செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தைகளின் உடல், மன வலிமை!

DIN | Published: 16th June 2019 01:52 PM

என் மகளுக்கு வயது 2. படிகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் எங்கள் கைகளைப் பிடித்து கொண்டு தான் ஏறுகிறாள், இறங்குகிறாள். 1 வயது 6 மாதங்களில் தான் நடக்க ஆரம்பித்தாள். வெளியில் நடக்கவே மாட்டாள். கையைப் பிடித்து தான் நடப்பாள். வீட்டின் உள் நடக்கிறாள், ஓடுகிறாள். இது எதனால்? என்ன செய்ய வேண்டும்? ஆயுர்வேதத்தில் இதற்கு ஏதேனும் வழி உள்ளதா?
 - தீபா , ஆனைமலை.
 தனக்குரிய பாதுகாப்பை வீட்டினுள் பெறுவதைப் போல, படிகளில் ஏறும் போதும் இறங்கும்போதும், வீட்டின் வெளிப்புறமும் கிடைக்கவில்லை என்று குழந்தையின் உள் மனதில் அச்சம் உள்ளதையே இதன் மூலம் அறிய முடிகிறது. படிகளையும், பொது இடங்களில் புதிய முகங்களையும் பார்க்கும் போது ஏற்படும் பயம் வீட்டினுள் ஏன் ஏற்படவில்லை என்ற விஷயம் குழந்தைகளின் மனதிற்கே உரிய விஷயமாகயிருந்தாலும், பழகிப்போன சாமான்களுக்கு இடையே ஓடுவதையும் நடப்பதையும் சம தரையில் தானறிந்த மனிதர்கள் தனக்கு அரணாக இருப்பார்கள் என்ற தைரியத்தை வீட்டினுள் குழந்தை உணர்கிறது. அதற்குக் காரணம் தான் முன்பு ஒரு முறை விழுந்த போது அப்பாவோ, அம்மாவோ தன்னை உடனே தூக்கிக் கொஞ்சியதை தன் மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ளும் சிறப்பைக் குழந்தைகள் பெற்றிருப்பதால் தான்.
 இதை மாற்ற, தன்வயதொத்த உறவினர் குழந்தைகளையோ, நண்பர்களின் குழந்தைகளையோ கூடவே சேர்த்து விளையாடச் செய்வது மிகவும் நல்லது. பூங்காக்களிலுள்ள படி ஏறி இறங்கும் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு, மணலில் கோபுரம் கட்டுவது, ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டுகளை தன் வயதொத்த பிள்ளைகளுடன் குழந்தை செய்யும் போது, சிறிது சிறிதாக அச்சத்திலிருந்து விடுபட்டு, மற்ற குழந்தைகளுக்குச் சமமான தைரியத்தை தானாகவே வளர்த்துக் கொண்டுவிடும். எங்கே என் குழந்தைக்கு அடிபட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் பல பெற்றோரும் குழந்தைகளை விளையாட விடாமல் பொத்திப் பொத்தி வளர்க்கிறார்களோ, அங்கே குழந்தைகளுக்கு மனதளவில் நம்பிக்கையும் தைரியத்தையும் ஊட்டத் தவறுகிறார்கள். "ஸ்வாதந்திரியம்' எனும் மன மகிழ்ச்சியைத் தரும் விஷயம் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியோர்களும் கூட விரும்பும் விஷயமாகும்.
 தங்கள் குழந்தை சற்று வயதேறிய பிறகே நடப்பதற்குத் தொடங்கியிருப்பதால், உடல் வலுவையும் மனவலிமையையும் பெறுவதற்கு சற்றுத் தாமதமாகலாம். உடல் மற்றும் மனவலிமை தரும் ஆயுர்வேத மருந்துகள் பல உள்ளன. பசியை நன்றாகத் தூண்டிவிடும் வழிகளையும் உடல் வலுவைத் தரும் மூலிகைத் தைலங்களின் விவரங்களையும் நீங்கள் நேரடியாக ஆயுர்வேத மருத்துவரின் வாயிலாக அறிந்து அதன்படி சிகிச்சைகளை மேற் கொள்வதே சிறந்தது.
 குழந்தைகளுக்கு மட்டுமே தரக்கூடிய சில தரமான ஆயுர்வேத மருந்துகளாகிய ரஜன்யாதி சூரணம், அரவிந்தாஸலம், பாலாமிருதம், லாக்ஷôதிதைலம், சாரஸ்வதாரிஷ்டம் போன்றவை உங்களுடைய குழந்தைக்கு உதவிடக்கூடும். ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் நவரக்கிழி, தலப்பொதிச்சல் போன்ற வைத்திய முறைகளும் நல்ல பலனைத் தரக் கூடியவை.
 ஒரு சில உணவு முறைகளின் மூலமாகவும் குழந்தைக்கு மனோ தைரியத்தையும், உடல் வலுவையும் கூட்ட முடியும். சாத்வீகமான உணவு முறைகளாகிய பருப்பு சாதம், பசு நெய் , பசும் பால், பசும் தயிர், பசு வெண்ணெய், மோர், பச்சைக் கறிகாய்கள், இனிப்புச் சுவையுடைய தின்பண்டங்கள் ஆகியவை குழந்தைக்கு நல்ல மனோ பலத்தையும் உடல் வலுவையும் தரக்கூடியவை. கறிகாய்களை சிறிய அளவில் நறுக்கி நன்கு வேக வைத்த பிறகே, பருப்பு சாதத்துடனோ, ரசம் சாதத்துடனோ கொடுக்க வேண்டும். ஆறிப்போன நிலையில் உள்ள பழைய உணவுப் பொருட்களை மறுபடியும் சூடு செய்து கொடுப்பது மன தைரியத்தை இழக்கச் செய்யும் வகையில் செயலாற்றக்கூடும் என்பதால் அவற்றைக் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியோர்களும் தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.
 நல்லெண்ணெய்யை வெது வெதுப்பாக உடலெங்கும் தடவி சிறிது நேரம் காலை வெயில் படும்படி அமர்ந்திருக்கச் செய்து அதன் பிறகு வெந்நீரில் குளிப்பாட்டி அன்றைய தினம் பூண்டு ரசம், கறிவேப்பிலைத் துவையல், சுட்ட அப்பளம் என்று சாப்பிட்டு உடலிலுள்ள வைட்டமின் டி சத்து குறையாமல் எலும்புகளை வலுப்படுத்திக் கொண்ட நம் முன்னோர் செய்த முறைகளை தங்கள் மகளுக்கும் நீங்கள் செய்யலாம்.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புரிதல்
 

 எளியமுறை... சிறந்த பயன்!
 

சிரி... சிரி... 

திரைக்கதிர்
 

மைக்ரோ கதை