திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

திரைக் கதிர்

DIN | Published: 16th June 2019 01:42 PM

பாலிவுட்டின் கனவுக்கன்னிகளில் மாதுரி தீட்சித்தும் ஒருவர். சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாக்கப்பட்டது போல், இவரின் வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளது. மாதுரி தீட்சித்தின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சில சம்பவங்களைத் தொகுத்து திரைப்படமாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இதையறிந்த மாதுரி தீட்சித், தன் வாழ்க்கையைப் படமாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஏன் அனுமதி கொடுக்கவில்லை என்று அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "தற்போது என் வாழ்க்கைச் சம்பவங்களை சினிமா படமாக உருவாக்க வேண்டாம். காரணம், இன்னும் என் வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் அனுமதி தர மறுத்துவிட்டேன்'' என்று தெரிவித்துள்ளார். கடந்த 35 வருடங்களாக பாலிவுட் படங்களில் நடித்து வரும் மாதுரி தீட்சித், தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக "இன்ஜினியர்' என்ற படத்தில் நடித்தார். ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கிய இப்படம், 80 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் கைவிடப்பட்டது.
 
 தமிழில் "காஞ்சனா' படத்தின் 3 பாகங்களை இயக்கியவர், ராகவா லாரன்ஸ். இந்த மூன்று பாகங்களுமே இங்கு பெரும் வெற்றியைப் பெற்றன. "காஞ்சனா' படத்தின் முதல் பாகத்தை, "லட்சுமி பாம்' என்ற பெயரில் ஹிந்தியில் இயக்கத் தொடங்கினார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. பிறகு திடீரென்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. தன்னிடம் அனுமதி பெறாமல் போஸ்டரை வெளியிட்டதாகவும், தனக்கு சுயமரியாதை முக்கியம் என்றும் சொல்லி ஆவேசப்பட்ட ராகவா லாரன்ஸ், ஹிந்தி ரீமேக்கை இயக்கும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம், ராகவா லாரன்சுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில் சுமுக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் "லட்சுமி பாம்' படத்தை இயக்குவதாக தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
 
 ஒரு மொழியில் ஹிட்டாகும் படம் மற்றொரு மொழியில் ரீமேக் ஆகிறது. நடிகை அனுஷ்காவின் கவனம் தற்போது உள்ளூர் மொழியிலிருந்து வெளி நாட்டு மொழிப் படம் மீது திரும்பியிருக்கிறது. உடல் எடை அதிகரித்ததால் கடந்த ஓர் ஆண்டாக புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமலிருந்த அனுஷ்கா தற்போது "நிசப்தம்' என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார்.
 ஹேம்நாத் மதுக்கர் இயக்கும் இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. அடுத்தடுத்து புதிய படங்கள் ஒப்புக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் அனுஷ்கா. அதற்காக நிறையக் கதைகளைக் கேட்டு வருகிறார். இயக்குநர் ஒருவர் அனுஷ்காவிடம் ஸ்பானிஷ் மொழி படக் கதை ஒன்றை சொல்லி இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக கூறினார். அது அனுஷ்காவைக் கவர்ந்தது. "ஜூலியாஸ் ஐஸ்' என்ற இப்படத்தில் நடிக்க அனுஷ்கா சம்மதம் சொல்லியிருக்கிறார். இரட்டை வேடங்களில் அனுஷ்கா நடிக்கவுள்ள இப்படம் பழிவாங்கும் கதையாக உருவாகவிருக்கிறது.
 
 சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால், மேக்கப் இல்லாத ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது குறித்து ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்த நிலையில், "இன்றைய சூழ்நிலையில் மனிதர்களால் தங்களை அடையாளம் காண முடியவில்லை. காரணம், உடல் அழகைக் கண்டு மயங்கும் உலகில் வாழ்வதால் இருக்கலாம். சமூக ஊடகங்கள் யாரை, எப்போது முன்னிலைப்படுத்துகின்றன என்ற விஷயத்தில் நம் சுயமரியாதையை விழுங்கியதால் கூட இருக்கலாம். அனைவருக்கும் கச்சிதமான உடலை ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்கு தரும் அழகு சாதனப் பொருட்கள் வாங்க, நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. தற்பெருமையான விஷயங்களை இப்போது எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. நம்முடைய வேறொரு பிம்பத்தைப் பெற முயற்சிப்பதை விட, நமது உண்மையான முகத்தை ஏற்றுக்கொண்டால் சந்தோஷமாக இருக்க முடியும். மேக்கப் செய்வது நம் புறத்தோற்றத்தை அழகாகக் காட்டலாம். ஆனால், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதில் மட்டுமே உண்மையான அழகு இருக்கிறது'' என்றார்.
 
 நடிகர், நடிகைகள் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்துகள் தெரிவிப்பது சகஜம். சிலர் அரசியலில் இறங்குவதும் இயல்பாகி விட்டது. இந்தநிலையில் நடிகை ஒருவருக்கு அரசியல் ஆசை கிடையாதாம், ஆனால் பிரதமர் ஆக வேண்டுமாம். சர்ச்சைக்கு பேர் போன நடிகைகளில் ஒருவராக மாறிக்கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவர் தன்னைவிட 10 வயது இளையவரான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனûஸ காதலித்து மணந்தார். சில வாரங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி பின்னர் அது பிசுபிசுத்துப்போனது. சமீபத்தில் பிரியங்காவிடம், "அரசியலில் குதிப்பீர்களா?'' என்றதற்கு அதிர்ச்சியான பதில் அளித்தார். "எனக்கும், என் கணவர் நிக் ஜோனஸுக்கும் அரசியல் சார்ந்த விஷயங்கள் பிடிக்காது. ஆனாலும் நான் பிரதமர் பதவிக்கும், நிக் ஜோனஸ் ஜனாதிபதி பதவிக்கும் போட்டியிட விரும்புகிறோம். இருவரும் இணைந்து ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன்'' என குறிப்பிட்டார் பிரியங்கா சோப்ரா.
 - ஜி.அசோக்
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புழுதி
மைக்ரோ கதை
பேல்பூரி
சிரி... சிரி...
திரைக் கதிர்