வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

துப்பாக்கி சுடும் சாதனை வீராங்கனை!

DIN | Published: 18th August 2019 10:53 AM

சிட்னியில் சென்ற ஆண்டு நடந்த ஐ.எஸ்.எஸ்.எஃப் (International  Shooting  Sport Federation) ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார், துப்பாக்கி சுடும் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், .
சென்ற மே மாதம் மியூனிச் நகரில் நடந்த போட்டியில் இளவேனிலுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.
சென்ற வாரம் ஜெர்மனியில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தனியாக தங்கப் பதக்கம், குழுவினருடன் இன்னொரு தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, இத்தாலியின் நாப்போலியில் நடந்த உலக பல்கலைக்கழகங்கள் விளையாட்டுப் போட்டியில் இளவேனிலுக்கு வெளிப் பதக்கம் கிடைத்தன. 
இளவேனிலுக்கு இருபது வயதாகிறது. கடலூரைப் பூர்வீகமாகக் கொண்டிருக்கும் இளவேனில், பெற்றோருடன் வசிப்பது அகமதாபாத்தில். 
"அப்பா வாலறிவன் ருத்ரபதி. தனியார் நிறுவனம் ஒன்றில் மேட்டூரில் விஞ்ஞானியாகப் பணி புரிகிறார். அண்ணன் ராணுவத்தில் கேப்டனாக இருக்கிறார். அவர் விடுமுறையில் வீட்டிற்கு வரும் போது துப்பாக்கிகளைப் பற்றி சொல்வார். 
"சிறுவயதில் ஒருமுறை அப்பா அகமதாபாத்தில் இருக்கும் இந்திய ராணுவ துப்பாக்கி சுடும் கழகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே பயிற்சி பெறுபவர்களைக் கண்டதினால் துப்பாக்கி ஏந்த எனக்கும் ஆசை வந்துவிட்டது. 2013 -இல் குறி பார்த்து துப்பாக்கியால் சுடும் பயிற்சியில் சேர்ந்தேன். தொடக்கத்தில் மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்து கொண்டேன். சீராக எனது வெற்றிப் புள்ளிகள் அதிகரித்தன. அதனால் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறேன். 
சொந்தமாக துப்பாக்கி வாங்கியது 2016 -இல் தான். ஜெர்மனியில் நடந்த 28 - ஆவது ஜுனியர் உலகப் போட்டியில் எனக்கு இருபத்தெட்டாவது இடம் கிடைத்தது. பயிற்சிகளின் போது சர்வதேச சாதனையான 252 .1 புள்ளிகளை என்னால் எடுக்க முடிந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போட்டிகளில் ஒரு பிரிவில் தேசிய சாம்பியனாக வந்தேன். எனக்கு கிடைத்த வெற்றி புள்ளிகள் புதிய தேசிய சாதனையாக மாறியது. 
சிட்னியில் நான் எடுத்த மொத்த புள்ளிகள் (631.4) ஓர் உலக சாதனையாகும். பயிற்சிக்காக சென்னைக்கும், புனாவுக்கும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியதிருக்கிறது. ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். 
இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் தங்கப் பதக்கம் மிகவும் சிறப்பானது. என்னைத் தட்டி எழுப்பியிருக்கிறது. சென்ற உலகக் கோப்பைக்கான போட்டியில் எனது முத்திரையை விட்டுச் செல்ல வேண்டும் என நினைத்தேன். அது முடியவில்லை. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இந்தத் தடவை சென்றேன். இந்தப் போட்டிக்குத் தகுதி பெறுவோமா என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தது. தகுதி பெற்றதும் என்னை முழுமையாகத் தயாராக்க பயிற்சிகளில் ஈடுபட்டேன். முடிந்தவரை சிறப்பான முறையில் குறி பார்த்துச் சுடுவோம் என்ற முடிவுடன்தான் போட்டியில் கலந்து கொண்டேன். இந்த வெற்றியில் எனது பயிற்சியாளர் நேஹா சவான், கவனத்தை ஒருநிலைப்படுத்த பயிற்சி தரும் கிருத்திகா பாண்டே இருவருக்கும் பெரும் பங்குண்டு. மற்றபடி போட்டிகளில் சாதனைகள் நிகழ்த்துவதும் நிகழ்வதும் சகஜம்தானே'' என்கிறார் இளவேனில்.


- சுதந்திரன் 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 புரிதல்
 

 எளியமுறை... சிறந்த பயன்!
 

சிரி... சிரி... 

திரைக்கதிர்
 

மைக்ரோ கதை