தினமணி கதிர்

700 நெல் வகைகள்!

15th Jul 2019 04:09 PM |  வி.குமாரமுருகன் 

ADVERTISEMENT


அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றோமா? பென்ஷனை வாங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடருவோமா? என்ற மனநிலைதான் பெரும்பாலான வயதானவர்களுக்கு இருக்கும். ஆனால். ஓய்வு பெற்ற பின்பும் எதிர்கால சந்ததியினருக்காக ஆர்கானிக் நெல் விதைகளைக் கண்டறிந்து அதை சேமித்து வைத்து வருவதுடன், ஆய்வு மையம்(Rajendra Desi Chasa 
Gabesana Kendra) ஒன்றை அமைத்து ஆர்கானிக் விவசாயம் குறித்த பயிற்சியையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர். 

ஒடிசாவைச் சேர்ந்த நடாபர்சாரங்கிதான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர். 1988 - முதல் தொடர்ந்து இப்பணியைச் செய்து வரும் இவர், இதுவரை இந்தியா 
முழுவதும் இருந்து 700 வகையான நெல் வகைகளைக் கண்டறிந்து சேகரித்து வைத்துள்ளார். மேலும் அதைப் பயன்படுத்தி நெல் விதைகளை உருவாக்கி விவசாயிகள் பயிரிட வழங்கி வருகிறார். 

மக்கள் தொகை  பெருகப் பெருக உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை உலகம் முழுவதும் ஏற்பட்டு வருகிறது.   இதற்காக ரசாயனம் கலந்த 
உரங்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை   ஏற்பட்டு வருகிறது.  இதனால் எல்லாவிதமான பருவநிலையையும் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்ட ஆர்கானிக் விதைகளின் பயன்பாடு படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

இதை உணர்ந்து, ஆர்கானிக் விவசாயத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி பெற்று வருகிறார் ஒடிசாவின் நியாலி கிராமத்தைச் சேர்ந்த 87 வயதான நடாபர்சாரங்கி. இவர் ஆசிரியராக இருந்து ஆர்கானிக் விவசாயியாக மாறியுள்ளார். இவர் ஒடிசா, மேற்குவங்கம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து நெல் விதைகளை சேகரித்து வருகிறார். 1988 முதல் இதுவரை 700 வகையான நெல் விதைகளை அவர் சேகரித்துள்ளார். 

ADVERTISEMENT

1990 - களில் பசுமைப் புரட்சியின் விளைவாக இயந்திரமயமாக்கலும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும் அதிகம் இருந்தது. நடாபர் தனது நிலத்திலும் நெல் சாகுபடி செய்திருந்தார். ""பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்க விவசாயத்துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். நானும் பூச்சிக்கொல்லி மருந்தை   வயலில் தெளித்தேன்.   

மறுநாள் வயலுக்குச் சென்ற போது,  நண்டுகள், நத்தைகள், புழுக்கள், பாம்புகள் உள்ளிட்வை அங்கு இறந்து கிடந்தன.மண்ணை ஆரோக்கியமாக வைத்திருந்த அத்தகைய பூச்சியினங்கள் ரசாயனத்தால் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டேன்'' என்று கூறும் அவர், ""அந்த உணவை நாம் உண்டால் என்னென்ன பாதிப்புகள் வரும் என யோசித்தேன். அதன் விளைவுதான் ஆர்கானிக் சாகுபடி குறித்த சிந்தனையை என்னுள் விதைத்தது. 
இருப்பினும் எல்லா பருவநிலைகளையும் தாங்கும் வகையிலான பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்காக இந்தியாவின் பழைய நெல் விதைகளைத் தேடிப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் மேலோங்கியது.  

தொடக்கத்தில், ஒடிசாவின் எல்லாப் பகுதிகளிலும் தேடியதில் 5 நெல் வகைகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால், ஆண்டுகள் செல்ல செல்ல, இந்த எண்ணிக்கை படிப்படியாக வளர்ந்து, இன்று, 700 வகைகளைச் சேகரிக்க முடிந்துள்ளது'' என பெருமையுடன் கூறும் சாரங்கி, அந்த விதைகளைக் கொண்டு தங்கள் நிலத்தில் பயிரிட்டு ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்து விதைகளை உருவாக்கி கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள விவசாயிகளுக்கு அனுப்பி வருகிறார். 

""தொடக்கத்தில் இலவசமாக வழங்கினோம். ஆனால், தற்போது குறைந்த அளவு பணம் வசூலிக்கிறோம். அதே சமயம் எங்களிடம் விதை பெற்றவர்கள், 
அறுவடை முடிந்த பின்னர் 4 கிலோ விதை நெல்களைத் தருகிறார்கள்.  

தற்போது, எங்கள் பகுதியிலுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, ஆர்கானிக் நெல் சாகுபடி செய்து வருகிறோம். ஆரம்பத்தில் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. தற்போது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த பல ஆண்டுகளில் 2000 விவசாயிகளுக்கு ஆர்கானிக் விவசாயம் குறித்து பயிற்சி அளித்துள்ளேன். இதன் மூலம் எங்கள் பகுதியிலுள்ள 1500 ஏக்கர் நிலங்களில் ஆர்கானிக் விவசாயம் நடந்து வருகிறது. சுமார் 2 லட்சம் குவிண்டால் ஆர்கானிக் நெல் சாகுபடி இப்பகுதியில் நடைபெற்று வருகிறது'' 
என்கிறார் அவர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT