இருவர்!

வரவேற்பறை குளிர்ச்சியாக இருந்தது. ஏர்கண்டிஷனரின் மெல்லிய சங்கீதத்தைத் தவிர வேறு ஒலி எதுவும் கேட்கவில்லை.
இருவர்!

சென்ற இதழ் தொடர்ச்சி
வரவேற்பறை குளிர்ச்சியாக இருந்தது. ஏர்கண்டிஷனரின் மெல்லிய சங்கீதத்தைத் தவிர வேறு ஒலி எதுவும் கேட்கவில்லை. அப்போதுதான் வாங்கி வந்தது போல் நாற்காலிகளும் டீபாய்களும் உயரத்தில் மிதந்த மின்விசிறிகளும் "பள பள" வென்று மின்னின. இரு ஆங்கில தினசரிகளும் சில அயல்நாட்டு இதழ்களும் வரிசையாக அடுக்கப்பட்டு ஒரு புத்தக ஏணியில் வைக்கப்பட்டிருந்தன. ஜானகிராமனுக்கு அவற்றைத் தொட வேண்டும் என்று இருக்கவில்லை. கால்கள் கூச்சப்படும் அளவுக்கு மெருகுடன் தரையில் கண்ணைக் கவரும் வர்ணங்களைத் தெளித்து முழு அறையையும் சுற்றிக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
ஹாலில் இருந்தவர்களை ஐந்து பேர் அடங்கிய கூட்டமாக ஓர் அறையில் அமர்த்தி விட்டு இண்டர்வியூ செய்தார்கள். அவனைத் தவிர இன்னும் ஒன்பது பேர் வந்திருந்ததால் இரண்டு கூட்டங்கள் நடந்தன. அவற்றில் இருவரைத் தேர்ந்தெடுத்ததில் ஒருவன் உள்ளே உட்கார்ந்து கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஜானகிராமன் முதல் ஆள் திரும்பி வந்ததும் உள்ளே செல்ல வேண்டும். அதற்குத்தான் வரவேற்பறையில் காத்துக் கொண்டிருந்தான்.
மீனாவும் வரவேற்பறையில் உட்காரும் தகுதிக்குத் தேர்வு செய்யப்பட்டதை அவன் பார்த்தான். அவளுக்கு வேறொரு வரவேற்பறை.
அவளை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. அவனுக்குப் போட்டியாக என்ஜினீயர் தேர்வுக்கு வராது அவள் விட்டுக் கொடுத்தது எதைக் காட்டுகிறது? அவனுக்கு வேலை கிடைப்பது பற்றி அவள் நினைத்தபடி நடக்காமல் போய் விடலாம். ஆனால் அவள் செய்கை அவன் மனதைத் தொட்டது.
ஹோட்டலிலிருந்து திரும்பி வரும் போது அவன் சட்டென்று நின்றதைப் பார்த்து "என்ன ஆச்சு?" என்று கேட்டாள்.
""மீனா, நீங்க ஏன் இப்படி பண்ணினீங்க?'' என்று கேட்டான்.
"என்ன பண்ணினேன்?'' என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டாள்.
"எனக்காகத் தானே நீங்கள் என்ஜினீயர்ல வர்ற சான்ûஸ விட்டுக் கொடுத்திருக்கீங்க?''
""சான்ஸ்ன்னு இதுவரையும் ஒண்ணும் வரலையே''
"என் வார்த்தைகளை வச்சு விளையாடாதீங்க. ஏன் எஞ்ஜினீயர் போஸ்டை எடுத்துக்கிட்டு சேல்சை விட்டிருக்க கூடாது?''
"இது என்னடா கஷ்டமா போச்சு?'' என்று அவள் அலுத்துக் கொண்டாள். பிறகு அவனைப் பார்த்து "சரி, நீங்க நினைக்கிற மாதிரியே இருக்கட்டும். அதிலே என்ன தப்பு?'' என்று கேட்டாள்.
அவனுக்கு உண்மையிலேயே பதில் தர முடியவில்லை.
ஆனால் இப்போது இருவரும் அவரவர் தேர்வில் முன்னேறி வந்ததை நினைக்கையில் அவள் செய்தது சரிதான் என்று அவனுக்குத் தோன்றியது.
உள்ளே சென்றிருந்தவன் வெளியே வந்தான். அவன் ஜானகிராமனைப் பார்த்துப் புன்னகை சிந்தவில்லை. ஏதாவது பேசுவான் என்று ஜானகிராமன் நினைத்தான். அவன் ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்றான்.
அவனைக் கூப்பிட்ட போது ஜானகிராமன் எழுந்து சென்றான். அவன் நுழைந்த அறை வரவேற்பறையை விடக் குளிர்ச்சியாக இருந்தது. ஒரு பெரிய மேஜையின் முன் இருவர் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு அவன் வணக்கம் செலுத்தியதும் அவர்களுக்கு எதிராக உட்காரச் சொன்னார்கள். அவன் நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து கொண்டான். முழு இடத்தையும் அடைத்துக் கொண்டு நன்றாக சாய்ந்து உட்காரக் கூடாது என்று முன்பு ஒரு இண்டர்வியூவில் யாரோ சொன்னது மனதில் ஆழமாகத் தைத்து விட்டது..
அவர்களில் கண்ணாடி அணிந்திருந்த ஒருவர் தன்னை பாலாஜி தலைமை என்ஜினீயர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மற்றவரை சென்னா ரெட்டி என்றும் அவர் பெர்ஸனல் மானேஜர் என்றும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பாலாஜி அவனைப் பார்த்து "உங்கள் மார்க்குகளைத் தெரிவித்த சர்டிபிகேட்டுகளும் இங்கு வருவதற்கு முன்பு நடந்த தேர்வும் சப்ஜெக்ட்டில் நீங்கள் மிகவும் திறமைசாலி என்று தெரிவித்து விட்டன. இப்போது நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புவது ஓரிரண்டு விஷயங்களைத்தான். பெங்களூர் அல்லாது வேறு இடத்தில் வேலை செய்யத் தயாரா?'' என்று கேட்டார்.
""வேறு வழி இல்லை என்றால் ஒப்புக் கொள்வேன். ஆனால் இங்கேதான் என்றால் மகிழ்ச்சி அடைவேன்''
"ஏன் அப்படி?''
""நான் வெளியூர் சென்றால் என் சம்பளத்துக்கு ஏற்ற தங்குமிடத்தைத் தேடுவேன். அது நிச்சயம் தொலை தூரத்தில்தான் இருக்கும். ஏனென்றால் நகரத்துக்குள் இருக்க வேண்டுமானால் மிக அதிக வாடகை கொடுக்க வேண்டியிருப்பதிலிருந்து தப்பிக்க முடியாது. அதனால் தினசரிப் பயணத்துக்கு நேரம் செலவழிக்க வேண்டும். இரண்டாவது நானே சமைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அதற்கான முயற்சிகளுக்கு நான் நேரத்தை செலவழிக்க வேண்டும். மூன்றாவதாக மேற் சொன்ன இரண்டு காரணங்களினால் நான் குறிப்பிட்ட நேரத்துக்கு வீடு திரும்ப வேண்டும். ஆனால் இதே நகரில் நான் பணிபுரிந்தால் மேற் சொன்ன தடைகள் எதுவும் இல்லாமல் என் நேரத்தை முழுவதுமாகக் கம்பனிக்குத் தர முடியும்''.
" வெல். பத்து வருடம் கழித்து உங்கள் புத்திசாலித்தனத்தால் என் வேலையை உங்களுக்குத் தருகிறேன் என்று என் வேலைக்கு உலை வைக்கும்படி நிர்வாகம் உங்களிடம் சொன்னால் என்ன செய்வீர்கள்?''
" நீங்கள் இப்போது என் வேலைக்குப் பல படிகள் மேலே இருப்பவர். உங்கள் வேலை எனக்குத் தரப்
படும் சமயம் நீங்கள் இந்தக் கம்பெனியையே நடத்துபவராக ஆகி இருப்பீர்கள்''
பாலாஜி அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.
சென்னா ரெட்டி அவனிடம் ""மிஸ்டர் ஜானகிராமன், இன்று என்ன முக்கிய செய்தியைப் படித்தீர்கள்?'' என்று கேட்டார்.
""க்யூமிலஸ் திவாலாகி விட்டது பற்றி'' என்றான் ஜானகிராமன்.
சென்னா ரெட்டி சற்றுத் திடுக்கிட்ட மாதிரி இருந்தது. "எங்கே படித்தீர்கள்? இன்றைய காலை பேப்பர்களிலா?'' என்று கேட்டார்.
""நான் இங்கு வருவதற்கு முன் இன்டர்நெட்டில் பார்த்தேன். சுமார் பதினோரு மணிக்கு'' என்றான் ஜானகிராமன்.
""நீங்கள் அடிக்கடி இம்மாதிரி ப்ரெளசிங் செய்பவரா?'' என்றார் சென்னா ரெட்டி.
"இல்லை. ஆனால் இண்டர்வியூ ஒரு மணி நேரம் தள்ளிப் போடப்பட்ட போது பார்த்தேன்'' என்றான் ஜானகிராமன்.
""தேங்க் யூ மிஸ்டர் ஜானகிராமன். நீங்கள் தேர்வு செய்யப் பட்டாலும் படாவிட்டாலும் நாளை மறுநாள் உங்களுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கிறோம்'' என்று எழுந்து கைகுலுக்கினார் சென்னா ரெட்டி.
அவன் நம்பிக்கையுடன் வெளியே வந்தான். மீனா இருந்த வரவேற்பறைக்குச் சென்றான். அவள் அங்கு காணப்படவில்லை. உள்ளே அவளுக்கு இண்டர்வியூ நடந்து கொண்டிருக்கிறதோ? அல்லது அவள் முடிந்து திரும்பப் போய் விட்டாளா? அவன் மனம் இரண்டாவது கேள்வியை விரும்பவில்லை.
அவன் ஆபிசுக்கு வெளியே சற்று மனச்சோர்வுடன் வந்தான். சற்றுத் தூரம் நடந்ததும் "என்னய மறந்துட்டு நீங்க பாட்டுக்கு கிளம்பிட்டீங்க? திரும்பிப் போகறப்பவும் அறுபது ரூபாய்க்கு பதிலா முப்பது ரூபாயோட ஆட்டோ செலவை மிச்சம் பண்ணலாம்னு நான் நின்னுகிட்டு இருக்கேன்'' என்ற மீனாவின் குரல் பின்னால் கேட்டது. அவன் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தான். உற்சாகமடைந்தான்.
"ஒரே ஜாலியா இருக்கீங்க? வேலை கிடைச்சிருச்சா?, அப்படின்னா முழு ஆட்டோ சார்ஜும் நீங்கதான் குடுக்கணும்'' என்றான் அவன்.
"எல்லா வண்டவாளமும் புதன் கிழம தண்டவாளத்தில ஏறிடும்'' என்றாள் அவள். தொடர்ந்து "ஆனா என்னமோ வேலை கிடைச்சிடும்னுதான் எனக்கு தோணுது. உங்களுக்கு?'' என்று கேட்டாள்.
அவன் இண்டர்வியூவில் நடந்ததைச் சொன்னான்.
"உங்களை பாத்தாலும் அப்படித்தான் இருக்கு'' என்றாள் அவள்.
"என்னது?''
"இண்டர்வியூ பண்ணினவரு பயந்த மாதிரி நீங்க மேலே போயி அவரு வேலைக்கே...'' என்று முடிக்காமல் சிரித்தாள்.
"உங்க சர்டிபிகேட்டுக்கு ரொம்ப நன்றி. அதனாலேயே எனக்கு வேலை கிடைக்காம போனாலும் போகலாம்'' என்றான் ஜானகிராமன்.
"சே சே. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே. நீங்க துடிப்பா இருக்கீங்க அது அவங்களுக்கு பிடிச்சிருக்கும்னுதான் நான் சொல்ல வந்தேன்'' என்றாள் மீனா.
அவர்கள் ஆட்டோவுக்காகக் காத்திருந்த சமயம் மீனா அவனிடம் தனது மொபைல் நம்பரைக் கொடுத்து விட்டு அவனது நம்பரை வாங்கிக் கொண்டாள்.
இண்டர்வியூ முடிவு தெரிந்தவுடன் ஒருவர் மற்றொருவருக்கு போன் செய்து தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டார்கள்.
புதன் கிழமை. அவர்கள் இருவரும் பீக்கே இன்டர்னேஷனல் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைத் தவிர இன்னும் இருவர் அங்கிருந்தார்கள். அவர்களை முன்பு நடந்த இண்டர்வியூ நாளில் பார்த்த ஞாபகம் ஜானகி
ராமனுக்கு வந்தது. அன்று காலை வந்த மின் அஞ்சலில் அவனைப் பீக்கே அலுவலகத்துக்கு பதினொன்றரை மணிக்கு வரச் சொன்னார்கள். அவன் மீனாவைக் கூப்பிட்ட போது அவளையும் வரச் சொன்னதாகத் தெரிவித்தாள்.
"நம்மளை செலெக்ட் செஞ்சுட்டாங்கன்னுதான் எனக்கு தோணுது'' என்றான் ஜானகிராமன்.
அவள் ஒப்புக் கொள்வது போலத் தலையசைத்தாள்.
""லெட்டரை நேர கையில கொடுக்கத்தான் வரச் சொல்லியிருக்காங்க'' என்றான் அவன்.
மீனா புன்னகை செய்தாள்.
அப்போது மீனாவுக்கு அழைப்பு வந்தது. உள்ளே சென்றாள்.
ஜானகிராமனுக்கு சற்று டென்ஷனாகத்தான் இருந்தது. எதற்கு கூப்பிட்டிருக்கிறார்கள்? ஒருவேளை அவன் வெளியூர் சென்றால்தான் வேலை என்று சொல்லப் போகிறார்களா? ஆனால் மீனாவுக்கு இண்டர்வியூ நடந்தபோது இந்தப் பிரச்னை அவளுக்கு எழவில்லையே? அப்படியென்றால் அவளை எதற்கு இப்போது கூப்பிட வேண்டும்? குழப்பமாக இருந்தது.
அப்போது அவனை அழைத்தார்கள். அவன் எழுந்து கிளம்பும் போது அறையிலிருந்து மீனா வெளியே வந்தாள். அவனைப் பார்த்ததும் புன்னகை செய்தாள். அவளிடம் எதுவும் கேட்க முடியவில்லை. உள்ளே சென்றான்.
உள்ளே சென்னா ரெட்டி மாத்திரம் இருந்தார். அவன் வணக்கம் செலுத்தியதும் அவனைப் பார்த்துப் புன்னகை செய்து உட்காரச் சொன்னார்.
"கங்கிராட்ஸ். நீங்கள் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்'' என்றார் ரெட்டி.
"ஓ தேங்க்யூ ஸோ மச் ஸார்'' என்று அவர் நீட்டிய கையைப் பற்றியபடி நன்றியைத் தெரிவித்தான்.
""நீங்கள் உங்கள் விருப்பப்படி இந்த ஊரிலேயே வேலை பார்க்கலாம்'' என்று சிரித்தார். அவனும் நாணமுற்றவனாய் சிரிப்பைச் சிந்தினான்.
"உங்களுக்கு சம்பளம் இப்போது இருபத்து ஐந்தாயிரம். ஆறு மாதம் கழித்து உங்கள் வேலையில் உறுதி செய்யப்படும் போது இன்னும் அதிக சம்பளம் கிடைக்கும். வேலையில் சேருவதற்கு முன்னால் கம்பனியை விட்டுச் செல்ல மாட்டேன் என்னும் மூன்று வருட உறுதிப் பத்திரம் தர வேண்டும்'' என்றார்.
ஜானகிராமன் இவை எல்லா இடங்களிலும் கேட்கப்படும் விஷயம்தானே என்று நினைத்தான். வேலை கிடைத்து விட்டது என்னும் பெரிய விஷயத்துக்கு முன் இவை எல்லாம் எம்மாத்திரம்?
அவன் தலையசைத்தான்.
"கடைசியாக ஒரு விஷயம். இந்த வேலை உங்களுக்கு கிடைப்பதற்கு நீங்கள் எனக்கு எழுபத்திஐந்து ஆயிரம் தர வேண்டும். சேர்வதற்கு முன்னால் இருபதாயிரம். மூன்று மாதத்துக்குள் மீதப் பணம்'' என்றார் ரெட்டி.
ஜானகிராமன் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், சில விநாடிகளில் தன்னைச் சமாளித்துக் கொண்டான். ஊரெல்லாம் இது நடக்கத்தானே நடக்கிறது? வரும் சம்பளத்தில் முதல் சில மாதங்களில் இதைக் கொடுத்து விடலாம். முதல் சில மாதங்களுக்கு இன்னும் வேலை இல்லாமல் திண்டாடுவதாக நினைத்துக் கொண்டால் போயிற்று. இப்போது அவன் அவர் கேட்பதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் வெளியில் உட்கார்ந்திருக்கும் இருவரில் ஒருவன் வந்து இந்த வேலையை எடுத்துக் கொண்டு விடுவான்.
"எஸ் ஸார்'' என்றான். ""நீங்கள் சொல்வது எனக்கு சம்மதம்தான்'' என்றான்.
அவர் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்து பிரிக்கச் சொன்னார். அது அவனது நியமனக் கடிதம். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியே வந்தான். அப்போது அவனுக்கு மீனா அறையிலிருந்து வெளியே வரும் போது அவள் கையில் எதுவும் எடுத்து வரவில்லையே என்று தோன்றிற்று. ஒரு வேளை கைப்பையில் வைத்துக் கொண்டு....
மீனா அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் "கங்கிராட்ஸ்'' என்றாள். ""வேலை கிடைச்சிருச்சுங்கிறது மொகத்துலயே ஒட்டி வெச்சிருக்கே'' என்று சிரித்தாள்.
"உங்களுக்கும் கிடைச்சிருச்சுல்லே?'' என்றான் ஜானகிராமன்.
""ரெண்டு நாள் டைம் கேட்டிருக்கேன், யோசிச்சு சொல்றேன்னு'' என்றாள் .
""டைமா? எதுக்கு?'' என்று கேட்டான்.
"அதைப் பத்தி அப்பறம் சொல்றேன். உங்களுக்கு உள்ளே எப்படி இருந்தது? என்ன கேட்டாரு?''
அவன் நடந்ததை விலாவாரியாகச் சொன்னான். பணம் கொடுக்க ஒப்புக் கொண்டதற்கான காரணங்கள் மனதில் எழுந்ததையும் சொன்னான்.
"ஸோ, பணம் குடுக்க ரெடின்னு சொல்லிட்டீங்க'' என்றாள் மீனா.
"அதைச் சொன்னப்புறம்தான இந்த லெட்டரை கையில அவரு குடுத்தாரு'' என்று அவளிடம் காட்டினான். அவள் அதை படித்து விட்டு அவனிடம் திருப்பித் தந்தாள்.
"உங்க கிட்ட என்ன கேட்டாரு? பணம்தானா? அதுக்கு எதுக்கு நீங்க டைம் கேட்டீங்க?'' என்றான் ஜானகிராமன்.
"இல்ல. என்கிட்டே பணம் கேக்கல'' என்றாள் அவள்.
அவன் திகைத்து அவளை நோக்கினான்.
""தெனமும் ஆபிஸ்ல லேட்டா உக்காரணும்னு சொன்னாரு'' என்றாள்.
"என்னது?''
அவள் ஒன்றும் பேசாமல் இருந்தாள். சில நொடிகள் கழித்து ""சேல்ஸ் ஆபீசர்னாலும் எனக்கு ஆபிஸ்லதான் வேல. மார்க்கட்டிங் டைரக்டர் ஆபிஸ்ல எல்லா பிராஞ்சுகளையும் கண்ட்ரோல் பண்ணுற வேல. மாசத்துல பதினஞ்சு நாள் அவர் டூர்ல போவாராம். மத்த பதினஞ்சு நாள் அவரு இங்க இருக்குறப்போ நான் எல்லாரையும் போல கடிகாரத்தப் பாத்து சாயங்காலம் ஆபிûஸ விட்டு வீட்டுக்கு போகக் கூடாது. அவரு லேட்டா ஆபிஸ்ல வேலைன்னு இருக்கற வரைக்கும் நானும் இருக்கணுமாம். அப்போ ஒருத்தி கூட ஆபிஸ்ல இருக்க மாட்டா'' என்றாள் மீனா.
அவனுக்கு உடம்பு பதறிற்று. வாய் விட்டு "என்ன அயோக்கியத்தனம் ! ஸ்கெளன்ட்ரல்!'' என்றான்.
மீனா அவனை ஊடுருவிப் பார்த்தாள்.
"எது அயோக்கியத்தனம்னு சொல்றீங்க? இது மாத்திரம்தானா?'' என்றாள்.
அவனுக்கு முகம் விழுந்து விட்டது.

ஸிந்துஜா




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com