவு  தொலை நோக்கா  சிந்திச் சாங்கன்னு  எனக்குப் புரியல.  ஆனா  இதனால  இங்க எத்தனை  பேர் பயனடையறாங்க  தெரியுமா..

நம்ம  சனங்க  ரொம்ப  சந்தோஷமா  இருக்காங்கண்ணே.  அது  எல்லாமே அத்தாச்சியாலதான்.  அவங்கள  மாதிரி  தாய்மை  உள்ளவங்களால  தான், சுந்தரி  மாதிரி  மாற்றுப்  பாலினரையும்,  என்னை மாதிரி  வாழ்க்கையில பிடிப்பில்லாம  போனவங்களையும்  ஆதரிச்சு  வாழ்க்கை  தரமுடிஞ்சது.

தன்னுடைய   சொந்த  சுகத்துக்காக  பெத்த பிள்ளைகளைக்  கொல்லுற தாய்களைப்  பத்தின  செய்திகளைப்  படிக்கும்போது,  பிடிப்பில்லாமப்  போன மனசுக்கு  இது மாதிரி  மனுசிங்கதான் ஆறுதல்  தந்துட்டு  இருக்காங்க'' பிரேமா பேசிக் கொண்டே  போக,  வேணு  தடாலென  அத்தாச்சியின்  கால்களில் விழுந்தான்.

பொன்னாத்தா  நெகிழ்ந்து  போய்  அவன்  தோளைப்  பற்றி  தூக்கினாள். 

"என்னய்யா  இதெல்லாம்''

"" நின்னுட்டீங்க  அத்தாச்சி,  உங்க  இடத்துல  இன்னொரு  பெண் இருந்தா, ஒண்ணு  கணவன் இறந்த   சோகத்துல  செத்திருப்பா,  இல்லாட்டி  தனக்கு இன்னொரு  வாழ்க்கையை  அமைச்சுகிட்டு  சுகமா  வாழ்ந்திருப்பா,  ஆனா நீங்க  இது எதுக்கும்  போகாம  மத்தவங்களுக்காக  வாழ்ந்தீங்க. அதான் வாழ்க்கை''

"ஐயா  வேணு,  நான் பெரிய  படிப்பாளியெல்லாம்  இல்லை.  ஆனா  நல்லது கெட்டது  புரியும்.  எவ்வளவு  இழந்தோம்னு யோசிச்சுகிட்டு  இருக்கறதை விட்டுட்டு, இப்போ  உன்  கையில  மிச்சம்  என்ன இருக்குன்னு   யோசி. உன்னோட  வாழ்க்கை  சிறப்பா  அமையும்னு  பெரியவங்க  சொல்லி இருக்காங்க.  நான்  அதைத்தான்  செய்தேன்.  இழந்த வாழ்க்கையைப்  பத்தி கவலைப்படாம, இருக்கிற  மிச்சத்தை  சரியா  பயன்படுத்திக்க  ஆரம்பிச்சேன். அவ்வளவுதான்.

எனக்கான  சுதந்திரம்  இங்கே  இருந்துச்சு...  மகாத்மா  காந்தி  சொன்ன  மாதிரி சுதந்திரம்கிறது  நம்மை நாமே  கட்டுப்பட வச்சுக்கறதைத் தவிர, வேறொண்ணும்  இல்லைங்கறதை  நான் முழுமையா  உணர்ந்தவய்யா, அதான்  இத்தனை  நாள் யாரும்  நாக்குல  பல்லைப் போட்டு ஒரு வார்த்தை என்னை  குத்தம்  சொல்லமுடியாம  வாழ்ந்திருக்கேன்.  அது எனக்கு  திருப்தியா இருக்கு.

என் உறவுகளுக்கும்,  என்னை  சுத்தி  இருக்கறவங்களுக்கும்  என்னால ஆனதையே  செய்திருக்கேன்.  நமக்கு  வாழ்க்கை  போச்சேன்னு  கலங்காம, நம்மகிட்ட  இத்தனை பேர் வாழ்க்கை  இருக்குங்கிற  திருப்தி  இன்னைக்கு இருக்குய்யா''  அத்தாச்சியின்  கண்கள்  பனித்திருந்தது.

வேணுவால்  உணர  முடிந்தது.  அத்தாச்சி போட்ட  இந்தப் பாதை  வெகு நீண்ட பரிமாணத்தில்  எண்ணற்ற  மக்கள் பயணம்  செய்ய  வழிவகுக்கும்  என்ற நம்பிக்கை  பிறந்தது.

பொன்னுத்தாயி  என்ற மிகப்பெரிய  ஆலமரத்தில்  தானும்  ஓர்  அங்கமென்ற எண்ணமே வேணுவுக்கு  பெருமிதமாய்  இருந்தது.  அவள்  தாயுமாகி தந்தையுமானவள்  என்ற  உண்மையை  உணர்ந்தான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புழுதி
மைக்ரோ கதை
பேல்பூரி
சிரி... சிரி...
திரைக் கதிர்