முகம் மாறுகிற மதுரை!

பல தலைமுறைகள் கண்ட  "மதுரை பெரியார் பேருந்து நிலையம்'  இனி நினைவில் மட்டுமே இருக்கப் போகிறது. 
முகம் மாறுகிற மதுரை!


பல தலைமுறைகள் கண்ட  "மதுரை பெரியார் பேருந்து நிலையம்'  இனி நினைவில் மட்டுமே இருக்கப் போகிறது. 

தூங்கா நகரம்  என்று பேசப்படும் மதுரை என்றாலே  மீனாட்சியம்மன் கோயிலும், மணக்கும் மல்லிகையும்,  பூப்போன்ற இட்லியும்தான்  நினைவுக்கு வரும். அது போல், மதுரை மக்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அடையாளமாக  நகரின் மத்தியில் அமைந்திருந்த  மதுரையின் முதல்  பேருந்து நிலையம் தான் மத்திய பேருந்து நிலையம். 

சுதந்திரம் கிடைப்பதற்கு  முன்பாகவே  இதே  இடத்தில் உருவாகிவிட்டிருந்தது, இந்த "மத்திய  பேருந்து நிலையம்'. மதுரையிலிருந்து  தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள்  மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்துதான் இயங்கி வந்தன. மதுரை ரயில் நிலையம்,  மீனாட்சியம்மன்  கோயில் போன்றவை இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து போகிற தூரத்தில் அமைந்திருக்கின்றன. அன்றைய பிரமாண்டங்களான ராணி மங்கம்மா சத்திரம், இந்தியாவின் மிகப் பெரிய திரையரங்கான தங்கம்  தியேட்டர், டிவிஎஸ் நிறுவனம், காலேஜ் ஹவுஸ் விடுதி போன்றவையும் இந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில்தான்.  மதுரை நகரம் நகராட்சியிலிருந்து, மாநகராட்சியாக 1971-இல்  மேம்படுத்தப்பட்டது. அதை ஒட்டி, "மதுரை சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு'   என்ற பெயர்  "பெரியார்  பேருந்து நிலையம்'  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  

மதுரை நகரம் விரிய விரிய,  பேருந்து  நிலையங்களும் பெருகின. அண்ணா பேருந்து நிலையம்,  பிறகு ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்கள் தோன்றினாலும், டவுன் பஸ்கள் பெரியார் பேருந்து நிலையத்தை மையப்படுத்தி இயங்கி வந்ததால் பெரியார் பேருந்து நிலையத்தின் முக்கியத்துவம்  நாளுக்கு நாள் கூடிக் கொண்டுதான் வந்தது. பல்லாயிரக்கணக்கான  மக்கள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் அமைந்திருந்த  சுமார் நானூற்றி ஐம்பது  கடைகள் சில ஆயிரம் பேர்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்திருந்தன.  இப்போது அந்தக் கடைகளுக்கு மூடுவிழா நடந்து கொண்டிருக்கிறது. கடைகளை உடைத்து சாமான்களை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த மாத இறுதியில்  பெரியார் பேருந்து நிலையம் நிரந்தரமாக மூடப்படும். பெரியார் நிலையத்திற்கு அருகில்  இருக்கும்  மினி பெரியார் பேருந்து நிலையத்தையும் இணைத்து, பொலிவுறு பேருந்து நிலையமாக   புதிதாக  எழுப்பப் போகிறார்களாம். 

"பொலிவுறு   நகரம்'  (நஹம்ஹழ்ற்  இண்ற்ஹ்)   திட்டத்தின்  கீழ் மதுரை நகரமும் வருவதால்,  பொலிவுறு நகரத்திற்கு ஏற்ப,    ஆறடுக்கு  கட்டிடத்துடன் நவீன வசதிகளுடன் "பொலிவுறு பேருந்து' நிலையத்தை உருவாக்க   தமிழக அரசும், மதுரை மாநகராட்சியும்  சுமார்  159 கோடி ரூபாய்  செலவு  செய்ய   முடிவு செய்துள்ளன. பேருந்தை ஒட்டி இருக்கும்  பாலங்கள்  இடிக்கப்பட்டு  புதிய பாலங்கள்  கட்டப்படும் என்றும் தெரிகிறது. 

கட்டுமானப் பணிகள் உடனடியாகத் தொடங்க உள்ளதால்,  பெரியார் பேருந்து நிலையம் வந்து போய்க்  கொண்டிருக்கும்  பஸ்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்படும். அதனால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். மதுரை ரயில் நிலையம் வந்து போக தடங்கல்கள் ஏற்படும் என்றாலும், அது தற்காலிகம் தானே என்று அமைதிப்பட வேண்டியதுள்ளது. கடைக்காரர்களுக்கு புதிய பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்படும் என்று உறுதி சொல்லப்பட்டாலும்  வாடகை  பல மடங்கு   அதிகமாகுமே  என்ற பயம் கடைக்காரர்கள் மத்தியில் உள்ளது. 

மதுரை மினி பெரியார் பேருந்தை ஒட்டியிருக்கும்  சுமார் ஐம்பது   அடி அகலம், உயரம் கொண்ட ஒரு பழமையான கட்டிடம் உள்ளது.  "கோட்டை வாசல்'  என்று அந்த கட்டிடம் அழைக்கப்படுகிறது. நகருக்குள் நுழைய அமைக்கப்பட்ட நான்கு  வாசல்களில் ஒரு வாசல்தான் இந்த கோட்டை வாசல்.  அகழிகள் இருந்த இடமெல்லாம்  சாலைகளாகிவிட்டன.  

நல்லவேளை, இந்தக் கோட்டை வாசல் "புராதனச்  சின்னம்' என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால்   "பொலிவுறு  பேருந்து நிலையம்' பிரமாண்டமாக எழுந்தாலும்,  கோட்டை வாசல் பாதுகாக்கப்படும்  என்பதுதான் ஆறுதல் செய்தி! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com