சொன்னால் நம்பமாட்டீர்கள் ! 26

சென்னை சட்டசபைக்குச் சபாநாயகர் தேர்தல் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னால் ராஜாஜியிடம் திரு. சிவசண்முகம் பிள்ளை வந்திருந்தார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் ! 26

பதவிக்குரிய தகுதி
சென்னை சட்டசபைக்குச் சபாநாயகர் தேர்தல் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னால் ராஜாஜியிடம் திரு. சிவசண்முகம் பிள்ளை வந்திருந்தார். வந்தவர் ராஜாஜியைப் பார்த்து, தாம் சபாநாயகர் தேர்தலுக்கு நிற்கப் போவதாகவும் தம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு ராஜாஜி, "அந்தப் பதவிக்கு இன்னும் யார் போட்டி போடுகிறார்கள்?'' என்று கேட்டார். தென்னேட்டி விஸ்வநாதன் போட்டி போடுவதாக சிவசண்முகம் பதிலளித்தார். உடனே, ராஜாஜி ""விஸ்வநாதனைக் காட்டிலும் தாங்கள் எந்த விதத்தில் அந்தப் பதவிக்குத் தகுதி?'' என்று சிவசண்முகம் பிள்ளையைப் பார்த்து வெகு அமைதியுடன் கேட்டார்.
மேற்படி கேள்வியானது அருகிலிருந்த என்னை ஓர் உலுக்கு உலுக்கியது. நான் நிதானம் அடைவதற்கு முன் திரு. சிவசண்முகம், ராஜாஜியின் கேள்விக்குப் பளிச்சென்று பதில் கூறினார். ""நான் சென்னை நகரசபையின் மேயராக இருந்து சபை நடத்தி அனுபவம் பெற்றிருக்கிறேன். திரு. விஸ்வநாதனுக்கு அத்தகைய அனுபவம் கிடையாது. ஆகையால் நான் அவரைவிடத் தகுதியுடையவன்'' என்று கூறினார். ""பேஷ்! அப்படியானால் சரி, தாங்கள் தேர்தலுக்கு, நிற்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்'' என்று ஆசீர்வதித்து அனுப்பினார் ராஜாஜி.
திரு. சிவசண்முகம் பிள்ளை ராஜாஜியிடம் விடைபெற்றுக் கொண்டு போன பிறகு, ராஜாஜி என்னைப் பார்த்து ""பார்த்தீர்களா? சிவசண்முகம் பிள்ளை "நான் ஒரு ஹரிஜன், ஆகையால் சபாநாயகர் பதவியை எனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்' என்ற பலவீனமான பதிலைச் சொல்லாமல், "எனக்குச் சபை நடத்தி அனுபவமிருக்கிறது. ஆகையால் நான் அதிகத் தகுதியுடையவன்' என்று கூறினார். சரியான பதிலைச் சொல்லுகிறாரா என்று பார்ப்பதற்காகவே மேற்படிக் கேள்வியைக் கேட்டேன். ஹரிஜன் வகுப்பைச் சேர்ந்தவர்களானாலும் சரி, வேறு யாராகயிருந்தாலும் சரி, இப்படித்தான் தங்கள் தகுதியில் நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும்; திரு. 
சிவசண்முகம் பிள்ளை உண்மையான ஹரிஜனத் தலைவர்; சட்டசபையையும் நன்றாய் நடத்துவார்'' என்று சொன்னார். அவர் சொல்லியபடியே திரு. சிவசண்முகம் சிறந்த சபாநாயகராக விளங்கிப் புகழ் பெற்றார்.
மஞ்சள் பத்திரிகை
1952 -இல் மீண்டும் ராஜாஜி முதலமைச்சரானபோது "இந்து நேசன்' என்ற மஞ்சள் பத்திரிகையும் மற்றும் அது போன்ற பத்திரிகைகளும் கடைக்குக் கடை ஏராளமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. மேற்படி பத்திரிகைகளில் ஆண் பெண் உறவு சம்பந்தமான விஷயங்கள் அப்பட்டமாக எழுதப்பட்டன.
ஒரு நாள் நான் மேற்படி பத்திரிகைகள் அனைத்தையும் சேகரித்து முதலமைச்சர் ராஜாஜி அவர்களின் மேஜையின் மீது வைத்தேன். 
இதெல்லாம் என்னவென்று முதலமைச்சர் ராஜாஜி கேட்டார். 
"தாங்கள் முதலமைச்சராக இருக்கும் ராச்சியத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் இலக்கியங்கள்'' என்று சொன்னேன். உடனே ராஜாஜி மேலாக இருந்த "இந்து நேசன்' பத்திரிகையை எடுத்துப் பார்த்தார். அதில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் "அஞ்சலிக்கு அது இருக்கா?' என்று எழுதியிருந்தது. 
"அது இருக்கா என்றால் என்ன அர்த்தம்?'' என்று ராஜாஜி குழப்பமாகக் கேட்டார். "தாங்கள் பெரிய மேதை. உயர்ந்த விஷயங்களையே சிந்திப்பவர்கள். அதனால்தான் இதன் அர்த்தம் உங்களுக்குச் சட்டென்று பிடிபடாது. "செக்ஸ்' சம்பந்தமான மிக மட்டமான கருத்துடன் இந்தப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். 
இதைவிட இன்னும் அசிங்கமான விஷயங்கள் இப்பத்திரிகை முழுவதும் இருக்கின்றன. இப்பத்திரிகை நிறைய விற்பனை ஆகிறது என்பதைத் தெரிந்து கொண்ட சிலர் பணம் சம்பாத்திக்கும் நோக்கத்துடன் இம்மாதிரி பத்திரிகைகளை நிறைய வெளியிடுகிறார்கள்'' என்று சொன்னேன்.
"ஓ... YELLOW MAGAZINE (மஞ்சள் பத்திரிகை)'' என்று சொல்விவிட்டு, அப்பத்திரிகைகள் அனைத்தையும் வேறு பக்கம் தூக்கிப் போட்டுவிட்டார். நானும் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
" போலீஸ் கமிஷனர் பார்த்தசாரதி ஐயங்கார் டெலிபோனில் பேசினார்கள். தங்களைப் போனில் பேசச் சொன்னார்கள்'' என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னார்கள். போலீஸ் கமிஷனருக்குப் போன் செய்தேன்.
"இன்று ராஜாஜியிடம் என்ன ரிப்போர்ட் செய்தாய்?'' என்று கேட்டார். " மஞ்சள் பத்திரிகை பற்றி சொல்லியிருக்கிறேன்'' என்று கூறினேன். "சரி... மாலையில் சந்திப்போம்'' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். மாலையில் அவரைச் சந்தித்தபோது முதலமைச்சர் ராஜாஜி அவரை நேரில் வரச் சொல்லி சொன்னாராம். அதன்படி போலீஸ் கமிஷனர் முதலமைச்சர் முன் ஆஜரானார். நான் கொண்டு போய் கொடுத்த பத்திரிகைகள் அனைத்தையும் முதலமைச்சர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்து இந்தப் பத்திரிகைகள் இனிமேல் கடைகளில் விற்கவும் கூடாது. அச்சகத்தில் அச்சாகவும் கூடாது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனே எடுக்கும்படி உத்தரவிட்டாராம். 
போலீஸ் கமிஷனர் சிறிது தயக்கத்துடன் எந்தச் சட்டத்தை வைத்து பத்திரிகையைத் தடுத்து நிறுத்த இயலும் என்று கேட்டாராம். அதற்கு ராஜாஜி, "சமூகத்தின் நன்மைக்காகச் செய்யப்படுவதுதான் சட்டம். சமூகத்தின் நன்மைக்காக நாம் எதைச் செய்தாலும் அது சட்டம்தான். உங்களுக்குள்ள அதிகாரத்தை வைத்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் இம்மாதிரிப் பத்திரிகைகள் ஒன்று கூட நம் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது'' என்று கண்டிப்பான உத்தரவு போட்டாராம்.
உடனே போலீஸ் கமிஷனர் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் உத்தரவு போட்டு கடைகளில் உள்ள மஞ்சள் பத்திரிகைகளை விற்றால் கைது செய்வோம் என்று மிரட்டியும் இரண்டே நாட்களில் ஒரு மஞ்சள் பத்திரிகைகள் கூட இல்லாமல் செய்துவிட்டார்.
பின்பு ஒவ்வொரு அச்சகத்திற்கும் போலீஸார் நேரடியாகச் சென்று மஞ்சள் பத்திரிகைகள் அச்சடித்தால் அச்சகங்களை மூடும்படி செய்வோம் என்று எச்சரிக்கை செய்ததையொட்டி எந்த மஞ்சள் பத்திரிகையும் தமிழ்நாட்டில் அச்சாகாமல் அவ்வளவும் நின்றுவிட்டன.
ஆனால் "இந்து நேசன்' பத்திரிகை மட்டும் பெங்களூரில் இருந்து அச்சாகி திருட்டுத்தனமாக தமிழ்நாட்டுக்கு விற்பனைக்கு வந்தது. அதையும் போலீஸார் தடுத்து நிறுத்தி எந்தவிதமான மஞ்சள் பத்திரிகையும் தமிழ்நாட்டில் தலைகாட்டாதபடி செய்துவிட்டார்கள்.
அதன் பின்னர் பல முக்கிய பிரமுகர்கள் மஞ்சள் பத்திரிகைகளை ஒழித்தது குறித்து போலீஸ் கமிஷனர் திரு.பார்த்தசாரதி ஐயங்கார் அவர்களைப் பாராட்டியபோது, அவர் கூறிய பதில் அவ்வளவு பாராட்டுதலுக்கும் உரியவர் சின்ன அண்ணாமலை என்பதாகும். 
போலீஸ் அதிகாரி
ராஜாஜி முதலமைச்சராக இருந்த சமயம். படித்தஹரிஜன் இளைஞர்களுக்கு உத்யோகம் பண்ணிவைப்பதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.
வகுப்பு வாரியாகச் சர்க்கார் உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டுமென்ற விதி ஒன்று ஏற்பட்டிருக்கிறதல்லவா? இந்த விதியானது ஒவ்வொரு சாதியாகத் தாண்டி ஹரிஜனங்களிடம் வரும்போது பயனில்லாமல் போய்விடுவது வழக்கம். அதாவது அந்த உத்யோகத்துக்குத் தகுந்த ஹரிஜன் அபேட்சகர் இல்லை என்று காரணம் சொல்லிவிட்டு, "மேல் சாதி'க்காரர்களுக்குக் கொடுத்து விடுவது வழக்கம்.
ஒரு சமயம் போலீஸ் டெபுடி சூபரின்டெண்ட் வேலைக்கு ஹரிஜன் வகுப்பின் உரிமை வந்தது. வழக்கம்போல் "ஹரிஜனர் ஒருவரும் இல்லை,' என்று "ஒரு சாதி இந்துவுக்கு' வேலையைக் கொடுக்க சிபாரிசு வந்தது. ராஜாஜி அதை ஒப்புக் கொள்ளாமல் அப்போது சபாநாயகராக இருந்த திரு. சிவசண்முகம் பிள்ளையையும் இன்னும் சில ஹரிஜன் தலைவர்களையும் கூப்பிட்டனுப்பி விஷயத்தைச் சொல்லி தகுதியான ஆளைக் கூட்டி வரும்படிச் சொன்னார். அவ்விதமே ஹரிஜனத் தலைவர்கள் பி.ஏ. பாஸ் செய்த ஒரு ஹரிஜன் இளைஞரைக் கொண்டு வந்தார்கள். அவரைக் காரியாலயத்திற்கு வரச்சொல்லி அங்கேயே பரீட்சை செய்யும்படி சொன்னார். திரு. சிவசண்முகம் பிள்ளையையும் தன் அருகிலேயே இருக்கும்படி செய்தார். பரீட்சை முடிந்தவுடன் மேற்படி அதிகாரி, "மற்ற தகுதியெல்லாம் இருக்கிறது; ஆனால் ஆள் ரொம்பவும் மெலிவாக இருக்கிறார். போலீஸ் உத்தியோகத்திற்கு ஆள் ஆஜானுபாகுவாக இருக்கவேண்டும்'' என்றார். அதற்கு ராஜாஜி, "இவர் ஏழை ஹரிஜன இளைஞர். இதுவரை சரியான சாப்பாடே இவருக்குக் கிடைத்திராது. ஆகையால் இப்படி மெலிந்திருக்கிறார். உத்யோகத்தைக் கொடுத்தால் சந்தோஷத்தினாலேயே சீக்கிரம் பருத்து விடுவார்,'' என்று கூறியதும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் "சரி'' என்று சொல்லி, அந்த ஹரிஜன இளைஞருக்கு வேலையைக் கொடுத்தார்.
ராஜாஜி சொன்னது போலவேதான் நடந்தது. மேற்படி இளைஞர் உத்யோகம் ஏற்றுக்கொண்ட ஆறு மாதத்திற்குள் கட்டிப் பிடிக்க முடியாதபடி பருத்துப் போய்விட்டார். மிகத் திறமையான போலீஸ் ஆபீசராக, இப்போதும் பணியாற்றி வருகிறார்.
அவர்தான் சென்னை நகரின் போலீஸ் கமிஷனராக இருந்த திரு. சிங்காரவேலு அவர்கள்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com