சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

வாழ்கிறார் கிரேஸி மோகன்  

Published: 16th June 2019 01:30 PM

ஜூன் 10 - தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் களேபரங்கள் தொடங்கி இருந்த தருணத்தில்.... ஒர் அற்புதமான சினிமா ஆளுமை நம்மை விட்டுப் பிரிந்து விட்டது. கிரேஸி மோகன் - மேடை நாடகங்களில் பயின்று சினிமாவுக்கு வந்து பிரபலமான இவர், தனது 66-ஆவது வயதில் காலமானார்.
 ஏதோ ஒரு வேலைக்காக அமர்ந்து, அதிர்ஷ்டத்தால் சினிமாவுக்கு வந்தவர் அல்ல கிரேஸி மோகன். பொறியாளராக வாழ்க்கையைத் தொடங்கி கலை தாகத்தால் நாடகத்துக்குத் திரும்பியவர்.
 ரங்காச்சாரி மோகன்
 வேடிக்கை பார்ப்பவர்களும் நாடகத்தில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் தன்மை மேடை நாடகங்களுக்கு உண்டு. அப்படி வந்தவர்தான் மோகன் என இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன்.
 கம்யூனிஸ்ட்டாக இருந்தவர் மயிலாப்பூர் ரங்காச்சாரி. அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் பிரபலமாக இருந்த மோகன் குமாரமங்கலம் நினைவைப் போற்றும் விதமாக தன் மகனுக்கு மோகன் என பெயரிட்டார். ரங்காச்சாரி மோகன் என்பதுதான் அவரது முழுப் பெயர். சென்னை மயிலாப்பூரில் 1952-ஆம் ஆண்டு பிறந்தார்.
 அந்தக் காலக் கட்டத்தில் மயிலாப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேடை நாடகங்கள் மிகப் பிரபலம். பொதுவாக, நாடகம் நடத்தப்படும் இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்து கடை வீதி, திருவிழா மைதானங்கள் என எங்கெங்கு காணினும் நாடகங்கள் அரங்கேறிய காலம் அது.
 பெரிதாக ஒப்பனைகள் எதுவுமின்றி, கதை மாந்தர்களே நடிப்பிடத்தை உருவாக்குவது, உருவங்களை உருவாக்குவது போன்ற தன்மைகள் இந்த நாடகங்களின் சிறப்பு. ஒளியமைப்பு, அரங்கம் என்று எந்தத் தேவையும் இல்லாமல், ஒரு நாடகம் உருவாவதற்கான பொருள் செலவு குறைந்தது. எல்லாவற்றையும் விட இவை மக்கள் பிரச்னைகளைப் பேசின. சமூக சீர்திருத்தங்களைப் பேசின. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், நாடகங்கள் தனது சீரியஸ்தனத்தை விட்டு, கொஞ்சம் நகைச்சுவை பாணிக்கு திரும்பியிருந்த காலம் அது. இதனால் நகைச்சுவை நாடகங்கள் பெருகி வளர்ந்தன.

ஜானகி டீச்சர்
 மோகனின் தாத்தா, அப்பா, அம்மா என யாருக்குமே நாடகம், எழுத்து, சினிமா என ஆர்வம் இருந்ததில்லை. பள்ளி ஆசிரியை ஜானகிதான் மோகனை முதன் முதலாக நாடக மேடையில் ஏற்றி நடிக்க வைத்தார். மோகனுக்கு அப்போது வயது 7. மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதி பள்ளிகளில் அப்போது நடந்த நாடகங்களில் எல்லாம் மோகனை நடிக்க வைத்தவர் ஜானகி டீச்சர். வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் மோகனுக்குப் பொருந்தவில்லை. அவருக்கு இயல்பாகவே நகைச்சுவைத் திறன் இருந்தது என்பதைக் கண்டுபிடித்து அதற்கு ஏற்ற வேடங்களில் நடிக்க வைத்தார் ஜானகி டீச்சர்.
 "அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கௌதமிக்கு பெயர் ஜானகி. "மகளிர் மட்டும்' படத்தில் வரும் ஊர்வசிக்கு பெயர் ஜானகி. "பஞ்ச தந்திரம்' படத்தில் வரும் சிம்ரனின் பெயர் ஜானகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஸ்நேகா பெயரும் ஜானகி என தான் வடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஜானகி என பெயர் சூட்டி மகிழ்ந்தார் கிரேஸி மோகன். குரு தட்சணை!
 ஜானகி டீச்சர் அமைத்துக் கொடுத்த பள்ளி மேடைகளே அவரை, பெரும் நாடக மேடைகளுக்கு பயணப்பட வைத்தது. "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' இதுதான் அவர் எழுதிய முதல் நாடகம். அது அந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்தே அவருக்கு "கிரேஸி' என்ற அடைமொழி வந்து சேர்ந்தது. அப்போது கிரேஸி மோகனின் எழுத்து ஜாலத்தை வியந்த நாடக குழுக்கள் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்த பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றது. இதைத் தொடர்ந்து பல மேடைகளில் ஏற ஆம்பித்தார் கிரேஸி மோகன்.
 நாடகச் சுவரொட்டிகளில் "கிரேஸி எழுதி நடிக்கும்' என விளம்பரம் செய்யும் அளவுக்கு உயர்ந்தார்.
 சினிமாவுக்கு வந்தார்!

சிறிது காலம் எஸ்.வி.சேகரின் நாடகக் குழுவில் பங்காற்றி வந்த கிரேஸி மோகன் பின்னர், "கிரேஸி கிரியேசன்ஸ்' என்ற தனி நாடகக்குழுவை தொடங்கி நடத்தினார். சுமார் 30-க்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றி அசத்தினார். "சாக்லேட் கிருஷ்ணா' என்ற நாடகம் சுமார் 500 முறைகளுக்கு மேல் சென்னை சபாக்களில் மேடையேற்றப்பட்டது.
 பாலசந்தரின் "பொய்க்கால் குதிரை' படம்தான் அவர் கோலிவுட்டுக்குள் நுழைந்த முதல் படம். அந்தப் படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி பாலசந்தரின் பல படங்களில் பணியாற்றினார்.


 தவிர்க்க முடியாத கதாசிரியர்
 பாலசந்தர் படங்களில் பணியாற்றிய காலத்தில் நடிகர் கமல்ஹாசனோடு நட்பு கிடைத்தது. இருவரின் உரையாடல்கள், சினிமா குறித்த மாற்று சிந்தனைகள் அப்போதைய தமிழ் சினிமாவை கொஞ்சம் தடம் மாற்றின.
 "அபூர்வ சகோதரர்கள்' படம் தொடங்கி "மைக்கேல் மதனகாமராஜன்', "மகளிர் மட்டும்', "சதிலீலாவதி', "அவ்வை சண்முகி', "காதலா காதலா', "பஞ்ச தந்திரம்', "தெனாலி', "தசாவதாரம்' உள்ளிட்ட பல படங்களில் கமலோடு இணைந்து பணியாற்றினார். கமல் - கிரேஸி கூட்டணியில் வெளியான பல படங்கள் நகைச்சுவையின் தனித்துவமாக விளங்கின. "டைமிங் காமெடி' என்ற பாணியை தனது எழுத்துகளில் கொண்டு வந்தார் கிரேஸி மோகன்.
 தொடர்ந்து பல படங்களில் தன் நகைச்சுவை நயத்தை திரைக்கதையில் கொண்டு வந்த கிரேஸி மோகன், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாசிரியராக உயர்ந்தார்.
 ஆன்மாக்களில்...


 சினிமாவில் பல உயரங்கள் கண்டாலும், நாடகங்களில் பணியாற்றவே எப்போதும் விரும்பினார். கே. பாலசந்தரின் "நவகிரகம்', வாலி எழுதிய "கோல்டன் சிட்டி', விசு எழுதிய "ஆண்டாள் அவள் ஆண்டாள்' எனப் பல நாடகங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடித்து வந்தார். மிகப் பெரிய கலை ஆளுமை மறைந்து விட்டார் என்பதை விட, எங்கோ நடக்கும் மேடை நாடகங்களின் ஆன்மாக்களில் கிரேஸி மோகன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்!
 - ஜி.அசோக்
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புழுதி
மைக்ரோ கதை
பேல்பூரி
சிரி... சிரி...
திரைக் கதிர்