தேன்காரிகளின் ரீங்காரங்கள்

"தேன்' என்று ஒரு முறை நான் சொல்லிக் கொள்கிறேன். தேன் என்று நான் சொன்னவுடனேயே  குழந்தைகளைப்  போல்  நீங்கள் நாக்கை சப்புக் கொட்டுகிறீர்கள் தானே? உங்கள் செய்கையை என்னால்  உணரமுடிகிறது.
தேன்காரிகளின் ரீங்காரங்கள்

"தேன்' என்று ஒரு முறை நான் சொல்லிக் கொள்கிறேன். தேன் என்று நான் சொன்னவுடனேயே  குழந்தைகளைப்  போல்  நீங்கள் நாக்கை சப்புக் கொட்டுகிறீர்கள் தானே? உங்கள் செய்கையை என்னால்  உணரமுடிகிறது. எனக்குக் கொஞ்சம் கிலோ   தேன் வேண்டும்.  ரப்பரும், தென்னையும், பலாவும், அன்னாசிகளும்  அவற்றிற்கிடையே வீடுகளுமாய் இருக்கும் இந்தக் கிராமத்திற்கு தேன் வாங்கு வதற்காக நான் வந்து விட்டேன். தனிமையில் அல்ல; மனைவி  மல்லிகாவையும்,  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள்  தமிழ் மதியையும் அழைத்துக் கொண்டு தான் வந்திருக்கிறேன். அவர்களுக்கும் இந்த அழகியக்   கிராமத்தைப் பார்த்தது போல் இருக்குமல்லவா?

இது இலையுதிர் காலத்திற்கு பிந்தைய வசந்த காலம். மரங்களில் அடர்ந்து கிடக்கும்  தளிரிலைகள்  சூரியக் கதிர்களை மண்ணில்  விழவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கின்றன.  சாலைகளில்  கூட முழுமையாய் நிழல் படர்ந்து   கிடக்கிறது.  

இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு   மாத்தூர் தொட்டில் பாலத்தைப் பார்க்க நண்பர்களோடு  வந்திருந்தபோது,  வழியில்   "இங்கு தேன் கிடைக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும்'  என்ற   பலகை கண்ணில் பட்டதை நினைவில் வைத்துக் கொண்டுதான் இன்று  இந்தக் கிராமத்திற்கு வந்திருக்கிறேன். இந்தக் கிராமத்தின்  பெயர் கொட்டூர் என்கிறார்கள். பொருத்தமான பெயர் போலத்தான் இருக்கிறது. 

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் "இங்கு ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா கிடைக்கும்' என்று கடைக்குக் கடை எழுதி வைத்திருப்பது போல் இந்தக் கிராமத்தில் வீட்டுக்கு வீடு  "இங்கு சுத்தமான தேன் கிடைக்கும்' என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.  

நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,  ஆள்குறைப்பு நடவடிக்கையாக என்னைப் பிரித்து விட்டபோது உடனடியாக என்ன செய்வதென்று தெரியவில்லை. நடு ஆற்றில் விடப்பட்டது போலத்தான் இருந்தது. இருந்த போதிலும்  கையில் கிடைத்த பணத்தை வைத்துக்  கொண்டு, இப்போது சிறிய அளவில் பல்பொருள் அங்காடி ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். வியாபாரம் மெதுவாய்  சூடு பிடித்து வருகிறது. சிறிது  நாள்களாக  அங்காடியில் தேனும்

வைத்து விற்பனை செய்யலாமே என்றொரு யோசனை.  நல்லதொரு ஒளசதமல்லவா தேன் அது இல்லாமல் என்ன  பல்பொருள் அங்காடி ?   தேனுக்கு இப்போது கிலோவிற்கு மொத்தமாகவும், சில்லறையாகவும்  என்ன விலை என்பதையெல்லாம் ஏறக்குறைய விசாரித்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன்.

காரிலிருந்து இறங்கி இரண்டு மூன்று பேரிடம், ""தேன் கிடைக்குமா? என்ன விலை வேண்டும்?'' என்று கேட்ட போது அவர்கள் சொன்னவிலை எனக்கு மலைப்பாகிவிட்டது. இன்னும் சில பேரிடம் கேட்கலாம் என்று நினைத்தவாறு மீண்டும் காரில் ஏறி  அதனை மெதுவாய் நகர்த்தி உள்சாலைக்குள் திருப்பினேன்.

நாங்கள் சிறிது தூரம் வந்தபோது இன்னொரு வீட்டின், முன்புற   கேட்டில், "இங்கு சுத்தமான தேன் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்' என்று துண்டு மரப்பலகையொன்றில்  எழுதி தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்து காரை நிறுத்திவிட்டு இறங்கினேன்.  எனக்குப் பின்னால் மல்லிகாவும், தமிழ்மதியும் இறங்கி வந்தனர். நான் கேட்டைத் தள்ளித் திறந்துவிட்டு உள்ளே சென்றேன்.  வீட்டு முற்றத்தில் மரப்பெட்டிகள், மரப்பலகைகள், நீல நிற பிளாஸ்டிக் கேன்கள்   என இறைந்து கிடந்தன.   வாசல் கதவின் மேல்பக்கப் பாதி, திறந்த நிலையில் இருந்தது. நான் அதன் வழியாக எட்டிப் பார்த்து, ""வீட்டில யார் இருக்கா'' என்று குரல் கொடுத்த போதுதான்  கவனித்தேன், வராந்தா போன்ற அந்த முன்பக்க அறையில் நீல  நிற பிளாஸ்டிக் கேன்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை. அவை தேன் நிரப்பப்பட்ட கேன்களாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். இதற்கிடையே கணுக்கால் வரை நீண்ட  பாவாடையும், தளர்வான மேல் சட்டையும் அணிந்த  இளம் பெண் ஒருத்தி   அங்கிருந்து ""என்ன வேணும்'' என்றவாறு வாசல் கதவுப் பகுதிக்கு வந்தாள். அவளுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கும். என் மகள் தமிழ்மதியைப் போல்  அழகுப் பெண்ணாகவே  இருந்தாள். ஆனாலும் ஏனோ, அவளது முகத்தில்   சிறு  வாட்டம் தெரிந்தது.

 ""தேன் வேணும் நூறு  கிலோ கொடுக்க முடியுமா என்ன விலை?''

அந்தப் பெண்ணின் முகம் மலர்ந்து கொண்டது.

""நூறு என்ன அதற்கு மேலேயும் கெடைக்கும். விலையை அம்மா தான்  சொல்லும்''

""அம்மா இருக்காங்களா?''

""அம்மா தேன் எடுக்கப் போயிருக்கு. நானும் அங்கப் போகத் தான் கௌம்பி நிற்கிறேன். இப்ப வேணுமிண்ணா  நான், அம்மாவைக் கூட்டிகிட்டு வாறானே'' 

""தேன் எடுக்கவா அம்மா போயிருக்காங்க?'' தமிழ்மதி தான்  இடைமறித்து  அந்தப் பெண்ணிடம் கேட்டாள். 

""ஆமா. கொஞ்சம் தூரம் தான். நான் ஓடிப் போய் கூட்டிக்கிட்டு வாறேன்''

""அப்பா நாமளும் தேன் எடுக்கும் இடத்துக்குப் போகலாம்பா பிளீஸ்''  தமிழ்மதி  எனது கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சலாகக் கேட்டாள். நானும் இதுவரை தேன் எடுப்பதைப் பார்த்ததில்லை.  எனக்கும் ஆவல் தொற்றிக் கொண்டது.

""சரி போகலாம்'' என்றேன் நான்.  

அப்போது "ஒரு நிமிடம்'  என்று சொன்ன அந்தப் பெண் வீட்டின் உள்ளே சென்றுவிட்டு,  ஒரு பெரிய ஸ்டீல் தூக்குவாளி நிறைய தண்ணீரும், இரண்டு எவர் சில்வர் கப்புகளையும் எடுத்துக் கொண்டு   வெளியே வந்தாள். பின்னர் கதவைச்  சாத்திவிட்டு,    ""வாருங்கள் போவோம்'' என்று சொல்லிக்  கொண்டு நடந்தாள்.  நாங்கள் அவள்  பின்னால் நடந்தோம்.  கற்கள் பெயர்ந்து செம்மண் புழுதி பறந்து கிடக்கும் அந்த சிறு  சாலையில் நாங்கள் நடந்த போது, அந்தப் பக்கமாக   நின்றவர்களின் கண்களெல்லாம் எங்கள் மீது தான் விழுந்தன.  ஒரு ஆள், சைகையில்  அவளிடம்  ஏதோ கேட்டார். அவள்  "ஆமாம்'  என்பது போல் தலையசைத்துக் கொண்டு நடந்தாள்.  ""தேன் காரிக்க வீட்டுல காலத்தே தேனு வாங்க ஆளு வந்திருக்கு இண்ணு நல்லக் கோளுதான்'' என மற்றொரு ஆள் சொல்லிக் கொண்டே சைக்கிள் ஒன்றையும்  உருட்டிக் கொண்டு  போனார். எனக்கு அந்த ஆள் சொன்னது முழுமையாகப் புரியவில்லை.  தமிழ்மதி தேன்கார வீட்டுப் பெண்ணிடம்    நன்றாக ஒட்டிக் கொண்டாள் என்றே எனக்குத் தோன்றியது. அவள் அந்தப் பக்கமாக கையை  நீட்டிக் கொண்டு ஏதோ கேட்பதும், அதற்குத் தேன்கார வீட்டுப் பெண் பதில் சொல்வதுமாக இருவரும் நடந்தனர்.  இப்போது அந்தப் பெண்  ஒரு சந்தில் திரும்பி ஒற்றையடிப்பாதை வழியாக நடக்கத் தொடங்கினாள்.  நாங்களும் பின்தொடர்ந்தோம். சிறிது தூரம் நடந்த போது பெரும் ரப்பர் மரக்காடு வந்து விட்டது.   மரங்களில்,  தளிரிலைகள்  வெயில்பட்டு,  "தக...தக' என  மின்னிக் கொண்டிருந்தன.  அது அந்தப்பகுதிக்கு தேனின் நிறத்தைப் போல்  ஒரு நிறத்தைக் கொடுத்திருப்பதாகவே எனக்குப்பட்டது. காட்டுக்குள் ஒரு மென்வாசமும்,  மெல்லியதாய்  இரைச்சலும் நிரம்பிக் கிடந்தது. அந்த இரைச்சல்  தேனீக்களின் ரீங்காரம் என நான் ஊகித்துக் கொண்டேன். ஏதோ ஒரு மரத்திலிருந்து குயில் ஒன்று     "கூ...  கூ' என  கூவிக்  கொண்டிருந்தது. தேன்கார வீட்டுப் பெண் அதற்குப் பதில் மொழியாக "கூ...  கூ...' என்று கூவிக் கொண்டு  நடந்தாள். அவள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக நான் உணர்ந்து கொண்டேன்.                  

""ஆமா உனது பெயரைச் சொல்லலையே'' என்று நான்தான் அவளிடம் பேச்சைத் தொடங்கினேன்.

""நீங்கள் கேட்கலியே'' என்றாள் அவள் சிரித்தவாறு.

""இப்ப சொல்லேன்'' என்றேன்

""இதிலென்ன  சொல்லுவதற்கு என்னோட  பேரு ஸ்வீட்டி பிரஸில்லா. வீட்டுல கூப்புடுறது ஸ்வீட்டி'' என்று கண்கள் மின்ன  சொன்னாள்.

""ஓ நைஸ் தேன் போல இனிக்கும் பெயர் படிக்கிறியா?'' 

""ஆமாம்நர்சிங்''

""ஏன் இப்ப விடுமுறையா?''

""இல்லை'' அப்படிச் சொன்ன போது அவளது முகம் வாடிப்போனது.

""ஏன் உடல் நலமில்லையா?''

""நல்லாத்தான் இருக்கேன்''

""பின் ஏன் போகல்ல?''

""வேண்டாம் அங்கிள். சொல்லவிருப்பமில்லை'' என்றாள். மல்லிகாவும், தமிழ்மதியும்  முறைப்பாய் எனது முகத்தைப்   பார்ப்பதை  உணர்ந்தேன்.   அதன் பிறகு அவளிடம்  நான் எதுவும் கேட்கவில்லை.

சிறிது நேர நடைக்குப் பின்னர் இன்னொரு ரப்பர் காடு வந்தது.  அந்தக் காட்டில்,   தூரத்தில்  ஒற்றைக் கால்களில் வரிசை, வரிசையாய் ஏதோ பறவைகள் நின்று கொண்டிருப்பதைப்   போல  மங்கலாகத்  தெரிந்தது. அவற்றின் அருகில் ஒரு பெண் நின்று ஏதோ வேலை  கொண்டிருப்பதும் தெரிந்தது. 

""அது என்ன ஒற்றைக்காலில் பறவைகள் போல்  ஏதோ  நிற்பது  தெரிகிறதே?'' தமிழ்மதி தான் ஸ்வீட்டியின் தோளைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

""அது தான் தேன் பெட்டி அதோ அம்மா நிற்கிறா'' என்றாள். பின்னர், ""எடி அம்மோ தேனு வாங்க ஆளு வந்திருக்கு'' என்ற சத்தமிட்டவாறே தூரத்தில்நின்ற

அவளது  அம்மாவின் அருகில் வேகமாகச்  சென்று நின்று கொண்டாள். நாங்களும் அவளது அம்மா, அதுதான் தேன்காரி  நின்றிருந்த  இடம் நோக்கி சென்றோம். எங்களைப் பார்த்தவுடன்  எங்கள் பக்கமாக  வந்தாள்  அவள்.

எண்ணெய் வழியும் வட்ட முகம் அவளுக்கு. தலை லேசாய் நரை போட்டிருந்தது. சிறிய கழுத்து வளைவுடன்,  முழங்கைவரை நீண்ட ரவிக்கையும், நரைத்துப் போன பச்சை நிற  காட்டன்   சேலையும் அணிந்திருந்தாள்.  

ஸ்வீட்டி,  தேன்காரியின்  தோளைப்  பிடித்துத்  தொங்கியவாறு காதில் ஏதோ கிசுகிசுப்பாய்  சொன்னாள்.

அவளை முறைப்பாய் பார்த்த தேன்காரி,  சிறிது புன்னகையோடு ""சரி...சரி'' என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்து,  

""வெளியூரா'' என்றாள்.

""ஆமா,  பாளையங்கோட்டை''   மல்லிகாதான்  பதில்  சொன்னாள். வெளியூரா என்று கேட்டதால்,  தேனின் விலையை உயர்த்திக் கேட்டு விடுவாரோ என்ற கலக்கம் எனக்குள் எழுந்தது.

""எத்தனை கிலோ தேன் வேணும்'' தேன்காரி மீண்டும்  கேட்டாள்.

""ஒரு 100 இல்லையின்னா 150  கிலோ.. அங்காடியில்  வைத்து விற்பதற்காக்கும்   விலை குறைத்து வேணும்''

""இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறீர்கள் நூறோ, நூற்றைம்போதோ கிலோ மட்டும் வாங்கிக் கொண்டு விற்கப் போனால் என்ன லாபம் கெடைக்கும்?''

""அது தான் விலை குறைத்து வேணும்''

""தேனுக்கு விலை வைக்கமுடியுமா அமிர்தமல்லவா அது?'' என்று சொல்லி புன்முறுவல் செய்தாள் அவள்.

""இருந்தாலும் அங்காடியில் வைத்து சில்லறை விலைக்கு விற்பதற்கல்லவா விலை  சொல்லியாகத் தான் வேண்டும்?'' 

""வரும் வழியில் விசாரித்திருப்பீர்கள் தானே.. அதை விட குறைந்த விலைக்குத் தாறேன். வாருங்கள் வீட்டுக்குப் போவோம்'' என்று அவள் சேலையை உதறி சரி செய்து கொண்டு கிளம்ப ஆயத்தமானாள். 

அப்போது தமிழ்மதி  குறுக்கிட்டு, ""தேன் எப்படி எடுக்கிறதுண்ணு  பார்க்கணும் ஆன்டி''  என்று தேன்காரப் பெண்ணின் முகம் பார்த்துச் சொன்னாள்.

""ஆமா அம்மா, தேன்  எடுக்கிறப் பார்க்கணுமிண்ணு கேட்டதாலத்தான் இங்க கூட்டிக்கிட்டி வந்தேன்'' என்று ஸ்வீட்டி இடைமறித்துச்  சொன்னாள்.  நானும் மல்லிகாவும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தோம்.

""சரி வாங்க நீங்க சரியா சீசன் நேரத்திற்குத் தான் வந்திருக்கீங்க...'' என்று என் முகம் பார்த்துச்  சொன்ன தேன்காரி, முன்னால் நடந்தாள்.  தமிழ்மதிக்கு உற்சாகம் தாங்கவில்லை. மல்லிகாவும் ஏறக்குறைய அதே மன நிலையில் தான் இருந்தாள். நானும் என்ன சும்மாவா?

""இதென்ன ஒன்றைக் காலில் நிற்கும் பறவைகளைப்  போல  வரிசையாய் பெட்டிகளை நட்டு வைத்திருக்கிறீர்கள் ஆன்டி?'' வரிசையாய் இடைவெளிகளுடன் ஒற்றை மரக்கால்களுடன் நட்டு வைக்கப்பட்டிருந்த மரப் பெட்டிகளைப் பார்த்து தமிழ்மதி தான்  பேச்சைத் தொடங்கினாள். 

""ஆமாம், மகளே  இது தான் தேன் கூடு. நாங்க தேன் பெட்டிண்ணு சொல்லுவோம்.  இதுக்கு  உள்ள தான் தேனீக்களும், அதுக  வெளியில போய் எடுத்துகிட்டுவந்து  சேகரிக்கும் தேனும் இருக்கு'' என்று ஒரு பெட்டியை கையில் பிடித்தவாறு சொன்னாள் தேன்காரி. அந்தக் கூடு ஏறக்குறைய ஒன்றரை அடி உயரத்தில் இருந்தது.  அதன் கால் இரண்டடிக்கும் கூடுதலான உயரத்தில் இருந்தது. கூட்டுக்குள்ளிருந்து  தேனீக்களின் ரீங்காரம் "ம்ம்ம்ம்ம்' என்று கேட்டுக்  கொண்டிருந்தது.   தேனீக்கள்  கூட்டுக்குள்ளிருந்து  வெளியே வருவதும், வெளியிலிருந்து  உள்ளே செல்வதுமாக இருந்தன. 

""நான் தேனீ  கூடுகள், மரங்களில் தொங்கி நிற்கும் இல்லையின்னா.. மலைக்குகைகளிலும் இருக்கும் என்றுதான்  நினைத்துக்கிட்டுருக்கேன்'' தமிழ்மதி இப்போது தேன்காரியைப் பார்த்து சொன்னாள்.  என் மனைவியும் அவளது பேச்சுக்கு ஆதரவாய் தலையசைத்தாள்.

""ஆமாம் மகளே நீ  சொல்லுவது சரிதான். உலகத்தில பூச்சியினங்கள் தோன்றியபோதே தேனீக்களும் தோன்றியிருக்கு. பள்ளிக்கூடத்தில் படித்திருப்பாயல்லவா? தேனீக்களில் நிறைய வகை உண்டு.   மரங்களில் தொங்கி நிற்பதும், மலையிடுக்குகள், குகைகள், சுவர் இடுக்குகள் இங்கெல்லாம் இருப்பது கொம்புத்தேனீ, மலைத் தேனீ, கொசுத் தேனீ வகைகள்.  இப்பயெல்லாம் வனங்களும், காடுகளும் அழிஞ்சிட்டு இருப்பதால அந்த இனங்களும்  அழிஞ்சுகிட்டு வருது. அதனால அந்த இனங்கள்ல இருந்து கொஞ்சமாகத் தான் நமக்கு தேன் கெடைக்கும். அந்த தேன் முழுக்க முழுக்க இயற்கையான தேனும் கூட.  இது அடுக்குத் தேனீ வகை. இதோட பேரு ஏபிஸ் இண்டிகா. ஏபிஸ்ன்னா தேனீக்களின்  குடும்பப் பேரு. இந்த வகை தேனீக்களிலிருந்துதான்  இப்போ அதிகமா தேன் கெடைக்குது.  இந்த தேனீக்கள   நாம வளர்க்க முடியும்''  தேன்காரி நீளமாய் விளக்கம் சொன்னாள். 

""நாம வளர்க்க முடியுமா? கிளி, புறா மாதிரியா?''  தமிழ்மதி புருவத்தை உயர்த்திக் கொண்டு ஆச்சரியமாய் கேட்டாள்.

""ஆமா... அதிலென்ன  யானைகளை வளர்க்கும் மனிதர்களை நீ பார்த்தில்லையா? எல்லாம் பழக்கம் தான்...'' என்றாள் தேன்காரி. 

""ஆமாம். ஆமாம்...'' என்றாள்  தமிழ்மதி. 

இப்போது தேன்காரி அந்தக் கூட்டின் மேல் வைத்திருந்த  பிளாஸ்டிக் அட்டையை  எடுத்து கீழே வைத்து விட்டு  ""பெட்டியைப் பிரித்து தேன் எடுக்கலாமா?'' என்று  தமிழ்மதியிடம்  கேட்டாள்

 ""ம்'' 

 ""பயப்படக்கூடாது''

""தேனீக்கள் கொட்டுமா?'' கைகளை உதறிக் கொண்டே கேட்டாள்   தமிழ்மதி. அவளது  முகத்தில் அச்சம் படர்ந்து கொண்டது. மல்லிகாவின் முகத்திலும் அப்படித்தான். 

""ஆம்..  கொட்டுவது  தேனீக்களின் சுபாவம் தானே? அதுகளுக்கு ஆபத்து வரும் போது கொட்டித்தானே ஆக வேண்டும். நீயும் அப்படித்தான் இருக்க வேண்டும். இப்போது  கொஞ்சம்  தள்ளி நில்லு. கொட்டாதவாறு பார்த்துக் கொள்ளலாம் ஒன்று, இரண்டு  கொட்டுகள் வாங்கினாலும் பரவாயில்லைதானே?'' என்று மெல்லியதாய் சிரித்துக் கொண்டு  சொல்லியவள், ""ஸ்வீட்டி அந்த ஸ்மோக்கரை ரெடி பண்ணு''  என்றாள். 

ஸ்வீட்டி, அருகில் இருந்த நீள் மூக்குடன் தகரத்திலும், ரப்பரிலுமாய் செய்யப்பட்டிருந்த ஒரு கருவியில் தேங்காய் சவுரியைப் நிரம்பி, தீக்குச்சியை உரசி அதில் தீ ஏற்படுத்தினாள். பின்பு அதில் தீ எரிந்து கொண்டிருந்த பகுதியை அதன் மூடியால் மூடி "புஸ்... புஸ்' என்று அதன் பின்புற  ரப்பரை அழுத்தினாள். அப்போது அதன் மூக்கு போன்ற பகுதியிலிருந்து "குபுக்... குபுக்' என்று வெண்நிறத்தில் புகை வந்தது. 

இப்போது, ""இதோ பாருங்க இந்தப் பெட்டி மூன்று தட்டுகளா  இருக்கு இல்லையா? இதில் அடித் தட்டுக்குப்  பேரு புரூடு. மேல இருக்கிற  ரெண்டு தட்டுகளுக்கும்  பேரு சூப்பர்  புரூடு. அடி தட்டுல தேனீக்களின் முட்டைகள், லார்வாக்கள்  இருக்கு. சூப்பர் தட்டுகள்ல தேனடைகளும், வேலைக்கார தேனீக்களும், ஆண் தேனீக்களும் இருக்கு. ராணி தேனீ பெரும்பாலும் புரூடு தட்டிலேயே  இருக்கும்''  என்று சொல்லிக் கொண்டே கூட்டை சற்று நகர்த்திக் காட்டினாள். பின்னர் கூட்டின் மேல் மூடியை மெதுவாய் கையால் எடுத்து கீழே வைத்துவிட்டு உள்ளேயிருந்து ஒரு  மரச்சட்டத்தை வெளியே எடுத்து எங்களை நோக்கி  உயர்த்திக் காட்டினாள்.

""வாவ்''   தமிழ்மதி  கூச்சலிட்டுக் கொண்டாள். அவளுக்கு  ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. தேன்காரி உயர்த்திக் காட்டிய மரச்சட்டம் முழுவதும் தேனீக்கள் அடர்த்தியாய் அரக்குப் போல் பற்றிப் பிடித்திருந்தன.    அதிலிருந்து  ஒன்றும், இரண்டுமாய் தேனீக்கள்  பறக்கவும் செய்தன. 

""உனக்கு ஒன்று தெரியுமா மகளே, இந்தத்   தேனீக்கள்  பறப்பதால்  தான் உலகம் பசுமையாகுது. சகல  ஜீவராசிகளுக்கும் உணவு கெடைக்குது''  என்று சொன்னவள், திடீரென்று அதிலிருந்து ஒரு தேனீயை கையில் பிடித்து வைத்துக் கொண்டு,   "" இவளால் தான் உலகம்  பசுமையாகுது.  ஆமாம் இவளது ரீங்கார சங்கீதத்திற்காகத் தான் மரங்களும், மலர்களும் காத்துக் கிடக்கிறது. இவள் பெண். இவள் வேலைக்காரி. இவள் உழைப்பாளி. இவள் தேன்காரி. நானும் தேன்காரி'' என்றாள். பின்னர் அருகில் நின்ற ஸ்வீட்டியைக் கைகாட்டி  ""ஏன், இவள் கூட  தேன்காரி தான்''  என்றாள்.  அவளது  முகம் உணர்ச்சிக் குவியலாக மாறிப்போனது.    பின்பு,  ""ஆல்பிரட் ஐன்ஸ்டீன்  கேள்விப்பட்டிருகிறாயா? இயற்பியல் விஞ்ஞானி அவர் சொல்லுகிறார்,  பூமியில் தேனீக்கள் இல்லையின்னா மனுஷ குலம் நான்கு ஆண்டுகளில் மடிந்து விடுமாம்''  

""உண்மை உண்மை  தேனீக்கள்  அயல் மகரந்த சேர்க்கைக்கு அதிகமாகக்  காரணமாக இருப்பதால்  தான் காய்கனிகளும், தானியங்களும்  விளைவதாக  நான் படித்திருக்கிறேன்'' என்று சத்தமாகச் சொன்னாள் தமிழ்மதி. 

""ம்.. நல்லாப்  படித்திருக்கிறாய் நல்ல  குழந்தை நீ'' தேன்காரியின் இனிப்பான சொல்லில் தமிழ்மதி ஏக உற்சாகம் அடைந்ததை அவள் முகம் சொன்னது. எனக்குள், இத்தனை, இனிப்பாக பேசும் தேன்காரி, தேனின் விலையை உயர்த்திக் கேட்டால் என்ன செய்வது என்ற யோசனை வந்தது. 

இப்போது,   அந்தக் கருவியை, அதுதான், ஸ்மோக்கரை  தேன்காரியிடம் கொடுத்தாள் ஸ்வீட்டி.  அவள் அதை வாங்கிக் கொண்டு  "புஸ்... புஸ்...' என்று கையில் வைத்திருந்த மரச்சட்டத்தை நோக்கி  அழுத்தினாள்.  வெண்புகை தேனீக்களின் மீது பட்டவுடன் அவை கலைந்து நாலாபுறமாகவும் சிதறிப் பறந்தன.  தமிழ்மதியும், மல்லிகாவும் தோள் வழியாக சுற்றிப் போட்டிருந்த துப்பட்டாவை தலைவழியாகப் சுற்றிப் போட்டுக் கொண்டனர்.  நானும் எச்சரிக்கையாய்தான்  நின்று கொண்டேன். எனினும்  ஒன்றிரண்டு தேனீக்கள் வந்து எனது கைகளில்  கொட்டி விட்டன. ஆள்பார்த்து தான் கொட்டுகின்றன போலும் என்று நினைத்துக் கொண்டேன். கொட்டிய தேனீக்களை  வேகமாக எடுத்து தூரத்தில் வீசினேன்.  கொஞ்சம் கொஞ்சமாக வலி ஏறியது.  

""தரிப்பு ஏறுது இல்லையா?'' என்று  என்னிடம் கேட்ட தேன்காரி மீண்டும் தொடர்ந்தாள்... ""கொஞ்சம் நேரம் தரிப்பு இருக்கும் எங்களுக்கெல்லாம் எத்தனை எத்தனை  ஆயிரம்  கொட்டுக்கள்  கெடைச்சிருக்கும்? நிறையத் தேனீக்கள்  ஒன்ணா சேர்ந்து கொட்டினா தான் ஆபத்து.   இன்னொன்று தெரியுமா? புகை பட்டவுடன் தேனீக்கள்  கொஞ்சம்  மயங்கவும் செய்யும் அப்ப அதுக  கொட்டாது... பெண்களை  மயக்கிவிட்டு  உடமைகளைப் பறித்துக் கொள்வது நாட்டுல  நடக்குதில்லையா?'' என்றாள் என்முகத்தைப் பார்த்தவாறு
""ம் சரிதான்...' என்று தலையசைத்தேன் நான்.  

இப்போது தேனீக்கள்  அகன்றிருந்த  சட்டத்தில் இளம் மஞ்சளும், வெண்மையுமாய் தேனடைகள் நிரம்பியிருந்ததைப் பார்த்த போது எனக்கு வியப்புத் தாங்கவில்லை.  ஸ்வீட்டி  கூர்மையான  சிறிய  ஸ்டீல் கத்தி ஒன்றை தேன்காரியிடம் நீட்டினாள், அவள் அதை வாங்கிக் கொண்டு, தேனடையின் மேல் பக்கமாக சீவி  வெண்நிறத்தில் மெழுகுபோல் இருந்த பகுதிகளை எடுத்தாள். பின்னர் அந்தத் துண்டுகளை எங்கள் பக்கமாக நீட்டி, "" சுவைத்துப் பாருங்கள்'' என்றாள். நாங்கள் ஆளுக்கு ஒரு துண்டு வாங்கி சுவைத்துக் கொண்டோம். தேனும், மெழுகுமாக அருமையான சுவையாக இருந்தது அது. பின்னர், ஒழுங்கு செய்யப்பட்ட   தேனடைச்  சட்டத்தை அருகில் இருந்த ஒரு கருவிக்குள் வைத்தாள். அந்தக் கருவி நாகத் தகரத்தால்  உருளை வடிவில் செய்யப்பட்டிருந்த  டின்  போல இருந்தது. அதனுள் வலைகளுடன் கூடிய இருப்புச் சட்டங்களும், மேல் பகுதியில் சக்கரங்களுடன், சுழற்றும் கைப் பிடியும் இருந்தது. 

""இதுக்கு என்ன பேரு?''  நான் தான் தேன்காரியிடம்   கேட்டேன்

- அடுத்த இதழில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com