செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

விவசாயி

By வி.குமாரமுருகன் | DIN | Published: 09th June 2019 02:09 PM

மேகங்கள் கருத்து, திரண்டு மழையைக் கொட்ட தயாராகி நின்றன. மின்னலின் வெளிச்சத்துக்கு பயந்து கதிரவன் மெதுவாக மேகக் கூட்டத்திற்குள் தன்னை மறைத்துக் கொண்டது.

வானத்தின் மேலே பார்வை பதித்த கருப்பசாமி, ""ஏலேய், அந்த உரச்சாக்கை அள்ளிக் கொண்டாடா'' என்று தனது மகனைப் பார்த்து கத்தினார். ""காலையில் களத்து மேட்டுக்குள்ள இறங்கவே முடியல. அவ்வளவு வெயில்'' என்று முணுமுணுத்த கருப்பசாமி, ""ஏம்மா வேகமா கதிரை அறுத்துப் போடுங்கம்மா'' என்றவாறே குவித்து வைக்கப்பட்டிருந்த நெற்கதிர்களை தலையில் சுமந்தவாறே சாலைக்கு வேக,வேகமாக ஏறினார். 

""அப்பவே சரியான முறுக்கலா இருந்துச்சு. மழை இன்னைக்கு கொட்டோ,கொட்டுன்னு கொட்டும்னு நினைச்சது சரியாத்தான் போச்சு'' என்றவாறே நெற்கதிர்களை வேகமாக அறுத்துப் போடத் தொடங்கினர் பொம்பளையாள்கள். கருப்பசாமி வேக,வேகமாக கதிர்களை அள்ளிக் குவித்தவாறே பொம்பளையாள்களை துரிதப்படுத்தினார். 

கருப்பசாமியின் மகன் சைக்கிளில் அரைப்பெடல் அடித்தவாறே உரச்சாக்குகளை அள்ளிக் கொண்டு வரவும் மழை கொட்டவும் சரியாக இருந்தது. பொம்பளையாள்கள் அறுத்த நெல் கதிர்களை அப்படியே தலைமாடாக வைத்துக் கொண்டு சாலையில் கொட்டி உரச்சாக்குகளை வைத்து மூடினர். 

ஆனாலும், இன்னும் கொஞ்சம் நெல் கதிர் அறுக்கப்படாமலும், அறுத்த நெல்கதிர்கள் கரையேற்றப்படாமலும் இருந்தன. கருப்பசாமிக்கு நெஞ்செல்லாம் பதைபதைத்தது. இன்னும் கொஞ்ச நேரம் மழை பொறுத்திருக்க கூடாதா? நெல்கதிரை முழுசா கரையேத்தி இருக்கலாமே என்று புலம்பியவாறே மரத்தடியில் ஒதுங்கினார். பொம்பளையாள்களும் கிடைத்த இடத்தில் நின்று கொண்டு மழை வெறிக்குமா? என வானத்தை பார்த்தபடி  இருந்தனர். 

கருப்பசாமி பெரும் விவசாயி கிடையாது. அவரது தாத்தா கூலி வேலை செய்து வந்தவர்தான். அவரது அப்பா கடுமையாக வேலை செய்து இந்த குளத்துப் பாசனத்தில் கொஞ்ச நிலத்தை வாங்கிப் போட்டிருந்தார். அதை கண்ணும் கருத்துமா கவனித்து விவசாயம் செய்து வந்தார் கருப்பசாமி. நல்ல மழை பெய்து குளத்தில் தண்ணீர் பெருகினால்தான் அங்கு விவசாயம் செய்ய முடியும். கிணறு வெட்டி பம்புசெட் போட  எல்லாம் வசதியில்லாத கருப்பசாமிக்கு மழை பெய்தால்தான் விவசாயமும், வாழ்க்கையுமே.  

கருப்பசாமியும் அவரது மனைவியும், களை எடுக்கதுலயிருந்து எல்லா வேலைகளையும் செஞ்சுதான் இந்த மண்ணில விவசாயத்தை பார்த்துக்கிட்டு வராங்க. உழுதவன் கணக்குப் பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுங்கிற சொலவட மாதிரிதான்  இவங்க வாழ்க்கையும் இருண்டு கிடக்கு. கைக்கும், வாய்க்குமா வருமானம் சரியா போயிருதுன்னு இவங்க சொல்லாத நாளே கிடையாது. 

பிள்ளைக இரண்டும் பக்கத்திலுள்ள கவர்ன்மெண்ட் ஸ்கூலுக்கு போயிட்டு வருதுங்க. அதுங்களுக்கு கூட நினைச்சத செஞ்சு கொடுக்க முடியலேங்கிற கவலை கருப்பசாமிக்கு எப்போமே உண்டு.

"" யோவ், மழை வெறிச்சிட்டுயா'' என்ற மனைவியின் குரல் கேட்டு வயலுக்குள் ஓடினார் கருப்பசாமி. பொம்பளையாள்களும் வயலுக்குள் கிடந்து நனைந்து போன நெல்கதிர்களை காயப் போடுவதற்காக சாலைக்கு எடுத்து செல்லத் தொடங்கினர். சிறிது நேரமே என்றாலும் சட... சடவென பெய்த மழையால் கதிர்கள் வயலுக்குள் இறைந்து கிடந்தன. கவலையோடு அதைப் பார்த்த கருப்பசாமி பெருமூச்சு விட்டுக் கொண்டார். ""ஏலே, அடுத்த மழை வருததுக்குள்ள சோலியை விரசலா முடிக்கணும்''னு சொன்னவாறே கதிர் அறுக்கத் தொடங்கினார் அவர். 

ஒரு வழியா நெல்லைக் கரை சேர்த்த பிறகுதான் அவருக்கு நிம்மதியே வந்துச்சு. இப்பல்லாம் நெல்ல வீட்டுக்கு கொண்டு போற கவலையில்லை. களத்து மேட்டுக்கே ஏஜெண்ட் வந்து விலை பேசி முடிச்சிருவாங்கன்னு நினைத்த கருப்பசாமிக்கு, இந்த ஏஜெண்ட்கள், மழைல நெல் நனைஞ்சிருச்சுன்னு சொல்லி விலையைக் குறைச்சுப்புடுவானுங்களேங்கிற கவலையும் வந்து வேதனையை ஏற்படுத்தியது. 

பொம்பளையாள்களும், மம்பட்டியாள்களும் சம்பளத்தைக் கேட்டு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். ஏஜெண்ட் வரட்டும் அவருட்ட அட்வான்ச வாங்கி தர்றேனு சொல்லிய கருப்பசாமி, வடை, டீ வாங்க மகனை அனுப்பி வைத்தார். இப்பெல்லாம் காலையிலும், சாயங்காலமும் வடை, டீ இல்லைன்னா யாரும் வேலைக்கு வர்றதுயில்லைங்கிறது அவருக்கு நல்லாவே தெரியும். இன்னும் சில இடங்கள்ல எல்லாம் வண்டி வச்சு கூட்டிட்டு வந்து வண்டி வச்சு கொண்டு போய் விடறதெல்லாம் நடக்கு. 

"நமக்கு பரவாயில்ல வெறும் காபித் தண்ணிதான' என்று மனதுக்குள் நினைக்கும் போதே, நெல் ஏஜெண்ட் வந்து நெல் மணிகளை கைக்குள்ள போட்டு கசக்கிப் பார்த்தார். அவர் என்ன சொல்லுவாரோன்னு வெறித்து பார்த்த கருப்பசாமியிடம், "" என்னய்யா மழையில நனைய விட்டுட்டீர் போல இருக்கே. இதை கொண்டு போய் காய வைச்சாத்தான் விக்கவே முடியும். அந்த காய்சலுக்கு நெல் எடை குறைஞ்சிரும்''னு சொல்லி விலையைக் குறைத்து கேட்கவும் கருப்பசாமிக்கு வேதனைகூடியது. 

அரை மணி நேரம் பேசினதில, ""சரி...சரி... இந்த விலை கட்டுப்படியாகாதுதான், பரவாயில்லை எப்பவுமே என்ட்டதான் நெல்ல கொடுக்கிறீரு. அதனால் வாங்கிக்கிறேன். ஆனா, இத காய வைச்சுத்தான் விக்கணும், ரூபாய்க்கு அவசரப்படக்கூடாது''ன்னு கறாராப் பேசிட்டு எடை போடத் தொடங்கினார் ஏஜெண்ட்.

""ஐயா, முதல்ல அட்வான்சா கொஞ்சம் ரூபாய் கொடுங்க. கதிர் அறுத்தவங்களுக்கு சம்பளம் கொடுக்கணும்''னு கருப்பசாமி சொல்லவும். 

""யோவ், என்னய்யா இது.. நான் இத கொண்டு போய் வேற ஆளுக்கு மாத்தி விட்டாத்தானே எனக்கு ரூபாய் கிடைக்கும். இப்ப ஏதுய்யா என்ட்ட பணம். வேணும்னா வேற யாருகிட்டயாவது நெல்லை வித்துக்கிடுதீரா? நனைஞ்ச நெல் வேற..''  என ஏஜெண்ட் கறாராகப் பேசினார். 

""ஆமா, எல்லா ஏஜெண்டும் கூட்டு வைச்சுக்கிட்டுத்தான வியாபாரமே செய்றீக. பிறகு வேற யாரு இனி எங்கிட்ட வாங்கப் போறா'' என்று கூறிய கருப்பசாமி வானத்தை நோக்கி ஏதோ சபித்தார். பிறகு பொம்பளையாள்ககிட்ட, "" வீட்டுக்குப் போங்க வந்து தர்ரேன்''னு சொல்லி விட்டு எடை போடச் சொன்னார். 

ஒவ்வொரு வாளி எடைக்கும் அவர் சரியா போடச் சொல்லியும் எடை போடுபவரோ அதையெல்லாம் சட்டை செய்யாமல் கூடுதலா இரண்டு கை நெல்ல போட்டே இறக்கினார். கணக்கு வரவு செலவு முடிஞ்சு வீட்டுக்கு வந்தவர், முதல் வேலையா சம்பளத்துக்காக தெரிந்த ஒருவரிடம் வட்டிக்கு வாங்கி மனைவியிடம் கொடுத்து அனுப்பினார். 

""ஏஜெண்ட் ஐயா, தீபாவளிக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு, நெல்லு போட்டு மாசம் ஒண்ணாச்சு. நடையாய் நடந்தாச்சு, பணம் வந்தபாடில்லை. பிள்ளைங்களுக்கு தீபாவளிக்கு நாலு நல்லது செய்யணும். புதுத்துணி எடுத்தாவது கொடுக்கணும். உங்க பேச்சை நம்பி வட்டிக்கு வேற பணத்தை வாங்கி சம்பளத்துக்குக் கொடுத்துட்டேன். வட்டி வேற கொடுக்கணும்''னு சொன்ன கருப்பசாமிட்ட,  ""நான் என்ன செய்ய, நெல் நல்லா நனைஞ்சு போச்சு, வாங்கினவனுக்கு பெரிய நஷ்டமாம். பணம் கொடுக்க மாட்டேங்கிறான்'' ஏஜெண்ட் சொல்லவும், வெகுண்டார் கருப்பசாமி.

""என்னய்யா, ஏதோ ஓசுக்கு கேக்குற மாதிரி பேசுற. என்ட்ட வாங்கின நெல்லுக்குத்தானய்யா காசு கேக்கிறேன். நெல் சரியில்லைனா திருப்பி கொடுத்திர வேண்டிதானே? அதையே எப்பவும் சொல்லிக்கிட்டிருந்தா என்னய்யா அர்த்தம். ஏழைன்னா அவ்வளவு இளக்காரமா? ஊர் பண்ணை வீட்டு நெல்லையும் அன்னைக்கு மழைலதான் அறுத்தாங்க. அத  நல்ல விலைக்குதானே வாங்கின. அந்த நெல்லுக்கு முழுத் தொகையையும் கொடுத்திட்டேங்கிறது எனக்கு தெரியாதா?  எங்க வயித்துல அடிக்காத.. நல்லாயிருக்க மாட்டே'' ன்னு சொன்ன கருப்பசாமி ஏஜெண்ட் முகத்தை பார்க்காமலேயே கிளம்பினார். 

தீபாவளி. ஊரெல்லாம் அல்லோகலப்பட்டுக்கிட்டிருந்தது. பட்டாசு சத்தம் காதைப் பிளந்தது. எப்படியும் ரூபாய் வந்து விடும் என்றிருந்த கருப்பசாமிக்கு கடைசி வரை பணம் வந்தபாடில்லை. பிள்ளைகளுக்கு புதுத்துணியும் எடுக்க வழியில்லை. கண்ணில் நீர் முட்டியது கருப்பசாமிக்கு. என்ன நினைத்தாரோ? திடீரென்று பழைய தகரப் பெட்டியை திறந்து அதிலிருந்த இலவச வேட்டியை எடுத்து வந்து அதை இரண்டு துண்டுகளாக்கினார். இரண்டு பையன்களையும் கூப்பிட்டு அவர்கள் இருவருக்கும் அதை கட்டி விட்டு, விட்டு , ""இதை தாண்டா உங்க அப்பனால கொடுக்க முடிஞ்சது'' என்று சொல்லி வாய் பொத்தி அழுதார் கருப்பசாமி. பையன்கள் இருவரும் அப்பா இடுப்பில் கட்டி விட்ட துணியை பிடித்தவாறே அம்மாவின் முந்தானைக்குள் முகம் புதைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புரிதல்
 

 எளியமுறை... சிறந்த பயன்!
 

சிரி... சிரி... 

திரைக்கதிர்
 

மைக்ரோ கதை