திரைக் கதிர்

நடிகைகள் சிலர் திருமணம் செய்யாமல் வாழ்வதைப் பேஷனாக்கி வருகிறார்கள். ஏற்கெனவே நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஓவியா திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்திருக்கின்றனர்.
திரைக் கதிர்

நடிகைகள் சிலர் திருமணம் செய்யாமல் வாழ்வதைப் பேஷனாக்கி வருகிறார்கள். ஏற்கெனவே நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஓவியா திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது வரலட்சுமியும் இடம் பிடித்திருக்கிறார். விமல், வரலட்சுமி ஜோடியாக நடிக்கும் படம் "கன்னிராசி'. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். இதில் நடித்தது பற்றி வரலட்சுமி கூறும்போது தனது திருமண முடிவு பற்றியும் திடீரென அறிவித்து அதிர்ச்சி தந்தார். அவர் பேசும் போது....

""புதிய இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். "கன்னிராசி' படத்தின் திரைக்கதை நகைச்சுவைப் பகுதிகள் நிறைந்தது.  இந்த படக்குழு மிகுந்த உற்சாகமானது. காதல் திருமணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு  திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து இப்படத்தில் ஜாலியாக நடித்தேன். இந்தப் படத்தைப் போல் வேறு எந்தப்படத்திலும் இவ்வளவு நடிகர்களுடன் நான் சேர்ந்து நடித்தது இல்லை. விமலுடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்'' என்றார்  வரலட்சுமி.

தேசிய விருதுகள் பட்டியலில்  தென்னிந்திய படங்கள் குறிப்பாக தமிழ் படம் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. "பரியேறும் பெருமாள்', "பேரன்பு' படங்கள் பெரிய அளவில் விமர்சகர்களிடம் வரவேற்பும், பாராட்டும் பெற்றன. அப்படங்களுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக மம்முட்டி நடித்த "பேரன்பு' படத்திற்காக மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருது தராததற்கு அவரது ரசிகர்கள் தேசிய விருது தேர்வு குழுத் தலைவரைத் திட்டி தீர்த்திருக்கின்றனர். அத்துடன் அவரது குடும்பத்தினரையும் கெட்டவார்த்தைகளால் வசைபாடி உள்ளனர். மம்முட்டி ரசிகர்களின் இந்தப் போக்கு தேசிய விருதுக் குழுவை எரிச்சல் அடையச் செய்துள்ளது. இதுபற்றி விருதுக் குழு தலைவர் தரப்பில் கூறும்போது,""பேரன்பு படம் விருது போட்டிக்கு வரவே இல்லை. அது பிராந்திய அளவிலான தேர்வு பிரிவிலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது விருதுக்கான  தேர்வுக்கு எப்படிப் பரிசீலனை செய்வது? இதைப் புரிந்துகொள்ளாமல் மம்முட்டி ரசிகர்கள் மரியாதை குறைவாக நடந்திருக்கிறார்கள். இதற்காக தனது ரசிகர்கள் சார்பில் மம்முட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரசிகர்களின் செயலுக்காக விருதுக் குழுவினரிடம் மன்னிப்பு தெரிவித்திருக்கிறார் மம்முட்டி.

ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான "குயின்' பட ரீமேக், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் தனித்தனியே உருவாகி வருகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாரூல் யாதவ் நடிக்கிறார்கள். தமிழில் "பாரீஸ் பாரீஸ்' என தலைப்பு வைத்துள்ளனர்.      நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தைத்  தணிக்கை குழுவுக்கு  காண்பிக்க சமீபத்தில் திரையிடப்பட்டது. படத்தில் வரும் பல காட்சிகள், வசனங்களில் சென்சார் அதிகாரிகள் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். அந்த காட்சிகளையும் குறிப்பிட்ட வசனங்களையும் நீக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். 

குறிப்பிட்ட காட்சிகளில் ஆபாசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் காட்சிகளை நீக்கவும் வசனங்களை மியூட் செய்யவும் படக்குழு சம்மதிக்கவில்லை. இதையடுத்து சான்றிதழ் தர சென்சார் மறுத்துவிட்டது. இந்தநிலையில் படத்தை மும்பையிலுள்ள ரிவைசிங் கமிட்டிக்கு படக்குழு அனுப்பியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை இயக்குநர்கள் விஜய், பிரியதர்ஷினி, பாரதிராஜா இயக்குவதாக அறிவித்தனர். கங்கனா ரனாவத் நடிக்க "தலைவி' பெயரில் விஜய்யும், நித்யா மேனன் நடிக்க "ஐயர்ன் லேடி' பெயரில் பிரியதர்ஷனியும் இயக்குகின்றனர். பாரதிராஜா இப்படம் பற்றிய விவரம் எதையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி "தலைவி'  படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷாய லேஷ் ஆர்.சிங்...""ஒரு தயாரிப்பாளராக ஜெயலலிதா வாழ்க்கைப் படத்திற்காக நான் ஒருபோதும் வித்யாபாலனை நடிக்க கேட்டு அணுக வில்லை. இப்படியொரு தகவல் வெளியானது எனக்கும் தெரியும். ஆனால் இப்படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் என்னிடம் கதையைக் கூறும்போதே கங்கனாதான் ஜெயலலிதாவாக நடிக்க பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டேன். எனவே நானும் சரி, கதாசிரியரும் சரி கங்கனாவை தவிர வேறு யாரையும் நடிக்க கேட்டு அணுகவில்லை. வேறு யாராவது கால்ஷீட் கேட்டு வித்யாபாலனை அணுகினார்களா என்பது எனக்குத் தெரியாது. பட குழுவுடன் இணைந்த நாங்கள் அனைவரும் கங்கனாவை ஜெயலலிதாவாக நடிக்க வைப்பது என்று முடிவு செய்தோம்'' என்றார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் "மாநாடு'. நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருந்து வந்தது. இதனையடுத்து சிம்புவை படத்தில் இருந்து நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  சிம்பு இல்லாத நிலையில் வேறு ஒரு பரிணாமத்தில் வெங்கட் பிரபு அந்தப் படத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் "மகா மாநாடு' என்ற படத்தை சிம்புவே இயக்கி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "மகா மாநாடு'  படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். "மாநாடு' படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதால் கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சி அளித்துள்ளது.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com