புழுதி

"ஹே...'வென ஆரவாரித்து மரத்தடியிலிருந்து வெட்டவெளிக்கு ஓடிவந்தனர் "ப்ப்ப்ப்ரேம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்...''
 புழுதி

தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை

 (சென்ற இதழ் தொடர்ச்சி)
 "ஹே... இரு இரு ட்டே ஏரப்ளாஞ் சத்தம் மாரி இருக்குடா''
 இருவரும் ஒருவரை ஒருவர் கண்கள் விரிய பார்த்தபடி கைகோர்த்து "ஹே...'வென ஆரவாரித்து மரத்தடியிலிருந்து வெட்டவெளிக்கு ஓடிவந்தனர்
 "ப்ப்ப்ப்ரேம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்...''
 "ஹே... அந்தோ போவுதுபாரு அந்த பார்ண்ணே''
 "எங்கடா?''
 "எனக்கு தெரியுதே... அந்த பாரு றெக்க தெரியிது பாரு''
 "ஹே... ஹே...'
 "டேய்... எந்த எடத்துலடா? எனக்கு தெரியல''
 "இந்தாப் பாருண்ணே. இங்க என் கைக்கு நேரா பாரு''
 "ப்ப்ரேம்ம்ம்ம்ம்..''
 "ப்போ போச்சி மறஞ்சிட்டு, ப்போ அதுபோய்ட்டு நீ பாக்காம உட்டுட்ட... இன்னேரங் கடலதாண்டி போயிருக்கும். அப்பா சொன்னிச்சி அந்த பக்கந்தாங் கடலு இருக்காம்னே''
 "ச்சே... போச்சா நா பாக்காம உட்டுட்டன்டா''
 "நீ எங்காக்க பாத்த? நான்தான் கைய காட்டுனேல்ல அங்ன பாக்க வேண்டிதான... முந்தா நேத்து ஒரு ஏரப்ளானு இந்தா இங்க கீழ இங்குன போவுனிச்சி. பனமரத்த தொட்டுகிட்டு போவுனிச்சி''
 "உண்மையாவாடாய்யே... புளுவுதான நான் நம்ப மாட்டேன்''
 "ஹே... சத்தியமாண்ணே உண்மையிலே பனமரத்த தொட்ட்டுகிட்டு போவுனிச்சி. சரியான சத்தம் இத விட பெரிசு தெரியுமா? சத்தியமா நான் பாத்தேன்...''
 "டே புளுவாதடா நீ... சத்தியம் சக்கரப் பொங்க... விடிஞ்சா வைத்து பொங்க னு சொல்ற ஆளு... நா நம்ப மாட்டேன்..''
 "ப்போண்ணே நம்புனா நம்பு நம்பாட்டி ப்போ...நம்ம நொண்டிவீரஞ் சாமி சத்தியமா...''
 "நொண்டிவீரஞ் சாமி சத்தியமாவா? சரிடா சரிடா ரொம்ப பெருசோ...''
 "சரி பெருசுன்னஅய்யோ ஆ...கால் சுடுது. வா மரத்தடிக்கு போவோம். ஊகூவ்.''
 "ஹா... ஹா......சோப்ளாங்கி ஒங்காலு சுத்தமா சூடு பொருக்க மாட்டங்குதுடா... ஹா... ஹா..... என்னதான் சாப்புடுறே நீ ப்போ...''
 "அண்ணே அம்மா வந்துச்சினா சொல்லுண்ணே ஓடணும்..''
 "ஏன்டா''
 "இல்ல அம்மா வெறவுக்கு கூராஞ்சி பொருக்க சொன்னிச்சி. நான் அப்டியே ஓடிவந்துட்டேன். வந்தா அடிக்க தொரத்தும்.''
 "ச்சரி எந்திரி எந்திரி இந்தா கிட்ட வந்துட்டாருடா...''
 "ம்...எப்டின்ன நாமலா கேக்குறதா...''
 "அதல்லா வேண்டாம் அவருக்கு என்னய தெரியும். அவரே மூச்சுவாங்கி எறங்குறாரு பாரு கண்டிப்பா நம்மள கூப்டுவாரு. இந்தா ஏதோ பேச வாராரு''
 ஐஸ்வண்டிகாரருக்கு இவர்களைப் பார்த்தும்தான் பாதி உயிர் வந்தது. தினமும் காலையில் பெட்டியை சைக்கிளில் வைத்து கட்டும்போது இந்த புழுதி பாதை நினைவுக்கு வராமல் இருந்ததில்லை. இந்த இடத்திலிருந்து கால்மணி நேர நடைதூரம்தான். அதைக் கடந்தால் ஒரு தார்சாலை வந்துவிடும். ஆனால், கணுக்கால் புதையுமளவு புழுதி, உச்சி வெயிலின் இறுதி நேரமிது. புழுதி கொதிப்பின் உச்சத்தில் இருக்கும் நேரம் இவ்வளவு கனத்தை வைத்து கொண்டு எவர் உதவியுமில்லாமல் அவரால் இதைக் கடக்கவே முடியாது.
 பூவரச மரநிழலையடைந்ததும் இறங்கினார். புழுதிக்குள் சக்கரம் புதைந்து நழுவும் சைக்கிளை தனக்கே விதிக்கப்பட்ட அபிநயத்தில் சீட்டை தன் பக்கவாட்டு இடுப்பில் அணைய வைத்து முழுப் பளுவையும் ஒற்றை காலில் தாங்கிகொண்டார். சைக்கிள் கைப்பிடியில் கட்டி வைத்திருந்த துண்டை உருவி தன் முகத்தில் ஒழுகிய வியர்வையைத் துடைத்தார். அதே நிலையில் பின்புறமாக திரும்பி ஐஸ்பெட்டியின் மத்திமத்தில் இருந்த கையகல சதுரவடிவ மூடியை திறந்து உள்ளிருந்து ஒரு பாட்டில் தண்ணீரை யெடுத்து மடமடவென குடிக்கத் தொடங்கினார். பாதி குடித்ததும் பாட்டிலை இறக்கி ஒருமுறை அதைப் பார்த்தார். அது ஒரு பழைய பிராந்தி பாட்டில். முழங்கை உயரமுள்ள அதை ஒரு வருடங்களுக்கு முன்பு அவருடைய மச்சானின் பழைய இரும்பு வாங்கும் வண்டியிலிருந்து "இத எடுத்துகிறேம் மாப்ள தாவத்துக்கு தண்ணி கொண்டு போவ' ன்னு வாங்கிவந்தது தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு முறையும் பாட்டிலைப் பார்க்கையில் இந்த நினைவு வரும் கூடவே வர்ர தைய்யிகுள்ற மச்சானுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிப்புடனும் என்று எண்ணிக்கொள்வார். மீதி தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டு இவர்களைப் பார்த்து புன்னகைத்தார்
 "த்தம்பியாளா வெயிலு என்ன இந்தோ கொளுத்து கொளுத்துது... யப்பா முடியலப்பா... செத்த நெழல்ல நின்னுட்டு போவோமா?''
 "ஆங் சாண்டு போட்டுட்டு வாங்கனே''
 "இல்லப்பா ஒடனே போவனும். சீக்கிரம் போனாதான் தெக்காட்டு பள்ளிகோடத்ல சாயந்தரம் மூன்றுமணி ஒன்னுக்கு பெல்லு அடிக்குறத்துகுள்ள போ முடியும். லேட்டாவுனிச்சினா இன்னிக்கு யாவாரம் அவ்ளதான் படுத்துக்கும்...நின்ன நெலயில போ வேண்டிதான்''
 "சரிண்ணே இந்த பொட்டிக்குள்ள ஐஸ் தயாரிக்குற மிசினு இருக்காண்ணே...''
 "மிசினா ஹா... ஹா... ஹா... அதல்லாம் இல்லப்பா உள்ள தெர்மகோலு அட்டையும் அது உள்ள ஐஸ்கட்டி சுத்தி இருக்கும். அதுல ஐஸ் குச்சி அடுக்கி வைச்சிருக்கோம் அவ்ளதான்...''
 "ஓ..அப்டியா சரிண்ணே''
 "சரி... தம்பி போலாமா''
 "ரொம்ப வேகமா தள்ளிப் புடாதிங்க லேசா
 தள்ளுங்க''
 "ஆங்... சரிண்ணே ட்டே நீ இந்தப் பக்கம் வாடா...''
 "ஆங் சைக்கிள நேரா புடிச்சிக்கெங்கண்ணே போலாம்''
 "தள்ளு... தள்ளு... ஹே...தள்ளு..தள்ளு''
 "தம்பி... தம்பி... மெதுவா தள்ளுங்கப்பா இல்லனா புழுதியில சருக்கியூட்ரும் மெதுவா மெதுவா''
 "ஆங்... போதும் போதும்... ஆனா சுத்துவட்டத்துல ஒங்கூரு சலங்க புழுதி மாதிரி எங்கயும் பாத்ததில்ல தம்பியளா..''
 ஐஸ் பெட்டியின் பின்புறம் இருவரும் தரையை பார்த்தபடி புழுதிக்குள் கால் புதைய சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றனர்
 "ட்டே தலய தூக்காத... கீழ குமிஞ்சி தள்ளு அங்க சித்தப்பா மட்ட கிழிச்சிகிட்டு இருக்கு. பாத்தா சத்தம் போடுன்டா''
 "ஆங்...ச்சரிண்னே காலு ரொம்ப சுடுதுண்ணேபுலுதி கொதிக்கி...''
 "அட இன்னும் கொஞ்சதூரந்தான்டா... இந்தா ரவி யண்ண ஊட்டு வாசவரைக்கும் இப்டி தள்ளிட்டா அப்பறம் கப்பி ரோடு வந்துரும் அவ்ளதான்ம்... தள்ளு ரொம்ப சுட்டுச்சின்னா ந்தோ அந்த பில்லு திட்டுல நின்னுக்க நான் கப்பி ரோடு போனதும் நீ ஓடி வந்துக்கலாம்ப்போ...''
 "இல்லனே வேண்டாம் நானுந் தள்றேன்''
 "ம்ஹூம்ம்ம்...ஹா......ஊ...ஹா......ஊ..ஹே... ''
 "ட்டே சோப்ளாங்கி ஏன்டா இப்டி எறைக்கிது? நீ போ அந்த பனமரத்தடில கொஞ்சம் சருவு கெடக்குபாரு, அதுல நின்னுக்க நா ஒனக்கும் வாங்கிட்டு வாறேன் இல்லனா வண்டி கப்பி ரோட்ட நெருங்ககுள்ள நீயும் ஓடி வந்டு''
 "ஹூஹூ...வேண்டாண்ணே... நான் தள்றேன். காலுதான் கொதிக்கிது.''
 "இன்னும் பத்து தப்படிதான்... வாயால மூச்ச உடாத ரொம்ப எறைக்கும்ம்...''
 "ஆங் தம்பியளா போதும்ப்பா...கப்பி ரோடு வந்துருச்சி இப்ப ஏறி அழுத்துனா தெக்காட்டுக்கு போவ சரியா இருக்கும். போதும் போதும் ஆங் சொல்லுப்பா செவத்ததம்பி ஒனக்கு எப்பவும் போல சேமியா ஐசா''
 "ஆமாண்னே இவனுக்கும் சேமியா ஐசே குடுங்க...''
 "சரிப்பா தம்பியளா என்ன வேணுமோ வாங்கிக்குங்க... எவ்ளோ வேணுமோ வாங்கிக்குங்க... நீங்க இல்லனா இந்த பாழும்புலுதில இவ்ளோ சொமய வச்சிகிட்டு தள்ளிகிட்டு வரமுடியுமா.''
 "ஆங்.. இந்தாங்க ரெண்டு சேமியா ஐஸ் அப்பறம்...
 புதுத்தம்பி ஒங்களுக்கு என்ன வேணும்...''
 "வேற ஏதாவது வேணுமா...''
 "பாலைஸ் எனக்கொன்னு அண்ணனுக்கு ஒன்னு குடுங்க''
 "ஓ...கருப்புதம்பிக்கு பாலைசுதான் வேணுமா..ஹா... ஹா... ஹா... இந்தாங்க புடிங்க புடிங்க என்ன இப்டி வேத்து ஊத்துது ஐûஸ சாப்ட்டுட்டு இப்டி நெலல்ல ஒங்காந்துட்டு போங்க... சரிப்பா வேற ஏதும் வேணுமா''
 "வேண்டாண்னே கைய்யி ரெண்டுதான இருக்கு''
 "ஹா... ஹா... ஹா... சரிப்பா நா போறேன் எனக்கு நேரமாய்ட்டு''
 "அட வேற என்னப்பா இந்த தம்பி இன்னும் ஏதோ வேணும்போல பாக்குது இன்னொரு ஐஸ் வேணுமா...''
 "இல்லண்னே அந்த ஆரன ஒரே ஒருவாட்டி அமுக்கி பாத்துகிறேண்னே...''
 "அட அதுக்கென்ன இங்கிட்டு வாங்க''
 "அண்ணே இந்த ஐûஸ செத்த புடியேன் ஹே...ய்... மாத்தி ஏன் ஐûஸ உறிஞ்சிபுட மாட்டியே''
 "ஹா... ஹா... ஹா... இல்லடா ...ப்போ.''
 "ப்பார்ம்...ப்பார்ம்..ஹி ஹி ஹே......ப்பார்ம்...ஹி ஹி..''
 "ட்டேய்...கிறுக்கு பெயலே இங்க வாடா... ஐஸ்காரண்ணே நீங்க கௌம்புங்கண்னே''
 "ஹா... ஹா... ஹா... சரிப்பா வாரனப்பா நாளைக்கும் வந்துருங்க...''
 "ஆங் வந்துர்றோம். ஆனா இன்னும் ஒருவாரந்தான் எங்க தாத்தாவுக்கு கருமாதி முடிஞ்சா அப்பறம் நாங்களும் பள்ளிகோடம் போயிருவோம்''
 " படிப்புதான் முக்கியம். கண்ணுகளா,அதுக்கு நெகரா எதுவும் இல்ல சரிப்பா நேரமாய்ட்டு நான் ய்யேம் பொழப்ப பாக்குறேன்''
 என சொல்லிவிட்டு சிறிய வருத்தத்தை உதிர்த்தபடி சைக்கிளில் ஏறி மிதிக்கலானார்.
 "ப்ராம் ப்ராம்' சத்தம் இவர்கள் காதுகளை விட்டு முழுமையாக அடங்கும் வரை அவர் போன திசையையே பார்த்தபடி நின்றிருந்தனர்.
 "அண்ணே வெயிலு மண்டய பொளக்குது அங்க பாருனே மேச்சல்ல நின்ன மாடல்லாம் ஈச்சமரத்தூருல போயி ஒன்டி கெடக்கு. நாம...செத்த இந்த நொச்சி மர நெலல்ட்ட நிக்கலாம்னே ஒரு ஐûஸ தின்னுட்டு இன்னொரு ஐஸ நடந்துட்டே தின்னுட்டு போவலாம்''
 "ம்...சரி...சீக்கிரம் சாப்புடு இல்லனா உருவி போய்டும்...மொதல்ல நீ எத சாப்டபோற''
 "பாலைஸ''
 "ஸ்ர்ர்ர்...ஊவ்.ஊ...ஊஊ...அண்ணே ஐûஸ கடிச்சிபுட்டேன் ய்யோ...ஊஊ.ஊ.ஊ பல்லு கூசுது''
 ஹா... ஹா... ஹா...
 "சிரிக்காத...சரி இப்ப வெயில்ல இந்த காலு பொதையிற சுடு புலுதில எப்டினே வூடு போயி சேர்ர்ரது''
 "அதுக்கும் ஒரு வழி இருக்கு... ஒரு கைல மிச்சமிருக்க சேமியா ஐûஸ வச்சிக்க இன்னொரு கையால இந்த நொச்சு கொப்ப ஏழெட்டு ஒடிச்சிக்க வா போவலாம்''
 "இது எதுக்கு நொச்சி கோப்பு ஆடு கோட மோந்துபாக்காது''
 "ட்டே வா...டா நான் சொல்றேன்''
 "ம் வெயில் புழுதி வந்துட்டு''
 "ஓடு...''
 ஓடு...காலு ஆ... ஸ்ஸ்ஸ்ஸ்...ஆ...சுடுது சுடுது...ஸ் ஆ...இதுக்குமேல என்னால ஒரு அடி எடுத்து வக்க முடியாது காலு கொதிக்கிஅய்யோஸ்ஸ்ஸ்ஸ்...ஆ''
 "ஆங் இப்ப கைல இருக்க நொச்சி கொப்ப புழுதில போட்டு அதுல நின்னுக்க...''
 "அய்... ஓ...இதுக்குதானா.இந்த நொச்செலயா... ஹா... ஹா... .சரியான ஐடியாண்னே...காலு குளு குளுனு இருக்குணே''
 "ஹா... ஹா... ஹா... இப்ப ஐûஸயும் உறிஞ்சிக்க இன்னும் குளு குளுன்னு இருக்கும் ட்டே... என்னடா ஐசு உருவி மொழங்கை வரையும் வழியிது பார்ரா... ஓடுனதுல ஐஸ உறிய மறந்திட்டியா ஹா... ஹா... ஹா...''
 "கொஞ்சதூரம் ஓடணும். அப்றம் ரொம்ப சுட்டா இத தரையில போட்டு நின்னுக்கனும்அவ்ளதான் புலுதி சுடாது...''
 "ஆமா.. போம்போது ஐஸ் ஞாவத்துலயே தள்ளிட்டு போனதுல சூடு ஓரளவு தாங்கனு மாறிதான்டா இருந்துச்சி. இப்ப ஏன் இவ்ளோ சுடுது...''
 "அது ஒன்னும் இல்லனே ஒரு ஐஸ் தின்னதுல நம்ம ஒடம்பு கால் வரைக்கும் குளுந்து போச்சி...''
 "ஹா... ஹா.....ஹா..... ம்...இருக்கலாண்டா''
 இருவரும் சேமியா ஐஸ் தந்த லயிப்பில் சின்னத்தேவர் வீட்டு வாசலைக் கடந்து கொண்டிருந்தபோது, அவருடைய கட்டை குரல் ஒலித்தது
 "எலேய்..ய்யேய்... ஒங்களத்தான்டா நில்லுங்கடா யே
 மருதா இந்தா இந்த மட்டைய கொஞ்ச கிழிச்சி போடு இந்த வந்துர்றேன். ஒரு வெசாரண இருக்கு. அந்தா போவுதுவோ பாத்தியா எல்லாந் தெக்க அலயாத்திகாட்ல திரிய வேண்டியதுவோ பூரா யேன் அண்ணந்தம்பியோலுக்கு புள்ளய வந்து பொறந்துருக்குவோ, எல்லாஞ் சரியான காட்டுப்பாக்கம்... எலேய் ங்கேருங்கடா செத்த நில்லுங்க எங்க இப்டி எடுப்புந்தொடுப்புமா போறீய ஆங்''
 பெரியவன் ஓடிவிடலாமா என நினைத்தான். தம்பியிடம் ஒரு முறை எச்சரித்தான்,
 "ட்டே சித்தப்பா கூப்டுது... நம்ம ஐஸ்வண்டி தள்ளிட்டு போனத பாத்ருக்கும் போல''
 அதற்குள் அவர் கேட்டே விட்டார்
 "ஏதுடா கைல ஐசே...''
 "ஐஸ்வண்டிகார்ருட்ட வாங்குனோம்''
 "ஒங்கள்ட்ட ஏதுடா காசு, வண்டி தள்ளி கொண்ட கொடுத்து வாங்கி நக்குறியளோ? ஒழச்சி திங்கனும்டா... இப்டி கண்டவன்கிட்ட கைநீட்டி நக்கப்புடாது''
 "இல்ல நாங்க ஒன்னும் எரவதீனி திங்கள நாங்களும் ஒழச்சிதான் திங்கிறோம். இந்த புழுதில அவரலா தள்ளமுடியல. நாங்க தள்ளிட்டு போன ஒழச்ச காசுதான் இதுஆமா...''
 "ட்டே... ட்டே சித்தப்பா பேசிட்டே கிட்ட வந்து வேலில கம்ப ஒடிக்கும். தெக்கால காட்ட பாக்க ஓட தயாரா நில்லு...வேட்டிய மடிச்சி கட்டுனிச்சினா ஓடிரலாம்''
 சின்னத்தேவருக்கு முகத்தில் எள்ளுங்கொள்ளும் வெடித்தது...
 "ஓ ஹே...ô இன்னும் பால்பல்லு உளுந்து மொளைக்கல, அதுக்குள்ள நாயம் பொளக்குறியளோ''
 தனது தம்பியை இடையிடையே தோளைப் பிடித்து பேசாதே பேசாதே என குறிப்பாக சொன்னபோதிலும் வார்த்தைகள் அதன்போக்கில் வந்து விழுந்துகொண்டிந்தன.
 "எங்கடா ஓன் ஓயா...இன்னிக்கு வரட்டும் வரம் வாங்கி தவம்வாங்கி பெத்தபுள்ளனு மடில போட்டு சீராட்டுனத்துக்குத்தான்... நீ இப்டித்தான்டா வாய் கொளுப்பெடுத்து பேசுவ''
 "...''
 "சின்னபுள்ளயே..சின்னபுள்ளேய் எங்கூட்டு ஆட்ட காவடிய பாத்தியளா? வெறவுக்கு கூராஞ்சி பொறுக்க சொன்னே அது எங்கயோ கால்ல றெக்கய கட்டிகிட்டு தொலஞ்சிட்டு பொழுதுபட்டதும் ஊட்டுக்கு தான வரணும் ரெண்டு காலயும் ஒடிச்சி போட்டாதான் அது அடங்கும்...''
 கொல்லைப் புறத்திலிருந்து ஒலித்த குரல் வைக்கோல் போரை கடந்து இவர்களிடத்தை நெருங்கி வந்துகொண்டிருந்தது.
 தம்பியின் கையை மீண்டும் பிடித்தான். அவன் பெரும் ஆபத்தில் சூழப்பட்டிருப்பதை உணர்ந்தவன் போல "ட்டே அந்தோ ஒங்க அம்மாவும் வாராவோடாஇன்னிக்கு தொலைஞ்ச. வேலி நெருங்கி வந்தா ஓட ரெடியா இருந்துக்க''
 இவர்கள் மீது ஒரு கண்வைத்தபடியே சின்னத்தேவர் பதிலளித்தார்...
 "இங்க வா ஓன் புத்ரபாக்கியம் ... இந்தா வேலி படலுகிட்டதான் நிக்கிதுயான்டா ஓன் ஒப்பன் மத்தவங்க ஊட்ல ஒரு கொவள தண்ணி கொட தொடமாட்டான். நீ என்னடான்னா ஐசிகாரனுக்கு சேவகம் பண்ணேன்னு நாக்கு தூக்கிட்டு திரியிற ட்டே மொதல்ல ரெண்டுபேரும் அந்த ஐûஸக் கீழ போடுங்கடா யாண்டா இவ்ளோ பேசுறனே ஒங்களுக்கு ஒரக்கைலயாடா...''
 "இல்ல ஒரைக்கல சித்தப்பா... சேமியா ஐசு இனிக்கி''
 "அடிங்க... ங்கொப்ந்தன்னான...''
 பட்பட்படார்...
 "ட்டே டே வேலி கம்ப ஒடிக்கிறார்டா ஓடு ஓடு ஓடு''
 "யேய்...நில்லுங்கடா''
 "சின்னபுள்ள...என்னாச்சி''
 "இங்க ஓடியா ஓன் மொவன் தெக்கால காட்ட பாக்க பரியிறான். இங்கன குள்றயே வெரட்டி புடிச்சாதான் உண்டு. காட்டுக்குள்ள பூந்துட்டானுவோனா புடிக்க முடியாது நீ அந்தபக்கமா ப்போ''
 "ஹா... ஹா... ஹா......ஓடுறா ஓட்றா... இன்னிக்கு மாட்டுனா அவ்ளதான் தொலஞ்சோம் அப்டியே ஓடு அவங்க ஈச்சங்காட்ட தாண்டி வந்து நம்ள பாக்குறத்துள்ள நம்ம அத தாண்டி ஓடி அந்தோ அந்த நாவ மரத்துல ஏறிட்டா தப்பிடலாம் ஓடு ஓடு ஹா...''
 "ஹா... ஹா... ட்டே ட்டே...ட்டே ஐசு கீழ உளுந்துர போவதுடா இன்னொரு கையால புடிச்சிக்க ஓடு ஓடு ஹா... ஹா... ஹா....''
 சின்னவன் ஓடிய திசையைப் பார்த்து தேவர் பதறி நின்றுவிட்டார்
 "அடே ட்டே நில்றா எலேய் ஓடுனா புழுதிலேயே ஓடு முள்ளுகாட்டுகுள்ற ஓடாதடா. டேய்... ஈச்சமுள்ளு கெடக்கும் கால்ல ஏறிட போகுது ட்டே நா தொரத்தலடா ஓடாத நில்றா'' என சின்னத்தேவர் கத்திகொண்டிருக்கும்போதே சின்னவன் ஈச்சஞ்சருவில் கால் வைத்தபோது, "அம்மோ...'' என கதறியபடி சுருண்டு விழுந்தான். ஓடிக்கொண்டே பார்த்த அண்ணங்காரனுக்கு விபரீதம் பெரிதானது புரிந்துவிட்டது. திரும்பி பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்துவிட்டான். யாரோ இந்த காட்டில் வீசிய உடைந்த பாட்டில் மூன்று விரல் சுற்றளவிருக்கலாம். அநேகமாக அது பன்னீர் பாட்டிலாகதான் இருக்கும் அருகில் இருக்கும் யார்வீட்டிலோ இறுதிச்சடங்கு முடித்துவிட்டு வீசபட்டது. இப்போது உடைந்த நிலையில் இருந்ததால் எளிதாக குதிகாலில் கால்வாசி ஏறி இருந்தது
 இதை பார்த்து அப்படியே நின்ற மூத்தவன், திடீரென தன்னை சுதாரித்து, சேமியா ஐûஸ உதறி வீசிவிட்டு வேறு திசையில் ஓடத்தொடங்கினான்.
 பின்னால் சாலையில் எச்சரித்த சின்னத்தேவர் ஓடி வந்து "அய்யய்யோ...''என கதறியபடி துடித்து கிடந்த அவனை இருகையால் வாரி அள்ளினார்.
 அவனது அம்மா ஓடிவந்து தலையடித்து கொண்டு "க்கோ...'' வென அழத்தொடங்கினாள்.
 "ய்யே மருதா... ஓடியா ஓடியா அந்த முருங்க எலயில நாலு கொப்பு ஒடிச்சா''
 சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்த மட்டை முடையும் பெண்கள் சாலைக்கு ஓடி வரத்தொடங்கினர்.
 பாட்டிலை மெதுவாகப் பிடித்து கணுக்காலை ஒரு கையால் பிடித்தபடி உருவத்தயாரானார்.
 லேசாக அசைத்ததில்,
 "ம்மா ஆ...''என அலறினான். சட்டென உருவியதும் ரத்தம் சலசலவென கொட்ட தொடங்கியது.
 அதை பார்த்தில், அவன் அம்மா மறுபடி பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள்.
 "ந்தேரு ப்ப வாய் மூடுறியா இல்லையா ஹே... இப்ப எல்லா வழிய உடு காத்த மறைக்காதிய... ஒதுங்குங்குங்க இங்குட்டு'' என்று அவர் சத்தமிட்டதும் எல்லோரும் விலகி ஒருபக்கமாகினர். ஆனால், அதே புழுக்கம் சூழ்ந்திருந்தது. வெக்கை அவர்களை மூச்சடைக்க கட்டித் தழுவியிருந்து. இந்த கொடுந்துயரை கண்டு உருமி ஆனந்தம் கொள்வதை போல அந்த ஊர் முழுவதும் சொல்லி சிரித்தபடி நின்றது.
 "தண்ணி கொண்டாங்க'' என்று ஒருவர் சத்தமிட்டதும் இரு பெண்கள் பைப்படிக்கு ஓடத்தொடங்கினர்.
 குதிகாலில் தண்ணீரை ஊற்றியதில் அந்த இடமே ரத்தமயமானது.
 முருங்கையிலையை கைகளாலயே கசக்கி கசக்கி ஒரு டம்ளர் அளவு பிழிந்துவிட்டார். ரத்தம் நிற்பதாக தெரியவில்லை. பச்சையும் சிவப்புமாக கரைத்துக் கொண்டு ஓடியது.
 அவரது மடியில் படுத்தபடி தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாய்திறந்த அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தான்.
 கசக்கிய முருங்கை இலையை அப்படியே வெட்டு
 வாயில் வைத்து வேட்டி துணியை கிழித்து கட்டினார்.
 தோளில் தூக்கி வைத்தபடி எழுந்தார்.
 செய்தி தெரிந்து சமையல்கட்டிலிலிருந்து கொல்லைபுறமாக ஓடி வந்துகொண்டிருக்கும் தன் மனைவியை பார்த்து...
 "எட்டியேய் அந்த சட்டய எடுத்தா அப்டியே சாமி மாடத்துல ஆயர் ரூவா பணம் வச்சிருந்தேன் அதையும் எடுத்தாடி'' என குரலெழுப்பினார்...
 ஓலமிட்டுக் கொண்டிருப்பவனை அவனது தாயிடம் கொடுத்துவிட்டு சட்டையைப் போட்டுக் கொண்டு மருதன் ஓட்டமும் நடையுமாக தள்ளிக்கொண்டு வந்து கொடுத்த சைக்கிளில் ஏறி,
 "புள்ளய பத்தரமா புடிச்சிகிட்டு ஒக்காரு'' என சத்தமிட்டார்.
 கொஞ்சம் வேகமாக போனால் கோயிலடியை அடைந்துவிடலாம் "ஆட்டோதாஞ் சரி இந்த ஊர்ல பஸ்க்கு நிக்கிறதும் கோடமழைக்கி தொன்னாந்து நிக்கிறதும் ஒண்ணுதான்... ரெண்டு ஆட்டோவுல ஏதாவது ஒன்னு சவாரி போய்ட்டாலும், இன்னொன்னு இருக்கும் சாப்பாட்டு நேரமாக வேற இருக்கு. ஒருவேள ரெண்டுமே இல்லனா என்ன பண்றது? நேரா இடும்பாவனத்த பாக்க கம்போன்ட்ரு வீட்டுக்கு மிதிக்கலாமா’ என யோசித்து கொண்டே மிதிக்கையில் அவனது அலறல் சத்தம் மேலும் குழப்பமூட்டியது. நிமிர்ந்து பார்க்கையில் தூரத்தில் ஆட்டோ ஒன்று வருவது தெரிந்தது. "நம்ம மேலக்கர ராமசாமியண்ன மொவனாத்தான் இருக்கும். சவாரி போய்விட்டு கோவிலடி யோ அல்லது சாப்பாட்டுக்கு வீட்டுக்கோ போறான்போல' என நினைத்துகொண்டார்.
 "எறங்கு எறங்கு புள்ள பத்தரம்'' அவர்கள் இறங்கியதும் இவரும் இறங்கி ஆட்டோவுக்காக நின்றனர்.
 ஆட்டோவின் வேகம் குறைந்தது, இவர்கள் நின்ற கோலத்தையும் சிறுவனின் அலறல் சத்தத்தையும் கேட்டதில் உள்ளிருப்பவனுக்கு ஏதோ விபரீதமென புரிந்துவிட்டது. ஆட்டோவை வந்த திசையை நோக்கியே வளைத்து நிறுத்திவிட்டு உள்ளிருந்து பதறியபடி குதித்து இறங்கினான் ஒரு தாடி வைத்த இளைஞன்.
 " அண்ணே என்னாச்சிண்ணே எங்க போவனும் அய்யோ! இது என்ன புள்ள கால்ல இவ்ளோ ரத்தம்? ஏறுங்க ஏறுங்க உள்ள ஒக்காருங்க'' என்றதும் எதுவும் யோசிக்காமல் உள்ளே ஏறி அமர்ந்தார். ரத்தம் ஒழுகி கட்டு நனைந்த கால்களை தன் மடியில் வைத்து கணுக்காலை சிறிது இறுக்கிப் பிடித்தார். ஒருவேளை ரத்தப்பெருக்கு குறையாலாம் என்ற நினைப்பில்.
 அவன் தனது தாயின் மடியில் தலை வைத்தபடி கேவி கேவி அழுது கொண்டிருந்தான்.
 அவளது கண்களில் கண்ணீர் வடிந்து காய்ந்து போயிருந்தது, தொண்டை கம்மல்குரலில், "ஒரு எடத்துல அடங்கி இருனா கேட்டாதான... எல்லா ஏன் தல விதி பட்ட கால்லயே படும் கெட்ட குடியே கெடும்பவோ ஏங்குடி கரயேற வழியே இல்லயாடி ஓடக்கர மாரியாத்தா'' என ஆட்டோவுக்குள் வானத்தைத் தேடி புலம்பியபடி அடுத்த அழுகைக்குத் தயாரானாள்.
 இவ்வளவு நேரம் அமைதியாக யோசனையிலேயே வந்துகொண்டிருந்த சின்னதேவர் ஆவேசமாகி கத்தத் தொடங்கினார்:
 "நா அப்பவே தலமூச்சா அடிச்சிகிட்டேன். இந்த கெழப்பெய செத்த ரெண்டான் நாளே இவனுவோள பள்ளிகோடத்துக்கு அனுப்பியுட்ரலாம்னு. கேட்டாதான, நீங்களுவோதான் பேரப்புள்ளவோ பூராப்பேரும் பதினாறு நாளும் ஊட்லயே இருக்கனும்னிய. இப்பே நேத்து ஒருத்தனுக்கு கைய்யி ஒடயிது. இன்னக்கி ஒருத்தனுக்கு கால்ல கிளாஸ் ஓடேறுது. அவன் என்ன
 பெரியமகாத்மா காந்தியா? இப்ப அவனுக்கு பதினாறு நாளு துக்கம் விசாரிக்கலனா குடியா முழுவிப் பொய்டும்...''என்று பெருங்குரலெடுத்து கத்தினார்
 அவரது தந்தையாரின் ஆத்மா கேட்டிருந்தால் அப்போதே சாந்தியடைந்திருக்கும்
 "எங்கண்ணே போவணும்''
 "முத்துபேட்ட மீராஉசன் ஆசுபித்திரிக்கு உடப்பா பயலுக்கு கால்ல தையல் போடணும். கிளாஸ் ஓடு ஏறிட்டு''
 அது வரை அழுது கொண்டிருந்தவன் சட்டென நிறுத்தினான். முத்துபேட்டை என்ற வார்த்தையைக் கேட்டதும் முந்திரி பருப்புகளும் இன்னும் சில பெயர்தெரியாத பருப்புகளும் தூவிய ஐஸ்க்ரீம் கண்முன்னே வந்து போனது. இப்போது அழுது தொண்டை கம்மிவிட்டால் பிறகு அழமுடியாதென நினைத்த கணத்திலிருந்து பல்லைக் கடித்து வலியை விழுங்கத் தொடங்கினான்.
 தனது கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டே மகன் முகத்தை குனிந்து பார்த்தாள். அவன் பல்லை இறுகக் கடித்து கொண்டிருந்ததில் தலை லேசாக நடுங்கி கொண்டிருந்து
 ஆட்டோ பட்டுகோட்டை செல்லும் மெய்ன் ரோட்டை பிடித்து வேகமாக விரைந்தது வீசியடித்து படபடக்கும் காற்றில் வெக்கை கொஞ்சம் விலகி இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com