ஆத்து

எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரையைப் போலவே வைகை ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்த சிறு நகரம்.
ஆத்து

எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரையைப் போலவே வைகை ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்த சிறு நகரம். எழுபத்து ஒன்றில் பிறந்த எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வைகையாற்றின் மணல் வெளியில் கழிந்த இனிமையான நாட்களை நினைவு கூர்கிறேன்.
 மிகச்சிறிய வயதில் எனது அப்பத்தா, அம்மா மற்றும் உறவினர்கள் குடிநீர் எடுப்பதற்காக தினமும் மாலை வேளையில் வைகையாற்றுக்குச் செல்வார்கள். நானும் செல்வேன். வீட்டின் பிற பயன்பாட்டிற்கு கிணற்று நீர் இருக்கும். ஆற்றின் மணல் வெளியில் சென்று சிறிய குழி தோண்டுவார்கள். கைக்கெட்டும் தூரத்திலேயே தண்ணீர் வந்து விடும். சிறிது நேரத்தில் தண்ணீர் தெளிந்து விடும். நீள்வட்ட வடிவில் நடுவில் பள்ளமாக இருக்கும் வெண்கலத்தாலான ஊத்துப்பட்டையினால் நீர் இறைத்து பானை, குடங்களில் நிரப்பிக் கொண்டு, பல கதைகளையும் பேசி சிரித்துக் கொண்டு சேலை நுனியை சுருட்டி தலையில் வைத்து அதன் மேல் குடத்தை வைத்து வீட்டுக்கு வந்து சேருவார்கள். தண்ணீர் அவ்வளவு சுவையாக இருக்கும். எனக்கு தெரிந்து கொதிக்க வைத்துக் கூட குடித்ததில்லை.
 சிறிது காலத்தில் மேல்நிலைத் தொட்டி அமைத்து குழாய் மூலம் வீட்டுக்கே குடிநீர் வந்ததும் ஆற்றுக்குச் செல்லும் பழக்கம் நின்று விட்டது.
 ஒரு நாள் வெறும் டிரெüசருடன் கொல்லைப்புறக் கிணற்றில் நீர் இரைத்துக் கொண்டிருந்தேன், அடுப்படியில் இருந்த அம்மாவின் பார்வை படும்படி. வாளி நிறையத் தண்ணீருடன் கிணற்று மேடையில் வைத்து விட்டு மொட்டைமாடிக்குச் சென்று விட்டேன். சிறிது நேரத்தில் வாளி திடும்மென்ற சத்தத்துடன் கிணற்றுக்குள் விழுந்தது. அம்மா வந்து எட்டிப்பார்த்து விட்டு "அய்யோ விழுந்து விட்டானே' என்று அலற ஆரம்பித்தும் வீட்டில் எல்லோரும் கூடி விட்டார்கள். சத்தம் கேட்ட நான் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து "என்ன ஆச்சு' என்றதும் "அடப்பாவி இப்படி பயமுறுத்திட்டியே' என்று திட்டியதை இப்போதும் சொல்வதுண்டு.
 ஆறு, ஏழு வயதில் தனியாக வெளியே செல்லத் தொடங்கியதும் தினமும் மாலை நான்கு மணிக்கு அய்யா கொடுக்கும் பேட்டா முப்பத்தைந்து பைசாவுக்கு துர்காபவனில் ஒரு தோசை சாப்பிடுவேன். அந்த சாம்பாரின் சுவையும் மணமும் இன்று வரை எனக்குக் கிடைக்கவே இல்லை.
 நண்பர்களுடன் ஆற்றுக்குச் செல்வோம். வயதிற்கேற்றவாறு கிச்சு கிச்சு தாம்பாளம், கிளித்தட்டு, ரவுண்ரஸ், பச்சை குதிரை விளையாடுவோம். பெண் பிள்ளைகள் நாலு முழ சக்கரம், ஜோடிப்புறா, பூப்பறிக்க வருகிறோம் விளையாடுவார்கள். நேரம் போவதே தெரியாது. இருட்டும் சமயம் அங்கேயே குழி தோண்டி தண்ணீரை தெளிய வைத்து கொட்டாச்சியால் எடுத்து குடிப்போம்.
 பஞ்சாயத்து போர்டுகாரர்கள் வட்டமான இரும்புத் தொட்டியை மணலில் பதித்து இருப்பார்கள். அதில் இறங்கி குளிப்போம். மணல் மிகவும் மெல்லியதாக இருக்கும். கற்கள் தூசி இருக்காது. சிறு வெண்சங்குகள் மணலில் கிடைக்கும். அதை விரலிடுக்கில் வைத்து விசில் அடிப்போம். வளர வளர ஆற்றில் செலவிடும் நேரம் அதிகமானது. இரவு எட்டு, ஒன்பது மணி வரை பேசிக் கொண்டு இருப்போம்.
 ஒருநாள் மூன்று வயதான தம்பியை ஆற்றுக்கு விளையாட அழைத்துப் போனேன். விளையாடி முடித்து ஏழு மணிக்கு அவனை மறந்து திரும்பி விட்டேன். வீட்டில் ரகு எங்கே என்றதும் பயந்துபோய் அழுதுகொண்டே ஓடினேன். ஆற்றில் போய் பார்த்தபோது விளையாடிய இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். அழுதபடியே தூக்கிவந்து வீட்டில் விட்டேன்.
 சமீபத்தில் பள்ளித்தோழன் மெய்யப்பனை இருபது ஆண்டுகளுக்கு பின் சென்னையில் சந்தித்து பழைய நினைவுகள் பற்றி பேசும் போது "பள்ளி நாட்களில் ஒன்பது மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்தால் போதும். யாரும் எங்கே போகிறோம் என்று கேட்க மாட்டார்கள். இப்போது குழந்தைகள் பள்ளி விட்டு அரை மணிநேரம் தாமதமானால் கூட தேட ஆரம்பித்து விடுகிறோம்'' என்றார்.
 ஆற்றங்கரையில் அமைந்த ஆனந்தவல்லி கோயிலில் வருடா வருடம் சித்திரை பெüர்ணமியை ஒட்டி பதின்மூன்று நாட்கள் திருவிழா நடக்கும். தினமும் இரவில் வெவ்வேறு மண்டகப்படிதாரர் நடத்தும் நாடகம், இன்னிசைக்கச்சேரி, திரைப்படம், கரகாட்டம் நடக்கும். தீபாவளி, பொங்கல் மதம் சம்பந்தப்பட்டது. ஆனால் திருவிழாவில் அனைத்து மதத்தினரும் உற்சாகமாகப் பங்கேற்பார்கள். கோடை விடுமுறையில் நிகழ்வதால் "மானாமதுரை திருவிழா' என்றாலே வெளியூரில் இருக்கும் உறவினர்கள் விரும்பி வருவது வழக்கம்.
 "வள்ளி திருமணம்', "சத்தியவான் சாவித்திரி', "வீரபாண்டிய கட்டபொம்மன்', "அரிச்சந்திரா நாடகம்' இரவு பத்து மணிக்கு தொடங்கி விடியும் வரை
 இருக்கும். முதலில் பஃபூன், காமிக் என்ற பெயரில் விரசமான ஜோக்குகளை தணிக்கை செய்யாமல் பேசுவார். விழுந்து விழுந்து சிரிப்பார்கள். பஃபூன் காமிக் முடிந்ததும் பெரும்பாலான பெண்கள் "என்னடி இப்படி பச்சை பச்சையா பேசுறான் வாங்கடி போவோம்' என்று புடவை மணலை உதறி விட்டு கிளம்பி விடுவார்கள். அடுத்த நாள் தவறாமல் ஆஜராவார்கள். அதன் பின் சீரியஸான கதை பாடல்களுடன் ஆரம்பமாகிவிடும். அதிகம் பேர் மணலிலேயே துண்டை விரித்து தூங்கிவிடுவார்கள். சிலபேர் விடிய விடிய விழித்திருந்து பார்ப்பார்கள்.
 அப்பா சிறுவயதில் நாடகம் பார்க்க போவதாக சொல்லிவிட்டு டிரெயினில் மதுரைக்கு சினிமா பார்க்க செல்வாராம். ஒரு நாள் காலை வீட்டுக்கதவை தட்டிய போது அய்யா "எங்கே போனாய்?'' என்று கேட்டதற்கு ""நாடகம் பார்க்க''என்றாராம். அய்யா நிதானமாக ""நேற்று இரவு நல்ல மழை.
 நாடகம் நடக்கவில்லை'' என்றதும் திருதிருவென்று விழித்ததாக சொல்லி இருக்கிறார்.
 சினிமா என்றால் ஒரு சிவாஜி படம், ஒரு எம் ஜி ஆர் படம் அல்லது ஒரு கமல் படம், ஒரு ரஜினி படம் அடுத்தடுத்து காட்டுவார்கள். எம் ஜி ஆர், ரஜினி படத்தை இரண்டாவதாகத்தான் காட்டுவார்கள்.
 பெüர்ணமியை ஒட்டிய நிலவொளியில் மணலில் உட்கார்ந்து கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யம். வெயில் காலத்திலும் இளந்தென்றல் காற்று வீசும். மெல்லிய மணல்வெளி. இப்போது நினைத்தாலும் ஆச்சர்யம், ஒரு கொசு கூட கடிக்காது. மணலில் புழுதி இருக்காது. இயற்கை அளித்த வரப்பிரசாதம்.
 திருவிழா நாட்களில் மாலை ஆறு மணி முதல் பத்து மணி வரை ஊரில் முக்கால்வாசிப்பேர் குடும்பத்துடன் ஆற்றில்தான் இருப்பார்கள். இதைப் பயன்படுத்தி வீடுகளில் திருடர்கள் திருடியதும் உண்டு. ஆற்றில் கிடைக்கும் பலாச்சுளை, சர்பத், மிளகாய் பொடியில் ஊற வைத்த மாங்காய் துண்டுகள் இவற்றை ருசிபார்ப்பதில் சிறுவர்களுக்கு கொள்ளை ஆனந்தம்.
 பெüர்ணமிக்கு அடுத்த நாள் நிலாச்சோறு. வீட்டில் இருந்து அசைவ உணவு எடுத்துச்சென்று ஆற்றில் குடும்பத்தாருடன் உட்கார்ந்து உண்பது மறக்க முடியாத அனுபவம்.
 உயர் நிலைப்பள்ளிக் காலத்தில் கற்பனையில் காதல் கொண்டு நண்பர்களுடன் சக பள்ளி
 மாணவிகளைக் கூட்டத்தில் தேடிக்கண்டுபிடித்து அவர்கள் பார்வையில் படும்படி அமர்ந்து ஜாடையாக பார்த்துக்கொண்டே இருப்போம். காதலியர் நம்மை நேருக்கு நேர் பார்த்து விட்டாலோ, நாம் அடையும் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அக்காலத்தில் மாணவிகளிடம் பேசுவதற்கே மிகுந்த பயம். பிந்தைய நாட்களில் உண்மையாகவே காதல் கொண்டபோதும் எங்கள் காதலியரை சந்தித்து
 தகவல் பரிமாற்றம் செய்ய ஏற்ற இடம் திருவிழாதான். இப்போது போல் தொலைபேசி, கைபேசி இல்லாத காலம்.
 அடுத்த நாள் ஆறு சுத்தமாக இருக்கும் தட்டு இலைகளில்தான் சாப்பிடுவார்கள் பிளாஸ்டிக் பைகள் கிடையாது. எஞ்சிய உணவுப்பொருட்களை நாய், பன்றிகள் சாப்பிடும். இடம் சுத்தமாகி விடும்.
 ஒரு முறை பதினைந்து இருபது வயதிற்குட்பட்ட வேளாளர் தெருவைச் சேர்ந்த சிலருக்கும் புரட்சியார்பேட்டை காரர்களுக்கும் சண்டை வந்து ஆற்றுக்குள் இன்று மாலை யுத்தம் என்று அறிவித்தார்கள். புரட்சியார்பேட்டை ஆட்கள் முன்னமே சென்று காற்றில் வீசினாலே உடைந்துவிடும் உரச்செடி குச்சிகளை மணலில் புதைத்து வைத்துவிட்டு நிராயுதபாணி போல் சண்டைக்கு நிற்பார்கள். எதிரிகள் அருகில் வந்ததும் குச்சிகளை தோண்டி எடுத்து போரில் வெல்வார்கள். அவர்களை விட பலம்வாய்ந்த அழகர் கோவில் தெரு ஆட்கள் சண்டைக்கு வந்தபோது சமாதானமாகப் போவோம் என்று சொல்லி கைகுலுக்கினார்கள்.
 மாலை வேளைகளில் சிலர் பாடம் படிப்பார்கள். ஓய்வு பெற்றவர்கள், நடுத்தர வயதினர், கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள், குடும்பத்தினர் ஏராளமானவர்கள் பொழுதைக் கழிப்பார்கள். ஆற்றின் கரையில் உள்ள ஜெய அமுது தியேட்டரில் "திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்' பாடல் போடுவார்கள், மாலை சரியாக ஆறு மணி என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
 சிறிய வீடுகள் கொண்டவர்கள் உறவினர் வந்துவிட்டால் கவலையே படவேண்டாம். பாய், தலையணை எடுத்துக்கொண்டு கூட்டமாக ஆற்றில் போய் தூங்கலாம்.
 ஊரை கீழ்கரை (ஆற்றின் கிழக்கு), மேல்கரை (மேற்கு) என்று பிரித்து அழைப்பார்கள். ஆனால் கீழ்கரையில் வசிப்பவர்கள் மேல்கரையை அக்கரை என்றும் கீழ்கரையை இக்கரை என்றும் சொல்வார்கள். மேல்கரையில் வசிப்பவர்கள் கீழ்கரையை அக்கரை என்றும் மேல்கரையை இக்கரை என்பது வழக்கம். சமீபத்தில் அறிமுகமில்லாத ஊர்க்காரர் ஒருவர் சென்னையில் என்னைப் பார்த்து, "உங்கள் வீடு எங்கே?'' என்று கேட்டார். சொன்னேன். "ஓ அக்கரையா, நான் கன்னார் தெரு'' என்றார்.
 சலவை தொழிலாளர்கள் ஆற்றில் துணி துவைப்பார்கள். கட்டப்பஞ்சாயத்து நடக்கும். பின்னிரவில் கரையோர நாணல் புதர்களில் தப்பு நடக்கும் என்பார்கள். எப்போதாவது தனியாக வரும் நபர்களிடம் வழிப்பறி நடப்பதும் உண்டு.
 வருடம் ஒரு முறை மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் வரும். வெள்ளமாக வராது. ஆனால் குறுக்கே யாரும் செல்ல முடியாது. பாலம் சுற்றித்தான் செல்லவேண்டும். ஊரில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஆற்றைக் கடந்துதான் ஆகவேண்டும்.
 நான் அறிந்த வரை எழுபத்து ஒன்பதில் அதிக வெள்ளம் வந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் ஹெலிகாப்டரில் உணவுப் பொட்டலங்கள் போட்டதாக சொன்னார்கள். யாரோ, தண்ணீரில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மீட்க வருகிறது என்று சொன்னதை நம்பி ஹெலிகாப்டர் பார்க்கும் ஆசையில் மூத்த நண்பர் தாஸ் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து விட்டார். ஹெலிகாப்டர் வரவேயில்லை. வேறு வழியில்லாமல் நீந்திக் கரை சேர்ந்தார்.
 தண்ணீர் குறைந்ததும் சிறுவர்களும் ஆண்களும் ஆற்றில் இறங்கி மணிக்கணக்கில் நீச்சலடித்து விளையடுவார்கள். நானும் ஆற்றில்தான் நீச்சல் கற்றேன். தண்ணீர் வற்றியதும் மீண்டும் வழக்கம் போல் அனைவரும் ஆற்றுக்கு படையெடுப்பார்கள். ஊரில் ஒருவர் கூட ஆற்றுக்கு வராதவராக இருக்க முடியாது.
 கடற்கரையில் மணல் உண்டு. ஆனால் உப்புக்காற்று எரிச்சல் மூட்டும். வைகையில் சுத்தமான காற்று. நல்ல வெண்மணல் மிகவும் இனிமையான இடம். சென்னையில் நான்கு முறை கடற்கரைக்கு சென்றாலே போரடித்து விடுகிறது. ஆனால் வைகையாற்றுக்கு ஏறத்தாழ பதினேழு ஆண்டுகள் தினமும் சென்றும் ஒரு நாள் கூட சலித்ததே இல்லை.
 நன்றாகத்தான் இருந்தது. யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை. 92, 93 ஆம் ஆண்டுகளில் மிகுந்த கட்டிடவேலை நடக்க ஆரம்பித்தது. மாட்டு வண்டிகளிலும் லாரிகளிலும் மணலை அள்ளத் தொடங்கினார்கள். இரண்டு வருடங்களில் ஊருக்குள் இருந்த மணல் முழுவதையும் நான்கடி ஆழத்திற்கு மேல் அள்ளிவிட்டார்கள். நிலத்தடி நீர் குறைந்தது. ஆற்றுக்குள் கருவேல முள் செடிகள் முளைத்தன. யாருமே நடந்துகூட ஆற்றைக் கடக்க முடியாத நிலை வந்து விட்டது. தண்ணீர் வந்தாலும் முள் செடிகளுக்கு பயந்து இறங்க முடியாது. பத்தடி தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காது. பாதிக்குமேல் கட்டாந்தரையாகவும் மீதி இடம் புழுதி மண்ணாகவும் மாறி விட்டது.
 வெயில் காலத்தில் ஆற்றுக்குள் கிணறு தோண்டி மோட்டார் மூலம் நீரெடுத்து குளியல் தொட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது.
 எங்கள் வீட்டில் இருந்த முப்பதடி ஆழக் கிணற்றிலும் தண்ணீர் சுத்தமாக வற்றி விட்டது. இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் தண்ணீர் ஊறவே இல்லை. கிணற்றின் பாதி எங்கள் வீட்டிலும் பாதி அடுத்த வீட்டிலும் இருக்கும். அடுத்த வீட்டை இடித்து புதிதாக கட்டும் போது, "தண்ணீர் தான் இல்லையே கிணற்றை மூடி விடலாமா?'' என்று அப்பாவிடம் கேட்டார்கள் "சரி'' என்றார். கற்களைக் கொட்டி மூடும் போது வருத்தமாக இருந்தது. வேண்டாம் என்று சொல்லும் சூழ்நிலையில் என்னுடைய நிலைமை இல்லை.
 அனைவரும் நினைவறிந்து எவ்வளவோ பழகியிருக்கிறோம் கிணற்றுடன். ஒரு நாள் அம்மாவுக்கு தெரியாமல் சினிமாவுக்குச் சென்றேன். வந்ததும் என்ன கெட்ட பழக்கம் என்று திட்டி அடித்தார்கள். ஏதோ ஓர் குற்ற உணர்வு. கொல்லைப்புறம் போய் கிணற்றில் தண்ணீர் இறைத்து இருந்த தொட்டி, அண்டா, பாத்திரங்களில் நிரப்பினேன்.
 அடர்த்தி மிகவும் குறைவான நீர். இரைத்து குளிக்க சுகமானது.
 அக்ரஹாரத்து வீடுகள், தெருவுக்கும் பின்புறம் உள்ள சாலைக்கும் வாசல் வைத்து நீளமாக ஒடுக்கமாக இருக்கும். அனைத்து வீடுகளிலும் கொல்லைப்புறத்தில் ஒரே வரிசையில் அமைந்த கிணறுகள், நிலத்தடி நீரோட்டத்தைக் கணக்கிட்டு அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது ஒரு வீட்டிலும் கிணறு இல்லை.
 ஊரின் இரு கரைகளில் இருந்தும் கழிவு நீர் ஆற்றுக்குள் செலுத்தப்பட்டது. திருவிழாவுக்குச் சென்றால் கூட பத்து நிமிடம் உட்கார முடியாது. கொசுக்கள் நம்மை தூக்கிச் சென்றுவிடும். மேலும் சகித்துக் கொள்ளவே முடியாத துர்நாற்றம், ஏன் போனோம் என்று நினைக்கத் தூண்டும்.
 இடைப்பட்ட காலத்தில் செடிகளை வெட்டி சுத்தம் செய்தார்கள். ஆனாலும் கழிவு நீர் செல்வதைத் தடுக்கமுடியவில்லை. தொடர்ந்து சுத்தமாக பராமரிக்க முடியவில்லை. இதற்கு மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
 வைகையாற்று மணலை ஊரில் உள்ள ஒவ்வொருவரும் நேரடியாகப் பயன்படுத்தி இருக்கிறோம். நாம் அனுபவித்துவந்த சுகத்தை நாமே பொறுப்புணர்வோ விழிப்புணர்வோ இல்லாமல் அல்லது கேட்பதற்கு பயந்தோ கண்ணுக்கெதிரே இழந்து விட்டோம். திரும்பி கிடைக்கப் போவதில்லை. ஒரு கன அடி மணல் உற்பத்தியாவதற்கு நூறு ஆண்டுகள் ஆகுமாம்.
 பழையனவற்றை நினைக்கும் போது, நமக்கு நெருக்கமானவர்கள் யாராவது இறந்து விட்டால் அய்யோ போய்விட்டார்களே திரும்ப வரப்போவதில்லையே என்று ஆதங்கம் பிறக்குமே அதே உணர்வு மேலிடுகிறது. என்னைப் போலவே இன்னும் பலருக்கும் என்னை விட அதிகமாகவும் ஆதங்கம் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் காலமாற்றத்தினால் இழந்த அல்லது மாறிப்போன எத்தனையோ விஷயங்கள் இருக்கலாம். அவை அந்த இடத்து மனிதர்களிடம் பாதிப்பையோ வருத்தத்தையோ ஏற்படுத்தி இருக்கலாம். என்ன செய்வது?
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com