தினமணி கதிர்

திரைக் கதிர்

15th Jul 2019 04:00 PM

ADVERTISEMENT


கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். மும்பையில் சொந்த வீடு இருந்தாலும் அவருக்கென்று கனவு இல்லம் ஒன்றை மனதில் உருவாக்கி வைத்திருந்தார். வீட்டுக்குள் இருந்து பார்த்தால் கடற்கரை தெரிய வேண்டும், மாலையில் வீசும் குளிர் காற்றை வாங்கியபடி பால்கனியில் அமர்ந்து காபி குடிக்க வேண்டும். பெரிய ஹால், மாடர்ன் கிச்சன்.. சுழலும் மெத்தை, எல்லா அறைகளிலும் ஏசி...  என பல வசதிகளுடன் கூடிய பங்களாதான் அவரது கனவு இல்லம். தனது நெருங்கிய நண்பர்களிடம் அது பற்றி அவர் அவ்வப்போது பேசுவதுண்டு.  அதை தற்போது நனவாக்கியிருக்கிறார். மும்பையில் ஜுஹு வெர்சோவா லிங்க் சாலையில் 22 அடுக்குமாடி ஆடம்பர குடியிருப்பில் 14வது மாடியில் உள்ள வீட்டை வாங்கியிருக்கிறார் தமன்னா. ரூ.16 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள இந்த வீட்டிற்கு ஸ்டாம்ப் டியூட்டி மட்டும்  ரூ.99 லட்சத்து 60 ஆயிரம் கட்டியிருக்கிறார். இன்டீரியர் டிசைன்களுக்கு ரூ.2 கோடி செலவழித்திருக்கிறார்.

தமிழ் சினிமாக்களில் முன்னணி இடத்தில் இருந்தபோதே, மலையாள சினிமாவுக்குத் திரும்பினார் பாவனா. 

2009-ஆம் ஆண்டு "அசல்' படத்தில் அஜித்துடன் நடித்தார். அத்துடன் மலையாளத்துக்குத் திரும்பிய அவர், அங்கேயே  தங்கி விட்டார். 

அவ்வப்போது கன்னடப் படங்களில் நடித்தார். ஒரு சில சர்ச்சைகளிலும் சிக்கி மீண்ட பாவனா கன்னட படத் தயாரிப்பாளர் நவீன் என்பவரைக் கடந்த ஆண்டு மணந்தார். 

ADVERTISEMENT

கல்யாணம் ஆனாலும் தேர்வு செய்து படங்களில் நடிப்பதுடன் சகதோழி நடிகைகளுடன் நட்புடன் இருந்து வருகிறார். சமீபத்தில்   நடிகை சில்பாவின் தங்கை திருமண நிச்சயதார்த்த விழாவில் பாவனா கலந்துகொண்டார். ரம்யா நம்பீசன், மிருதுளா என மற்ற சக நடிகை தோழிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஒரு கட்டத்தில் பாவனாவுடன் தோழிகள் ஒன்று கூடி நடனம் ஆடத் தொடங்கிவிட்டனர். ஹிந்தி பாடல்களை சுழலவிட்டு அதற்கேற்ப அனைவரும் ஒரே பாணியில் நடனம் ஆடி அமர்க்களப்படுத்தினர். நடனமாடிய  படங்களை நடிகைகள் தங்கள் இன்ஸ்டாவிலும் பகிர்ந்தனர். கோலிவுட்டை மறந்தாலும் தோழிகளை மறக்காமல் இருக்கும் பாவனாவுக்கு நெட்டிஸன்கள் பாராட்டு தெரிவித்ததுடன் மீண்டும் கோலிவுட் பக்கம் தலைகாட்டமாட்டீர்களா? என்று  கேள்வியும் எழுப்பி உள்ளனர்.

காதலுக்காக நீண்ட நாள் காத்திருந்தார் நடிகர் ஆர்யா. பெண் பார்க்கும் படலமும் நடத்தினார். அவருடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார் சாயிஷா. முதல்படத்திலேயே இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொண்டது. லேசாக விஷயத்தை ஆர்யா கசியவிட்டு திடீரென்று திருமணமும் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு நடிக்க தடைபோடவில்லை என்பதால் தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்கிறார் சாயிஷா. கணவர் ஆர்யாவுடன் "டெடி' படத்தில் நடித்து வரும் சாயிஷா, படப்பிடிப்பு இடைவேளையில் "ஒன்றா இரண்டா...' என்ற பாடலை  பாடி அதை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் தவழவிட அது பலரையும் ஈர்த்திருக்கிறது. சூர்யா, ஜோதிகா நடித்த "காக்க காக்க' படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடலான இது சாயிஷா குரலில் இனிமையாக ஒலிக்க பலரும் லைக் அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர். "எனக்கு பாட்டு பாடுவது மிகவும் பிடிக்கும். என்னை கவர்ந்த பாடலைத்தான் படப்பிடிப்புக்கு இடைவேளையில் தற்போது பாடி உள்ளேன். இதற்காக பயிற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்' என குறிப்பிட்டிருக்கிறார். 

எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாக்களில் மல்டி ஸ்டார் படங்கள் அதிகரித்துள்ளன. 
ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் மற்றொரு ஹீரோவை நடிக்க கேட்டு அவர் மறுத்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அண்மையில் கூட "2.0' படத்தில் ரஜினியுடன் சேர்ந்து கமல்ஹாசனை நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்தநிலையில் மணிரத்னம் இயக்கிய "செக்க சிவந்த வானம்' படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய் என 4 ஹீரோக்கள் இணைந்து நடித்தனர். பிறகு கோலிவுட்டில் மாற்றம் ஏற்பட்டது. ரஜினி நடித்த "பேட்ட' படத்தில் அவருடன் விஜய்சேதுபதி, சசிகுமார் இணைந்து நடித்தனர். விரைவில் மணிரத்னம் இயக்கவுள்ள "பொன்னியின் செல்வன்' படத்தில் விக்ரம், அமிதாப்பச்சன், ஜெயம்  ரவி, கார்த்தி இணைய உள்ளனர். அந்த வரிசையில் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் 3 பிரபல நடிகர்கள் இணைகின்றனர். இப்படத்தில் ஆர்யா, சத்யராஜ், ராணா என 3 நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளார்களாம். இவர்களுடன் மேலும் சில நடிகர்களை இணைக்க பேச்சு நடக்கிறது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.

"கோடீஸ்வரர் ஆவது எப்படி?' என்று நிறையப் புத்தகங்கள் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர் ஒருநாள் தூக்கத்தில் ஸ்ரேயாவுடன் நடிப்பதுபோல் கனவு காண உடனே நடிக்க வந்துவிட்டார். இப்போது ஸ்ரேயாவை வலைபோட்டு தேடிக்கொண்டிருக்கிறார். இது நிஜமா என்ற போது எழுத்தாளர், நடிகர், இயக்குநர் ஏ.எல்.சூர்யா கூறியது... ""நிஜம்தான். "அனிதா பத்மா பிருந்தா' என்ற நாவல் எழுதியிருக்கிறேன். சினிமாவைப் பின்னணியாகக் கொண்ட கதை. அந்த நாவல் எழுதும்போதுதான் ஸ்ரேயாவுடன் நடிப்பது போன்ற கனவு கண்டேன். பிறகு நாவலைப் படமாக்க முடிவு செய்ததுடன் தயாரிப்பு, இசை, பாடல், இயக்கம், நடிப்பு என எல்லா பொறுப்புகளையும் நானே ஏற்று செய்ய முடிவு செய்தேன். ஸ்ரேயாவை நேரில் சந்தித்து இந்த விஷயத்தைக் கூறி கால்ஷீட் கேட்க உள்ளேன். மேலும் 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். ஏற்கெனவே 5 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். தமிழ்நாடு, கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இதுவரை படப்பிடிப்பு நடக்காத பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளதால் அந்த இடங்களின் பெயர்களை சஸ்பென்ஸôக வைத்திருக்கிறேன்'' என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT