தினமணி கதிர்

நடமாடும் வீடு!

29th Dec 2019 04:38 PM | ச.பாலசுந்தரராஜ்

ADVERTISEMENT

நடமாடும் உணவகங்கள், நடுமாடும் தேநீர்விடுதிகள், நடமாடும் துணி தேய்ப்பு நிலையம், நடமாடும் பழக்கடை, நடமாடும் மண்பரிசோதனைக்கூடம், நடமாடும் நீதிமன்றம், பெரிய நகரங்களில் நடமாடும் உணவகங்கள் ஆகியவற்றைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் நடமாடும் வீடு குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த அருண்பிரபு என்ற பி.டெக். படித்த இளைஞர் நடமாடும் வீடு ஒன்றை உருவாக்கிச் சாதனை புரிந்துள்ளார். இச்சாதனை குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""நான்கட்டடவடிவமைப்பு பொறியாளர் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு, அது சார்ந்த தொழிலை சுயமாகச் செய்து வருகிறேன். பலர் நூறு சதுர அடி, இருநூறு சதுரஅடி நிலம்தான் உள்ளது. இந்த அளவு குறைவான இடத்தில் வீடு கட்டுவது சாத்தியமாகாது என என்னிடம் கூறினர். இந்த வார்த்தையை நான் சவாலாக எடுத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு, குறைந்த செலவில் அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகளை வடிவமைக்க வேண்டும் என முடிவு செய்தேன். இதையடுத்து ஒரு பழைய சரக்கு ஆட்டோவை ரூ. 37 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கினேன். பழைய பேருந்து உதிரிபாகங்களைப் பயன்படுத்தி வீட்டை அந்த ஆட்டோவில் கட்டத் தொடங்கினேன்.

இதில் சமையல்அறை, படுக்கை அறை, குளியல் அறை, ரெடிமேட் கழிப்பறை, மொட்டை மாடியில் ஓய்வு எடுக்க வசதி உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என எண்ணி அதற்காக வடிவமைத்தேன். 6 அடிநீளம், 6 ஆடி அகலத்தில் வீடு அமைக்கத் திட்டமிட்டேன்.இதில் 4 அடி நீளம் 2 அடி அகலமுள்ள சமையல்அறை அமைத்தேன். இதில் எரிவாயு உருளை, பாத்திரங்கள் வைத்துக்கொள்ளலாம். அடிப்பகுதியில் ஒரு பகுதியில் பொருள்களும், ஒரு பகுதியில் மற்ற பொருட்களை வைக்கவும் தயாரித்தேன். மேலும் இந்த சமையல் அறையில் வெப்பக்காற்று வெளியேற சிறிய மின்விசிறி அமைத்தேன். குளியல் அறையில் பாத்டப்பு மூலம் குளிக்கும் வசதியை ஏற்படுத்தினேன். ரெடிமேட் கழிப்பறை அமைத்தேன். அனைத்து அறைகளிலும் கப்போர்டு அமைத்ததால் பொருள்கள் வெளியே தெரியாமல் இருக்கும்.

ADVERTISEMENT

குளியல் அறை பக்கத்தில் கரி அடுப்பில் வெந்நீர் தயாரிக்க இடம் ஒதுக்கினேன்.

250 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் மேல்நிலைத் தொட்டி அமைத்தேன். இந்த தொட்டியிலிருந்து குழாய் மூலம் சமையல் அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறைக்குத் தண்ணீரைக் கொண்டு சென்றேன். ஹைடிராலிக் பம்பு மூலம் தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் முறையை வடிவமைத்தேன். 600 வாட்ஸ் திறன் கொண்ட சூரிய மின்சக்தி கலம் அமைத்து அதன் மூலம், அனைத்து அறைகளுக்கும் மின் இணைப்புக் கொடுத்தேன். நடமாடும் வீட்டில் மொட்டை மாடியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுக்க வடிவமைத்தேன். அந்த சாய்வு நாற்காலிக்கு மேல் சுமார் 6 அடி உயரத்தில் ஒரு வெள்ளைக் குடை அமைத்தேன். அந்த வெள்ளைக் குடையை சற்று சாய்த்துக் கொண்டால் கீழே உள்ள படுக்கை அறையில் அதிக வெப்பம் தாக்காது. குடை தேவை இல்லை என்றால் அகற்றிவிடலாம். மேலும் ஓட்டுநர் இருக்கைக்கு முன்புறம் அதாவது கண்ணாடியின் முன்பு சுமார் ஓர் அடிநீளத்திற்கு ஒரு தடுப்பு மாதிரி அமைத்தேன். இதன் மூலம் என்ஜினின் வெப்பம் வீட்டினுள் அதிகமாக வராது. இதில் இரண்டு பேர் மற்றும் ஒரு குழந்தை வசிக்கலாம்.

பழைய உதிரிபாகங்களையே நான் உபயோகித்ததால் இதற்கு மொத்தம் ரூ. 1 லட்சம் செலவானது. 5 மாதத்தில் இதனை உருவாக்கினேன். இந்த நடமாடும் வீட்டின் வடிவமைப்பை காப்புரிமை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறேன். 6 ல 6 அடி அளவில் இதுபோன்ற நடமாடும் வீட்டை உலகில் யாரும் வடிவமைக்கவில்லை. இதன் மூலம் சாலையோர வியாபாரிகள், வெளியூர் சென்று வியாபாரம் செய்பவர்கள், இரவில் தங்குவதற்கு வாடகை விடுதி நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. மேலும் வெளிமாநிலத்திலிருந்து பல்வேறு வேலையாக இங்கு வருபவர்களுக்கு, வேலை கொடுப்பவர் இந்த வீட்டின் மூலம் வசதி செய்து கொடுக்கலாம்.

நடமாடும் வீடுகளுக்கு என தனியான வரைமுறைகள் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனினும் வருங்காலத்தில் இதனை வணிகரீதியாக செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேள்'' என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT