ஆளுக்கொரு கேள்வி ?

மூன்றாவது முறையாக நடிப்பிற்காக தேசிய விருதை வாங்க "அழியாத கோலங்கள் 2' படத்தில் நடிக்கிறீர்கள் போலிருக்கிறதே?

நடிகை அர்ச்சனா

மூன்றாவது முறையாக நடிப்பிற்காக தேசிய விருதை வாங்க "அழியாத கோலங்கள் 2' படத்தில் நடிக்கிறீர்கள் போலிருக்கிறதே? 
என்றுமே ஒரு விருதுக்காக நான் படத்தில் நடிப்பதில்லை. அதே போன்று விருதுக்காக யாரும் படம் எடுக்கவும் மாட்டார்கள். பாலு மகேந்திரா என்ற ஒரு சிறந்த கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அவரது படத்தின் தலைப்பை மட்டும் நாங்கள் வைத்துள்ளோம். அந்தப் படத்திற்கும் எங்கள் படத்திற்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை. என்னுடன் இதில் இணைந்து நடிக்கும் எல்லாரும் குறிப்பாக ரேவதி, நாசர் போன்றோர் சொல்வது என்ன தெரியுமா? இந்த படம் ஓடினால், தொடர்ந்து நாங்கள் இந்த மாதிரி படங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விப்போம். இதே போன்று சிறிய பட்ஜெட் படங்களை மக்கள் பார்த்து நல்ல படங்களை ஊக்குவிக்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்த பிறகு தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் அதை வாங்கி வெளியிடுகிறார். இதுவே எங்களுக்கு ஒரு மிகப் பெரிய ஊக்கம்தான் என்று சொல்ல வேண்டும்.
நாராயணன்
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்

ஏன் நீங்கள் திரைப்படம் எடுப்பதில்லை?
கையில் பணம் இருந்தால் கண்டிப்பாகப் படம் எடுப்பேன். பணத்தை கையில் வைத்துக் கொண்டு படத்தை ஆரம்பித்து விட்டு, முடிக்கும் முன் பணம் குறைந்தது என்றால் கடன் வாங்கலாம். ஆரம்பத்தில் இருந்தே கடன் வாங்கி படம் எடுக்க நான் தயாராக இல்லை. நான் கடன் கொடுத்தவர்கள் என் பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் கண்டிப்பாகப் படம் எடுப்பேன்.
அது மட்டும் இல்லாமல், இன்று உணர்ச்சிகளுடன் படம் எடுப்பது அரிதாகிவிட்டது. அல்லது இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம். என்னுடைய படமான "வேட்டையாடு விளையாடு'" படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் emotion (எமோஷன்) இருந்ததால்தான் படம் வெற்றிப் படமானது என்று கண்டிப்பாகக் கூறலாம். இன்று மிகப் பெரிய வெற்றி என்று நாம் எல்லோரும் பேசும் "பாகுபலி'யில்" கூட உணர்ச்சிகரமான காட்சிகள் இருந்தன. அந்தகால படங்களில் இதை இயக்குநர்கள் வைத்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட படங்கள் இன்று வருவதில்லை. பின் எப்படி இந்த சினிமா உலகம் வளரும் அல்லது வாழும்.
டெல்லி கணேஷ்

உங்களுக்கு விருப்பமானவை எவை?
விருப்பங்கள் இல்லாத மனிதர்கள் இருக்கிறார்களா என்ன? சிறு சிறு விருப்பங்கள் உண்டு. முழுமுதற்கடவுளான விநாயகர் தான் எனக்கு விருப்பமான கடவுள். சாப்பாட்டில் வற்றல் குழம்பு, சுட்ட அப்பளம், தயிர் சாதம். எங்கு சென்றாலும் இது கிடைக்கும் என்பதால் யாரிடம் வேண்டுமானாலும் தைரியமாகக் கேட்டுச் சாப்பிடுவேன். 
எனக்கு 2 பெண்கள், ஒரே பையன். அவன் பெயர் மகா. என் தந்தையாரின் பெயர் மகாதேவன். அவர் பெயரைத்தான் வைத்துள்ளேன். அதைப்போல் எனக்கு மிகவும் விருப்பமான விளையாட்டு நமது தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிகட்டு. அதே போல் டெல்லியில் நான் இருக்கும் போது என்னை அதிகமாக பார்த்துக் கொண்டவர்கள் வைத்தியநாதன், அவரது மனைவி பாலா வைத்தியநாதன்.
நான் ஒரு புத்தகப் புழு. நா.பா. வில் ஆரம்பித்து சுஜாதா, கண்ணதாசன், வாலி, நாஞ்சில் நாடன் என்று இவர்களது புத்தகங்கள் எனக்கு விருப்பமான ஒன்று. விமானப் பயணம் செய்ய விருப்பம் அதிகம். நான் இந்திய விமானத்துறையில் சில காலம் வேலை செய்ததால் விமானப் பயணம், ஹெலிகாப்டர் பயணம் நிறைய செய்திருக்கிறேன். முதல் விமானப் பயணம் 1968 -ஆம் ஆண்டு எனக்கு ஏற்பட்டது.
பல வெளிநாடுகளுக்கு போயிருந்தாலும், ஆங்கிலத்தில் சொல்வார்களே East or west, home is the best அது போல் எனக்கு என் வீடு தான் சொர்க்கம். 
நான் நாடகத்தில் இருந்து திரைக்கு வந்தவன். புது டில்லியில் "தீபம் எரியட்டும்' என்ற நாடகம்தான் என் முதல் மேடை ஏற்றம். ஆனால் நான் சென்னை வந்து காத்தாடி குழுவில் நடித்த முதல் நாடகம் "டெüரி கல்யாண வைபோகமே'. இயக்குநர் விசு எழுதியது. இன்று நடந்தாலும் காத்தாடி கூப்பிடுவார் நான் போய் நடித்துக் கொடுப்பேன். இப்படி விருப்பங்கள் பல.
ஸ்ரீநிவாசன்
திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குநர் - எம்.ஜி.ஆரை 
முதன் முதலில் அனிமேஷன் ஹீரோ ஆக்கியவர்

அனிமேஷன் படம் எடுத்தது ஏன்?
எம்ஜிஆர். மீண்டும் நடிக்க வந்தால் எப்படி இருப்பார் என்று பார்க்க ஆசைப்பட்டேன். எனக்கு ஏதோ கொஞ்சம் கம்ப்யூட்டர் அறிவு இருப்பதனால், இந்த படத்தை அனிமேஷன் முறையில் எடுக்க ஆசைப்பட்டேன். எம்.ஜி.ஆர். அனிமேஷன் முறையில் எப்படி இருப்பார் என்று முதலில் பார்க்க விருப்பம். அதனால் முதலில் எம்.ஜி.ஆரை ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க வைத்து, பின்னர் முழுப்படத்தையும் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். இந்த விஷயங்களை அன்று இருந்த ஒளிப்பதிவாளர் அசோக் குமார் அவர்களிடம் நான் சொல்ல, நானே ஒளிப்பதிவு செய்கிறேன் என்று சந்தோஷத்துடன் இந்த படத்தில் அவர் வேலை செய்தார். 
அன்று புகழ் பெற்ற ‘penta four' நிறுவனத்தின் உதவியுடன் அனிமேஷன் காட்சிகளை செய்ய முடிவு செய்தோம். கிட்டத்தட்ட ஒரு வாரம் படப் பிடிப்பும் நடத்தினோம். இந்த படம் எடுப்பதற்காகவே அன்று மார்க்கெட்டிற்கு வந்த புதியதொரு கேமராவையும் வாங்கி அதில் படமெடுத்தோம். இன்றுள்ள நிலை போல அன்று அனிமேஷன் துறை போதிய வளர்ச்சி பெறவில்லை. ஆனாலும் நாங்கள் விடுவதாக இல்லை. காரணம், எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல். 
என்னைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்றும் ஆணழகர். ஆண், பெண் என்று எல்லாரையும் கவர்ந்தவர். பணம் தண்ணீராகச் செலவானது. அத்துடன் பல்வேறு திசைகளில் இருந்து எதிர்பாராத வகையில் பிரச்னை வந்தது. ஒன்று வந்தால் சமாளித்து கொள்ளலாம். பல ஒரே சமயத்தில் வர, நான் சமாளிக்க முடியாமல் திண்டாடினேன். இன்றும் முதன் முதலில் அனிமேஷன் முறையில் எம்.ஜி.ஆர்.ரை திரையில் காட்ட முடிவு செய்து உழைத்தது நான்தான் என்று பெருமையாகச் சொல்வேன். கூடிய விரைவில் அந்த படத்தையும் வெளிக் கொணர விரும்புகிறேன். 
ஸ்ரீவத்ஸ் சஞ்சய்
இந்திய சுற்றுலா கழகத்தின் தென்னகத் தலைமை அதிகாரி

தமிழ் நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி எதில் இருக்கிறது? 
தமிழ் நாட்டைப் பொருத்தவரையில் வெளிநாட்டினர் விரும்பும் பல விஷயங்கள் இங்கு உள்ளன. முதலாவது கோயில். ஒவ்வொரு கோயிலும் ஒரு சுற்றுலாத் தலம் என்று கூறலாம். பல்வேறு மாநிலம், வெளிநாடுகளில் வாழும் பலர் இங்கு வருவதற்கான காரணம் நமது கோயில்கள்தாம். 
அடுத்து நம் உடல் நலத்தை பேணி பாதுகாக்கும் புகழ்பெற்ற மருத்துவமனைகள் உள்ளன. உடம்பில் உள்ள ஒவ்வொரு பாகங்களுக்கும் இங்கு சிறந்த மருத்துவமனைகளும், மருத்துவர்களும், சரியான பரமரிப்பும் இருக்கிறது. நம் உடல் நலத்தைப் பேணி பாதுகாக்கும் ஆஸ்பத்திரிக்காகவே பல்வேறு நாட்டினரும் இங்கு வருகிறார்கள். இதை medical tourism என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். Hospital and hospitality இவை இரண்டும் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. அவை தரமாகவும் இருக்கின்றன. அதற்காகவும் மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து தமிழ் நாட்டை நோக்கி படை எடுக்கிறார்கள். 
அடுத்து மதுரையில் உள்ள துணி தைப்பவர்கள். இவர்கள் தைக்கும் துணிகள் உலகெங்கும் பலராலும் பாராட்டப்படுகின்றன. ஒரு முறை அமெரிக்காவில் புகழ் பெற்ற ஒரு துணி தைக்கும் நிறுவனம், இங்குள்ள தையல்காரர்களைப் பாராட்டி வேலை கொடுத்துள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 
இது மாதிரி பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி தமிழ் நாட்டில் எல்லாமே இருக்கு, அவை எல்லாம் நல்லாவே இருக்கு. இவற்றை அதிகமாக இன்னும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. 
ஹாக்கி பாஸ்கரன்
இவர் தலைமையில் ஹாக்கி விளையாட்டில் இந்தியா ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்றது

மகிழ்ச்சியான நேரம் எது?
உலக கோப்பைக்காக நான் சுமார் மூன்று வருடங்கள் உழைத்தது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது என்று சொல்லலாம். பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவில் எங்களுக்கான ஹாக்கி காம்ப் நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து நான் அங்கு சென்றிருந்தேன். இன்று இருக்கும் இளஞர்கள் ஒரு நாள் கூட அந்த மாதிரியான பயிற்சிகளைப் பார்த்திருக்க மாட்டார்கள். அதில் பங்கு கொண்டிருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் கடுமையான பயிற்சியை எங்களுக்கு அளித்தார்கள். அந்த பயிற்சிதான் பின்னர் வந்த பத்து வருடங்கள் எங்களுக்கு சிறப்பாக ஹாக்கி விளையாட வழிவகை செய்தது என்று சொன்னால் அது மிகை இல்லை. 
மிகவும் மகிழ்ச்சியான நேரம் நான் முதன் முதலில் ஆண்களுக்கான உலக ஹாக்கி போட்டி நெதர்லேண்ட்ஸ் நாட்டில் நடந்தது. 1973 - ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரையில் நடந்த இந்த போட்டி அங்குள்ள wagener மைதானத்தில் வெகு விமரிசையாக நடந்தது. அந்தப் போட்டியில் இந்தியா ஃபைனல் வரை வந்தது. நாங்கள் எதிர்த்து போட்டியிட்டது எந்த நாட்டை என்று நீங்கள் கேட்டால் host country என்று சொல்வார்களே, அந்த நெதர்லேண்ட்ஸ் நாட்டை எதிர்த்துதான். இந்த போட்டியில் ஹாக்கி விளையாடியதுதான் என்னை பொருத்தவரையில் மகிழ்ச்சியான தருணம். 
கடைசி வரை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், இந்த உலக ஹாக்கி நடந்து முடிந்தது. அதில் நான் பங்கு கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவிற்காக விளையாடியதுதான் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்று சொல்வேன். என் நாட்டிற்காக விளையாடியதை விட வேறு என்ன பெருமை எனக்கு வேண்டும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com