முயற்சி

இரவு மணி 11 இருக்கலாம். அப்போது தான் ஆழ்ந்த தூக்கத்திற்கு ஆயத்தமாகி அரை மயக்க நிலையை அடைந்த நேரத்தில் சுந்தர்ராஜனின் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனிலிருந்து
முயற்சி

இரவு மணி 11 இருக்கலாம். அப்போது தான் ஆழ்ந்த தூக்கத்திற்கு ஆயத்தமாகி அரை மயக்க நிலையை அடைந்த நேரத்தில் சுந்தர்ராஜனின் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனிலிருந்து "குறையொன்றுமில்லை – மறை மூர்த்தி கண்ணா'" என்ற பாடல் ஒலித்தது. தூக்கம் "சட்'டென்று கலைய, திடுக்கிட்டு எழுந்த அவர், இந்த அகால நேரத்தில் யார் போன் செய்கிறார்கள்? என்ற கேள்விக்குறியுடன் போனை எடுத்து, சற்றுத் தடுமாறிய குரலில் "ஹலோ'' என்றார். "
 "அப்பா நான் தான் கோவிந்தராஜ் பேசறேன். என்னை ஆஸ்பத்திரியிலே அவசர வார்டுலே சேர்த்திருக்காங்க''" என்ற மகனின் குரலைக் கேட்டதும், "என்னப்பா என்ன ஆச்சு? உடம்புக்கு என்ன?''" என்று பரபரப்புடன் கேட்டார்.
 ""வேலை தேடி அலைஞ்சு ராத்திரி நேரங்கழிச்சு 10 மணிக்கு மேல் ஒரு ஹோட்டல்லே டிபன் சாப்பிட்டு வந்தேன்... வீட்டுக்கு வந்தவுடனேயே, வாந்தி எடுத்து ஒரு மாதிரி தலை சுத்தி மயக்க மாயிட்டேன்... அப்புறம் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி, என்னை இங்கே கோடம்பாக்கம் ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்க... கூட யாரும் வரல்லப்பா... நான் மட்டும் தான் இருக்கேன்... குளுகோஸ் ஏத்தப்போறாங்க''" என்று விட்டு விட்டுப்பேசினான்.
 "சரிப்பா கவலைப்படாதே... சரியாகப்போயிடும்'' என்றார்.
 "ஃபுட்பாய்சன் ஆகிட்டதுன்னு சொன்னாங்கப்பா. நான் நாளைக்குப் பேசறேன்'' என்று போனை ஆப்செய்யும் ஒலி கேட்டது. சுந்தரராஜன் பெருமூச்சு விட்டபடி "ஹும்.. இவனுக்கு ஒரு விமோசனம் வரக் கூடாதா?'" என்று புலம்பியபடி கண்களை மூடி தூக்கத்தைத் தொடர முயற்சித்தார்.
 நிம்மதியாக அவரால் எப்படி தூங்க முடியும்? முன்பு வாழ்க்கையில் எப்போதாவது பிரச்னைகள் வந்தது போக, இப்போது பிரச்னைகளுக்கு நடுவே தான் வாழ்க்கையே ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பே அவரது பையனுக்கு வேலை போய்விட்டது. அவனுக்கும் நாற்பது வயது மேலாகிவிட்டது. திருமணமாகி ஒரு பையனுடன் சென்னையில் குடும்பத்துடன் இருக்கிறான். அவனது மனைவி கோமதி ஒரு நல்ல கம்பெனியில் பத்து வருடமாக உயர்ந்த பதவியில் இருக்கிறாள். இவனை விட அவளுக்கு 5000 ரூபாய் கூடுதலாகச் சம்பளம். தினம் ஸ்கூட்டரில் 40 கிலோ மீட்டர் பயணம் செய்து போய் வருகிறாள். சமீபகாலமாக இவனை மதிப்பதே இல்லை என்று அடிக்கடி போனில் புலம்புகிறான்.
 இவனும் பி.எஸ்ஸி படித்து அதற்குமேல் எம்.பி.ஏ. படித்து வேலைக்கு அலைந்து ஏதோ ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். அஸிஸ்டென்ட் மேனேஜர் வேலை கிடைத்தது. அரசாங்க வேலை, பாங்க் வேலைகளுக்கெல்லாம் அப்ளிகேஷன் வாங்கி பரீட்சைகள் எழுதியும் இவனுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரவே இல்லை. என்ன செய்ய? கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டு வரும்போது, திடீரென்று கம்பெனியை இழுத்து மூடி விட்டார்கள்.
 மருமகள் கோமதிக்கு அவளது அப்பா மீது மிகவும் பிரியம் அதிகம். அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்து பத்து நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று, தனியாக இருக்க முடியாமல் மகள் வீட்டுகே வந்துவிட்டார். ""கோமதியும் "என் அப்பாவை அவரது இறுதிக்காலம் வரை நான் தான் பார்த்துக் கொள்ளப் போகிறேன். அதற்கு அனுமதிக்க வேண்டும்''" என்று இவனிடம் கேட்க, இவனும் மனமிரங்கி "சரி'' என்று ஒத்துக்கொண்டான். மாமனார், மாமியாருடன் இப்போது சமீபகாலமாய் மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகிறான். கோமதியின் அப்பா மத்திய அரசு அதிகாரியாக இருந்ததால், நல்ல பென்ஷன் தொகை மாதந்தோறும் வருகிறது. ஆகவே இவனால் எதிர்ப்புச் சொல்ல முடியவில்லை.
 கடந்த இரண்டு மாதமாக வேலை இழந்த இவனை வீட்டில் மாமியாரும் மதிப்பதில்லையாம். காலையில் காப்பி மட்டும் கிடைக்கும். டிபன், சாப்பாடு எல்லாம் வெளியில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நண்பர்களிடம் கடன் வாங்கி, வேலைக்கு இன்டர்வியூ போவது, வெளியூர் செல்வது, அப்ளிகேஷன் போடுவது இப்படி அலைந்து கொண்டிருக்கிறான். இந்த லட்சணத்தில் இன்று ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டார்கள். யாரும் போகவும் இல்லை.
 இதில் வேடிக்கை என்னவென்றால், கோவிந்த ராஜனின் மாமனாருக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் இவர் இருக்கலாமே என்று சுந்தரராஜன் நினைத்தார். பையன்களிடம் அவருக்கு நம்பிக்கை இல்லையாம். அவர்களும் அவரை மதிப்பதில்லையாம். அடிக்கடி அவரிடம் ஏதாவது பண உதவி கேட்டு வந்து கொண்டிருந்ததால் அவர்களை தொடர்பு கொள்வதையே நிறுத்திவிட்டார். கோமதி தான் அவருடன் ஆஸ்பத்திரி செல்வது, மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொடுப்பது என்று மிகவும் பாசத்துடன் இருக்கிறாளாம். இருந்து விட்டுப்போகட்டும். அதற்காக கட்டிய கணவனை மதிக்காமல், இப்படித் திண்டாட விடுவதா? நல்ல வேலையில் சேர்ந்த பிறகுதான் வீட்டில் சாப்பிடலாம் என்று கோமதியே ஒரு நாள் கோபத்துடன் சொல்லி விட்டதாக இவன் போனவாரம் போனில் புலம்பித் தீர்த்தான்.
 இரண்டு நாட்கள் கழித்து மாலையில் கோவிந்தராஜன் மறுபடியும் போன் செய்தான். "
 "என்னப்பா செளகரியமாயிருச்சா?" எப்படி இருக்கே?'' என்று சுந்தரராஜன் விசாரித்தார்.
 "பரவாயில்லைப்பா... என்னை டிஸ்சார்ஜ் செய்யறேன்னு சொல்லிட்டாங்க. ஆனா ஆஸ்பத்திரிக்கு இன்னிக்குள்ளே ரூ.30,000 பணம் கட்டணும்." அதான் என்ன பண்றதுன்னு தெரியலை கோமதிக்கு போன் பண்ணினேன். போன் எடுக்கலை, "வீட்டுக்கு வர வேண்டாம்... இனிமேல் வெளியிலேயே தங்கவும்" என்று மெசேஜ் அனுப்பியிருக்கா. "முக்கியமான உடைகளை மட்டும் எடுத்துச் செல்லவும்னு வந்திருக்குப்பா. என் நண்பன் குமார் கிட்டேதான் பணம் கொண்டு வரச் சொல்லியிருக்கேன்'' என்றான்.
 சுந்தரராஜனுக்கு அதைக் கேட்டதும் தலை சுற்றிக் கொண்டு, மயக்கம் வரும்போல் இருந்தது. அவருக்கு வயது 78- மனைவிக்கு வயது 74. அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அவருக்கு முதுமையில் நிம்மதியாக காலத்தை ஓட்டும் அளவுக்கு பென்ஷன் வந்து கொண்டிருந்தது. கோவிந்தராஜன் ஒரே பையன்தான். அவனது நிலை இப்படி இருக்கும் போது அவர் எப்படி நிம்மதியாக இருப்பார்?
 ஒரு வாரம் கழிந்து மறுபடியும் கோவிந்தராஜன் பேசினான். "
 ""நான் கோமதியுடன் பேச எவ்வளவோ முயற்சி செய்தேன். வீட்டுக்குப்போய் நின்றவுடன், எனக்கு வேண்டிய சாமான்களை அவளே எடுத்து வைத்திருந்தாள். அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறச் சொல்லிவிட்டாள். பையனைக் கூட பார்க்க விடவில்லை. அவன் பள்ளிக்கூடத்தில் 6 -ஆவது படிக்கிறான். அவனிடம் கூட ஏதோ சொல்லி, மனதை மாற்றிவிட்டாள்''" என்று புலம்பியபடி "இப்போது நண்பனுடன் பக்கத்து காம்பவுண்டில் மாடியில் உள்ள அறையில் குடியிருக்கிறேன். மூணுவேளையும் ஹோட்டலில் தான் சாப்பிடுகிறேன். ஒரு நல்ல செய்தி. நண்பன் உதவியால் ஒரு கம்பெனியில் சேல்ஸ் மேனேஜர் போஸ்ட் கிடைத்து நேற்று ஜாயின் பண்ணிட்டேன்''" என்று முடித்தான். ""நீங்க வேணுமின்னா கோமதிகிட்டே பேசிப்பாருங்க''ன்னு" சொல்லி போனை வைத்தான்.
 சுந்தரராஜன் அன்று மாலை கோமதி அலுவலகத்திலிருந்து வந்த நேரம் பார்த்து போனில் அவளை அழைத்தார். கோமதியும், ""மாமா" நமஸ்காரம் என்ன விஷயம்?'' என்று கேட்கவும், "என்னம்மா, இப்படி பண்ணிட்டே என் பையன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டான். வேலை போனது அவனோட தப்பா? இப்ப கூட நேத்து நல்ல வேலைலே ஜாயின் பண்ணிருக்கான்மா. அதனாலே வீட்லே சேத்துக்கம்மா. பாவம் ஹோட்டல் சாப்பாடு அவனுக்கு ஒத்துக்காது. வயசான காலத்திலே நாங்க எப்படிம்மா நிம்மதியா இருக்க முடியும்?'' என்று கோமதியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்."
 கோமதி உடனே, "இப்பத்தானே வேலையிலே சேர்ந்திருக்காரு." பார்ப்போம். வேலை நிரந்தரமாகட்டும். இப்போதைக்கு அவரோட சேர்ந்து வாழ என்னாலே முடியாது. அவ்வளவுதான். யாரும் என் கிட்ட இது விஷயமா நேரிலோ, போனிலோ பேசவேண்டாம். வந்தாலும் என் முடிவை மாத்த முடியாது. போனை வைச்சுடறேன்'' என்று பேசி போனை வைத்து விட்டாள். சுந்தரராஜன் அதைக்கேட்டு இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.
 இது விஷயமாக சென்னையில் இருக்கும் அவரது நண்பர்களிடமும் பேசிப்பார்த்தார். அவர்களும் "இப்போது நிறையப் பெண்கள் இப்படித்தான் கருத்து வேறுபாடுன்னு பிரிஞ்சு வாழறாங்க. பெண்களுக்குச் சாதகமாகத்தான் எல்லாச் சட்டங்களும், காவல்துறையும் இருக்குன்னு சொல்றாங்க." குடும்ப நீதிமன்றத்தில் பாதி மன்றத்திற்கு மேல் இப்படி விவாகரத்து கேட்டு நிறைய பெண்கள் தினசரி வர்ராங்க. நம்ம ஒண்ணும் செய்ய முடியாது. பேசாம உங்க பையனை உங்க ஊர்ப்பக்கம் மதுரையிலே ஏதாவது வேலை பார்க்கிற மாதிரி வேலைக்கு அப்ளை பண்ணிட்டு வரச்சொல்லி, உங்க கூடவே வச்சிக்கிடுங்க. ஏதாவது நடவடிக்கை எடுத்தா வரதட்சணை கேட்டீங்கன்னு பொய்க்கேஸு போட்டு வயசான காலத்திலே உங்களையும் ஜெயில்லே போட்டுருவாங்க... பாத்துக்குங்க''ன்னு சுந்தரராஜனுக்கு அறிவுரை கூறிவிட்டார்கள்.
 இப்படியே ஆறுமாதகாலம் ஓடிவிட்டது. உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. கோவிந்தராஜன் ஹோட்டல் சாப்பாட்டிலேயே, ஒரு வீட்டு மாடியில் நண்பன் அறையிலே வேறு வழியின்றி காலம் கழித்து வந்தான். இதற்கிடையே அவனது பையனுக்குப் பிறந்த நாள் கொண்டாடி, கோமதி பக்கத்து வீட்டுக்காரர்களை எல்லாம் அழைத்து விருந்து வைத்திருக்கிறாள். அவனுக்கு தற்செயலாக பையனின் பிறந்த நாள் நினைவுக்கு வந்து அவனது வீட்டுக்குப் போன போது, அவனது மாமியார் உள்ளேயே விடவில்லை. கடைசியில், "வந்தது வந்து விட்டீர்கள், சாப்பிட்டு விட்டு போய்விடுங்கள்''" என்று கூப்பிடவும் அவன் வெறுத்துப்போய்விட்டான். இவ்வளவு மோசமாகவா நடந்து கொள்வார்கள் பணத்தை மட்டுமே மதிக்கும் இவர்கள் எல்லாம் எப்படி பெண் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள்? வேலை இருந்தால் மட்டும் ஒரு மனிதனுக்கு மதிப்பா? பெண் என்பவள் கருணை, அன்பு, பாசம் எல்லாம் நிறைந்தவள் என்பது பொய்யா? என்று பலவிதமாக எண்ணங்கள் அவனது நெஞ்சில் அலைமோதின. கோவிந்தராஜனின் உடல் நிலை தொடர்ந்த ஹோட்டல் சாப்பாட்டிற்கு ஒத்துவரவில்லை. அவனை உடனடியாக அறையைக் காலி செய்து ஊருக்குவரச் சொல்லிவிட்டார், சுந்தரராஜன். அறையில் இருந்த கட்டில், பீரோ மற்ற தேவையற்ற சாமான்களை நண்பனிடம் ஒப்படைத்து, அவற்றை என்ன விலைக்குப் போகிறதோ அதற்கு விற்கச் சொல்லிவிட்டு மறுநாளே மதுரையிலுள்ள தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
 சுந்தரராஜனின் மனைவி சரஸ்வதி அம்மாவுக்கு ஏற்கெனவே உடல் நலம் சுமாராகத்தான் இருந்தது. சர்க்கரை நோயாளி வேறு, அத்துடன் மகனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையும் மனதை ஆக்கிரமித்துக் கொள்ளவே, தூக்கம் சிறிதுமின்றி பெரும் துக்கத்திற்கு ஆளாகிப் போனார்.
 ஊருக்கு வந்ததில் இருந்து தினசரி பேப்பர்களைப் பார்த்து வேலைக்கு மாற்றி மாற்றி அப்ளிகேஷன் அனுப்பவும், கூப்பிடும் இடங்களுக்கு இண்டர்வியூக்கு போய்விட்டு வரவும் இப்படியே மூன்று மாதகாலம் ஓடிப்போயிற்று.
 பாளையங்கோட்டையில் ஒரு பள்ளியில் அட்மினிஸ்ரேடிவ் ஆபிஸர் போஸ்ட்டுக்கு இண்டர்வியூ சென்று தேர்வும் ஆன நிலையில், அவர்களிடம், " ஓர் இரண்டு நாள் சனி, ஞாயிறு முடிந்து ஜாயின் செய்கிறேன்'' என்று சொல்லிவிட்டு வந்தான் கோவிந்தராஜன்.
 ஒரிஜினல் சர்டிபிகேட்களையும் கொண்டு வரசொல்லி இருந்தார்கள். ஆனால் திங்கட்கிழமை இவன் போய் ஜாயின் செய்வதற்குள் அவர்களின் பள்ளி தாளாளருக்கு மிகவும் வேண்டிய இடத்திலிருந்து வந்த ஒருவரை அந்தப்பதவிக்கு சனிக்கிழமையே நியமித்துவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள். இவனுக்கு வயதும் நாற்பதுக்கு மேல் ஆகி விட்டபடியால் சில வேலைகளுக்கு இவனால் விண்ணப்பிக்க முடியவில்லை.
 சுந்தரராஜன் வேண்டாத தெய்வமில்லை. அந்தத் தெய்வங்களுக்கு இவர் படும் கஷ்டத்தை பார்க்க கண்களும் தெரியவில்லை. கோரிக்கையை கேட்க காதுகளும் செயல்படவில்லை. அன்றாடம் தொலைக்காட்சியில் அதிகாலை நிகழ்ச்சிகளில் ஆன்மீக உரை நிகழ்த்துபவர்கள், "கடவுளைப் பிரார்த்தித்து நீ ஓரடி எடுத்து வைத்தால், அவர் உனக்கு உதவி செய்ய உடனே பத்தடி எடுத்து வைப்பார்'" என்று சொல்லும் போது, அவருக்கு எரிச்சலாக வரும். எங்கே அவர் நகர்ந்து வரக்கூட இல்லை பிழைப்புக்காக எப்படி எல்லாம் அளந்து விடுகிறார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டார்.
 தினசரி கட்டிலில் அவர் படுத்து இரவில் தூங்கும் போது, அருகில் தரையில் பாயில் தூக்கமின்றி பையன் திடீர், திடீரென்று குடும்ப நினைப்பில் புலம்பியபடி தவித்தபடி படுத்திருப்பதைப் பார்க்க அவரது மனம் புழுவாய் துடித்தது. வயசான காலத்தில் இப்படி ஒரு சோதனையா?
 காலையில் வாக்கிங் போகும்போது பக்கத்து வீட்டுக்காரர்களில் சிலர், " "என்ன சார், உங்க பையன் இங்கேயே ரொம்ப நாளா இருக்கானே என்ன விஷயம்?''" என்று விசாரிக்கும் போது இவருக்கு கோபம் தான் முதலில் வரும். பையன் அவனது வீட்டில் இருந்தால் இவர்களுக்கு என்ன பிரச்னை? வம்பு பேச ஏதாவது விஷயம் கிடைக்காதா என்று எப்படி அலைகிறார்கள்? உதவி செய்ய யாரும் வருவதில்லை. இவர்களிடம் பிரச்னையைச் சொன்னால் மட்டும் தீர்த்துவிடப்போகிறார்களா என்ன?
 கோவிந்தராஜனும் தொடர்ந்து அவனுடன் படித்த நண்பர்களை முகநூல் மூலம் தொடர்பு கொண்டு முயற்சிகள் செய்து வந்தான். கடைசியில் நாகர்கோயில் கல்லூரியில் அவன் படித்தபோது உடன் படித்த நண்பர்களில் ஒருவனான கதிரேசன் மூலம் விமோசனம் பிறந்தது. அவன் அரபுநாடான கத்தார் நாட்டில் பத்தாண்டுகளாக ஒரு நல்ல வேலையில் இருப்பது தெரிய வந்தது. நல்லவேளையாக அவன் விடுமுறையில் நாகர்கோவில் வந்திருப்பது தெரிந்து அவனைப் போய் பார்த்து நேரில் தனது கஷ்டங்களைத் தெரிவித்து விட்டு வந்தான். உடனடியாக அவனும் கோவிந்தராஜனுக்கு தேவையான உதவிகள் செய்து அவனுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து, அவன் வேலை செய்யும் நிறுவனத்திலேயே நல்ல சம்பளம் கிடைக்கும்படி பேசி, மற்ற ஏற்பாடுகளையும் ஒரு டிராவல் ஏஜன்ஸி மூலம் செய்து பணம் எல்லாம் கூட அவனே போட்டு உதவி செய்தான்.
 அடுத்த வாரம் கத்தார் நாட்டு வேலைக்கு விசா வந்து விடும் என்றும் மருத்துவ டெஸ்ட் மட்டும் எடுத்து ரிசல்டை அனுப்பி வைத்தால், வேலையில் அடுத்த மாதம் ஜாயின் செய்யலாம் என்றும் கதிரேசன் செல்போனில் செய்தி அனுப்பியிருந்ததை, கோவிந்தராஜன், அன்று காலையில் எழுந்தவுடன் சற்று நம்பிக்கை கலந்த மகிழ்ச்சியுடன் அப்பாவிடம் தெரிவித்தான்.
இரா.கதைப்பித்தன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com